குருத்தோலை ஞாயிறன்று எனக்கு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு கொழுக்கட்டை தின்ன விருப்பமில்லாது போனது.

Getting edited and cross-checked with the original.

A small excerpt from the closing chapter

பிலாத்தோஸ் பாதிரியார் எங்கள் திருச்சபைக்கு வந்தது முதல், .துக்கவெள்ளிக்கு முந்திய லெண்ட் நோன்புக் காலத்தில் ‘சிலுவைப்பாதை’ சடங்கு அனுசரிக்கப்படத் தொடங்கியது. ஏசுவைச் சிலுவையில் அறைந்து இறந்துபோகத் தீர்ப்பானதில் ஆரம்பித்து, அவருடைய திரு உடலைக் குகையில் பாதுகாத்து வைத்து இறுதிச் சடங்கு செய்வது வரையான நிகழ்வு நடக்கும் பதினான்கு இடங்கள் கற்பிக்கப்பட்டும். போணிபேஸ் பாலத்தை அடுத்துத் தொடங்கி, சர்ச் முற்றம் வரையான வழியில் இந்தப் பதினான்கு இடங்களும் மெழுகுசீலையும், மூங்கில் பிளாச்சுகளும் வைத்துக் கட்டிய சிறு பந்தல்களாக நிறுத்தப்படும்.

லெண்ட் நோன்புக்காலம் தொடங்கியது. ’சிலுவைப் பாதை’யினூடே அப்பன் பல இடங்களிலும் தச்சுப் பணி செய்து கொடுத்தார். முந்தைய பிரசிடெண்ட் சேவியரின் மேற்பார்வையில் சந்தியாகுவும் குழுவினரும் பந்தல்களை அலங்கரித்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் பாடவேண்டிய பிரார்த்தனை கீதங்களையும், சொல்ல வேண்டிய விவிலிய வசனங்களையும், குந்தன் மியூசிக் கிளப்காரர்கள் புதியதாக வாங்கிய, ஒரு நடுவாந்திர சைஸ் பெட்டியின் அளவு உள்ள நாடா டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து ஒலிபரப்பினார்கள். முந்தைய ஆண்டுகள் போல, குருத்தோலை ஞாயிறன்று எனக்கு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு கொழுக்கட்டை தின்ன விருப்பமில்லாது போனது. பெசாஹவியாழன் அன்று சிலுவைப் பாதையான ஸ்லீவாப்பாதையில் எட்டாம் இடமான ‘ஜெருசலேம் பெண்களுக்கு ஏசு ஆறுதல் மொழியும்’ இடத்தில் வைத்து —- தொடங்கத் தீர்மானித்தேன்.

பெசாஹவியாழன் தினத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு தெற்குப்புற வீட்டுக்காரர்களான நாங்கள், கையில் பிரார்த்தனைப் புத்தகங்களோடு, சிலுவைப் பாதையில் முதல் இடமான ‘பந்தியோஸ் பிலாத்தோஸ் அரசன் மாளிகை’யிலிருந்து யாத்திரை தொடங்கினோம். எங்கள் கூட்டத்துக்கு முன் ஒரு கைவண்டியில் மைக்கும் ஒலிபெருக்கிகளும் வைத்து, குந்தன் மியூசிக் கிளப்காரர்கள் டேப் ரிக்கார்டரில் பிரார்த்தனை கீதங்களை ஒலிபரப்பியபடி போனார்கள். முதல் தடவையாக டேப் ரிக்கார்டரைப் பார்க்க, பல லந்தன்பத்தேரிக்காரர்களும், போஞ்ஞிக்கரை வாசிகளும் சிலுவைப்பாதை நெடுகக் காத்து நின்றார்கள்.

சிலுவைப்பாதையில் முதல் நிறுத்ததில் எழுதி வைக்கப் பட்டிருந்தது : “ஏசு கிறிஸ்துவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது”. எரணாகுளத்து ஓவியர்கள் வரைந்த, ரோமானியத் தூண்கள் கொண்ட ஒரு அரண்மனை முகப்பில் சிம்மாசனத்தில் அமர்ந்து கை கழுவும் பிலாத்தோஸ் அரசனையும், படைவீரர்களுக்கு நடுவே நிற்கும் கர்த்தரையும் காட்சிப்படுத்தும் ஒரு ஓவியம் அங்கே இருந்தது.

ஒலிபெருக்கி மூலம் கில்பர்ட் சத்தம் கேட்டது: ”பிலாத்தோஸ் யேசுவை விடுவிக்க விரும்பி மறுபடி அவர்களை அழைத்துச் சொன்னான். அவர்களோ: “அவனைச் சிலுவையில் அறையுங்கள். சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சல் போட்டார்கள்”.

ஏசு கிறிஸ்து சிலுவை சுமக்கும் இரண்டாம் இடத்துக்கு வந்தோம். அங்கே வந்து சேர்வதற்காக நடந்தபோது நஜீபும், டெய்சியும் நாடா டேப்ரெக்கார்டரில் பாடினார்கள் :

“சிலுவை சுமக்கிறார் உலகின்
பாவம் சுமக்கிறார்
சுமந்து சொல்கிறார் சிலுவை
சுமந்து செல்கிறார்
நிந்தனை மிகும் கொடிய
வார்த்தை எழுந்திடும்
பாதை தன்னிலே அவர்
நடந்து செல்கிறார்”.

நாங்கள் மூன்றாம் இடத்துக்கு வந்தோம். இங்கே தான் ஏசு கிறிஸ்து சுமந்து கொண்டிருக்கும் சிலுவையோடு முதல் தடவையாகத் தரையில் விழுகிறார். கர்த்தர் அன்னையாகிய பரிசுத்த மரியத்தைக் காணும் நான்காம் இடத்துக்கு நடந்தபோது நஜீப்பின் பாட்டு உச்சஸ்தாயியில் ஒலிபெருக்கி மூலம் கேட்டது :

“பாதையில் அழுது வந்த அன்னையை
பிரான் ஏசு நோக்கினார் பின் திரும்பி.
சொர்க்க ஒளி வீசும் விழிகளில்
கூர் அம்புகள் துளைத்த வேதனை”

நான்காம் இடத்தில் எழுதியிருந்தது : “ஏசு பாதையின் தம் அன்னையைக் காண்பது”. ஐந்தாம் இடம், “சைமன் ஏசுவுக்கு உதவிடுதல்”. வெரோனிகா ஏசுவின் களைத்த திருமுகத்தைத் துடைக்கும் காட்சி அமைந்த ஆறாம் இடத்துக்குப் போகும்போது டெய்சியின் துக்கம் நிரம்பிய குரலைக் கேட்டோம் :

“வாடித் தளர்ந்த முகம் – ஏசுவின்
விழிகள் மங்கலாய்த் தெரிந்தன
வெரோனிகா அழுதழுது
வேதன் திருமுகம் ஒற்றித் துடைத்தாள்”.

ஏழாம் இடம் : “ஏசுபிரான் இரண்டாம் முறையாக விழுகிறார்”.

அடுத்து எட்டாம் இடம். இங்கே தான் ஏசுநாதர் எருசலேம் நகரப் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார். எட்டாம் இடத்தை நோக்கி நாங்கள் போகும்போது ஒலிபெருக்கி மூலம் கில்பர்ட் சத்தம் கேட்டது :

“எருசலேம் தெருக்களில் மக்கள் பெருங்கூட்டமாகக் குழுமினர். அவர்களின் சத்தம் எங்கும் உயர்ந்தது. வழக்கம் போல் இல்லாமல் இப்படிக் கூடியிருந்ததைக் காணப் பெண்கள் வந்தார்கள். அவர்களுக்கு நன்கு பரிச்சயமான ஏசு கொலைக்களத்துக்கு இழுத்துப் போகப்படுகிறார். அதைக் கண்ட பெண்கள் அலறிப் புலம்புகிறார்கள். அவர் பேரில் அவர்களுக்கு அனுதாபம் மேலிடுகிறது. அவர்களிடம் ஏசு சொல்கிறார் (நஜீபின் குரல்) : “எருசலேம் நகர புதல்வியரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். மலடிகளும் பிரசவிக்காத வயிறுகளும், ஊட்டாத முலைகளும் கொடுத்து வைத்தவை என்று சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன