சென்னை – தனுஷ்கோடி போட் மெயில்

செண்ட்ரல் ஸ்டேஷனை எந்த வருடமோ
இந்திக் காரர்களுக்கு எழுதி வைத்தார்கள்
இந்திமிகுந்த அங்கே புறப்படாது
தமிழூர் எழும்பூர் நீங்கும் நூற்றொண்ணு
மதராஸ் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டி.

இலங்கை செல்லப் படகுகள் ஏற
தனுஷ்கோடிவரை போனதால் இதனைப்
போட்மெயில் என்போம் எங்கள் பூமியில்
தனுஷ்கோடியைக் கடல் கொண்டு போச்சு.

ராத்திரி ஏழரை எழும்பூர் விட்டு
வண்டி கிளம்பினால் பெட்டி பெட்டியாய்
இட்லிப் பொட்டலம் திறந்து வைத்து
வேகம் தின்பதே சீலமென்று
தலைமுறையாகப் பழக்கம் உண்டு.

காய்ந்து போன பூரிக் கிழங்கும்
எப்போதோ ஆக்கிய எலும்பு பிரியாணியும்
ஸ்டேஷனில் வாங்கி தொண்டை அடைக்க
விழுங்கும் பாவம் மனுஷ்யரை என்றும்
பரமபிதா பாதுகாத்திடட்டும்.

தின்று தீர்த்து லுங்கிக்கு மாறி
உள்ளூர் அரசியல் உரக்கப் பேசி
பக்கத்து சீட்டார் போவதெங்கே
எல்லாம் தெரிய எட்டு நிமிஷம்.

மானாமதுரையில் என்ன வாங்கலாம்
யாரோ கேட்கிறார்; ஓர இருக்கை
பெரியவர் சொல்வார் கொள்ளைமலிவாய்
நீரில்லாத வைகை வாங்கலாம்.

மீதி பணத்துக்கு மண்பாத்திரங்கள்
கடமும் குடமும் வாங்கச் சொல்லி
அப்பர் பர்த்தில் கட்டை கிடத்தணும்
சித்தம் ஒடுக்கி சிவசிவ என்று.

விழுப்புரம் சந்தி பலகை படித்து
விஷமமாய்ச் சிரிப்பார் மல்லு ஒருத்தர்
சந்தி என்றால் அவர்கள் மொழியில்
பின்னம்பாகம் மட்டும் தானாம்.

நடுராத்திரி நாலே குழல்விளக்கு
எரிய வருவது தஞ்சைதானா?
சந்தி தாழ்த்திச் சற்று இறங்கி
ஜன்னல் வழியே பார்க்கும் நேரம்
ஓரெழுத்து உதிர்க்கும் ஒற்றைக் குரல்
டீடீடீடீ டீடீடீடீ
நடுராத்திரிக்கு தேநீர் அருந்த
கொடுப்பது அவர் கடமை
மறுப்பது உம் உரிமை.

பொலபொலவென்று பொழுது விடிய
திருச்சி வந்திடும் காப்பி காப்பி.
குடித்தது போதாமல் கூட ஒன்று
சூடாய் இறங்க சந்திக் கலவரம்.

காரைக்குடி கடந்த பின்னே
ஏவிஎம் சிமெண்ட் ஷெட் போட்டு
வேதாள உலகம் எடுத்த ஸ்டூடியோ
இன்னும் கிடக்கும் இடிபாடுகளை
மொகஞ்சோ தாரோ, ஹரப்பா போல
மொத்த ரயிலும் பார்த்துக் கடக்கும்.

மானாமதுரையில் சாண்ட்விச் கிடைக்குமா
பரமக்குடியில் கமல்வீடு பார்க்கலாமா
ராமேஸ்வரம் ஓட்டல் விஜிடேரியன் மட்டுமா?
எல்லாக் கேள்விக்கும் புன்னகை ஒன்றை
பதிலாய் ஈந்து வாசல் போகிறேன்
எங்களூர் வந்தாச்சு இறங்க வேணும்.

———————————————–

நேற்றிருந்த வீடெங்கே நாளைக்குப் போகுமிடம்
கூற்றுவனாய்க் குண்டுபெய்து கொன்றழித்தார் – மாற்றார்
அயலண்டை கூடவந்து ஆழத் துயில்கொள்
ரயில்வரா ராத்திரி கள்.

எட்டுமணி வண்டிவந்தால் ஏறிப்போ ஆபிசுண்டோ
அட்டெண்டன்ஸ் கையொப்பம் சற்றுவேலை – கட்டிவைத்து
ராத்திரிக்கு வீடுபோக வண்டிவரும் வீடிருக்கும்
காத்திருக்கும் காலமெலாம் கல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன