புது நாவல் : 1975 : கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும்

இன்றைக்கு எழுதிய அத்தியாயத்திலிருந்து

அவருடைய ஜில்பாத் தலைக்கும், மீசை இல்லாத அப்பாவி முகத்துக்கும் ரொம்பவே வித்யாசமான, விஷயம் தெரிந்த பேர்வழியாக இருந்தார் அவர். மேனேஜரும் சட்டென்று விஷயத்துக்கு வந்துவிட்டார்.

“அது ஒண்ணும் கயிட்டம் இல்லீங்க. நம்ம பசங்க கச்சிதமா செஞ்சு கொடுத்திடுவாங்க. கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும். டூயட் நாங்க பாடினா இருநூறு. வேறே யாராச்சும் பாடி வாய் அசைக்கணும்னா நூத்தம்பது. உங்க பட்ஜெட் என்ன?”

போகிற போக்கில் ஒவ்வொரு வரி வசனம் பேச, ஒவ்வொரு அடி நடக்க என்று கூட பிரித்துப் போட்டு வாங்கும் தொகையைச் சொல்லி விடுவார் போல. மேனேஜர் அசராமல், “அதெல்லாம் சரிதான். நீங்க நம்மாள் ஆகிட்டீங்க. எல்லாம் சரியா இருந்தா லோன் கொடுத்துடலாம். சரி வரட்டுமா?” என்று எழுந்தார். இது எதிராளியைப் பணிய வைக்க ஒரு ராஜதந்திரம்.

”அட என்ன அவசரம். காப்பித்தண்ணி காச்சச் சொல்றேன். உள்ளே வரணும். . நீங்கள்ளாம் நம்ம எடத்துக்கு வரப்பட்ட மனுஷாளா சொல்லுங்கோ?”

முடிவு பார்ப்பனக் கொச்சை போல இருக்கும்படி அவர் கேட்டது எனக்கானது. நீ அய்யரான்னு நேரில் கேட்க முடியாததால் அப்படி. நான் உடனே அதைத் தடுத்தாண்டு நான் அய்யர் இல்லை என்று தெளிவு படுத்தினேன் – “அதான் இப்ப வந்திருக்காக இல்லே” என்று மேனேஜரைக் காட்டிச் சொல்ல அவர் புரிந்ததாகத் தலையாட்டி, உள்ளே யாருக்கோ காப்பித்தண்ணி காய்ச்ச உத்தரவிடப் போனார்.

”அப்பத்தா தூங்கிடுச்சு போல. நான் பெறகு வச்சுத்தரேன்”, போன சுருக்கில் திரும்பியவர் கையில் ஒரு கனமான ஆல்பத்தோடு வந்தார்.

“பாருங்க, நம்ம புள்ளைங்க தான்”.

மேனேஜர் மரியாதைக்கு வாங்கிப் புரட்ட, நானும் எக்கிப் பார்த்தேன். விஜயசேனன், குந்தளகுமாரன், ராஜசிம்மன் போன்ற பெயர்களோடு அம்புலிமாமா கதைகளில் படமாக வரும் பாத்திரங்கள் போல உடையணிந்து கண்ணாத்தா கலைக்குழு என்று போட்ட படுதா கட்டிய மேடைகளில் உறைந்து நிற்கிற ’நம்ம புள்ளைங்க’ எல்லோருக்கும் குறைந்த பட்சம் நாற்பதாவது வயது இருக்கும். இவர்களை நடிக்க வைத்து நாடகம் நடத்தினால் பார்க்க ஆள் வருமா என்பதில் இருந்து சந்தேகங்களின் பட்டியல் நீளும். நடத்திய நாடகத்துக்கு அரசின் ஆயிரம் பொற்காசுகள் பரிசு பற்றி மறந்து விடலாம்,

“சரி போய் கலந்து பேசிட்டு சொல்றோம்” என்றார் மேனேஜர். பெண்பார்க்க வந்த கோஷ்டியில் பின்னால் உட்கார்ந்து வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுகிற பெரிசுத்தனம் அவர் செய்கையில் தெரிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன