புது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து”

இன்று எழுதியதிலிருந்து, நாவலின் சிறிய பகுதி – 1975 ஜூன் 25, 26 நினைவுகள்

பிரான்சிஸ் தங்கராஜ்னு பெயரைச் சொன்னதும் கொஞ்சம் நிலை குலைஞ்சு போயிட்டார்னா பார்த்துக்க போத்தி. சரி, ஏதோ விவகாரமான பயதான்னு நினைச்சிருக்கணும். ஆர்.சியா ப்ராட்டஸ்டண்டான்னு அடுத்த கேள்வி. சிவப்பழமா கழுத்திலே கொட்டை கட்டி, நெத்தியிலே பட்டை அடிச்சு உட்கார்ந்து கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிற அவருக்கு ரோமன் கத்தோலிகனா, புராட்டஸ்டண்டா அப்படி ரெண்டு பிரிவு இருக்குன்னே தெரிஞ்சிருக்க நியாயமில்லே. ஆனா நான் யாருன்னு கண்டு பிடிக்கணும்னா அதுக்காக ராக்கெட் சயன்ஸ் கூட படிச்சு வச்சுப்பாங்க இல்லே. அதான் ஆர்.சியா, புராட்டஸ்டண்டா இதுலே இருக்கு சூட்சுமம். கத்தோலிக்கன் எல்லாம் ஏகப்பட்ட வருஷம் முந்தி வேதத்துலே ஏறினவன். பரம்பரை பரம்பரையா கிறிஸ்துவன். இந்த நூறு வருஷத்துலே வேதத்துலே ஏத்தப்பட்டவங்க புராட்டஸ்டண்ட். அவங்கள்ளேயும் பட்டியல் ஜாதி ஜனம் தான் அதிகம். அதை வச்சி நதிமூலம் ரிஷிமூலம் கண்டு பிடிச்சுடலாமே. நான் புராட்டஸ்டண்ட்னு சொல்லி அடக்க முடியாமே, மேலே சொன்னேன். ”எங்க தாத்தா சேரியிலே தான் இருந்தார். பறை அடிச்சு தாக்கல் சொல்றவர். அப்பா தான் மதம் மாறிட்டார். அப்புறம் நாங்க எல்லோரும் அவரோடு வந்துட்டோம்”.

சாப்பிட்டு காசை கொடுத்தேன். ஒண்ணும் சொல்லாம வாங்கிப் போட்டுக்கிட்டாரு. ”நாளைக்கு நானே நம்ம பையன் மூலம் பார்சல் சாப்பாடு சுடச்சுட அனுப்பிடறேனே. இப்படி காஞ்ச தோசை எதுக்கு தின்னுக்கிட்டு கஷ்டப்படணும்”? நைச்சியமாக் கேட்டார் அவர். பரவாயில்லேன்னுட்டேன்.

ஆபீசுலே தன்னந்தனியா உட்கார்ந்து யோசிச்சேன். அப்போதான் தோணிச்சு. இங்கே இவங்க முகத்தைத் திருப்பிக்கறதுக்கும் நான் பிரான்சிஸ் பறையனா இருக்கறதுதான் காரணமா. ஆமா, அதுவே தான்னு தெரிஞ்சது.

சாயந்திரம் லாட்ஜுக்கு திரும்பி வரேன். திருச்சி ரேடியோவை யாரோ எங்கேயோ டிரான்சிஸ்டர்லே வச்சிருகாங்க. அது திருச்சி ரேடியோ தான். அந்த நேரத்திலே நிலைய வித்வான் வீணை வாசிச்சிட்டு இருந்தார். சிலோன் ரேடியோ முடிஞ்சிருக்கும். பக்கத்து ரூம் போனா அங்கே ஹமீது சார் தான் ரேடியோ கேட்டுக்கிட்டிருந்தார். அவர் பெயர் அப்போ தெரியாது. நேரே போய் நான் யாருன்னு கூட சொல்லாம, யார் போய்ட்டாங்க சார், செண்டர்லேயா ஸ்டேட்லேயான்னு கேட்டேன். யார் போய்ச் சேர்ந்தாலும் லீவு உண்டே. அதுவும் வேலையிலே ஜாயின் பண்ணி அடுத்த நாளே லீவுன்னு வந்தா வேணாம்னா சொல்லப் போறேன்?

ஹமீது சார் நான் யாருன்னு கூட கேட்கலே. ரேடியோவிலேயே கண்ணா இருந்தார். அஞ்சு நிமிஷம் வித்வான் கச்சேரி பண்ணிட்டு இருக்கார். அவர் வேறே வேறே ஸ்டேஷன் வைச்சுப் பார்த்தாலும் வீணை, வயலின், கோட்டு வாத்தியம், தில்ரூபா இப்படி ஏதேதோ வருதே தவிர பேச்சு சத்தமே இல்லே. செத்துப் போனா திருவாசகம் சொல்வாங்களே, அது எங்கே? நானும் கேட்டுக்கிட்டே நிக்கறேன். அப்போ அறிவிப்பு வருது. நாளைக்காலை ஏழு மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அடுத்த நிகழ்ச்சி, நிலைய வித்வான் ஜலதரங்கம் வாசிப்பார்.

அப்புறம் ராத்திரி ஒன்பது வரைக்கும் ஹமீது சார் கூடத்தான் உட்கார்ந்திருந்தேன். அவர் தான் சொன்னார், “எமர்ஜென்சி அறிவிச்சிருக்காங்க தம்பி”. நான் சரிதான்னேன். நம்ம ஊர்லே அப்பப்போ நூற்றுநாப்பத்துநாலு ஒன் ஃபார்டிஃபோர் ஆர்டர் இருக்குன்னு மைக்செட் கட்டிக்கிட்டு தெருத்தெருவாச் சொல்வாங்களே, அதை கொஞ்சம் பெரிய அளவிலே செஞ்சிருக்காங்க போல, தில்லியிலே இருந்து பெரிசா ஆயிரத்து நாப்பத்துநாலு போட்டிருக்காங்களா இருக்கும். அப்படி நினைச்சுக்கிட்டுத்தான் ஹமீது சார் கூட புரட்டா கடைக்குப்போனேன். அங்கே சாப்பிடறவங்க சாப்பிட்டுட்டுத்தான் இருந்தாங்க. ஜெபர்சன் வாத்தியாரும், ஆமா, அவர் ஜெபர்சன்னு அப்புறம்தான் தெரியும், வாத்தியாரும் அவரோட கட்சிக்கார சிவப்புத் துண்டுகளும் ராத்திரி நேரத்திலேயும் கடைக்கு முன்னாடி கூட்டமா நின்னு ஏதோ பேசிட்டிருந்தாங்க. நாங்க அவங்க பக்கத்துலே போனதும் கப்சிப் ஆயிட்டாங்க.

வாத்தியார் மத்தவங்களை அனுப்பி வச்சுக்கிட்டு என் பக்கத்து நாற்காலியிலே உக்காந்து சொன்னாரு. “யாரு எக்கேடு கெட்டா என்ன, நாம கொத்து பொரட்டாவும் வீச்சு பொரட்டாவும் சாப்பிடுவோம். வீட்டுக்குப் போய்த் தூங்குவோம். வேறே எதுக்கு ஜீவிதம்? என்ன சொல்றீங்க தோழர்?” அது என்னைப் பார்த்து.

நான் பொரட்டா தின்னுக்கிட்டு அவர் கிட்டே வெள்ளந்தியா சொன்னேன், “நூத்து நாப்பத்துநாலு போட்டிருக்காப்பலே. டெல்லியிலேயே சொல்லி விட்டிருக்காம்”. “பாருங்க, நல்லா படிச்ச பிள்ளை, நூத்து நாப்பத்து நாலுங்கறார். அதான் உலகம். சரி நாம பொரட்டா தின்போம்”. அவருக்கு என்ன கஷ்டம் என்று புரியாமல் சாப்பிட்டு அறைக்கு வந்தேன்.

அடுத்த நாள், ஜூன் இருபத்தாறு, வியாழக்கிழமை. காலையிலே எழுந்திருக்கும்போதே ஏழு மணி. எனக்கு முன்னாடி ஹமீது எழுந்து டிரான்சிஸ்டரை கைப்பிடிச் சுவர்லே வச்சுட்டு ஷேவ் பண்ணிக்கிட்டே கேட்டுட்டிருக்கார். பட்டாபட்டா அண்டர்வேர், வழிச்சுக் கட்டின லுங்கி, அழுக்கு வேட்டி, வாளி, பனியன் இப்படி ஆம்பளை சாம்ராஜ்யம் இந்த லாட்ஜ். இதிலே ஒரே ஒரு பெண்குரல், இந்திரா காந்தி குரல் டிரான்சிஸ்டர்லே கேக்குது.

’நாட்டில் எதிரிகள் ஊடுருவி இருக்கிறார்கள். பெரிய அளவில் நாசம் விளைவிக்கப் போகிறார்கள். இங்கேயும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தியா சீர்குலைந்து அழியாமல் தடுக்க நான் நெருக்கடி நிலையைத் தற்காலிகமாக பிரகடனம் செய்கிறேன்’.

இந்திராம்மா சொல்லிக்கிட்டிருக்க, நான் ஒரு நிமிஷம் கேட்டுட்டு குளிக்கக் கிளம்பினேன். அப்போ எமர்ஜென்சியோட மகத்துவம் தெரியலே. பத்தே நாள்லே நாடே ஒழுங்கா, நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாம, வேலை சுறுசுறுப்பா நடக்கறதா மாறிடுத்து. டிரஷரியிலே யாரும் அதுக்கு அப்புறம் என் ஜாதியைக் கேட்கலே. திருநெல்வேலி மெஸ் சாப்பாட்டுக் கடை இருக்கற தெருவிலே போனா, முதலாளி ஓடி வந்து கையைப் பிடிச்சுக்கிட்டு சொல்றார் –’அன்னிக்கு சொன்னதை மனசுலே வச்சுக்காதீங்க. குண்டியிலே கொப்பளம் பழுத்து உடைவேனான்னு சதி பண்ணிட்டு இருந்துச்சு. அந்த வேதனையிலே வாய் எதையோ பேசியிருக்கும். எல்லாம் ஒட்டு மொத்தமா மறந்துட்டு சாப்பிட வாங்க” அப்படி மன்றாடினார் அவர். உட்கார்ற இடத்துலே கொப்புளம் என்ன ஆச்சுன்னு கேட்கலே. வேட்டியை அவுத்துக் காட்டினார்னா.

அதுக்கு அப்புறம் பொற்காலம் தான் போத்தி. நான் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்குப் போறபோது பார்க்கறேன். எல்லோருக்கும் ஏதாவது பேங்க் லோன் வாங்கியிருக்காங்க. யோக்கியமா அதை வச்சு தொழில் செஞ்சுக்கிட்டோ வியாபாரம் நடத்திக்கிட்டோ இருக்காங்க. நல்ல முன்னேற்றம் தெரியுது அவங்க இருப்புலே. சந்தோஷமும் தெரியுது. ஏதாவது உடம்பு முடியலே யாருக்காவதுன்னா போய்ச் சொன்னா போதும், ப்ரைமரி ஹெல்த் செண்டர்லே இருந்து டாக்டர் ஓட்டமா ஓடி வரார்.

என்ன குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்குங்க அப்படீன்னு அப்பப்ப யாராவது வந்து சொல்றாங்களாம். நான் நம்ப பசங்களை சஞ்சய் காந்தி பேரவை ஆரம்பிச்சு ஒரு குச்சுலே அவர் படத்தையும் இந்திராம்மா படத்தையும் மாட்டி வைக்க சொல்லிட்டேன். குடும்பக் கட்டுப்பாடுன்னு யாராவது வந்தா, அங்கே கொண்டு போய் நிறுத்தி, தில்லியில் இருந்து எங்களுக்கு தலைவர் உத்தரவு வரும், அப்போ நாங்க வரோம் அப்படீன்னு சொல்லி அனுப்பச் சொல்லியிருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லே யாருக்கும்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன