புது நாவல் : 1975:உங்க பிராஞ்சிலே என்ன விசேஷம்? ஏன் சார், பிள்ளையாண்டு இருக்கறமா என்ன விசேஷம்ன்னு சொல்ல?

அடுத்த நாள் செண்ட்ரல் மினிஸ்டர் பங்கேற்கும் லோன் மேளாவுக்கு முன் எங்கள் ஜெனரல் மேனேஜரை நன்றாகக் குழைந்து வெந்த அரிசி பதத்துக்கு ஆக்கிவிட்டேன். சட்டை கலர் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து நான் தான் முடிவு செய்தேன். ‘என்ன பேசப் போறீங்கன்னு என் முன்னாலே ஒத்திகை பார்த்திடுங்க, அங்கே போய் ஏதாவது ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிடக்கூடாது’ என்று ஹோட்டல் அறை மத்தியில் நின்று பேசச்சொல்லி ட்யூஷன் எடுத்தேன்.

“சார், கொடவயிறு அதிகமா தெரியறது. தொந்தி குறைய தினம் நடக்கப் போறதில்லையா”?, என்று உரிமையோடு கேட்டு பெல்ட்டை இன்னும் இறுக்கிப் போட்டுக்கொள்ளச் சொன்னேன்.

”என்னத்தை வாக்கிங், ஜாகிங் போக, போத்தி? விடிஞ்சு எழுந்தா ஆயிரம் அக்கப்போரு. உங்க பிராஞ்சிலே என்ன விசேஷம்”?

“ஏன் சார், பிள்ளையாண்டு இருக்கறமா என்ன விசேஷம்ன்னு சொல்ல? ட்வெண்டி பாயிண்ட் ப்ரோகிராம்லே ஜில்லாவிலேயே அதிக லோன் கொடுத்திருக்கறது நாமதான் சார்”.

“அதுலே கால்வாசியாவது திரும்ப வருமா”? அவர் சந்தேகத்தோடு கேட்டார். என்ன ஒரு நம்பிக்கை. கால்வாசி திரும்ப வருமாமே.

“இப்படி வாரி வாரி வழங்கிட்டே இருந்தா நாளைக்கு ரிடையர் ஆகும்போது என் க்ராஜுவிட்டியும், ப்ராவிடண்ட் ஃபண்டும் கிடைக்குமோ என்னமோ”.

“அதெல்லாம் ஜாம்ஜாம்னு கிடைக்கும் சார். என்ன கவலை? எக்ஸ்ட்ரா காரம் காரசேவு வாங்கி வச்சிருந்ததே? சாப்பிட்டீங்களா?”. பேச்சை மாற்றினேன்.

டை கட்டிக்கட்டுமா? கேட்டவரை, ”வேணாம் சார், மினிஸ்டருக்கு நீங்க மட்டும் டை கட்டி வந்தா தாழ்வு மனப்பான்மை வந்துடும். சட்டையை பேண்டுக்குள்ளே டக் இன் பண்ணிக்குங்க” என்று மடைமாற்றினேன்.

சொல்லிக் கொடுத்தபடி இம்மி பிசகாமல் பேசி ஜெனரல் மேனேஜர் கைதட்டை அள்ளிப்போனார். வேறே வழியின்றி அமைச்சரும் அவருடைய பேச்சைப் பற்றிக் குறிப்பிட்டு ஜி எம் அரசியலுக்கு வந்தால் அவரை தேசத் திருப்பணியில் இணைத்துக் கொள்ள இருகரம் நீட்டி வரவேற்போம் என்றாரே பார்க்கணும். வருங்கால மினிஸ்டர் கனவுகளில் மிதந்து கொண்டு மெட்ராஸ் திரும்ப எக்ஸ்ப்ரஸ் ரயிலைப் பிடிக்கும் அவசரத்திலும் எனக்கு ஆயிரத்தொண்ணு தடவை நன்றி சொல்ல மறக்கவில்லை ஜி.எம் சார்.
******* *********** ****************** *********************
டெலிபோன் மணி அடித்தது. மெட்ராஸில் இருந்து ஜெனரல் மேனேஜர் தான் கூப்பிட்டார்.

“போத்தி, எப்படி இருக்காய்?”

“தரக்கேடில்லே சார். போகறது”.

“உன்னோட சகாயம் வேண்டியிருக்கு”.

“நாகப்பட்டிணம் நெய்மிட்டாயா சார்”?

“ஏய் அது ஒண்ணும் வேண்டாம். அல்வா, ஜிலேபி, லட்டுன்னு திங்க வேண்டியது, ஷுகர் ஏறி டாக்டருக்கு அழ வேண்டியது. இதுவே சீலமாப் போச்சுன்னு மாமி காயறாள்”.

“பரவாயில்லே சார், நீங்க அடுத்த ப்ராவஸ்யம் இங்கே வரும்போது நான் ஒளிச்சு வாங்கித் தரேன் அதொக்கெ”.

“எய், அடுத்த பிராவஸ்யம் வந்தாச்சு”.

எனக்கு கலவரமாக வயிற்றில் ஏதோ செய்தது. இன்னொரு முறை இவருக்கு ஆண்டுவிழா நாடக ஒத்திகை கொடுத்து, உடுப்பெல்லாம் மாட்டிக் கூட்டிப் போய் வரணுமா?

”ஒண்ணுமில்லே, ஞாயிறாழ்ச்ச மினிஸ்டர் ராமேஸ்வரத்திலே பிஷரி லோன் கொடுக்கறார்”.

“சார் அவர் எங்கே கொடுக்கறதுக்கு. நாம் வழங்கினா அவர் எடுத்துக் கொடுப்பார்”, என்று நான் இடைவெளியில் கோல் போட்டேன்.

“எய், எமர்ஜென்சி நேரம், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. போனுக்குக்கூட காது இருக்கும்” என்றார் ஜெனரல் மேனேஜர்.

”ராமேஸ்வரம் போய் வெற்றிக்கொடி நாட்டிட்டு வாங்க” சார் என்றேன் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு.

“எங்கே? அதெல்லாம் மதுரை ஓட்டல் முறியிலே விட்டுட்டு வந்தாச்சே. நீ சரியா கவனிக்கலே அதான் சொல்லுவேன்”.

புகாரைக் கூட மெல்லிய ஆற்றாமையோடு சொல்லுவதல்லாமல் அவரால் இனி என்மேல் ஜன்மத்தில் கோபப்பட முடியாது என்று புரிந்தது. இவ்வளவு பழமாகக் கனிந்தவருக்கு ஒரு சின்ன உதவி கூட நான் செய்யக் கூடாதா?

சொல்லுங்க சார், என்ன செய்யணும் நான்? அல்வா தவிர. அது உதவியில்லே. கடமை

செண்டிமெண்டை டச் பண்ண அவர் இன்னும் உருகியபடி சொன்னது இதுதான் : மதுரைக்குச் சூறாவளி சுற்றுப்பயணம் வந்தபோது லாட்ஜ் அறையிலேயே அவருடைய உள்ளாடையை விட்டுவிட்டாராம்.

“புத்தம்புது டாண்டக்ஸ் அண்டர்வேர்’பா. டார்க் நீலக் கலர். எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ். ரெண்டே தடவை தான் போட்டது. தோய்ச்சு காயப்போட்டேன். ஈரமா இருந்தாலும் பரவாயில்லை, கவர்லே போட்டு எடுத்துண்டு வந்துடுன்னு உங்கிட்டே சொல்ல விட்டுப் போச்சு. கல்லு மாதிரி”.

அண்டர்வேர் கல்லு மாதிரி எப்படி இருக்க முடியும் என்று புரியவில்லை.

“நீ போய் லாட்ஜிலே கேளு. நிச்சயம் எடுத்து வச்சிருப்பா”,

“சார், அடுத்த கெஸ்ட் வந்ததும் ரூம்லே காலி பண்ண விட்டுட்டுப் போன எல்லாத்தையும் வழிச்செடுத்து அந்தப் பக்கமா போட்டிருப்பாங்க”.

“நீ எதுக்கும் போய்ப் பாரு. அப்புறம் பகவான் விட்ட வழி”.

ஜனநாயகம் பறிபோனாலும் ஜட்டி காணாமல் போனாலும் எல்லாம் பகவான் விட்ட வழி.

(எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி இது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன