இத்தனை எழுத்துகள் எதற்கு வேண்டும்?

திரு என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் நாவல் 50% தமிழில் மொழியாக்கமாகியுள்ளது. ஜூலையில் நிறைவுறும் என நம்புகிறேன். தமிழில் குறிப்பிடத் தகுந்த நூலாக இது இருக்கும்.

’ நாவலில் இருந்து ஒரு சிறு துணுக்கு
//
விழித்தபோது ராகவன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். Ga-வும், Ja-வும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் இந்துஸ்தானியில் இருந்தும் சொற்களைப் பயன்படுத்த மலையாளம் கடன் வாங்கிய இரண்டு எழுத்துகள். Bha, Ru, Gha – சம்ஸ்கிருதத்தில் இருந்து மலையாளத்துக்கு சொற்களை இறக்குமதி செய்ய மட்டும் உபயோகிக்கும் எழுத்துகள். Da – அரபி, சம்ஸ்கிருதம், இந்துஸ்தானி, பாரசீகம், போர்த்துகீஸ் பதங்களை மலையாளத்தில் புழங்கப் பயன்படுத்தும் எழுத்து. Ha – அரபி, பாரசீகம், சம்ஸ்கிருதம். Pha, Ba – சம்ஸ்கிருதம், அரபி, இங்க்லீஷ், பாரசீகம். Ra, Sha – பிறமொழிச் சொற்களில் மட்டும் முதல் எழுத்தாக வருகிறவை. La: – அதுவும் பெரும்பாலும் அந்நிய மொழிச் சொற்களை மலையாளத்தில் வழங்கும்போது மட்டும் தேவைப்படுகிறது. Sa ஸ – ஒரு வேற்றுமொழி எழுத்து. மலையாளத்தில் அது கிடையாது. இருந்தால் அது cha அல்லது ya ஆகும்.. ஆக மலையாளத்தில் இருக்கும் 52 எழுத்துகளில் அந்நிய எழுத்துகள் எத்தனை எத்தனை. மலையாளம் நம் கடற்கரை போன்றது. அங்கே தொலைவில் இருந்தெல்லாம் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. துறைமுகங்கள் வெளிநாட்டுக் கப்பல்களை வரவேற்பது போல, பல எழுத்துகளும் வேற்றுமொழிச் சொற்களை வரவேற்க மட்டும் இருக்கின்றன”.

நான் மீண்டும் கண்மூடினேன். என் மொழியில் துளைகள் ஏற்பட்டிருக்கின்றன. அரேபியாவில் இருந்தும், பாரசீகத்தில் இருந்தும், இங்கிலாந்தில் இருந்தும், லூசித்தானியா என்ற போர்த்துகல்லில் இருந்தும், ஹாலந்தில் இருந்தும் குளிர்ந்த காற்று சீழ்க்கை அடித்துக் கொண்டு இந்தத் துளைகளின் வழியே உள்ளே வருகிறது. எனக்குக் குளிராக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன