பீரங்கிப் பாடல்கள் – நாவல் முன்னுரையிலிருந்து : இரா.முருகன்

ஒரு எழுத்தாளனுக்கு வேறொரு சமகால எழுத்தாளரின் படைப்பைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த வாசிப்பு பல தளத்திலும் நிகழும். முதலாவது, தன்னையறியாமல், இதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்ற சிந்தனை ஓட்டம் முதல் பக்கத்திலேயே தொடங்கி இருக்கும். அந்தப் படைப்புக்குள் தன் படைப்பை மனதில் எழுதிப் போகும்போது வாசக அனுபவம் பின்னணிக்குப் போய்விடலாம். இன்னொரு தளத்தில், அந்தப் படைப்பு பிரமிக்க வைத்தால் அதற்கு எளிமையான காரணம் கண்டுபிடித்து மனநிறைவு அடைய ஒரு மன ஓட்டம் கூடவே ஓடியபடி இருக்கும். அந்தப் படைப்பில் குற்றம் குறை கண்டுபிடிக்க முற்படும், தட்டுப்பட்ட குறை குண்டூசியளவு இருந்தாலும் உருப்பெருக்கிப் பார்த்து ஆனந்தமடையும் வாசிப்பு இன்னொரு தளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒரு புத்தகத்தை நாலு பேர் ஒரே நேரத்தில் வாசிக்கக் கிடைத்து, அந்த நால்வரும் ஒரே நபராக அமையும் நிலை அது. எழுத்தாளன் வாசகனாக மட்டும் இருந்து தன் சமகாலப் படைப்பை முழுக்க அனுபவிக்க வெகு அரிதாகவே சந்தர்ப்பம் கிடைக்கும். எனக்கு மார்க்வெஸ் மட்டும் தான் பெரும்பாலும் அதை அளித்தவர். இந்திய எழுத்தாளர் படைப்புகளில் எனக்கு அப்படிக் கிட்டிய வாசிப்பு அனுபவம் திரு என்.எஸ்.மாதவன் எழுதிய மலையாள நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ மூலம் கிடைத்த ஒன்று.

இந்த அனுபவம் எனக்குப் படைப்பு சார்ந்து கிடைக்காமல் எழுத்தாளரைச் சார்ந்து கிடைத்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். மலையாள சமகால இலக்கியத்தில் என்.எஸ்.மாதவன் அசாதாரணமான ஒரு படைப்பாளி என்பதை அவருடைய சிறுகதைகள் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்து கொண்டேன். ஹிக்விட்டா, வன்மரங்கள் வீழும்போல் போன்ற கதைகளைப் படிக்கும்போது நான் முன்னால் குறிப்பிட்ட எல்லாவற்றுக்கும் முன் நிற்கும் வாசக அனுபவம் எனக்குக் கிட்டியது. அதன் பின்னணியில் இந்த நாவலைப் படித்தபோது முதல் பக்கத்திலேயே ஒன்றிப் போக முடிந்தது.

’நாவலை நீங்களே தமிழில் மொழிபெயருங்கள்’ என்று என்.எஸ்.மாதவன் சொன்னதும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, நான் என் அடுத்த நாவலை எழுதத் தொடங்கும் போது கிடைப்பதற்கு ஈடாக இருந்தது. ஒவ்வொரு வரியாக, சொல்லாக ரசித்துச் செய்த மொழிபெயர்ப்பு இது.

இந்த நாவல் எப்படி என்னைக் கவர்ந்தது? வரிசையாகசக் காரணம் சொல்லிப் போகலாம்.
மாதவனின் எழுத்து சில சொற்றொடர்களில் மறக்க முடியாத ஒரு காட்சியைக் கட்டி எழுப்பி விடுகிறது. மகத்தான, இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கும் ரெம்ப்ராண்ட் ஓவியம் தான் நினைவுக்கு வருகிறது எனக்கு.

பழைய சவிட்டுநாடகக் காரன், அதுவும் ஒரு காலத்தில் அதிசுந்தரனாக இருந்தவன் ராத்திரியில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் வெளிக்குப் போகிற மாதிரிக் குந்தி உட்கார்ந்து மீன் பிடிப்பதும், நாடகப் பாடலை மறந்து போன அவனுடைய கண்ணில் துளிர்க்கும் கண்ணீர் சிம்னி வெளிச்சத்தில் மின்னுவதும், தென்னை மரத்தில் சாய்ந்து பெர்னாட்ஷா முன்னுரைகள் படித்தபடி படகேறிப் பயணம் போகும் மனைவிக்குப் பிரியாவிடை சொல்லும் போன தலைமுறை எழுத்தாளனும், அரை நிர்வாணப் பக்கிரியை வரைய இந்தியா வந்த இந்திய வம்சாவளிப் பெண் ஓவியர் தொண்ணூறு கடந்த தச்சரோடு, மனதில் விகல்பமும் உடம்பில் துணியும் இல்லாமல் உரையாடுவதும், பிள்ளை பெற முக்கும் கர்ப்பிணியோடு அண்டை அயலார் பெண்களும் கூடவே முக்குவதும் என்று நாவல் முழுக்க மனம் கவரும் எழுத்து ஓவியங்கள் அவை.

தொன்மத்திலிருந்து புதையல் காக்கும் பூதமான காப்பிரி முத்தப்பர்கள் குழாய்க் கிணறு தோன்றும்போது சிரித்தபடி இருக்கும் தாடை எலும்பும் பல்லுமாக வெளிப்படுகிறார்கள். மக்ரோனி பாயசத்துக்கும், தம் பிரியாணிக்கும், மட்டன் பசந்துக்கும் சேர்மானங்களும் செய்முறையும் விரிவாகச் சொல்லப்படுகிறது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாதாகோவிலில் தண்ணீர்ப் பிசாசு பிடித்து சதா கைகழுவும் பாதிரியார் ஞானஸ்நானம் செய்வித்த குழந்தைக்கு எட்டுப் பெயர் ஒன்றாக இணைத்த நீண்ட பெயர் சூட்டுகிறார். துக்க வெள்ளிக்கு முந்திய இரவில் மரமணி அடித்தபடி நிதானமாகத் திருவசனம் முழக்கிப் போகும் கூட்டத்தில் இறுதியில் கல்லறை தோண்டுகிற கோவில் பணியாளர் சிலுவை சுமந்தபடி நடக்கிறார். இவையும் மனதிலிருந்து மறையாத கோட்டுச் சித்திரங்களாக உருவெடுக்கின்றன.

பெருங்கதையாடலை ஒதுக்கி சிதறுண்ட கதையாடலை வெற்றிகரமாகக் கையாண்டிருப்பது இந்த நாவலில் என் மனம் கவர்ந்த, மன நிறைவு தரும் மற்றொரு அம்சம். அரசூர் நாவல்களில் நான் இதைக் கைக்கொண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஈடானது இது. லீனியராக நகராத கதை சிறு நிகழ்வுகள் மூலம் நம்மையும் இழுத்துக்கொண்டு காலத்தில் முன்னும் பின்னுமாகப் பாய்ந்து செல்ல மொழி மாற்றும்போது நானே எழுதிய, மடை மாற்றிய மகிழ்ச்சி.

பெரும் வரலாறும் நுண்வரலாறும் இந்தப் பிரவாகத்தில் கம்பீரமாக மிதந்து வருகின்றன. வரலாறு அம்மை குத்தத் தீவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் அனுபவமாகவும், இமயத்தில் கொடி நாட்டிய டென்சிங், ஹில்லாரியின் மலை ஏற்றமாகவும், விருந்துக்கு தம் பிரியாணி சமைக்கும் வைபவமாகவும், முதல் முதல் ரேடியோ வந்த தீவின் கேள்வி அனுபவமாகவும், விமோசன சமரமாகவும், கட்சிப் பிளவாகவும் சிறிது, பெரியது, இடம், வலம் வேறுபாடின்றிக் கதைப் பிரவாகத்தில் வந்து போகின்றன.

தொன்மமும், வரலாறும், கலையும், விழவும், உணவும், அரசியலும், சமூக வாழ்க்கையும், கணிதமும், இயற்பியலும், நிலவியலும் கலந்து எழுந்த ரசவாதமாகப் பிரமிக்க வைக்கும் கதையாடல் நகைச்சுவை விரவிச் சுவடு விட்டுப் போகிறது. ஒவ்வொரு பக்கமும் அலாதியான ஒரு முதன்மை எண் தான்.

இதை மொழிபெயர்த்துக் கொண்டே படித்தேன். படித்தபடி மொழிபெயர்த்தேன். காயலும், கடலும், புழையும், பாலமும், தீவும், மனுஷர்களுமான இந்த உலகத்தில் நானும் கரைந்தேன். நான் இல்லாவிட்டாலும் இறுதியிலும் வசனம் இருக்கும், இந்த நூலாக.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன