ப்ரைம் நம்பர் எல்லாம் கடவுளோட எண்கள் அப்படீன்னு தச்சர்கள் வச்சிருக்காங்க

மலையாள நாவல் மொழிபெயர்ப்பு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.

இன்று மொழியாக்கியதின் ஒரு சிறு பகுதி :

நஜீப் தன் சகோதரி ஸைனபாவோடு குந்தன் ம்யூசிக் க்ளப் உள்ளே வந்தார் அவர் தரையில் உட்கார்ந்து தபலா வாசிக்கத் தொடங்கினார். கில்பர்ட் சொன்னார் : “அந்த பாபுல் மோரா கொஞ்சம் பாடு. ஜெசிகாவுக்கு கேட்கணுமாம்”.

“அய்யோ, நான் போகணும். ட்யூஷனுக்கு நேரமாச்சு” என்றேன்.

“ஏன் ட்யூஷனுக்கு லேட்?” என்று கேட்டார் புஷ்பாங்கதன்மாஸ்டர். பெர்மாட்டுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு தடையாக என்னைக் கருதியிருந்த அவருடைய வரவேற்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஏ, பி, சி இந்த மூணு நண்பர்களும் எந்த எண்ணுக்கும் பதிலியா வரலாம். அதே மாதிரி எக்ஸ், ஒய், இஸட். அதே போல, பி, க்யூ, ஆர், எஸ். இப்படி எழுத்துகளை எண்களுக்கு பதிலாக பயன்படுத்தறதுதான் அல்ஜீப்ரா. புரியுதா ஜெசிகா?”

என் மனம் என் கால் விரல்களில் இருந்தது. புஷ்பாங்கதன்மாஸ்டரின் கால் அவற்றை அவ்வப்போது தொட்டுக் கொண்டிருந்தது. நான் காலைப் பின்னால் இழுத்துக் கொண்டேன். புஷ்பாங்கதன்மாஸ்டர் சொன்னார் : “ஏ ப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர்ட் இஸ் ஈக்வல் டு ஏ ஸ்கொயர்..”

புஷ்பாங்கதன்மாஸ்டரின் கால் என் குதிகாலுக்கு மேலே ஏறியது. கால் நகங்களின் தொடர்ந்த உரசல் என் தசையை எனக்குக் அடங்காமல் செய்தது. நான் காலைப் பின்னால் இழுத்துக்கொள்ள முடியவில்லை. உறைந்து போனேன்.

“ஜெசிகா, வேணும்னா இந்த அல்ஜீப்ராவை இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இன்னிக்கு வேணாம். உங்க அப்பா மத்தேவுஸ் ஆசாரி சொல்ற ஒரு காரியம் நான் எப்பவும் நினைவிலே வச்சிருக்கேன். ப்ரைம் நம்பர் எல்லாம் கடவுளோட எண்கள் அப்படீன்னு தச்சர்கள் வச்சிருக்காங்க. அது சரிதான்”, என்றார் புஷ்பாங்கதன்மாஸ்டர்.

மாஸ்டரின் கால் என் முட்டு வரை வந்தபோது அதன் பதிலியாக அவர் கை ஊர்ந்தது. அவருடைய கை நகங்கள் என் தோலில் சித்திர எழுத்துகளைக் கீறிக்கொண்டிருந்தன.

“தெய்வத்தின் எண்கள்”, புஷ்பாங்கதன்மாஸ்டர் சொன்னார். “என் வாழ்க்கை முழுக்க நான் இந்த தெய்வங்களுக்கு ஆராதனை செய்தேன். நூறு வரைக்கும் இருக்கும் முதன்மை எண்களை தகட்டில் அடித்து வைத்தேன். ஆனா, ப்ரைம் நம்பர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ .. முடிவே இல்லாம இருக்கு”.

அவர் கண்களை மூடியபடி சொல்லத் தொடங்கினார்:

”101
103
107
109
113
127
131
137
139
149
151
157
163
167
173
179
181
191
193
197
199
211
223
227
229
233
239
241
251”

எனக்கு இருள் வேண்டியிருந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டேன். புஷ்பாங்கதன்மாஸ்டர் சொல்லிக்கொண்டே போனார் :

“257
263
269
271
277
281
283
293
307
311
313
317
331
337
347
349
353
359
367”

என் உள்ளாடைத் தலைப்பை அடைந்த அவருடைய கைகள் பிரிந்தன. இடது கை, நாடாவை அவிழ்க்க முயற்சி செய்ய, மற்றது உள்ளே புக முயன்றது.

”373
379
383
389
397
401
409
419
421
431
433
439
443
449
457
461
463
467
479
487
491
499
503
509
521
523
541
547”

“போ சாத்தானே”, நான் துள்ளி எழுந்தபோது என் கைபட்டு மேசை மேல் வைத்திருந்த இங்க் பாட்டில் ஒரு ஃபுல்ஸ்கேப் தாளின் மேல் சரிந்தது.

“ஐயோ எனக்குத் தெரிஞ்ச ஆகப் பெரிய ப்ரைம் நம்பர் மேலே இந்தப் பொண்ணு மையை கொட்டிட்டாளே” புஷ்பாங்கதன்மாஸ்டர் அலறினார். காகிதத்தின் மேல் கொட்டிய மை எட்டுக்கால்கள் கொண்டு பரவியது. அந்தக் கால்கள், அங்கே எழுதி வைத்திருந்த 9223372036854775807 என்ற மிகப்பெரிய முதன்மை எண்ணை ஆக்டோபஸ் போல் சுற்றிச் சூழ்ந்து நெறித்து இல்லாதாக்கின.

பாவத்தோடும் மௌனத்தோடும் நான் புஷ்பாங்கதனின் அறைக்கு வெளியே ஓடினேன்.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன