கட்சி உடைஞ்சா மற்றதை எல்லாம் பங்கு வச்சுப் பிரிச்சுக்கிட்ட மாதிரி உயிர் கொடுத்த தியாகிகளையும் பாகப் பிரிவினை செஞ்சுக்க வேணாமா

(இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறு பகுதி)

போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் புத்தகக்கடையை விட்டுப் புறப்பட்டார் ராகவன். ஆஸ்பத்திரி வீதியில் ‘ஹோட்டல் டெர்மினஸ்’ உள்ளே வைத்திருந்த மதுக்கடைக்கு நடந்தார் அவர். இருட்டும் வரை அங்கே குடித்துக் கொண்டிருந்தார். படகுத்துறைக்குத் திரும்ப நடக்கும்போது யாரோ அவரை ஆஸ்பத்திரிக்கு முன்னால் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள் : “ஒரு பாசிங்ஷோ சிகரெட் இருக்குமா?”.

“ஷெனாய் தோழர்”, ராகவன்மாஸ்டர் ஷெனாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ஷெனாய் மௌனமாக நின்றார். ராகவன் அவரைக் கேட்டார் : “தோழர் இங்கே எப்படி? எப்போ வந்தீங்க?”

“வந்து ஒரு வாரம் ஆச்சு. போஸ்பிக் லாட்ஜிலே தான் தங்கியிருக்கேன். பார்ட்டி உடஞ்சபோது கட்சித்தலைமை என்னை சொந்த ஊருக்குப் போய் கட்சியைக் கட்டச் சொன்னாங்க. என் வாழ்க்கையிலேயே ரெண்டாவது தடவையா நான் கட்சியைப் புதுசாக் கட்டறேன். அப்புறம் ராகவன், நான் இடதுசாரியிலே இருக்கேன்”.

“நான் மற்ற பிரிவுலே இருக்கேன்” என்றார் ராகவன்.

“தெரியும்” என்றார் ஷெனாய்.

“எல்லாத்தையும் விட கட்சிதான் முக்கியம்”, ராகவன் சொன்னார். “கட்சியோட அடித்தளம் ஒழுங்குமுறைதான். கட்சிக்குள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணோட்டம் வந்ததுன்னா ஜனநாயக முறையிலே அதை சர்ச்சை செய்யணும். செண்ட்ரல் கமிட்டி ஒரு தீர்மானம் எடுத்தா, எல்லா அணியும் அதைக் கடைப்பிடிச்சாகணும். கட்சியை உடைக்கறது..”

”நான் காரணம் கேட்கலியே. போதை எதிலேன்னு தேடிக்கிட்டு அலையற மத்தியதர வர்க்கப் பசங்களுக்கான சமாசாரம் இல்லை கம்யூனிஸம். அது கிடக்கட்டும், எங்கே இருந்து வரீங்க, ராகவன்?”.

“பாகப்பிரிவினையிலே எங்களுக்குக் கிடைச்ச புஸ்தகக்கடையிலே இருந்துதான்.. அப்புறம் தோழர், நாம மற்றதை எல்லாம் பங்கு வச்சுப் பிரிச்சுக்கிட்ட மாதிரி கம்யூனிஸ்ட் தியாகிகளையும் பாகப் பிரிவினை செஞ்சுக்க வேணாமா?”

”ராகவன்”

“இல்லேன்னா போகுது. தியாகிகளை பிறப்பித்த இடங்களை முதல்லே பிரிச்சு எடுத்துக் கொள்ளலாம். ஆயிரக்கணக்காக தோழர்கள் செத்து விழுந்த வயலார் – புன்னப்புரையிலே ஆரம்பிக்கலாம். தோழருக்கு எது வேணும்? வயலாரா, புன்னப்புரையா? இந்த ரெண்டு விரல்லே ஒண்ணை தொடுங்க”.

“ராகவன், நான் போறேன்”, ஷெனாய் சொன்னார்.

“நில்லுங்க சகாவே. இனி நாம தியாகிகளைப் பங்கு பிரிச்சுக்கலாம். கோட்டத்தல சுரேந்திரன், எம்.ஜி.வேலாயுதன், கட்சியை உருவாக்கின பி.கிருஷ்ணபிள்ளை… தோழருக்கு இவங்கள்ளே யார் வேணும்?”

”கிருஷ்ணபிள்ளை டெக்னிகல்லா பார்த்தா தியாகி இல்லையே? பாம்பு கடிச்சுத்தானே இறந்து போனார்?”

“சரி, கிருஷ்ணபிள்ளை வேணாம், அவரைக் கொத்தின பாம்பு? தோழர் பாம்பை எடுத்துக்குங்க. பெரிய தலைவர்கள் எல்லாம் எங்க பக்கம் தான் இருக்காங்க”.

“அவங்களை எல்லாம் நாங்க மக்களை வச்சுக் கடிக்கச் சொல்றோம். நான் கேட்டது சரிதானே?”

”என்ன கேட்டீங்க?”

“ராகவன் ஃபுல்டைம் தண்ணி வண்டின்னு”, ஷெனாய் திரும்பி நடக்கும்போது சொன்னார். ராகவன் சிறிது நேரம் அசையாமல் நின்றார். வளைந்து திரும்பிய தெருமுனைக்கு ஷெனாய் நடந்தபோது அவர் சத்தம் போட்டுச் சொன்னார் : “டேய் ஷெனாய், புல்லுப் பயலே, பசிக்குதுன்னு நீ சொன்னபோதெல்லாம் உனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேனே. ஒருதடவையாவது என்னை தோழர்னு கூப்பிட்டிருக்கியாடா நீ?”

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன