புதிய சிறுகதை – இசை (இரா.முருகன்)

இசை இரா.முருகன்

மதி ரைஸ் குக்கரை ஆன் செய்தபடி மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் –

”அழகின் நிலா கலை அழகின் நிலா
அன்பின் கடலாட வந்ததுவே உலா..”

நின்று பெய்யும் மழை போல மனதில் பொழிந்து விட்டுப் போய்த் திரும்பி வரும் பாட்டு அது. ராஜு மாமா போன தடவை மாமியை செக் அப்புக்குக் கூட்டி வந்தபோது, சாப்பாடு முடிந்து கரெண்ட் இல்லாமல் போன ராத்திரியில் பால்கனியில் உட்கார்ந்து இந்தப் பாட்டைப் பாடினார். நிலவு வெளிச்சத்தில் அழகான கவிதையாக சுருள் சுருளாக மயக்கத்தைச் சுமந்து வந்த கானத்தில் குருவும் மதியும் ஈடுபட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாமா தான் சொன்னார், இது இந்திப் படத்தை டப் செய்து தமிழில் வந்த அக்பர் சினிமாவில் வருவது. ராதா ஜெயலட்சுமி பாட்டு இந்தி ஒரிஜினலில் இல்லை. அங்கே பாட்டு இந்துஸ்தானி இசைச் சக்கரவர்த்தி படேகுலாம் அலிகான் குரலில். நௌஷத் அலி மற்றப் பாடல்களுக்கு இசையமைக்க, கம்பதாசனின் இந்தப் பாட்டுக்கு மட்டும் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையாம்.

பேண்டும் மேலே பனியனும் அணிந்து குரு சமையல்கட்டுக்குள் வந்தான். லுங்கியில் இருந்து சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போகும்போது பேண்டுக்கு மாறினால் போதாதா? மதி எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள்.

“வயிறு நிரம்பின பிறகு இடுப்பில் பேண்ட் பக்கிள் மாட்ட கஷ்டமா இருக்கு”.

மதி சிரித்து, அழகின் நிலா கலை அழகின் நிலா என்று இன்னொரு தடவை பாடியபடி அவன் கையில் தோசைத் தடடைக் கொடுத்தாள்.

“இதுதான் பாடப் போறியா? சூபர்ப்” குரு டைனிங் டேபிளுக்கு நடந்தான். அவன் சீரியஸாகச் சொல்கிறானா, கிண்டல் பண்ணுகிறானா என்று புரியாமல் மதி அவனைப் பார்த்தபடி நிற்க, வாயில் திரும்ப, அழகின் நிலா.

அவளுக்குப் பாட்டுக் கிறுக்கு பிடிக்க அவன் தான் முக்கிய காரணம். வீட்டில் இருக்கும்போது பாடிக் கொண்டே இருப்பான் குரு. அது அநேகமாக, ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ஆகவோ, காவியமா, நெஞ்சில் ஓவியமா ஆகவோ இருக்கும். சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள் எல்லாம்.

கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழித்து அவன் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு, அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் என்று பாடியபோது, மதி பாடிய ஹம்மிங் சரியான இடத்தில் இசைந்ததை அவன் வியப்பும் சந்தோஷமுமாகக் கவனித்தான். மதி அவன் எஸ்.ஜானகி ஆனாள்.

சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாளா என்று ஆர்வத்துடன் விசாரித்தான். இல்லை என்று புன்னகையோடு சொல்லி விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் மதி. பரவாயில்லை, தமிழ் பழைய சினிமா பாட்டு எதெது தெரியும்?

அரிய எடுத்த புடலங்காயைக் கையில் பிடித்தபடி அவளால் உடனடியாக ஏழெட்டு பாட்டு மட்டும் சொல்ல முடிந்தது. மதியையும் ‘பாட்டு பழசு’ ஃபேஸ்புக் குழுவில் சேர்த்து விட்டான் குரு. அது மூன்று வருடம் முன்பு.

அடுத்த வீட்டுக்கு விளையாடப் போயிருந்த நேத்ராவை அந்த வீட்டு அக்கா திரும்பக் கூட்டி வந்தாள். நேத்ராவுக்கு இரண்டு வயது. அழுவது அபூர்வம். பொம்மையோடு அவளே விளையாடிக் கொள்வாள். இடுப்பில் அவளை எடுத்து வைத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தபோது, அங்கே காலி சாப்பாட்டுத் தட்டோடு குரு. நேத்ராவின் கண்ணைச் சுட்டிக் காட்டினாள் மதி.

”லேசா சிவந்திருக்குங்க“.

”இதுவா, நேத்து கண்ணிலே பெப்பா பிக் காமிக்ஸ் புத்தகம் இடிச்சுடுச்சு. அதான். ஃப்ரீஸர்லே ஐஸ் கட்டி எடுத்து துணிக்குள்ளே வச்சு மெல்ல ஒத்தடம் கொடு” என்று சொல்லி விட்டு காப்பி வரலியா என்று நின்றான் குரு. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அவன் வாய் பாடிக்கொண்டிருந்தது..

”எத்தனை மணிக்கு இசை இரவு ஆரம்பிக்குது?” மதியைக் கேட்டான். “அஞ்சு மணியிலே இருந்து பதிவு பண்றது. ஆறரை ஏழுக்கு பாட்டு ஆரம்பிக்குமாம். சலாமத் அங்கிள் இப்போ தான் க்ரூப் மெசேஜ்லே அனுப்பினாரு”.

ஃபேஸ்புக் க்ரூப்பில் கிட்டத்தட்ட ஆயிரத்தைநூறு உறுப்பினர்கள். மதியையும் அட்மின் ஆக்குவேன் என்று அவனுக்கு ஒரே பிடிவாதம். வேணாங்க, ஏன் என் போஸ்டிங்கை அப்ரூவ் பண்ணலேன்னு நடு ராத்திரிக்கு ஃபோன் பண்ணுவாங்க. எனக்கு சரிப்படாதுங்க”, என்று மறுத்துவிட்டாள் மதி.

பழைய சினிமா பாடல்களைக் கொண்டாட ஏற்படுத்திய குழு அது. யாராவது ஏதாவது பாட்டின் வரிகளை அனுப்புவார்கள். அல்லது அது பற்றி எழுதுவார்கள். விவாதங்களில் சமயத்தில் பொறி பறந்தாலும் பகை இல்லை.

போன வருடம் பாட்டுகளை பின்னணி இசையோடோ இல்லாமலோ பாடி க்ரூப்பில் அப்லோட் செய்ய தினசரி போஸ்ட்கள் நூறைத் தொட்டன. போன மார்ச் மாதம் ஒரு சாயங்காலம் குழுவில் நண்பர்கள் ஒரு சந்திப்பு வைத்தபோது கிட்டத்தட்ட இருநூறு பேர் வந்து குழுமி விட்டார்கள். ஹம்மிங் தனலட்சுமி அக்கா, சீர்காழி அண்ணா, கர்னாடிக் ஜமீலா பேகம் என்று நல்ல நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு, பேச்சு, பாட்டு, அப்புறம் டின்னர் என்று அட்டகாசமாகப் போனது அந்த இசை இரவு.

இந்த வருடம் இசை இரவு விழா இன்றைக்கு. குருவும் மதியும் சேர்ந்து பாட உத்தேசித்து இருந்தார்கள். பாட்டு கூட ரெடியாகி விட்டது. நடுவில் இரண்டு வரிகளை நீக்கி, ’கட்டோடு குழலாட ஆட’. எல் ஆர் ஈஸ்வரி, சுசீலா இரண்டு குரலும் மதி தான். “டி எம் எஸ் குரல் பாதி பாட்டுலே தான் வருதுங்க. நீங்க ஓப்பன் பண்ற சாங்க் அப்படீன்னா நல்லா இருக்கும்” என்று மதி சொன்னாள். மறுத்து விட்டான் குரு. “இது ஜோடி நாயனம். எங்கே ஆரம்பிச்சா என்ன?”

நாலு நாள் பாடி ஒத்திகை பார்த்தார்கள். எல்லாம் தயாரான நேரத்தில் குரு ஆபீசில் ஆடிட். தினசரி பதினான்கு மணி நேரம் வேலை, லீவு எடுக்க தடை.

“நீ தனியாப் போய்ட்டு வந்துடேன்” குரு தான் பிரஸ்தாபித்தான். நேத்ராவை என்ன செய்வது? “எங்க அம்மா வருவாங்க”. என்றான் சுருக்கமாக. ”ஆபீஸ் கிளம்பறேன்” ஸ்கூட்டரைக் கிளப்பிப் போனான் அவன்.

வீடு அமைதியாக இருந்தது. நேத்ரா தோசை சாப்பிட்டு விட்டு உறங்கியிருந்தாள். வாசல் அறைக்குள் சத்தம் புகாமல் கதவு சாத்தி மதி பாடத் தொடங்கினாள்: பாடிப்பாடி, நேரம் போனதே தெரியவில்லை.

அழகின் நிலா கலை அழகின் நிலா
அன்பின் கடலாட வந்ததுவே உலா
குழலிசை மாருதம் வீசிடவே
கொஞ்சும் விழியிரண்டும் பேசிடவே
மழலை மறந்து மலர் இதழாடவே
மனதினில் ஆனந்த தேன்குடமே

இசை அமைப்பாளர் ராப் பீட்டர் கலந்து கொள்வார் என்பது நிகழ்ச்சிக்கு இன்னும் அதிக பரபரப்பைக் கொடுத்திருந்தது. அவர் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பாட்டாவது புதுப் பாடகருக்குத் தருவது வழக்கம். மதி பாடும் அழகின் நிலா அவருக்கும் பிடித்திருக்கலாம். கனவுகளை வெளியே அனுப்பிக் கதவடைத்து வந்தாள் மதி. நேத்ரா பக்கத்தில் படுத்து சின்னத் தூக்கம் போட்டு எழ ஆசை.

எழுந்து பார்த்தால் பிற்பகல் இரண்டு மணி. ராட்சசத் தூக்கம். சாதம் தவிர வேறேதும் சமைக்கவில்லை. இசை இரவு நடக்கும் பள்ளிக்கு விரைய வேண்டும். விரதம்தான் இன்றைக்கு. நேத்ரா சாப்பிடவில்லையே? இது முதலில் தோன்றியிருக்க வேண்டாமா? என்ன அம்மா நான்? நேத்ரா எங்கே?

டைனிங் டேபிளில் பெரிய டிபன் காரியர் இருந்தது. மதி அங்கே போக, உள்ளே இருந்து குருவின் அம்மா இடுப்பில் நேத்ராவோடு வந்தாள். ”மதி, சாப்பிடு” என்றாள் அவள் பிரியமாக. நல்ல பசி. வேகமாகச் சாப்பிட்டாள் மதி.

”சாரி அத்தை, தூங்கிட்டேன். ரொம்ப நாழியாச்சா நீங்க வந்து?” மதி கெஞ்சும் குரலில் கேட்டாள். இன்றைக்கு அவளுக்கு எதுவும் சரியாக வரவில்லை. இதோடு எங்கே போய் பாடி, மியூசிக் டைரக்டர் கைதட்டி, சினிமாவில் பாடக் கூப்பிட்டு? இப்போ வர சௌகரியப் படாது சார். அப்புறம் வந்து பாடறேன்.

”குரு ஃபோன் பண்ணினான். ஆல் தி பெஸ்ட். அவங்க அப்பா கோவை போயிருக்கார். அதான் நான் மட்டும் வந்தேன். நீ இன்னும் ரெண்டு தடவை ரிகர்சல் பாத்துட்டு புறப்படு. வீட்டை இன்னும் சில மணி நேரம் மறந்து பாட்டிலே கவனத்தை வை. இது உன்னோட நாள்”, குரு அம்மா சொன்னாள்.

இந்த இதமும், அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இருக்காமல் அன்பு பாராட்டுவதுமாக குருவின் அம்மாவை மாமியார் ஸ்தானத்தில் இருந்து மூத்த சிநேகிதியாக்கி வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னபடி மதி டைனிங் டேபிள் நாற்காலியில் உட்கார்ந்து பாட ஆரம்பித்தாள் – அழகின் நிலா கலை அழகின்

”ரொம்ப நல்லா இருக்கு”. பாட்டியும் பேத்தியும் சேர்ந்து கைதட்டினார்கள். ”அம்மா ஐஸ்கிரீம்” என்றாள் நேத்ரா.

”நாம் இப்போ பெப்பா பிக் கார்ட்டூன் பார்க்கப் போறோமே”. பாட்டி அவள் தலையைத் தடவியபடி சொன்னாள்.

“சாக்கோ பிஸ்கட்டு வேணும்” நேத்ரா பாட்டியைக் கட்டிக் கொண்டாள்.

அந்த சந்தோஷத்துக்கு நடுவே மதி அவசரமாக உள்ளே போய் உடை மாற்றிக் கிளம்பினாள். காலடிச் சத்தம் கேட்காமல், நேத்ரா கவனத்தில் படாமல் நடந்து வெளியே போய் செருப்பணிந்து வீட்டு வாசலுக்கு வரும்போது குற்றவாளி போல மனக் குமைச்சல். நடந்தால் பதினைந்து நிமிடத்தில் போய் விடலாம். வியர்த்து விறுவிறுத்துப் போகாமல் ஆட்டோ கிடைத்தால் பூத்தாற்போல் போய் இறங்கி விடலாம். ஆட்டோ கிடைத்தது.

ஒலிபெருக்கியை சோதனை செய்கிற சத்தம் தொடர்ந்து வர, மதி உள்ளே நுழைந்தாள். கூட்டம் கூட்டமாக அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் இவளைத் தெரிந்திருந்தது. .

யாரோ அவசரமாக மொபைல் ஃபோனை ஹால் சுவரில் ப்ளக்கில் இணைத்துப் பிடித்தபடி நிற்க, மதிக்கு அவள் ஃபோனின் சார்ஜர் எடுத்துவர மறந்து போனது நினைவு வந்தது. மொபைலை பார்த்தாள். முப்பது விழுக்காடு சார்ஜ் பாக்கி. இன்னும் இரண்டு மணிநேரம் சமாளிக்க வேணும்.

நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாட்டு, பின்னணி இசை பலமாக முந்த, வேகமாக ஓடி வந்தது. குரோம்பேட்டை விஜியம்மா பள்ளியில் பிரார்த்தனை நேரம் போல், கை கூப்பி கண்மூடிக் கொண்டு பாட, கொஞ்சம் அபசுரமாக ஒரு புல்லாங்குழல், படுகுஷியான தபலா, அவ்வப்போது பிளிறும் சாக்ஸபோன் என்று தொடர, விஜியம்மாவின் கணவர் ஓடி ஓடிப் பதிவு செய்தார்.

யாரோ கையில் சீட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். எண் இருபத்தெட்டு. ஒவ்வொருத்தரும் ரெண்டு நிமிஷம் மட்டும் பாடலாம் என்பதால் இன்னும் ஒரு மணி நேரத்தில் மதி மேடை ஏறுவாள்.

சட்டென்று எஸ்.ஸி கிருஷ்ணன் குரல். வந்தேனே என்று சுசீலாவோடு ஆரம்பித்தது. உச்சஸ்தாயியில் அநாயசமாக நடனமாடும் அற்புதக் குரல் அது. நவராத்திரி படப் பாடல் என்று மதிக்கு குரு சொன்னதுண்டு. பாதி பாட்டில், அவையில் சலசலப்பு. இசையமைப்பாளர் வந்து கொண்டிருந்தார். எஸ்.ஸி கிருஷ்ணனை அந்தரத்தில் விட்டு அடுத்த பாட்டுக்கு அழைப்பு.

”நானன்றி யார் வருவார்?” என்று அதிகாரமாக ஆரம்பித்தது அடுத்த பாடல். “ஏன் இல்லை?” என்று பெண்குரல் மிரட்டியது. டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி.கோமளாவும் இந்தப் புது மாலையிட்ட மங்கையைப் பார்த்திருந்தால் எழுந்து ஓடியிருப்பார்கள். பாவம், இந்த ஜோடி, திருச்சியிலிருந்து வந்திருக்கிறார்கள். மதியோ, குருவோ க்ரூப்பில் என்ன எழுதினாலும், சூப்பர், அட்டகாசம், பிரமாதம் என்று ஒற்றை வார்த்தை பதில் எழுதுகிற தம்பதி.

சீரான குரலும், கெஞ்சலும், செல்லமாகப் புகார் சொல்லும் தொனியுமாக அடுத்து ‘என்னுயிர்த் தோழி கேளொரு சேதி’ வந்தது. சுசீலாம்மாவின் எக்ஸ்ட்ரா ஸ்வீட் குரல் அது. கர்ணன் பட நவரத்தினப் பாடல்களில் ஒன்று.

புவனா சைகையில் நல்லா இருக்கியா என்று கேட்டபடி மேடைக்குப் போகத் தயாராக நாற்காலி முனையில் தொடுக்கினாற்போல் உட்கார்ந்திருந்தாள். மதி கூடப் படித்தவள். படித்து பேங்க் உத்யோகமாகி கடகடவென்று பதவி உயர்வு. இசைதான் இரண்டு பேரையும் இன்னும் இணைத்திருக்கிறது.

மதியே எதிர்பார்க்காமல், ‘அம்மம்மா கேளடி தோழி’. கருப்புப் பணம் படத்தில் எல் ஆர் ஈஸ்வரி பாட்டை போதைக் குரலில் பாடியதோடு, நடுவில் வரும் வசனத்தையும் இனிமை மாறாமல் சொன்னாள் புவனா. பலமாகக் கை தட்டினாள் மதி. இந்தப் பாட்டு போதும் இன்றைக்கு நினைவில் சுமந்து போக.

”கட்டித் தங்கம் வெட்டியெடுத்து” தொண்டைக் கரகரப்பான குரலில் வந்தபோது மதி மனதில் அழகின் நிலாவை ஹம் செய்து பார்க்கத் தொடங்கினாள். இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில் பாட வேண்டிவரும்.

அழகின் நிலா கலை அழகின் நிலா
ன்பின் கடலாட வந்ததுவே உலா
குழலிசை மாருதம் வீசிடவே

அப்புறம்? ஒன்றுமே நினைவில் வரவில்லை. அவளுக்குப் பதைபதைப்பு அதிகமானது. ஐயயோ, இதென்ன சோதனை. எப்படி மறக்கப் போச்சு? எழுதி வைத்து எடுத்து வந்திருக்கலாம். வீடு, குடும்பம், குழந்தை என்று ஆனவளுக்கு எதற்காகப் பாட்டுப் படிக்கும் கிறுக்கு? வீட்டுக்காரன் தான் சொன்னால் எனக்கெங்கே புத்தி போச்சு? அழுகை வந்தது. நிறுத்தி, மனதில் திரும்ப பாட ஆரம்பித்தாள். அழகின் நிலா கலை அழகின் நிலா அன்பின் கடலாட. சரியாக மூன்றாம் வரியோடு நின்று போகிறது. இண்டர்நெட்டில் பார்த்தால்? யூடியூபில் கிடைக்கலாம். தேட நேரம் இருக்கிறதா? தேடிப் பார்க்கலாம்.

வேகமாக வெளியில் வரும்போது, அவளுக்குப் பிடித்த ‘காவேரி ஓரம் கவிசொன்ன காதல்’. யாரோ அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். வேணாம். அதில் ஈடுபட்டால் அழகின் நிலா முழுக்க மறந்து போய்விடலாம்.
வாசலில் வெளிச்சமாக இருந்தது. கார்களும் லாரிகளும் ஹாரன் இரைச்சலோடு விரையும் ராத்திரித் தெரு. அவள் மொபைலைப் பார்த்தாள். இருபது விழுக்காடு சார்ஜ் தான் பாக்கி இருந்தது. நெட்டில் எப்படித் தேட?

யாரிடமாவது கேட்கலாமா? மொபைல் ஒரு நிமிடம் தருவார்களா? கேட்க கூச்சமாக இருந்தது. குருவுக்கு ஃபோன் செய்யலாமா? ‘ரொம்ப ரொம்ப அவசியம்னா மட்டும் ஃபோன் பண்ணு”. வேணாம், அழகின் நிலா அவசரமில்லை. இன்னொரு தடவை வாய்விட்டுப் பாடிப் பார்த்தால் வருமோ?

ஓட்டல் வாசல் காவல்காரர்களும், நிறுத்தி வைத்திருந்த கார்களின் ட்ரைவர்களும் எங்கே குரல் வருகிறது என்று தலை திருப்பிப் பார்க்க, தலை குனிந்து பாடினாள் மதி. கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது. அழகின் நிலா கலை. கொஞ்சம் குரலை உயர்த்தலாம் என்றான் வானத்தில் மெலிந்திருந்த பிறைச் சந்திரன். பாடினாள். அழகின் நிலா கலை அழகின் நிலா. வாசலில் பறந்த மின்மினியொன்று அவள் புறங்கையில் அமர்ந்தது. பாட்டுப் பாடு என்றது அதுவும். மறந்துடுச்சு என்றாள் மதி மனதுக்குள்.

சட்டென்று நினைவு வர ராஜு மாமாவுக்கு போன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப். ஆஸ்பத்திரி போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். போயிருப்பார்.

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு. உள்ளே அதிக துக்கத்தைக் குரலில் வரவழைத்தபடி யாரோ பாடியது குரல் பிறழ்ந்து நின்று போனது .

அழகின் நிலா கலை அழகின். வரவில்லை. வராது இனி என்று நிச்சயமானது. அவள் வாசலிலேயே நிற்க, நேத்ரா நினைவு. குழந்தையோடு கூடவாவது இந்த ராத்திரியை சந்தோஷமாகக் கழித்திருக்கலாம். மாமியாரை தொந்தரவு செய்து வரவழைத்திருக்க வேண்டாம். அழகின் நிலா. அது நல்ல கானம் தான். மதிதான் அதைப் பாட லாயக்கு இல்லாதவள். அழகின் நிலா கலை.

உள்ளே போகத் திரும்பும்போது. குருவின் ஸ்கூட்டர் ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ஓடிப் போய் அவன் ஸ்டாண்ட் போடும்போது முன்னால் நின்றாள் மதி.

“நீ பாடறதைக் கேக்கணும்னு தான் வந்தேன். கேட்டுட்டு மறுபடி ஆபீஸ்.. ராத்திரி பத்தாயிடும் அங்கே.. நீ இன்னும் பாடலே தானே?”

ஒன்றும் சொல்லாமல் பில்லியனில் ஏறிக் கொண்டாள்.

“என்னாச்சு கண்ணம்மா?”, அவன் ஆதரவாகக் கேட்டான். “மறந்து போச்சுப்பா”, என்றபோதே கண்ணீர்
பொங்கியது மதிக்கு.

“தத்தகாரம் பாடியிருக்கலாமே?”, அவன் கனிவாகக் கேட்டான். “வரி வரியா எல்லாப் பழைய பாட்டையும் குழுவிலே ரசிச்சிட்டு இப்போ மறந்து போய் தடவிக்கிட்டு நின்னா சரியா இருக்குமாப்பா?”

அவன் சிரித்தபடி ஸ்கூட்டரைக் கிளப்பினான். மெல்ல சீராக ஸ்கூட்டர் நகர அவள் பின் சீட்டில் பாட ஆரம்பித்தாள்.

அழகின் நிலா கலை அழகின் நிலா
அன்பின் கடலாட வந்ததுவே உலா
குழலிசை மாருதம் வீசிடவே

ஸ்கூட்டர் ஓட்டியபடி தொடர்ந்தான் குரு –

கொஞ்சும் விழியிரண்டும் பேசிடவே
மழலை மறந்து மலர் இதழாடவே
மனதினில் ஆனந்த தேன்குடமே

அவளுக்கு சிரிப்பு வந்தது. அவன் குரலோடு இசைந்து அவளும் பாடினாள் –

அழகின் நிலா கலை அழகின் நிலா
அன்பின் கடலாட வந்ததுவே உலா (நிறைவு)

கல்கி 7 ஜூலை 2019 இதழில் பிரசுரமானது

ஓவியம் தமிழ்
புகைப்படம் சுரேஷ் கண்ணன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன