இருட்டு என்பதே பார்வை மறைக்க இரவு என்பது இருட்டாய் இருக்க

சின்னஞ் சிறுவராய் இருந்த காலம்
திருவிழாக் கடைகளில் வருடா வருடம்
வாங்கி அணிந்தோம் நீலமும் பச்சையும்
நிறங்களாய் வந்த ப்ளாஸ்டிக் கண்ணாடி
திருவிழா முடிந்த ராத்திரி தூக்கத்தில்
தனித்தனியாய் உதிர்ந்தது ஓர்முறை
கோவில் வாசலில் உறங்கிக் கிடந்த
வணிகனைக் காலையில் எழுப்பிக் கேட்டால்
அடுத்த வருடம் வருவேன் தருவேன்
என்றான் பீடிபுகைத்து அரையில் சொறிந்து
ஐம்பது காசு தண்டம் உன்னால்
கருத்தாய் எதையும் வச்சுக்கத் தெரியலே
தோசை வார்த்தபடி திட்டிய பாட்டி
தோசியென்றாள் அன்றைக்கு என்னை
யோசிக்கின்றேன் இன்னும் அறியாது .

பட்டை ப்ரேம் கண்ணாடி போட்டவர்
சட்டம் பேசுவார் சகல இடத்திலும்
ஷெல்ப்ரேம் அணிந்தவர் புத்தகம் பலவும்
முகர்ந்து பார்த்தவர் படித்தது அறியோம்
தங்க ப்ரேம் அணிந்தவர் தரையில் நடவார்.
வெள்ளியில் வைரத்தில் இல்லை மற்றும்
வெறும் இரும்பிலும் செம்பிலும் உண்டோ.
ஆடிக்கு மதிப்பு அதன்வழி நோக்கவே
கண்ணில் படுவது ப்ரேமின் இருத்தலே.

கண்ணாடி போட்டுப் போட்டு
கண்கள் உழைத்து உழைத்து
மங்கிப் போனது; கூடுதல் சக்தி
கண்ணாடி அணிவீர் உடனடியாக
ஒவ்வொரு முறையும் மருத்துவர் சொல்வார்
இன்னும் பவர்கூடிக் கண்ணாடி அணிந்தால்
பூதக் கண்ணாடி போல்புவி காட்டும்.
மூக்குள் சிறுமயிர் நகத்தில் அழுக்கு
சொத்தைப்பல் தெரிந்தால் காதல் வருமா?

ஜாரிணிக் கரண்டி உருளி சாம்பன்
உருளி என்பது ஊர்ப்பெயர் ஆகும்
சாம்பார் ஸ்பெஷலிஸ்ட் சமையல் ராஜா
கண்ணாடி ஏதும் போடா முகத்தில்
காம்ரேட் மா சே துங்கின் ஜாடை
ஒற்றைக் கண் தான் மற்றது பூவிழி
பூவிழி என்றால் பார்வை பழுது
மதுரை போனார் மருத்துவமனையில்
வலது கண் திரை அறுத்துக் களைந்து
ஒற்றை ஆடி கருப்பில் வார்த்து
போட்டு அனுப்பினர்; லட்டு பூந்தி
தேய்த்தபடிக்கு வீட்டில் கண்டேன்
கிராம்பும் எறும்பும் தெரியுதாம் சொன்னார்
மோஷி தயான் ஆன சேர்மன் மாவோ.

ப்ரேம் இன்றி கண்ணாடியே
முழுதுமாய் வனைந்து இருக்கும்
கண்ணாடி அணிந்தவர் காதல் மிகுந்தவர்
கண்ணாடி ப்ரேம் ஓரம் பட்டுநூல் கட்டி
கழுத்தில் மாட்டும் பெண்களைப் பிடிக்கும்
கண்டிப்பும் கனிவும் மிகுந்தவர்
உப்பு பிஸ்கட் இனிப்பது போல.
ஆண் கயறணிதல் அசட்டுத் தனமே.

கண்ணாடியில் கண்ணாடி இன்றி
பிளாஸ்டிக் லென்சாம் தானே கறுக்குமாம்
உருண்டு புரண்டாலும் உடைந்து போகாதாம்
ஆணும் பெண்ணும் அணைத்த விளம்பரம்
கண்ணாடி போட்டா காமம் துய்ப்பது?

வெய்யிலில் நடக்கக் கண்ணாடி கறுக்கும்
மாயம் இன்று பழகி விட்டது
இரவும் பகலும் பிம்பம் துலக்கி
இருட்டில் பார்க்க வருதாம் புதிதாய்
இங்கொரு கண்ணாடி இதற்கேனோ
இருட்டு என்பதே பார்வை மறைக்க
இரவு என்பது இருட்டாய் இருக்க.
————————————————-

ஏழுகடல் தாண்டிப்போய் எங்கோவோர் தீவினிலே
வாழும்நல் தேவதையின் மீதிகதை – தோழிசொல்வேன்
அம்மையப்பன் நானுண்டு அஞ்சிடாதே நின்றுவிடும்
பொம்மையில்லம் தான்சிதைத்த போர்

A girl sitting with her toy doll outside her bombed home in 1940s London

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன