ஒரு செண்டிமீட்டர் வட்டி

 

Kungumam column – அற்ப விஷயம் -19

முப்பது வருடம் முன்பு, வங்கிகள் வாங்கிகளாக இருந்தன. பணம் இருந்தால் படியேறலாம். மரக் கூண்டுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் கேஷியர் வாங்கி வைத்துக் கொண்டு ரசீது தருவார். போட்ட தொகை கணிசமான வட்டியோடு ஒரு வருடம் கழித்துத் திருப்பிக் கிடைக்கும். ஆத்திர அவசரத்துக்கு நகை நட்டை அடகு பிடித்துக் கடன் கொடுப்பதும் உண்டு அது பெரும்பாலும் வங்கியில் கணக்கு வைத்து பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்காக மட்டும் இருக்கும்.

அப்புறம் தொடர்ந்தது வங்கிகள் வழங்கிகளான காலம். பதினாலு பெரிய வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. பட்டி தொட்டியெல்லாம் அவை கிளை திறந்தன, சின்ன சின்னத் தொகையாகச் சேமித்துக் கணக்கு வைக்க சாமானியர்களும உற்சாகப் படுத்தப்பட்டார்கள். இந்த வங்கிகள் விவசாயத்துக்கும் சிறுதொழிலுக்கும் கடன் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. கிளைகள் பெருகப் பெருக, ஊழியர் எண்ணிக்கையும் அதிகமானது. ஆனாலும் வேலை பழைய கிரமத்தில்தான். பத்து மணிக்கு வங்கிக் கதவைத் திறந்து வைத்து பகல் ரெண்டு மணிக்கு ஷட்டர் இறங்கி விடும். அப்புறம் ஒரு சிவப்பு லெட்ஜரிலிருந்து பார்த்துப் பார்த்து இன்னொரு கருப்பு நோட்டில் எழுதி, அதை நீளவாக்கில் அமைந்த வேறு ஒரு பச்சைப் புத்தகத்தில் படியெடுத்து சாயந்திரம் வரைக்கும் மும்முரமாக ஏதோ வேலை நடக்கும். சம்பளமும் ஓவர்டைமுமாக, வங்கி ஊழியர் என்றால் செழிப்பான பேர்வழி. கல்யாணச் சந்தையில் பரபரப்பாக விலைபோன சரக்கு அவர்கள்.

பிறகு கம்ப்யூட்டர் வந்தது. கம்ப்யூட்டரில் வரவு செலவு பதிந்து, அது நின்றுவிட்டால் தேவைப்படுமே என்று பழைய லெட்ஜரிலும் எழுதி திரிசங்கு நிலையில் தேசிய வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்க, தனியார் வங்கிகள் அமர்க்களமாகக் களத்தில் இறங்கின. வங்கி என்றாலே மனதில் தோன்றும் உயரமான மரக் கவுண்டரை அகற்றிவிட்டு அலங்காரமாக நாற்காலி, மேஜை, மேலே புத்தம் புதிய கம்ப்யூட்டர்கள். டை கட்டிய இளைஞர்களும், சிக்கென உடுத்த வனிதைகளும் இதமான ஆங்கிலமும் மிதமான கரிசனமுமாக வங்கிச் சேவை வழங்க ஆரம்பித்து அதற்காக அதிகக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஒரு பக்கம் இண்டெர்நெட் மூலம் கணக்கில் வரவு செலவு விவரம் பார்க்க வாய்ப்பு, இன்னொரு பக்கம் துரத்திப் போய் வற்புறுத்திக் கடன் கொடுப்பது என்று தனியார் வங்கிகள் முன்னேற, தேசிய வங்கிகள் பழகிய தடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன.

வெள்ளைக்கார தேசத்து வங்கிகள் கடை திறந்தது அடுத்த படி. இவர்கள் தேடிப் போய்க் கொடுத்த கடனில் சொகுசு கார் வாங்கி பயணம் போனவர்களின் கடன் நிலுவை மெல்ல அதிகரித்தது. கழுத்தில் துண்டை இறுக்கிக் காசு வசூலிக்க கோட்டும் சூட்டும் மாட்டிய வெள்ளைக்கார துரைகள் நம்மூர்ப் பேட்டை ரவுடிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். கடன் பாக்கிக்காக அந்தக் குண்டர்கள் நடுத் தெருவில் காரை நிறுத்திக் கன்னத்தில் அறைந்து பிடுங்கி வண்டியை ஓட்டிப் போனபோது தனியார் வங்கிகளின் இன்னொரு முகம் புலப்படத் தொடங்கியது. தொலைபேசியில் அழைத்துத் தேனொழுகப் பேசி கிரடிட் கார்டை வழங்கியவர்கள், வட்டிக்கு வட்டி கூட்டித் தண்ட வட்டி போடும் நடைமுறையை வெளிப்படையாகச் சொல்வதில்லை. எனவே பிளாஸ்டிக் அட்டையை வைத்து நடுத்தர வர்க்கத்து ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதில் பெரும் வெற்றி இவர்களுக்கு.

இங்கே இருக்கப்பட்டவன் குரல்வளையை நெருக்கிக் கடன் வசூல் செய்கிற இந்தக் கந்துவட்டிக் கனவான்கள் அமெரிக்காவில் வீடு கட்டக் கடன் கொடுத்த திருக்கூத்தைச் சொல்லியழ இரண்டு பக்கம் போதாது. தகுந்த விசாரணையும், வாங்கின தொகையைச் செலுத்தக் கூடியவரா என்ற மதிப்பீடும் இல்லாமல் வந்தவன் போனவனுக்கு எல்லாம் வீடுகட்டக் கடன் கொடுத்ததோடு மட்டுமில்லை. இப்படி வராக் கடனை எல்லாம் கூறுகட்டி ‘முதலீடு வாங்கலியோ முதலீடு. குறைஞ்ச தொகைக்கு வாங்கி அதிக வருமானத்தை அள்ளுங்க’ என்று உலகம் முழுக்கக் கூவி விற்றார்கள். ஊர் உலகத்தில் இருக்கும் மற்ற வங்கிகள், ஓய்வூதிய நிதி வைப்பு நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்கச் சரக்காச்சே என்று நம்பி வாங்க, முதலுக்கே மோசம். நிதி நெருக்கடி. அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அரசாங்கமே அவற்றை எடுத்து நடத்தத் தொடங்கி விட்டது. இத்தனை நாள் சுதந்திரமாக விட்டு வைத்த வங்கித் தொழிலுக்கு அரசுக் கண்காணிப்பு இப்போது. இந்தியா இருபத்தைந்து வருடம் முன்னால் இதெல்லாம் செய்தபோது சோஷலிசத்தின் கோளாறு என்று சிரித்த பொருளாதார நிபுணர்கள் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது என்று தெரியாமல் பேய்முழி முழிக்கிறார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அகில உலகத்தையும் அமெரிக்க வங்கிகளின் தெனாவெட்டுக் கடன் நிலுவைச் சுமை கடித்துக் கொண்டிருக்கிறது.

கெடுதலுக்கு நடுவிலும் ஒரு நன்மை. எந்த நாட்டில் எந்தத் தனியார் வங்கியில் பணம் போட்டாலும் மாம்பலம் நிதி நிறுவனம் மாதிரி கோவிந்தா தானா என்று மிரளும் மக்கள் தேசிய மயமான நம் வங்கிகளை மலை மாதிரி நம்பி அவற்றில் திரும்ப சேமிக்க வர ஆரம்பித்திருக்கிறார்கள். சக்கரம் ஒரு வட்டம் சுற்றித் திரும்பியிருக்கிற நல்ல நேரம் இது. வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சதவிகிதம் அதிக வட்டி வேண்டாம். சேவையோடு ஒரே ஒரு செண்டிமீட்டர் உதடு விரிய அன்பான புன்சிரிப்பை மட்டும் இந்த வங்கிகள் வழங்கினால் போதும்.

(published in this week’s Kungumam)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன