கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 1944 – வாராங்கல் ஸ்டேஷனில் (எழுதி வரும் ராமோஜி நாவலில் இருந்து)

நார்மடிப் புடவை என்று மதறாஸ் ராஜ்யத்தில் சொல்லப்படும், பிராமண விதவைகளுக்கான புடவையை மடிசார் போல் அணிந்து, மொட்டைத் தலையைப் புடவைத் தலைப்பால் மூடியிருந்தாள் அந்த முதியவள்.

ரத்னா கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக, கையில் எடுத்துக் கடித்த வடையை இலையில் வைத்து விண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும், “இங்கேயா போகணும்? யாரோ மீன் மாம்சாதிகள் போஜனம் பண்றாளே” என்றபடி ரத்னாவைப் பார்த்தாள். அவள் கையில் ஒரு சிறு ஸ்தாலி செம்பில் தண்ணீர். மருமகள், பட்டுத்துணி வாய்ப்புறத்தில் கட்டிய ஒரு கூஜாவைக் கையில் பிடித்திருந்தாள்.

“அம்மா, மீன் முட்டை எல்லாம் இல்லே. இட்லி தான். சுத்த சைவம்”.

ரத்னா குரலை உயர்த்திச் சொன்னபோதே அவளுக்கு உள்ளே உயர்ந்து கொண்டிருந்த கோபம் எனக்கு அனுபவிக்கக் கிட்டியது. அவள் என் தட்டில் போட்ட லட்டு உருண்டை பயத்தில் குதித்தது.

”சரிடீ இப்ப என்ன சொல்லிட்டேன் நீ சத்தம் போட?” என்றபடி கூஜாவை சீட்டில் ஓரமாக வைத்தாள் அந்த மூதாட்டி. செம்பு ஜலத்தில் கொஞ்சம் உள்ளங்கையில் எடுத்து அடுத்த தடுப்பில் மர இருக்கைகளுக்கு மேல் தெளித்தாள் அவள். தண்ணீரை எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி திரும்ப, அந்தக் குடும்பத்து மருமகள் பயத்தோடு என்னையும் அவள் வீட்டுக்காரனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

”நான் இங்கே இருந்துக்கறேன்” என்று பாட்டியம்மா சத்தமாக என்னைப் பார்த்துச் சொல்லி, எங்களுடைய சீட்களுக்கு எதிர் பெஞ்சில் அலம்பி விடுகிற மாதிரி தாராளமாக தண்ணீரை ஏதோ ஸ்லோகம் முணுமுணுத்தபடி தெளித்தாள்.

“நீ சாப்பிடுடீ’ம்மா. ஏண்டாப்பா, குஞ்சாலாடை கடிச்சுத்தான் திங்கணுமா? அதுவும் இடது கையிலே பிடிச்சுண்டுதான் கடிக்கணுமா? தீட்சிதர் பார்த்தா அன்னத்ரேஷமா இருக்கும்பார்”

நான் கிழவியைப் பார்த்து ஏதாவது சொல்ல நிச்சயிக்க, அவளுடைய மகன், “ஏம்’மா அவாளோட சண்டை போடறே. நமக்கு அவா சக ப்ரயாணிகள் தானே.” என்றான். ப்ராணி என்றானா பிரயாணி என்றானா தெரியவில்லை. அதற்காக வேண்டுமானால் இன்னொரு சண்டை வலிக்கலாம்.

”ஐயோ நான் ஏன் சண்டை எல்லாம் போடறேன். இத்தனை லட்சணமான பொண்ணு பிரியமா தட்டுலே எடுத்து வச்சதை .. ஏண்டீம்மா .. ஆத்திலே பூந்தி தேச்சு லட்டு பிடிச்சியா இல்லே கடைச்சரக்கா … போகட்டும்.. ஏதோ ஒண்ணு.. இந்தப் பிள்ளாண்டான் இடது கையால் சாப்பிடணுமான்னு தாங்கலே. என் பிள்ளை மாதிரித்தான்டாப்பா நீயும்.. தீர்க்காயுசா இரு.. நீயும் விச்சியாயிருடி அம்மா. சுந்தர கனபாடிகள் மச்சினி பொண்ணு வாலாம்பா ஜாடை உனக்கு” என்றபடி இத்தனூண்டு ஜலத்தை ரத்னாவை நோக்கித் தெளித்தாள். புனிதமாக்கப்பட்ட ரத்னாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. நமஸ்காரம் என்று தலையைக் குனிந்தாள்.

”தீட்சிதர், சாப்டுண்டு நமஸ்காரம் பண்ணக் கூடாதுன்னு சொல்வார்”.

“அவர் வரல்லியா?” ரத்னா சிரிப்போடு கேட்க, பாட்டியம்மா தலையில் சொறிந்தபடி எங்கள் எதிர் சீட்டில் உட்கார்ந்தாள். “அவரா, வர்ற மாசம் த்ரையோதசி திவசத்துக்கு எள்ளும் தண்ணியும் இரைக்கறதை வாங்கிக்க ஆவி ரூபமா வந்துட்டு போவார்.. எங்காத்துக்காரர் தான்”. பாட்டி சொன்னாள்.

பாட்டிக்கு கண்ணீர் வராவிட்டாலும் தலையில் கை வைத்து மடியில் தண்ணீர்ச் செம்போடு உட்கார்ந்திருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன