புது நாவல் : 1975 வைத்தியர் சிங்கம்புலி வேளார் சொல்லிட்டார், வீட்டுலே அந்நியர் படம் எதுவும் மாட்டக்கூடாது. சிவப்பே அண்டக்கூடாது. சிவப்புத் துண்டு, பேச்சு, புத்தகம்னு எதுவும் இருக்கக் கூடாது.

”சிங்கப் படம் எழுதிக் காத்திருக்கறதை விட, மகாராஜா, மகாராணி இப்படிப் படம் வைச்சா இன்னும் விரசா அக்கி குணமாயிடும்னு சொன்னாரு வேளார்”. ஜெபர்சன் மனைவி அழுத்தந்திருத்தமாகக் கூறினார். அதே அழுத்ததோடு தான் தோழர் தலையில் பிரதமர் படத்தை வைத்திருக்கிறார் அவர். எமர்ஜென்சிக்கு முந்தைய மூக்கு நீண்ட கார்ட்டூன் அது. இப்போது அப்படியெல்லாம் வரைந்தால் மூக்கு முகம் இல்லாது போகும். பத்திரிகையும் காணாமல் போய்விடும்.

”போன வாரம் ரொம்ப உக்கிரமா இருந்துச்சு கொப்புளம் கிளம்பி வரவர ஒரே வலி, எரிச்சல். இப்போ பரவாயில்லே” என்றார் ஜெபர்சன். “ஆமா, வைத்தியர் சிங்கம்புலி வேளார் சொல்லிட்டார், வீட்டுலே அந்நியர் படம் எதுவும் மாட்டக்கூடாது. சிவப்பே அண்டக்கூடாது. சிவப்புத் துண்டு, பேச்சு, புத்தகம்னு எதுவும் இருக்கக் கூடாது. உடம்பு சரியானதும் திரும்ப எடுத்து வச்சுக்குங்க அதெல்லாம்னுட்டார்” என்றாள் ஜெபர்சன் மனைவி.

லெனின், ஸ்டாலின் படங்கள் படுக்கைக்குக் கீழே கழற்றி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்குள் யாராவது வந்தால் சிவப்புச் சிந்தனையோ பேச்சோ இல்லாமல் அந்தம்மா கவனித்துக் கொண்டதும் நினைவு வந்தது. தோழர் என்று அழைக்கக் கூடத் தடை.

சரி, புத்தகம் எல்லாம் எங்கே?

அடுத்த வீட்டில் வச்சிருக்கு.

“ஏதோ இவ நம்பறா கண்ட கருமாந்திரத்தையும். சரி, ஆகறபடி ஆகட்டும்னு நான் பாட்டுக்கு படுத்துட்டேன்”.

ஜெபர்சன் வாத்தியார் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவர் வாயை மூடினாள் மனைவி. ”நீங்க நம்பலேன்னா என்ன, குணம் தெரியுது இல்லே?”.

”அது மண்பாண்டத்துலே சமைச்சு சாப்பிடறதாலே. சுத்தமான களிமண்ணைப் பத்துப் போட்டுக்கறதாலே” ஜெபர்சன் மெல்லிய குரலில் சொல்லியபடியே நித்திரை போய்விட்டார்.

”கிளம்பலாமா?” என்றார் நிருபர். ஆரஞ்சுப் பழங்களும் ஆப்பிள் பழங்களும் வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் இரண்டு நாளில் அடுத்து ஒருதடவை வரும்போது வாங்கி வரலாம்.

கிளம்பிய நேரத்தில் தான் கஃப்கா நினைவு வந்தார். ஜெபர்சன் வாத்தியார் மனைவிக்கு நான் இரவல் வாங்கி, என்னிடம் வாத்தியார் கடன் வாங்கிப்போன கஃபா கதைகள் புத்தகம் பற்றித் தெரிந்திருக்காது. அக்கி வந்து படம் தொங்கவிட்டு சிகிச்சை அளிக்கும் மும்முரத்தில், தெரிந்திருந்தாலும், நினைவு இருக்காது அவருக்கு. என்றாலும் கேட்டுப் பார்க்கலாம்.

கேட்டேன். கஃப்காவும் அடுத்த வீட்டுக்குத்தான் குடி பெயர்ந்திருந்தார். இருங்க, வந்துடறேன் என்று போனார். ஐந்து நிமிடத்தில் அங்கேயிருந்து வயதான ஒரு ஆச்சியோடு திரும்ப வந்தார். ஆச்சி கையில் ஆச்சரியகரமாக கஃப்கா. வணக்கம் சொன்னேன். நிருபருக்கு ஏற்கனவே அறிமுகமானவராம். அவருக்கு இந்திரா காந்தி, சஞ்சய் காந்தியைக் கூடப் பழக்கம் தான்.

பெரியாச்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஹெட்மிஸ்ட்ரஸ் ஆக இருந்து ரிடையர் ஆனாங்க, அந்தக்கால பி.ஏ, பி.டி என்றார் நிருபர். வாய் பிளந்து நின்றேன்.

“இந்தப் புத்தகம் நல்லாத்தான் இருக்கு. ரெண்டே நாள்லே படிச்சுட்டேன். ஆனா ஒண்ணு. பூச்சியா மாறின மனுஷன் அப்படியே சாகறதா முடிச்சிருக்கக் கூடாது. ஆண்டவனை, அவங்களுக்கு ஏசு நாதரா, சரி அவரை சதா பிரார்த்தனை செஞ்சு ஒரு அற்புதம் நடந்து அவன் மனுஷனா மறுபடியும் மாறினதா முடிச்சிருந்தா, நம்பிக்கையை சொல்றதா இருக்கும். அதுதானே நல்ல கதை? செத்து என்ன பிரயோஜனம்?”

“அற்புதம் எல்லாம் நடந்தா நல்லா இருக்கும்” என்றேன் நான். “நடக்காம என்ன, நம்ம நாயர் வீட்டுலே தினம் சாயந்திரம் ஆறரை மணிக்கு அவர் பெட்டியிலே வச்சு வளர்க்கற தேனீ எல்லாம் வெளியே பறந்து வந்து இந்திரா காந்தி படத்துலே உக்காந்துட்டுத் திரும்பிப் போகுதே. அது மாதிரி அங்கேயிங்கே நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. நம்பினா வருவது நல்லதாச்சு” என்றார் நிருபர் வேட்டியைத் திருத்திக் கட்டியபடி.

நான் பெரியாச்சிக்கு நன்றி சொல்லி புத்தகத்தோடு வெளியே வந்தேன். அடுத்து கஃப்கா நினைவு தினத்தில் கண்ணம்மை ஆச்சியைப் பேசச் சொல்லி, கூடவே மெடமார்பசிஸ் கதைக்கு புது வெர்ஷன் எழுதி நான் படித்து, சிங்கம்புலியை ’மகான் கஃப்காவை மனதில் நினைத்தால்’ பாடச் செய்யலாம். கஃப்கா படிக்காத ஜெபர்சன் தலைமை வகிக்கட்டும். எமர்ஜென்சியில் கஃப்காவைக் கொண்டாடாவிட்டால் நான் கரப்பாகி விடுவேன்.

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் 1975 (work title) இன்று எழுதியதில் ஒரு சிறு பகுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன