நாவல் விஸ்வரூபம் – ஓர் அறிமுகமும் சில குறிப்புகளும்

நான் எழுதிய அரசூர் நான்கு நாவல் வரிசையில் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே) இரண்டாம் நாவல் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் நண்பர் வித்யா ஆனந்த் எழுதியிருப்பதும், என் குறிப்புகளும்.

வித்யா ஆனந்த்
—————
காலத்தை நேர்கோடாகவே பார்த்துப் பழகிய நமக்கு அதை சிதறிய துணுக்குகளாகக் காட்டி ஒரு வித்தியாசமான விருந்து படைக்கிறது இரா முருகன் EraMurukan Ramasami அவர்கள் எழுதியுள்ள விஸ்வரூபம்.

இந்தக் கதையின் prequel அரசூர் வம்சம் படித்துவிட்டு இதைப் படித்தால் பாத்திரங்களிடம் நமக்கு ஒரு பரிச்சயம் ஏற்படும். ஆனால் அதைப் படிக்காமலே இதைப் படிக்கத் தடையேதும் இல்லை.
தாயாரின் அஸ்தியைக் கரைக்கக் கிளம்பும் குடும்பம்

காலத்தில் தொலைந்துபோய் கிருஷ்ணலீலா படம் ஓடுகிற தியேட்டர் முதல் எடின்பரோ ரயில் வரை இடம், காலம் எல்லாவற்றையும் கடந்து உலாவுகிறது. இது கதையின் ஒரு இழை.

அரசூர் வம்சத்தில் சிறுவர்களாகக் காட்டப்படும் நீலகண்டனும் மஹாலிங்கமும் பெரியவர்களாக வருகிறார்கள். அதில் மகாலிங்கய்யனின் வாழ்க்கை விரிவாகக் காட்டப்படுகிறது. திருக்கழுகுன்றம், அங்கு ஒரு பெண்ணின் கொலை, சிறைவாசம், தோட்டத்தொழிலாளராக பினாங்கு ( ஒரு வேளை மலேசியாவா நினைவில்லை, படித்து இரண்டு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது.) செல்வது, காப்பிரிச்சியைத் திருமணம் செய்துகொள்வது, லண்டன் செல்வது, அங்கும் பிச்சைக்கார வாழ்க்கை, பின் இந்தியா வருவது என்று அவனது வாழ்க்கை அலைக்கழிக்கப்படும் விதம் இந்தக் கதையின் மற்றொரு இழை. காலத்தில் தொலைந்துபோகிற குடும்பம்போலவே அவனும் பலமுறை தொலைந்துபோகிறான். அவனது பலவீனங்கள் அவனைத் தொலையச்செய்கின்றன. சென்னைக்கு வந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தி, சொந்த வீட்டில் அந்நியன்போல் நுழைந்து, இறுதியில் தன் வீட்டு வாசலிலேயே இறந்துபோகிறான். வாழ்க்கையின் பொருள் என்று எஞ்சுவதென்ன? ஒன்றுமில்லை. அர்த்தமற்ற சம்பவங்களின் கிறுக்குத்தனமான தொகுப்பு. அவ்வளவுதான்.

அந்தக் கிறுக்குத்தனம் மற்றும் அலைக்கழிப்புக்கு நடுவில் ரம்யமான நிழல் தரும் அடைக்கலம்போல தெரிசா, பகவதி, கிட்டாவய்யன், வேதய்யன் இவர்களின் பாத்திரங்கள். இன்னும் குறிப்பாக சொன்னால் மதம் மற்றும் கலாசார மாற்றத்தால் பாதிக்கப்படாத குடும்ப உறவுகள் மனதைத்தொடும் சுகமான அனுபவம். மகாலிங்கய்யனின் பாத்திரத்துக்குக் complementaryயாக இவை அமைந்துள்ளன. ஆனால் மகாலிங்கய்யனின் பாத்திரப்படைப்புதான் எல்லாவற்றுக்கும் மேலெழுந்து நிற்கிறது. ஆசிரியரின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது subconscious mindஇல் இருந்து உருவானதுபோல் நல்லவன், கெட்டவன், பிழைக்கத் தெரிந்தவன், தெரியாதவன் என்ற எந்த வகைப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் ஒரு சுதந்திரத்தன்மையுடன் (அடங்காப்பிடாரித்தனம் என்றும் சொல்லலாம்) அந்தப் பாத்திரம் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறது.

மகாதேவனின் தாயாரின் அஸ்தி, அதுவும் அலைக்கழிக்கப்படுகிறது. கோர்ட்டில் அரசாங்கப் பாதுகாப்பில் இருப்பது கைமாறி மாறி இறுதியில் கங்கையில் கரைக்கப்படுகிறது.

இந்த நாவலை வாசிக்கும்போது நானும் அலைக்கழிக்கப்பட்டேன். கதைக்குள்ளேயே காலம் முன்பின்னாக மாறியுள்ளது. அதுவும் போதாதென்று ஏனோ இந்தக் கதையை நேர்கோடாக என்னால் படிக்க இயலவில்லை. ஊஞ்சலாடுவதுபோல் வாசித்தேன். பொதுவாகப் பிடித்த கதையென்றால் கதை முழுவதையும் படித்தபின் மீண்டும் ஒரு முறை முழுதாகப் படிக்கத்தான் தோன்றும். ஆனால் இந்தக் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே சென்ற அத்தியாயங்களை மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் என்று தோன்றும். சிறிது பின்னே சென்றுவிட்டு மீண்டும் முன்னேற்றம். இந்தக் கதை ஏன் இவ்வாறு வாசிக்கத்தூண்டியது என்பதற்கு தர்க்கரீதியாக என்னிடம் பதில் இல்லை. கதைக்குள்ளேயே காலம் ஊஞ்சலாடியும் வாசிப்பில் நானும் ஊஞ்சலாடியும் கதையைப் புரிந்துகொள்வதில் சிறுகுழப்பம்கூட இல்லை. வேகம் தடைபட்டாலும் பரவாயில்லை என்று படித்ததை மீண்டும் படிக்கத் தோன்றியதே தவிர ஒரு வாக்கியத்தையாவது தாண்டிச் செல்லத் தோன்றவில்லை. 800 பக்க நாவலில் ஒரு வார்த்தையைக்கூட விட மனம் வரவில்லை என்பது ஆசிரியரின் வெற்றி. அதற்குக் காரணம் சலிப்பில்லாத நடை. நான் கவனித்த வரையில் மூன்று நடைகள். கேரளப்பகுதியின் விவரணைகளுக்கு ஒன்று, மகாலிங்கய்யனின் கடிதங்கள், சம்பவங்களுக்கு ஒன்று, மற்ற பகுதிகளுக்கு ஒன்று. (உரையாடலிலும் நாம் சாதாரணமாக்க் கேள்விப்படாத சொற்களை லாகவமாக உபயோகிக்கிறார்.) ஆனால் மூன்று நடைகளுமே வெண்ணை தொண்டைக்குள் வழுக்கிப்போவதுபோல சுலபத்தன்மை பெற்று விளங்குகின்றன. நடைக்காகவே அதை மீண்டும் மீண்டும் படிக்க ஆவல் எனக்கு உண்டாகிறது.

அடுத்ததாக தகவல் செறிவு. 19ம் நூற்றாண்டின் திருக்கழுகுன்றமும் சென்னையும் எடின்பரோவும் ஜீவனுடன் நமக்குள் இறங்குகின்றன. போகிற போக்கில் எத்தனை விஷயங்களை நுணுக்கமாகத் தந்திருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது. அதிலும் சென்ற நூற்றாண்டின் சென்னை பற்றிய வர்ணனை எத்தனை முறை படித்தாலும் புன்னகையை வரவழைப்பது. (சுட்டி பின்னூட்டத்தில் உள்ளது) சென்னைக்குள் நுழையும்போது ஏற்படும் பிரம்மாண்டம் பற்றிய வர்ணனை இன்றும் ஒவ்வொரு முறை வெளியூர்போய்விட்டுத் திரும்பி வரும்போதும் நான் உணர்வது.

ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள காலப்பின்னணி இந்தியா மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து அலைமோதல்களை அடைந்துகொண்டிருந்த காலம். கேரளத்தின் கம்யூனிச அமைப்பு பற்றிய சில குறிப்புகள் தவிர எந்த இடத்திலும் இந்த மாற்றங்கள் பற்றிய விவரணைகள் எதுவும் இல்லாதது சற்று வியப்புக்குரியது. அது ஆசிரியர் உத்தேசித்து நிகழ்ந்ததா, (அதாவது தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விடப்பட்டதா) தானாக நிகழ்ந்ததா என்பதை அறிய ஆவலாக உள்ளது.
***************************************************************************************************

இரா.முருகன்

விரிவான ‘விஸ்வரூபம்’ நாவல் பற்றிய குறிப்புக்கு நன்றி, நண்பர் வித்யா ஆனந்த்.

1910-1938 கால கட்டத்தில் கேரள, தமிழகப் பெருவரலாற்றையும் நாவலினூடே சித்தரிக்க, எழுதத் தொடங்கியபோது நினைத்திருந்தேன். கேரள அரசியலில் பின்னாட்களில் பெரும்பங்கு வகித்த, இப்போது நூறாம் வயதைத் தொட்ட கே,ஆர்.கௌரி அம்மாள், ஏகேஜி – ஏ.கே.கோபாலன் ஆகியவர்கள் ஒரு காட்சியில் (நடேசனின் வக்கீல் மகள் வத்சலகுமாரியுடைய சிநேகிதர்கள்) வருவது இதை உத்தேசித்துத்தான். கௌரி மீது ஏகேஜி கொண்டிருந்ததாகக் கூறப்படும் காதலும் மெல்லிய கோட்டாகக் காட்டப்படுகிறது. அதே போல் தையல்கடைத் தொழிலாளிச் சிறுவராக வி.எஸ்.அச்சுதானந்தன் கதாபாத்திரமும் தட்டுப்படும். இவர்கள் மூலம் இன்னொரு இழையாகப் பெருவரலாற்றைத் தொட்டுக்காட்ட உத்தேசித்திருந்தேன். ஆனால் நாவல் ஏற்கனவே பெரியதாக வளர்ந்து கொண்டிருந்தது. மேக்ரோ ஹிஸ்டரியோடு சேர்த்து நடத்திப் போனால், நாவல் அளவு மீறிவிடும் என்ற நினைப்பால் தான் அந்தக் கதாபாத்திரங்கள் வந்து போகிறவர்களானார்கள்.

அந்தக்காலத் தமிழக-ஆந்திர அரசியல் பிரமுகர்களான வீரேசலிங்கம் பந்துலு, ஜி.சுப்பிரமணிய அய்யர், (பாரதி சந்திரிகையின் கதை குறுநாவலில் அறிமுகப்படுத்தும் பாத்திரமான) கோபால்ராவ் ஐ.சி.எஸ் இவர்களையும் நாவலில் சேர்க்க நினைத்து முடியாமல் போனது இந்தக் காரணத்தால் தான்.

சினிமாத் துறையில் லக்ஸ் பத்மா, மேனகா படக் கதாநாயகன் டி.கே.ஷண்முகம் அண்ணாச்சி, நாடகமேடை நட்சத்திரம் பெங்களூர் ராஜா ஐயங்கார், மங்களூரில் லாவணி நட்சத்திரங்கள் இப்படி அங்கங்கே வந்து போவதை ரசித்து எழுதினேன்.

மங்களாபுரியில் (மங்களூர்) செயிண்ட் அல்லோசியஸ் தேவாலயத்தில் 1890-1900 காலகட்டத்தில் சுவர், கூரைகளில் அற்புதமான விவிலிய நிகழ்வு ஓவியங்களாக வரைந்த இதாலி நாட்டு பாதிரியார் அண்டோனியோ மோஸ்செனியும் கதையில் வருகிறார்.

மகாலிங்கய்யன் மொரிஷியஸ், மொரிஷியஸ் – ரியூனியன் தீவுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளி கங்காணியாகப் போகிறான். அவனை வேலைக்கு அனுப்பிய காண்ட்ராக்டர் கருப்பாயி அம்மாள் புதுவையில் அந்தக் காலத்தில் (1890-1910) indentured labourer-களை அனுப்பி வைத்து கமிஷன் பெற்ற, உண்மையில் உயிர்வாழ்ந்த பெண்மணிதான்.

When I had to decide upon focusing on macro history or micro history, I chose the later. நிறையப் பெரும்வரலாறு படித்து விட்டோம். குறும் வரலாறும் கொள்வோம் இனி.

காசி (வாரணாசி) கங்கை நதிக்கரை நிகழ்வுகள் எழுதக் கொஞ்சம் சிரமப்பட வேண்டி வந்தது. நான் கண்ட வாரணாசி கதை நடந்த காலத்துக்கு வெகு பின்னால் உயிர்ப்பது.

மூன்றாம் அரசூர் நாவலான ‘அச்சுதம் கேசவம்’ ஹரித்துவாரில் நிகழ்வதாகச் சில காட்சிகள் வரும். கங்கை நதிப் பிரவாகத்தில் கம்பீரத்தை மறுபடி சித்தரிப்பதில் மகிழ்ந்து எழுதிய அத்தியாயங்கள் அவை. நாடு முழுக்க இருந்து ஹரித்துவார் வந்து கங்கையை வணங்கிப் போகும் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தின் பல தலைமுறைகள் பற்றிய சுவடி வரலாற்றை (வாஹிகள்) அங்கே பண்டிதர்கள் பாதுகாத்து, புதிய வரலாறு சேர்த்து எழுதிவரும் அற்புதம் இந்த நாட்டுக்கே உரியது. இதை எழுதவும் கொஞ்சம் கூடுதல் உழைப்பு வேண்டி வந்தது. நண்பர் எஸ்.ராவுக்குப் பிடித்த அத்தியாயங்கள் இவை.

அரசூர் நான்கு நாவல் தொடர் எழுதியது பற்றிப் பேசவே இன்னும் ஒரு நூல் அளவு செய்திகள் உண்டு. ஏற்ற மற்ற பணிகள் முடியும்போது எடுத்துக் கொள்ளலாம். கிருஷ்ணார்ப்பணம் சர்வம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன