எல்லா வீட்டிலும் ஏதாவது பத்திரிகை வந்து விழுந்த பொற்காலம்

விடிகாலையில் வாசல் திண்ணையில்
விட்டெறிந்த இந்து பேப்பரால்
என்னை எழுப்பிய நல்லையாவுக்கு
இந்தக் கவிதை சமர்ப்பணம்.

எதிரே கிரிவீட்டில் காலையில் தினமும்
இந்து பேப்பரும் தினமணியும் வரும்
விகடன், கல்கி, குமுதம் என்று
வாராவாரம் இதழ்கள் தவிர
சுவராஜ்யா என்னும் ஆங்கில இதழும்
மாதக் கடைசியில் பவன்ஸ் ஜேர்னலும்
மாதா மாதம் கலைமகள், அமுத சுரபியும்
மாதம் இருமுறை பேசும் படமும்
விசையொடு நல்லையா வீசிப்போக
வருவது கண்டு மலைத்திருப்பேன் நான்.

தெருமுனை வீடு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்
எக்ஸ்பிரஸும் இந்துவும் இங்கு தினமும்
கட்டுரை படித்து டிக்டேஷன் தரும்
சுருக்கெழுத்துப் பயிற்சிக்கு உதவும்;
நீளநீளமாய் வாக்கியம் கொண்டு
பத்தி எழுதிய ஜி.கெ.ரெட்டியும்
குல்தீப் நய்யரும் அருண் ஷோரியும்
ஷார்ட் ஹேண்ட் தெய்வம் பிட்மனுக்கடுத்த
சிறு தெய்வங்களாக வந்திக்கப் படுவர்.

அண்டை வீட்டில் வாசலில் நின்று
ஓய்வுபெற்ற ஸ்டேஷன் மாஸ்டர்
ஒன் நாட் ஒன் அவுட்டா என்று
தினசரி கேட்க சாமிக்கண்ணு
ஒரு மணி நேரத்தில் போட்டுப் போவார்
சுதேசமித்திரன் தமிழ்நாடென்று
வேறு யாரும் வாசிக்காத தினசரி ரெண்டு;
ஒன் நாட் ஒன் போட்மெயில் தினமும்
சென்னையிலிருந்து கொண்டு வரும்
முந்தைய தினத்து இதழ்களாம்
ரெண்டுநாள் முன்பு நிலவில் நடந்ததை
இன்று படிக்க என்ன பரபரப்போ.

வக்கீல் குமாஸ்தா வேங்கடசாமி
மாதம் இருமுறை பேப்பர்காரராய்
விரைவீக்கம் கவனமாய்த் தவிர்க்க
வேகமின்றி சைக்கிள் மிதித்து
அங்கங்கே போடும் பத்திரிகை
வானொலி என்னும் பெயரில்
மத்திய சர்க்கார் நடத்திய ஒன்று;
அடுத்த இருவாரம் கச்சேரி, பேட்டி
பாப்பா மலர், மணிமலர், சூரியகாந்தி
சினிமா பாட்டு, விவசாய நிகழ்ச்சி
அகில பாரத நாடகம் என்று
வரப் போகும் விவரம் எல்லாம்
அச்சடித்திருப்பதை ஆர்வமாய்ப் படிக்க
பொறுமை வேணும் இருந்தது சிலர்க்கு.
ஞாயிறு மாலை ஒலிச் சித்திரம்
தகவல் மட்டும் சொன்னால் போதும்.

தீபாவளிக்கு குமுதம் குஷியாய்
குணேகா செண்ட் பூசி மலரும்
வீடுகளுக்குள் நல்லையா
வீசிப்போக தெருவே மணக்கும்
விகடனும் ஓர்முறை தஞ்சை சிறப்பிதழ்
வெளியிட்ட போது செண்ட் மணத்தது
நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பில்
எம்ஜிஆர் சரிதம் எழுதத் தொடங்கினார்.
பொன்னியின் செல்வன் புதுசு புதுசாய்
வரும்போதெல்லாம் கல்கியில் வசந்தம்
வைத்துப் படிக்க ஸ்டாண்ட் இலவசம்
நீளம்கூடி அகலம் குறைந்த
கல்கி வடிவம் திரும்ப வராது.

ரெண்டு வசமும் வீடுள்ள தெருவில்
எல்லா வீட்டிலும் வாரம் முழுக்க
ஏதாவது பத்திரிகை வந்து விழுந்த
பொற்காலத்தில் எங்கள் வீட்டில்
ஏதுமில்லை. எம்பசிக்கு எழுதி வாங்கிய
கானா நியூஸ் கணக்கில் வராது
பத்திரிகை வாங்கணும் என்றால்
பாடம் படி. அம்மா சொல்வாள்.

நல்லையா காலில் வேனல் கொப்பளம்
நடக்க முடியாத வாரம் ஒன்றில்
வேறுயாரோ விகடனைத் தவறாய்
எங்கள் திண்ணையில் எறிந்துபோக
கள்ளச் சிரிப்போடு கதை படித்தது
வாஷிங்டனில் திருமணத்தில் கொஞ்சம்;
வரலை விகடனென்று புகார் செய்தனர்
இடுங்கிய கண்ணன் இஞ்சினியர் வீட்டில்
பிடுங்கிப் போனான் பேப்பர் பையன்.

‘இந்த வாரம் ஆனந்த விகடன் படித்தீர்களா?’
ரயில்வே ஸ்டேஷனில் தனியாய்த் தொங்கும்
விளம்பரப் பலகை சந்தடியின்றி விசாரிக்கும்
வாங்கிக் கொடுத்தால் வாசிக்க மாட்டேனா?

வாராவாரம் கல்கண்டு வந்த
வீடுகளுண்டு பதினெட்டே காசு
முப்பத்திரெண்டு பக்கம் முழுக்க
துணுக்குகள், சங்கர்லால், கேள்விபதில்
தமிழ்வாணன் மேலும் தமிழ்வாணன்.
அடுத்த வருடம் கணக்கில் நூறு
வாங்கினால் வரவழைக்கிறேன்
நம்வீட்டிலும் கல்கண்டு
அம்மா சொன்னது இன்னும் நினைவில்
கல்கண்டை நான்தான் மறந்து போனேன்.

தர்ம சக்கரம் என்ற பெயரில்
தபாலில் ஓர் இதழ் வருமதனை
அம்மா படிப்பாள் தினமொரு பக்கம்
முழுக்கப் படித்து முடிக்கும் முன்னால்
போஸ்ட்மேன் சின்னிகிருஷ்ணன்
அடுத்த மாத இதழோடு வருவார்
ரேழி ஓர அறைக்குள் வரிசையாய்
அடுக்கி வைத்த சக்கர வரிசை
அம்மா போனதும் அவையும் நகர்ந்து
எங்கோ போனது யாரும் அறியாமல்.

வேலையில் பின்னர் சேர்ந்த பொழுது
வகைதொகை இன்றிப் பத்திரிகைகள்
வாங்கிப் போட்டேன் திண்ணை நிறைய
எல்லாம் அலுக்க இந்து மட்டும்
போடச் சொன்னேன் தலை குறிபார்த்து
நல்லையா சொர்க்கம் புகுந்திட
நானூர் நீங்கினேன் அப்புறம் ஓர்நாள்.

05.07.2019
————————————-

சம்பளம் ஏதுவரும் என்றுபலர் காத்திருப்பார்
நம்பவைக்க பேஸ்லிப்பில் போட்டுவந்த – கம்பெனிசீல்
நல்லசேதி காசெதுக்கு நாலுபீப்பாய் பீருதரேன்
மல்லையா சொன்னால் சரி.

Weird History‏

The world’s oldest known payslip, from Ancient Sumeria. It shows how much beer was earned in wages.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன