குட்டப்பன் கார்னர் ஷோப் – 12

 

கச்சேரி கேட்கப் போயிருந்தார். வித்வத் உள்ள எந்த இசைக் கலைஞர் மும்பைக்கு வந்தாலும், சப்-அர்பன் ஏரியா சவுத் இண்டியன் சபாவுக்கு டாக்சி வைத்துக் கூட்டி வந்து மேடையேற்றி விடுவார். இந்த வித்வானையும் அப்படித்தான் அழைத்து வந்தார். கச்சேரி நடுவே சிறிய இடைவேளையில் மடுங்காவில் வாங்கி எலக்ட்ரிக் ட்ரெயினில் அலுங்காது நலுங்காது யாரோ சிரத்தையாகக் கொண்டு வந்து கொடுத்த பூமாலையோடு மேடையேறினார். பாடகருக்கு அணிவித்து சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசி, இறங்கினார். மூணாவது வரிசை வலமிருந்து இடம் எட்டாவது இருக்கையை அங்கே வைத்திருந்த தன்னுடைய டர்க்கி டவல், வெற்றிலைச் செல்லம் மூலம் அடையாளம் கண்டு திரும்ப வந்து உட்கார்ந்தார். வித்வான் கல்யாணி ராக ஆலாபனையை ஆரம்பித்தபோது வாயில் போட எடுத்த வெற்றிலைச் சீவல் வலது கையிலிருந்து சிதற, இவர் கதை முடிந்திருந்தது.

இந்தக் குளிர் காலம் இசையோடு ஆரம்பித்து இழப்போடு முடிகிறது. நெருங்கிய உறவினரின் இந்த அனாயச மரணத்துக்கு ஒரு வாரம் முன்புதான் இன்னொரு சாவு. பார்க்கின்ஸன் நோய் முற்றிய நிலையில் இன்னொருவர். நெருங்கியவரும் தான். மனம் சுறுசுறுப்பாக இயங்கினாலும் உடல் ஒத்துழைக்காத சோகம். இந்த நோய் கண்டவர்கள் இரண்டு மாடி கடகடவென்று படி ஏறச் சொன்னால் ஏறி விடக் கூடும். ஏதோ ஒரு துடிப்பில் மனம் வேகமாகச் செயல்பட்டு மோட்டார் நரம்புகளை இயக்கி அதை சாதிக்க வைத்து விடும். ஆனால், இயல்பாகத் தரையில் இரண்டு அடி எடுத்து வைத்து நடக்கத் தடுமாற்றம். பேச முற்பட்டால் வாய் கோணி, அர்த்தமில்லாத குழறலாக ஒலிக்கும். தினசரி காரியங்களுக்குக் கூட அடுத்தவர் உதவியை நாட வேண்டிய கட்டாயம் வந்து, இவர்கள் உள்ளொடுங்கி விடுவார்கள். ஓட்டுக்குள் நத்தையாகச் சுருங்கும்போது வீம்பும் வந்து சேருவது வாடிக்கை. ஊர்ந்து போயாவது ஒருவர் துணையும் இன்றி காலைக் கடன் கழிக்கிற மாதிரி இது அமையும். போதாக் குறைக்கு நரம்புகளைக் கொஞ்சமாவது செயலோடு வைத்திருக்க டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகள் மூளைச் சோர்வை உண்டாக்கி, நினைவுக்கும் கனவுக்கும் இடையே சதா ஊடாட வைத்து விடும்.

இவரும் அப்படித்தான் எப்போதோ இறந்து போன யார் யாரோ பக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களோடு பேச முயற்சி செய்தபடி குளியல் அறைக்குள் போனது ஒரு நடுப்பகலில். இல்லாத யாரையோ குளிக்கச் சொல்லி அவர் திறந்தது வென்னீர் ஊற்றாக பீறிடும் ஷவரை. அதன் கீழே நின்றபடிக்கு நிறுத்த முயன்று தோற்றுப்போனவர் மேல் கொதிக்கக் கொதிக்க சுடுநீர் விழுந்து கொண்டிருந்தது கிட்டத்தட்ட மாலை மயங்கும் நேரம் வரை. தேடி வந்த யாரோ குளியல் அறையில் பார்த்தபோது முக்காலே மூணு பாகம் வெந்து போயிருந்தார். வலியும் வாதனையுமான இருப்பும் இறப்பும் அவருக்கு என்று எழுதி வைத்திருந்தது.

அவரை அடக்கம் செய்துவிட்டு வந்த ராத்திரியில் உறக்கம் பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்து, எதை எதையோ படிக்க முயன்று தோற்று, பார்க்க எடுத்த சினிமா ‘தன்வந்தரம்’. மோகன்லால் ‘மறதி ரோகம்’ ஆன அல்ஷீமர் வியாதியால் பீடிக்கப்பட்ட நடுத்தர வயசனாக வரும் படம். பார்க்கின்ஸன் நோயாளிக்கு மனம் செயல்பட்டு, உடல் ஒத்துழைக்காது போனால், அல்ஷீமர் நோய் கண்டவர்கள் இதற்கு நேர் எதிர். உடல் நல்லபடிக்கு செயல்படும். மனம் ஒத்துழைக்காது. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் நடு வீட்டில் சிறுநீர் கழிக்கக் குத்த வைப்பது போன்ற துயர அனுபவம் அது. வீட்டை விட்டு வெளியேறி தான் யார் என்ற சுயநினைவு இல்லாமலேயே அநாதையாக மிச்ச வாழ்க்கையைக் கழித்து உயிர்விட்டவர்களும் இதில் அடக்கம். தன்வந்தரம் படத்தில் மோகன்லால் இணைவிழைந்து மனைவியோடு படுக்கையில் இருக்கும்போது பாதியில் எல்லாம் மறந்து போய், வெளியில் நடக்கிற ஒரு அற்புதமான காட்சியைப் படமாக்கி, ரசிகர்கள் கோபத்துக்குப் பயந்து சினிமாவில் சேர்க்கவில்லை. இதை நினைவு கூர்ந்தபடி படம் பார்த்துப் படுக்கையில் விழுந்தபோது நாகேஷ் உயிரோடு இருந்தார். காலை விடிந்ததும் அவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்து விட்டார்.

எப்போது இறந்தார் என்று அவரை நெருக்கமாக அறிந்த நண்பரைக் கேட்டேன். கன்னடத் திரைப்படம் எதையோ டிவிடியில் பார்த்தபடி உயிர் போனதாகச் சொன்னார். அல்ஷிமர், பார்க்கின்ஸன் மூலம் மரணம் போல் இருந்திருக்காது அது.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

அன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்தது இப்போது கேரளத்தில் அரங்கேறுகிறது. ஒரு உறைக்குள் இரண்டு வாள் இருக்க முடியாது என்று கலைஞரும் எம்.ஜி.ஆரும் மோதிக் கொண்டபோது, முதல்வர் பதவியில் கலைஞர் நீடிக்க, எம்.ஜி.ஆர் கட்சியைத் துறந்து வெளியே நடந்தார். கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பிணராயி விஜயனுக்கும் நடுவே நடக்கும் மோதலின் முடிவு இதைப் படிக்கும் போது தெரிந்திருக்கும்.

மின்சார உற்பத்திக்கும் கேரளத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இதிலும் தமிழ்நாடு மாடல் என்று அவர்கள் மகிழ்ச்சியடைய வாய்ப்பு உண்டு. ஆனால், இங்கே மின்சார உற்பத்தி கோர்ட் நடவடிக்கை, சி.பி.ஐ விசாரணை என்று தடம் மாறிப் போனதாக ஞாபகம் இல்லை. அசல் மலையாளக் கதை அது.

மழை வராமல் பவர் கட், மழை அதிகமாகி கம்பி அறுந்து விழுந்து பவர் கட், காற்று அடித்து பவர் கட், வெய்யில் காய்ந்து பவர் கட், சும்மா பவர் கட் என்று பல தினுசில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் ஒரே மாநிலம் கேரளம். அங்கே மூன்று மின் உற்பத்தி நிலையங்களை அடி முதல் முடி வரை பிரித்து மேய்ந்து மாற்றி அமைத்து புது ஜெனரேட்டர்களை நிறுவி மின்சார உற்பத்தியைப் பெருக்க பத்து வருடம் முன்பு அரசு முடிவெடுத்தது. அப்போது தோழர் நாயனர் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அங்கே பதவியில் இருந்தது. தற்போதைய மாநிலக் கட்சிச் செயலாளர் பிணராயி விஜயன் அன்று மின்துறை அமைச்சர்.

ஜெனரேட்டர் நிறுவி நவீனமயமாக்க பொதுத் துறை நிறுவனமான பி.ஹெச்.ஈ.எல் கேட்டதை விட இரண்டு மடங்கு அதிகம் கேட்டது எஸ்.என்.சி லாவலின். கனடா நாட்டு கம்பெனி இது. காம்ரேடுகள் முதலாளித்துவ மயக்கத்தில் எப்படியோ வீழ்ந்து லாவலினுக்கு மாலையிட்டு மலையாளக் கரைக்கு அழைத்து வந்தார்கள். பி.ஹெச்.ஈ.எல் போல் ஜெனரேட்டர் உருவாக்குகிற தொழில்நுட்பம் எல்லாம் லாவலினுக்குத் தெரியாது. கொஞ்சம் டெக்னாலஜி ஆலோசனை, வேறே எங்காவது யாராவது ஜெனரேட்டர் உண்டாக்கினால் அதைக் கொள்ளை விலைக்கு வாங்கி இங்கே கொண்டு வந்து நிறுவுவது, பயிற்சி என்று லாவலின் மூன்று வருடம் கும்மி அடித்த பிறகு கேரளத்தில் மின்சார உற்பத்தியில் பெரிய மாற்றம். புது ஜெனரேட்டர் புகுத்தப்பட்ட மூன்று மின்நிலையங்களும் உற்பத்தி செய்த மின்சாரம், ஏற்கனவே கிடைத்ததை விட ஆகக் குறைவு. முன்னூற்று எழுபத்தைந்து கோடி ரூபாய் லாவலினுக்குத் தாரை வார்த்து கம்யூனிஸ்ட் சர்க்கார் இறங்கிப் போய், காங்கிரஸ் ஆள வந்து, அதுவும் போய்ச் சேர்ந்து திரும்ப கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தபோது லாவலின் விவகாரம் பூதாகரமாகி விட்டது.

சி.பி.ஐ விசாரணை செய்து இந்த முன்னூற்றுச் சில்லரை கோடி ரூபாய் முறைகேட்டுக்குக் காரணமானவர்கள் என்று பட்டியல் போட்டு நீட்டியதில், பிணராயி விஜயன் ‘அக்யூஸ்ட் நெம்பர் நைன்’. கட்சிச் செயலாளர் பிணராயியோடு சதா பிணங்கி இருக்கும் சகாவு முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு லட்டு மாதிரி விஷயம் இது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அச்சம்மாவன் கையைக் கட்டிக் கொண்டு குஷியாகச் சொல்கிறார். கேரளம் முழுக்க நீதி கேட்டு நெடும்பயணமாக நவகேரள யாத்திரை நடத்தி சிபிஐ-யை விமர்சித்து ஆதரவு திரட்டுகிறார் பிணராயி விஜயன். பவர் கட் என்பதால் வாசலில் ராமச்ச விசிறியால் விசிறியபடி நின்று சுவாரசியமாக வேடிக்கை பார்க்கிறார்கள் கேரள மக்கள்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

தகழியின் ‘ஆத்மகத’ படிக்கக் கிடைத்தது. சொல்லப் போனால் தகழி இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை. ‘பால்யகாலம்’, ‘வக்கீல் ஜீவிதம்’, ஓர்மயுடெ தீரங்ஙளில்’ என்ற அவருடைய மூன்று வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்புகளை ஒட்டு மொத்தமாக ஆத்மகதையாக்கி இருக்கிறார்கள். 1959 வரையான தன் வாழ்க்கைச் சரிதத்தைக் கால வரிசை மீறிய கட்டுரைகளாக அதுவும் பத்திரிகைத் தொடர்களாக எழுதியிருக்கிறார் தகழி. வாழ்ந்த காலத்திலேயே சர்வதேச அளவில் மிகப் பிரபலமான எழுத்துக்காரனாக ஆனதால் கடைசி நாற்பது வருடங்கள் திறந்த புத்தகமாகி இருக்குமோ என்னமோ. என்றாலும் ஆத்மகதையில் சொல்லப்பட்ட பாதி வாழ்க்கையே அலாதி சுவை.

நூறு வருடத்துக்கு முந்திய அம்பலப்புழை பகுதி எப்படி எல்லாம் இருந்தது என்று கற்பனை செய்தேனோ அப்படியே, அதற்கு மேல் அழகாக தகழியின் எழுத்தில் விரிகிறது. முக்கியமாகப் பசுமை மணக்கிற தகழி கிராமம். இப்போது இருப்பதை விட இன்னும் பசுமையாக, இன்னும் மழை பெய்து கொண்டு, ஓலைக் குடையைச் ‘சூடி’க்கொண்டு, கொதும்பு வள்ளத்திலும் வஞ்சியிலும் பயணம் செய்து கொண்டு.

அம்பலப்புழை பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவாகச் சோறு அடைத்த தூக்குச் சட்டியோடு நடந்து தனியான ஒரு இடத்தில் அதை வைத்து விட்டுப் பிள்ளைகள் பாடம் படிக்க உட்கார்ந்த மழைக்காலம் அது. மதியம் சாப்பிட எடுத்த பாத்திரங்களில் சோறை மறைத்து அடை அடையாக ஊரும் எறும்புகள். மேலோட்டமாக அப்படியே வழித்து எறிந்து விட்டு மீந்ததை அவர்கள் சாப்பிட உட்கார்கிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் ஜன்னல் வழியே வீசி எறிந்த எறும்புச் சோற்றுக்காக வெளியே இன்னும் சில குழந்தைகள் காத்து நிற்கின்றன. கையில் வாங்கி வாயில் எறும்பு கடிக்கக் கடிக்கத் திணித்துக் கொண்டு மெல்லுகின்றன. கடல்புரம் செம்படவர்களின் குழந்தைகள் அவை. மழைக்காலத்தில் கடலில் மீன் பிடிக்க முடியாமல் கரையில் பட்டினி கிடக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவை.

தகழியில் 1920களில் புதிதாக முளைத்த ஒரு கடையை ஊரே முன் நின்று எதிர்த்து அடைக்க வைத்த கதையைச் சொல்கிறார் தகழி. இது கள்ளுக்கடை இல்லை. கள்ளுக்கடை எந்தக் காலத்திலும் கேரளத்தில் அடைக்கப்பட்டதாக நினைவு இல்லை. தகழி கிராமத்தில் தோன்றி மறைந்தது வெறும் தோசைக் கடை. தோசை சாப்பிட வீட்டில் காசு திருடிக் கொண்டு வருகிற பிள்ளைகள் காரணமாக ஊரில் சிறு திருட்டு அதிகரித்ததால் கடையை இழுத்துப் பூட்ட வைத்திருக்கிறார்கள்.

‘அரையணாவில் நாலில் ஒரு பாகத்துக்குக் கொஞ்சம் கூடுதலான’ அந்தக் கால நாலு காசுக்கு ஒரு தோசை, ஒரு குவளை சுக்கு மல்லிக் காப்பி’ என்று கணக்குச் சொல்கிறார் தகழி. அவர் கட்டுரை எழுதிய காலத்துக்கு அப்புறம் அரையணாவும் காலமாகி விட்டது. அம்பலப்புழையும், கட(ல்)புரமும், முக்குவர்களும், கடலும் கூட மாறியாகி விட்டது. மாத்ருபூமி தினசரியைப் பிரித்தால் அம்பலப்புழை பள்ளிக்கூடம் பரபரப்பான செய்தியாகிக் கொண்டிருக்கிறது. சக மாணவனால் தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட பதினேழு வயது மாணவிகள் மூவர் பள்ளிக்கூடத்திலேயே தற்கொலை செய்து கொண்ட செய்தி அது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன