ஆனை விளையாட்டு

ஆனை விளையாட்டுக்கு
அழைத்தாள் பேத்தி.
ஆனை வரணும் ஆனை வரணும்
அடுத்த குடித்தனப் பாப்பா சொன்னது.

துணி உலர்த்தக் கொடியில் பிணைக்கும்
க்ளிப் இரண்டை முடியில் சூடித்
தவழ்ந்து வந்து தலை உயர்த்தி
ஆடலாம் என்றது ஆனை.

ஆனை தின்னப் பொரி கொடுத்தாள்,
”ஆனை, எனக்கு பிஸ்கட் தா”
அம்மா கவனம் தவிர்த்து பிஸ்கட்
ஆனை கொடுக்கப் பேத்தி மென்றாள்.

”அவளுக்கும் ஆனை பிஸ்கட் தரணும்”
அடுத்த வீட்டுப் பாப்பாவைக் காட்டினாள்.
ஆனை எழுந்து பிஸ்கட் கொடுக்க
ஆனை படுத்துத் தவழணும் என்றாள்.

ஆனையாய்த் தவழப் பாசம் காரணம்
எழுந்து நிற்கக் கௌரவம் காரணம்

இரா.முருகன் 02.06.2018

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன