புது நாவல் 1975 :எமர்ஜென்சி என்றால் ரயிலும் பஸ்ஸும் நேரத்துக்கு வருவதுவும், மலிவு விலைக்கு கிடைக்கும் ஜனதா அளவு சாப்பாடும் மட்டுமில்லை

எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி

முத்தாரின் குப்பி (அத்தை) ஜமீலாம்மா என் அத்தை விலாசினி டீச்சருக்குப் பள்ளித்தோழி. வாடி போடி உறவு. என்னடா, மெட்ராஸ்லே இருக்கேன்னு பேரு, முத்தார் வந்தாத்தான் நீ பார்க்க வருவியா? பெரிய மனுஷம் ஆயிட்டே போல”, ஜமீலா அத்தை அன்போடு கோபித்துக் கொண்டாலும், லக்னோ இனிப்பும் கசோரியும் கொண்டு வந்து கொடுத்தாள். லக்னோ யார் போனாங்க குப்பி? நான் தான் கேட்டேன். இவுக தான் என்று வாசலைப் பார்க்க குப்பி வீட்டுக்காரர் நிஜாமுதீன் சாயபு வந்து கொண்டிருந்தார்.

“பிள்ளைங்களுக்கு சர்பத் எடும்மா” அவர் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்ல நான் உடனே சுதாரித்துக் கொண்டேன். குப்பி வீட்டு பலகாரம் எல்லாம் நல்ல சுவையாக இருக்கும் என்றாலும், சர்பத் கொடுத்தால் மறுத்து விடுவது உத்தமம் என்று முத்தார் சாயபே சொல்லியிருக்கிறான். வடக்கே இருந்து வரவழைத்தது அந்த சர்பத். நல்ல சிவப்பில், ஐஸ் கட்டி எல்லாம் மிதக்க, பெரிய கண்ணாடி தம்ளரில் வரும். ஒரு வாய் உறிஞ்சினால் அது என்னமோ மூட்டைப்பூச்சியோ தெள்ளுப்பூச்சியோ மிதக்கிறது போல் ஒரு வாடை. எதோ கப்ஸா என்று முடியும் பெயரே கொஞ்சம் யோசிக்க வைக்கும். சர்பத்களிலேயே உசந்த ருசி என்று குப்பியும், நிஜாமுதீன் சாகீபும் சிபாரிசு செய்கிறார்களே என்று ஒரு முறை சாப்பிட்டு நடு ராத்திரி பீங்கான் தட்டில் மூட்டைப்பூச்சி கழுவிய தண்ணீரைக் குடிக்கிற அரைத் தூக்கக் கனவு. அந்த வாடை மனதில் இருந்து போக ஒரு வாரமானது.

வடக்கத்தி ஷெர்பத் இல்லே தம்பி. நானே வீட்டுலே காச்சினது. குடிச்சுத்தான் பாரேன். முத்தார் சாயபுவின் குப்பி கொடுத்ததைத் தட்டாமல் குடித்தவன் அதன் ருசியில் மயங்கி இன்னொரு கிளாஸ் கேட்டு வாங்கிப் பருகினேன். ரோஜா இதழையும், பாதிரி மாம்பழத் துண்டுகளையும் சர்க்கரையையும் இன்னும் எதையோ எல்லாம் பாகு வைத்துக் காய்ச்சி என்று குப்பி சொன்ன செய்முறையை அரைக்காதால் கேட்டபடி மூன்றாம் கிளாஸும் பாதி குடித்தபோது திருவல்லிக்கேணியில் மதிய சாப்பாடு எண்ணம் கேன்சல் ஆகிவிட்டது.

பகல் சாப்பாடு குப்பி வீட்டில் தான். முத்தாருக்கு பிரியாணியும் எனக்கு வயிறு சரியில்லை என்று சொன்னதால் மல்லிகைப் பூ போல மெத்தென்று இடியாப்பமும், இஞ்சி துவையலுமாக தில்லி சுல்தான் அரண்மனை சாப்பாட்டு சுவர்க்கம் தெரிந்தது. திருவல்லிக்கேணி விருந்து கிருஷ்ணதேவராயருக்கும், குப்பி வீட்டு விருந்து அக்பர் சக்கரவர்த்திக்கும் அர்ப்பணிக்கப் பட்டன.

சாப்பிடும்போது அத்தை வீட்டுக்காரர் ஜனாப் நிஜாமுத்தீனை தில்லி எப்படி இருக்கு என்று விசாரித்தேன். நான் கேட்டது வெய்யில் மழை நிலவரம். அதற்கு மேல் சிந்திக்கத் தெரியாதுதான் எனக்கு. “டில்லிக்கு யார் போகிறதுங்கறதைப் பொறுத்தது தம்பி அது” என்றார் குப்பி வீட்டுக்காரர் நிஜாமுதின். “அப்படீன்னா?” “துலுக்கன்னா ஆடு மாடு மாதிரிதான். இழுத்துப் போய் உதச்சு அறுத்து விட்டுடுவாங்க. மக்யவன்னா கொஞ்சம் சலுகை. உடனே அறுத்துக்க வேணாம்”. அவர் சிரிப்பில் வேதனை தெரிந்தது.

“அப்படி குடும்பக் கட்டுப்பாடு பண்ணி வைக்க என்ன காரணம்?” முத்தார் சாயபு கேட்டான். “வேறே என்னடே. இளவரசர் சொல்றாரு கேட்டுக்க. நாம ஏதோ பெத்த மாதிரி பெருகிட்டே போறோமாம். நாளைக்கு நாட்டை பிடிச்சுடுவோமாம். ஆளாளுக்கு நாலு பொண்டாட்டி கட்டறோமாம். இங்கே ஒண்ணை வச்சுக்கிட்டே சமாளிக்க முடியலே.” நிஜாமுதீன் சொல்ல, குப்பி அவரை அடிக்கக் கையை ஓங்கினார். செல்லமாகத் தான்.

“பாரு நாம இங்கே காமெடி பண்ணிட்டு இருக்கோம், அங்கே அறுத்துத் தள்ளி அனுப்பிட்டிருக்காங்க. நம்மாளுங்க இருக்கப்பட்ட ஏரியா எல்லாம் பயத்துலே கிடக்கு. தெருவுக்குத் தெரு பயந்து போய் அந்தம்மா படத்தையும் மகன் படத்தையும் மாட்டி வச்சுருக்காங்க. ஒருத்தனை ஒருத்தன் ஒற்று சொல்லிடுவானோன்னு நம்மாளுங்களுக்குள்ளேயே சந்தேகம். கவர்மெண்ட் பத்தி பேசவே பயம். ஒண்ணும் சரியில்லே போ”.

எமர்ஜென்சி என்றால் ரயிலும் பஸ்ஸும் நேரத்துக்கு வருவதுவும், மலிவு விலைக்கு கிடைக்கும் ஜனதா அளவு சாப்பாடும் மட்டுமில்லை. அரைக்குக் கீழே ஆபரேஷன் பண்ணி ஆடுமாடு போல பட்டியில் அடைக்கிறதும், குடியிருக்கும் வீட்டை இடிக்கிறதும் கூடத்தான். ஒரு ஜனக்கூட்டத்தையே இருபது, ஐந்து என்று நம்பரைச் சொல்லிப் பயமுறுத்தும் சூழ்நிலை. நாங்கள் திருவல்லிக்கேணி மெஸ்ஸில் பருப்புப் பொடி பிசைந்து சுடுசோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
(An excerpt from the novel ‘1975’ – working title_ I’m writing now)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன