பெருமையோடு கொண்டாடுகிறோம். கண்ணீர் அஞ்சலி செய்வோமில்லை.

கிரேசி கொண்டாட்டம்

பத்து வருடம் முன்னர் சுஜாதா நினைவேந்தல் கூட்டத்தில் பங்குபெறப் போனபோது கிரேசி மோகன் என் நண்பரானார் என்று எழுத நினைத்தால் கை வரமாட்டேன் என்கிறது. அந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோது காலம் காலமாக நெருங்கிய நண்பராக இருக்கும் ஒருவரை எத்தனையாவது முறையாகவோ வழியில் பார்த்துப் பேசும் நினைப்பு தான்.

1984-இல் தில்லியில் இருந்து சென்னைக்குப் பணியிட மாற்றத்தில் வந்தபோது எனக்குப் பொழுதுபோக்கு என்றால் திரையில் மைக் மோகன், நாடக மேடையில் கிரேசி மோகன். விரைவிலேயே முதல் மோகன் கவனத்திலிருந்து விலக, எல்லாம் கிரேசி மோகன் in this post.

காரணம் என் அம்மா. அம்மா புற்றுநோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். செர்வைகல் கான்சர். நோய் முற்றியிருந்த நேரம். இருக்க, நிற்கக்கூட முடியாமல் படுத்தபடி இருந்தாள் அவள். புத்தகம் படிப்பதில் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம். படிக்க வாங்கி வந்து கொடுத்த ஒரு புத்தகத்தையும் ஒரு பக்கத்துக்கு மேல் படிக்கவிடாமல் பெரும் வலியால் துடித்தாள். அப்போது தான் ஜூனியர் விகடனில் கிரேசி மோகன் எழுதிய ‘சிரிப்பு ராஜ சோழன்’ தொடர்கதையாக வெளிவரத் தொடங்கியிருந்தது. அம்மாவின் படுக்கைக்கு அருகே உட்கார்ந்து ராமாயணமும் பாகவதமும் நான் படிக்கவில்லை. சிரிப்பு ராஜ சோழன் அந்தந்த வார அத்தியாயத்தைப் படித்தேன் அவளுக்கு. வலியை மறந்து குழந்தை மாதிரி அம்மா சிரித்து, மறுபடி மறுபடி படிக்கச் சொன்ன பக்கங்கள் எத்தனையோ. அவளின் இறுதிக் காலத்தில் அத்தனை துன்பத்துக்குமிடையே கொஞ்சம் மகிழ்ச்சியோடு அவள் விடைபெற கிரேசி மோகனும் காரணம். இதை மோகனிடம் சொல்ல, நெகிழ்ந்து போனார் அவர்.

“அப்பவே பழகி இருந்தா, நானே வாராவாரம் நேரிலே வந்து உங்கம்மாவுக்கு படிச்சு காட்டியிருப்பேனே”. இந்தப் பரிவும், ஆத்மார்த்தமான பேச்சும், நட்பும் தான் மோகன்.

அவருடைய நாடகங்களை மேடைக்குப் பின்னால், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கிரேசி க்ரியேஷன்ஸ் குழு நண்பர்களோடு அவசரமாக உரையாடியபடி எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். மோகன் தோன்றும் காட்சிகளுக்கு நடுவே வெற்றிலை பாக்கு போட நேரம் இருப்பதாகத்தான் பார்த்துப் பார்த்து அவர் நாடகம் எழுதியிருப்பார். சாக்லெட் கிருஷ்ணாவில் தான் இது மாறி காட்சிக்குக் காட்சி அவர் கிருஷ்ணனாக வரவேண்டிய அவசியம். நண்பர்களான எங்கள் நச்சரிப்பு தாங்காமல் புகையிலையை விட்டேன் என்று கையுயர்த்தி விட்டார் ஒரு கட்டத்தில் மோகன். ஆனாலும் வெற்றிலை, பாக்கு அவர் போன எல்லா நாடு நகரத்திலும் தொடர்ந்தது.

வெண்பா பரிமாரிக் கொள்வதாக மோகனும்,நானும், அவ்வப்போது எங்கள் நண்பர் கமல் ஹாசனும் பங்கு பெற, ஆரம்பித்தது மூன்றாண்டாக தினசரி நடந்து வந்தது. ‘ரெட்டை நாயனம் வெண்பாக்கள்’ என்று பெயரிட்ட இனத்தில் கிட்டத்தட்ட இருநூறு பா சேர்ந்து விட்டது. இது தவிர ஓவியர் கேஷவ் தினம் பகிரும் கண்ணபிரான் ஓவியங்களுக்கு அவர் வெண்பா எழுதி அனுப்புவார். பயண வெண்பா, தூங்கும் முன் தோன்றிய வெண்பா, பெருமாள் திருப்புகழ், ரமணாயணம் வெண்பா என்று எழுதித் தள்ளுவார் மோகன்.

சக, சீனியர் எழுத்தாளர், கவிஞர்களைச் சேர்ந்து போய் சந்திப்பதில் எங்களுக்கு அலாதி இன்பம். இந்திரா பார்த்தசாரதி, பி.ஏ.கிருஷ்ணன், கவிஞர் வைதீஸ்வரன், ரா.கி.ரங்கராஜன் என்று நாங்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த, போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்த பெரியோர் பட்டியல் நீளமானது. கமல் ஹாசனும் நானும் திருவனந்தபுரத்தில் எழுத்தாளர் நீல. பத்மநாபனைச் சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோது ’பள்ளிகொண்டபுரம் நீல பத்மநாபனோடு, பள்ளி கொண்ட நீள பத்மநாபனையும் சேவிச்சுட்டு வாங்க” என்றார் எங்களிடம். அவர் சொற்படி அரவணையில் சயனம் செய்யும் அனந்த பத்மநாபன் திருக்கோயிலுக்குப் போய் வந்தேன்.

பைரப்பாவின் கன்னட நாவலான ‘பருவம்’ பாவண்ணன் மொழிபெயர்ப்பில் அவர் படித்து முடித்ததும் ‘அவசியம் படிக்கணும் நீங்க’ என்று வீட்டுக்கே வந்து கொடுத்து விட்டுப் போனார். சுஜாதா, ஜெயகாந்தன், ராகுல சங்க்ருதியான், சுந்தர ராமசாமி, பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவை என்று அவர் படித்து மற்ற நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட நூல்கள் அதிகம். என் புத்தகங்களை மென்பொருள் கோப்பாகவே அவரோடு பகிர்ந்து கொள்வேன். நாவல் அத்தியாயங்கள், தனித்தனி சிறுகதைகள் என்று எழுத எழுத அனுப்பி வைப்பேன். படித்து விட்டுக் கூர்மையான விமர்சனம் செய்வார். “ஏதோ எனக்கு தோணினது. பிடிக்கலேன்னா விட்டுடுங்கோ. மத்தபடிக்கு நல்லதொரு படைப்பு” என்று வெள்ளந்தியாகச் சொல்வார்.

என் புத்தக வெளியீட்டு விழாக்கள் அவரில்லாமல் நடந்தது அபூர்வம். ‘சனி, ஞாயிறு நாடகம். மற்றபடி வெளியூர், வெளிநாடு நாடகம் இல்லாத நாள் நட்சத்திரத்தில் விழாவை வச்சுக்கலாம்’ என்பார். வெளியூர் நாடகத்தை ராத்திரி வெகுநேரம் சென்று முடித்து விட்டு கார், விமானம் என்று தொடர்ந்து பயணம் செய்து அடுத்த நாள் விழாவுக்கு வந்து பேசுகிற இலக்கிய ரசிக நண்பர்கள் எத்தனை பேருக்கு வாய்க்கிறார்கள்? எனக்கு வாய்த்தது.

அவருக்கு செண்டிமெண்ட் அவருடைய நாடகங்களில் எல்லாம் முக்கியப் பெண் பாத்திரங்களின் பெயர் ஜானகி, மைதிலி என்றுதான் இருக்கும். எனக்கு செண்டிமெண்ட், என் மேஜிக்கல் ரியலிச நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு இடத்தில் மோகனின் வெண்பாவோ, பாடலாக ஆசிரியப்பாவோ வரும். அண்மையில் நான் எழுதிய எமர்ஜென்சி காலகட்டம் பற்றிய நாவல் 1975-ல் தொடக்கத்திலேயே மோகனின் வெண்பா சாற்றுகவியாக வந்திருக்கிறது. தமிழில் சாற்றுகவியோடு, அதுவும் மோகனின் வெண்பாவோடு வந்த பெருமை வேறெந்த நாவலுக்கும் இல்லை. அந்த வெண்பா –

”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும்
கயிலையின் சூலமும் காப்பு – ஒயிலான
கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை
நற்பொருள் நாவல் சிறப்பு’’….!

மோகன் அவருடைய நண்பர்களான எங்கள் அனைவருக்குள்ளும் வாழ்கிறார். அவருடைய வாழ்க்கையையும், கலையையும், எழுத்தையும் நாங்கள் பெருமையோடு கொண்டாடுகிறோம். கண்ணீர் அஞ்சலி செய்வோமில்லை.

இரா.முருகன்

தீராநதி ஜூலை 2019 இதழில் வெளியானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன