நூறு வருடப் புத்தகம் அடுக்கி நீளநெடுக்க மர அலமாரிகள்; இருந்து படிக்கக் கால்கள் உடைந்த இருக்கைகளோடு நூலகம் கிடக்கும்.

நூறு வருடப் புத்தகம் அடுக்கி
நீளநெடுக்க மர அலமாரிகள்;
இருந்து படிக்கக் கால்கள் உடைந்த
இருக்கைகளோடு நூலகம் கிடக்கும்.

சின்னப் பையன்கள் வருவது பார்த்து
அரபு இரவுகள் ஆயிரமும் அவசரமாய்
மேல்தட்டேறி ஒளிந்து கொள்ளும்
ஏற முடியாத கடைசி ஒண்ணு
பொலபொலவென்று பேப்பராய் உதிரும்.

அநுத்தமாவும் ராஜம் கிருஷ்ணனும்
லஷ்மியும் குகப்ரியையும்
கிருத்திகாவும் கு.ப.சேது அம்மாளும்
குமுதினியும் சூடாமணியும்
வைத்த அலமாரியில் வல்லிக்கண்ணனும்.
அடிக்கடி தரையில் விழுந்திட நூலகர்
வல்லிக்கண்ணனை வாசல் அலமாரிக்கு
மாற்றி வைத்தார். பெண்தனி ஆண்தனி
பேணுவோம் என்றார் சங்கடம் தீர.

வியாசர் விருந்து கடனாய்ப் பெற்று
வீட்டில் படிக்க எடுத்துப் போன
வாசுதேவன் ஒரு நாள் சுணங்கி
புத்தகம் திருப்ப வந்தான்
ஐந்துபைசா அபராதம்.
லெட்ஜரில் எழுதிக் காசு வாங்கி
இரும்புப் பெட்டியில் பூட்டி விட்டு
ரசீது போட்டு ஸ்கேல் வைத்துக் கிழித்து
நீளமாகக் கையெழுத்திட்டு
ரெண்டு பிரதிகள் கோப்பில் வைத்து
தேசலாய் ஒன்று வாசுதேவன் பெற
நாலு கிளார்க்கும் நூலகரும்
வேகம் இயங்கி ஓடி நடக்க
நூலகம் அரைமணி பரபரப்பானது.

பத்து மாதம் திருப்பித் தராமல்
பரமார்த்த குருகதை தன்னிடம் உள்ளதாய்
பரமசிவம் சொன்னான் என்ன ஆகும்
நாடு கடத்த மாட்டாரெனினும்
நூற்றைம்பது ரூபாய் தண்டம் வசூலுக்கு
மாவட்ட நூலகர் ஓடி வருவாரோ
உள்ளூராருக்கு ஓர் அதிகாரமில்லை.

நூலகம் உள்ளே அமைதி காக்கணும்
பேசணும் என்றால் தோட்டம் போகணும்
கக்கம் குடைவைத்த குப்புசாமி
பக்குவமாய் நூலகரை இட்டுப் போய்
கொக்கோகம் கிட்டுமா என்று கேட்டான்
வக்கா எனத்தொடங்கி அவர் வைய
கெக்கே எனச் சிரித்து ஓடினானாம்
செக்கெண்ணெய் கடைக்காரர் சொன்னார்.

டிடிகே அட்லாஸ் பூகோள வரைபடங்கள்
கடன் கொடுக்க வசதிப்படாது
இங்கு வைத்துத்தான் படிக்கணும்.
விதிகள் அடுக்கிய நூலகர் மருள
இங்கிலீஷ் கவிதைகள் சிற்சில
எடுத்து மேற்கோள் காட்டி
சுப்பன் வக்கீல் நூலோடு நடந்தார்.
சின்ன மகள் சீமந்தம் முடிந்த பின்னர்
பார்க்க வேணுமாம் லிதுவேனியா உள்ளதெங்கே.
இன்னும் பல்லாண்டு இருக்கட்டும் லிதுவேனியா
சொல்லாமல் கொள்ளாமல் சோவியத் நாடுபோல்
இல்லாது வரைபடத்தில் மறைந்து போகாமல்.

சமணத் துறவி போல் வாயும் மூக்கும்
சுற்றி மறைத்து வெள்ளைத் துணிகட்டி
காலில் சைபால் களிம்பும் பூசி
நூலகர் ஒருநாள் நூலகம் புகுந்தார்
புத்தகவாடை பிடிக்கலை அதனால்
நோயுண்டானதாம் தவிர்ப்பேனென்றார்.
புத்தகம் முகர்ந்தால் கால் ஆணி வருமோ?

புதுப் புத்தகங்கள் வண்டி வண்டியாய்
வந்துசேர வாசலில் அடுக்கி
அழகுக் குழந்தை ஆடை களைவதுபோல்
அட்டை அகற்றி அவசர பைண்ட் செய்ய
எல்லா நூலும் ஒருபோல் தோன்றும்.
எல்லா நூலும் ஒருபோல் தானோ.

——————————————————–
ஓர்பத்தும் நூறாண்டும் ஓயாமல் வண்டியோடி
நேர்நிறைத்து கோலாவும் போகவர – பேர்கூடும்
என்ன உயிருக்கு இத்தைக் குடிக்கணும்
அன்னாடம் மாந்தி அலுப்பு

என்ன உயிருக்கு — வேறு மாதிரியும் வரும்

Lost in History‏

Coca Cola delivery truck, 1909.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன