ரஷ்ய காகிதம் சரவெடி செய்ய அருமையா இருக்குதாம். ஸ்டாலின் பட்டாசு நல்லா வெடிக்கும்

வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு லந்தன்பத்தேரியிலும், போஞ்ஞிக்கரையிலும், ராகவன்மாஸ்டர் மட்டுமே அனுதாபியாக இருந்திருக்க வேண்டும். கட்சியில் பிளவு ஏற்பட்ட நாட்களில், இடது கம்யூனிஸ்ட்கள் ராகவன்மாஸ்டரை எங்கே பார்த்தாலும் கேலி செய்தார்கள். அவர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போகும்போது இடதுசாரிகள் மலாக்கா ஹௌஸ் மாடியிலிருந்து கேட்பார்கள் : “என்ன ராகவன் மாஸ்டரே, ஒருநபர் ஊர்வலம் நடத்தறீங்க போல?”. ஒரு முறை போனிபோஸ் பாலத்தின் முனையில் வைத்து ராகவன்மாஸ்டரை கட்சி உள்ளூர்ச் செயலாளர் ஜோசப் கேட்டார்: “மாஸ்டரே, என்ன இப்படி தனியா நடந்தபடி உங்களுக்கு நீங்களே பேசிக்கிட்டு போறீங்க? ஓ, சாரி, உங்க கட்சியோட உள்ளூர் அங்கத்தினர் மீட்டிங் நடத்திக்கிட்டிருக்கீங்களா?” சாயாக்கடைக்காரர் பௌலோஸ் மட்டும் ராகவன்மாஸ்டரை அவ்வப்போது ஆசுவாசப்படுத்துவார்: “இடதுசாரிங்களுக்கு யாரெல்லாம் இருக்காங்க? ஈ.எம்.எஸ்ஸும், ஏ.கே.ஜியும். உங்களுக்கு மீதி இருக்கப்பட்ட எல்லாரும் இருக்காங்க. சி.அச்சுதமேனன், ஆர்.சுகதன், டி.வி.தாமஸ், எம்.என்.கோவிந்தன் நாயர். மாஸ்டரே, எல்லாம் கலங்கித் தெளியறபோது நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க”. ராகவனின் தனிமை தொடர்ந்தபோது இடதுசாரியினர் அவரைப் பரிகசிப்பதை நிறுத்தினார்கள்.

எரணாகுளத்தில் படகிலிருந்து இறங்கிய ராகவன் படகுத்துறைக்கு அருகே கனால்ஷெட் வீதிக்குப் போனார். அங்கே பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு இரண்டு மாடிக் கட்டடத்தில் இருந்து செயல்பட்டது. கட்சி பிரிந்ததும், கட்சி அலுவலகம் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்த புத்தகக் கடை வலதுசாரிக் கட்சிக்குக் கிட்டியது. புத்தகக் கடையில் தனியாக இருந்து அலுப்படைந்த ரஹ்மான் சொன்னார் : “வாங்க, நல்லதா போச்சு. நான் காலையிலே இருந்து ஒரு சாயா கூட குடிக்காமல் சோவியத் புஸ்தகங்களுக்கு நடுவிலே உக்கார்ந்துக்கிட்டிருக்கேன். தோழர், கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துக்குங்க. பயப்படாதீங்க. ஒருத்தரும் புஸ்தகம் வாங்க வரமாட்டாங்க. போனவாரம், ரஷ்யாவிலே அச்சடிச்ச மேத்ஸ், பிசிக்ஸ் புஸ்தகங்கள் வேணுமின்னு சில ஸ்டுடண்ட்ஸ் வந்தாங்க. அதுக்கு அப்புறம் இப்படித்தான் ஈ ஓட்டிக்கிட்டிருக்கேன்”.

ரஹ்மான் வெளியே போகும்போது சொன்னார் :”தோழர், ஷெல்ப்லே எல்லாம் ஒரு கண்ணு வச்சுக்குங்க. ஸ்டாலினோட ஏதாவது புத்தகம் கண்ணுலே பட்டா, அதோ அந்த மூலையிலே வச்சிருக்கற கோணிச் சாக்குலே போட்டு வச்சிடுங்க. சிவகாசி பட்டாசு கம்பெனி ஏஜெண்ட் அம்ப்ரோஸ் அதை எல்லாம் எடை போட்டு எடுத்துக்கிட்டுப் போவார். ரஷ்ய காகிதம் சரவெடி செய்ய அருமையா இருக்குதாம். ஸ்டாலின் பட்டாசு நல்லா வெடிக்கும்”.

ராகவன் புத்தக அலமாரிகளைப் பார்த்தார். காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’, மற்றும் தோப்பில் பாசியின் ‘தலைமறைவு வாழ்க்கை நினைவுகள்’ புத்தகங்களுக்கு இடையே பதுங்கியிருந்த ஸ்டாலினின் ‘மார்க்சீயமும் தேசியதளக் கேள்விகளும்’ என்ற புத்தகத்தை உருவியெடுத்து கோணிச்சாக்குக்குள்ளே அதைப் போட்டார். ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கை எடுத்த மனநிறைவோடு நாற்காலிக்குத் திரும்பியபோது ரஹ்மான் திரும்ப வந்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன