Random Musings

 

40,ரெட்டைத்தெரு அத்தியாயங்களின் அடிப்படையில் ‘ரெட்டைத் தெரு’ குறும்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இளைஞர் சரவணன் இயக்குனர். நண்பர் எஸ்.ராவின் சிறுகதையை இரண்டு ஆண்டு முன் குறும்படம் ஆக்கியவர்.

எங்கள் ஊரில். அதுவும் நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க கணக்கு வாத்தியாரையே பிடித்து அவர் மூலம் பள்ளியின் தற்போதைய தாளாளரைப் பிடித்து, படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தேன். செல்போனும், எஸ்.எம்.எஸ்ஸும் வந்த பிற்பாடு இதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் முடிகிற சங்கதியாகி விட்டது.

சார், அந்தக் கால டெஸ்கும் பெஞ்சும் சேர்ந்த உட்கார்ற சீட்டு நிறைய இருக்கு உங்க பள்ளிக் கூடத்திலே.டைரக்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படு குஷியாக மொபைலில் எனக்கு அறிவித்தபோது நான் ஆபீசில் synthetic long call option, naked selling பற்றி எடுத்துக் கொண்டிருந்த வகுப்பை அஞ்சு நிமிஷம் அம்போ என்று விட்டுவிட்டு பழைய நினைவுகளை டைரக்டரோடு பகிர்ந்து கொண்டேன்.

நான் உட்கார்ந்து பாடம் படித்த பெஞ்சு அது. ஓரமாக மசிக்கூடு வைக்க ஒரு பள்ளம் இருக்கா?

இருக்கு சார்.

அப்போ அது எங்க அப்பா கால பெஞ்ச். அவரும் எங்க ஸ்கூல் மாணவர் தான். சும்மா இல்லே, சரவணன், 150 வருஷம் வரலாறு உள்ள பள்ளிக்கூடமாக்கும்.
ஜாக்கிரதையா படம் எடுங்க. வேறே என்ன ஷூட் பண்ணீங்க?

நேத்து உங்க ஊர்லே வாரச் சந்தை சார். அதுகூட நீங்க புத்தக்த்திலே சொல்லியிருக்கிற மாதிரி அப்படியே இருக்கு. நிறைய சந்தைக் கடை காட்சி எல்லாம் எடுத்திருக்கோம்.

ஊர்ப் பக்கம் ஒரு முறையாவது போய் வர வேணும்.

படப்பிடிப்பு நடத்துவது சிரமமில்லாமல் போனாலும், நடுவில் ஒருநாள் தடைப்பட்டு விட்டது. வாடகைக்கு எடுத்த காமிராக்கள், படச்சுருள், லைட்ஸ் எல்லாவற்றோடும் படப்பிடிப்பு வேன் அம்பேல்.

ஊர் முழுக்க, சுற்று வட்டாரம் எட்டுப் பட்டியிலும் வலைவீசித் தேடி டிரைவரை கிடந்த திருக்கோலத்தில் (டாஸ்மாக் உபயம்) ஊருக்கு மேற்கே பதினாலு கிலோமீட்டர் தூரத்தில் சாலை ஓரமாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். நல்ல வேளை, ஸ்டியரிங்கில் தலை வைத்து அவர் தூங்குவதற்கு முன் வண்டியை ஓரம் கட்டி நிப்பாட்டி இருக்கிறார். எங்க பக்கத்து மனுஷர்கள் சுத்த பத்தமானவர்கள் என்பதால் ஒரு ஸ்குரூ ஆணி கூட களவு போகவில்லை. செம்மண் பூமி!

சார், ஒரு உதவி செய்யணும்.

சரவணன் வேண்டுகிறார்.

என்ன சரவணன்? ஆறு புஷ்பம் வீட்டைப் படம் பிடிக்கணுமா? அந்தப் பொண்ணுங்க இப்போ என் வயசு இருப்பாங்களே. இருக்காங்களோ என்னமோ.

அது இல்லே சார். நீங்க இந்த புத்தகத்தோட தொடர்ச்சியாக ‘பெண்ணே நீ’ பத்திரிகை பொங்கல் மலர்லே இந்தக் கால அடுக்குமாடி குடியிருப்பு பொங்கல் பத்தி எழுதி அது திரைக்கதையிலும் வச்சிருக்கோமே.

ஆமா, அதுக்கு என்ன.

பத்து வயசுலே நீங்க இப்படித்தான் இருப்பீங்கன்னு உத்தேசமா ஒரு குண்டுப் பையனைப் பிடிச்சு நடிக்க வச்சுட்ட்டோம். அதகளப் படுத்திட்டான் போங்க.

நான் அப்போ குண்டு இல்லியே.

அதில்லே சார். இந்தக் காலப் பொங்கலைப் பத்தி நீங்க எழுதினதை படம் பிடிச்சோம். உங்க பாத்திரத்திலே நடிச்சவர் கொஞ்சம் சொதப்பிட்டார்.

அதுனாலே?

நீங்களே ரெண்டு நாள் வந்தா நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடலாம். வர்ற பொங்கலுக்கு டி.வி ரிலீஸ். அப்படியே சர்வதேசப் போட்டிக்கும் போகுது.

ஆக, நான் மேக்கப் போட அடுத்த வாரம் ஊருக்குப் போறேன்.

88888888888888888888888888888888888

காலையில் வாக்கிங்கில் இருக்கும்போது திரு.கமல் அழைத்தார். பாஸ்கரதாஸ் டயரிக் குறிப்புகள் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். 1930-களின் நாடக ஆசிரியர், எழுத்தாளர்.

கனவும், நினைவும் கலந்த பின் நவீனத்துவம் சார். அவசியம் படிங்க.

என்ன மாதிரி?

நேற்று ஜட்கா வண்டியில் ஒரு செம்மறி ஆடு உட்கார்ந்து போனது. கச்சேரி ரோடில் போகும்போது ஒரு மந்தை மாடுகள் வழி மறித்தன. (இன்னும் நிறைய சொன்னார்). நாலு குறிப்பு நினைவு. திடீரென்று இப்படி ஒரு ஹலுசினேஷன் மாதிரி குறிப்புகள்..

படிக்க வேண்டும்.

888888888888888888888888888888888888888888888888888888888

நேற்று இரண்டு மணி நேரம் சுவாரசியமாக மலையாள இலக்கிய ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயரோடு உரையாடினேன். பத்திரிகை பேட்டி.

எம்.டி சென்னையில் இருக்கும்போது எங்கள் பேட்டை வாசி. தி.நகர் குப்புசாமி தெருவுக்கு என் லேப்டாப்போடு நடந்தே போய்விட்டேன்.

கொஞ்சம் இருங்க, வந்திடுவார் என்றார் அவருடைய மாப்பிள்ளை.

சாரல்யா. ஞான் போய் ஒண்ணு கெறங்கி வரட்டே.

நான் புறப்பட்டேன்.

சார், நானும் தமிழ் தான். எம்.டியோட மாப்பிள்ளை.

ஸ்ரீகாந்த் (எம்.டியின் மாப்பிள்ளை) நடனக் கலைஞர். பத்மா சுப்ரமண்யத்தின் குழுவில் இருக்கிறார். எம்.டி மகள் கேரள கலாமண்டலத்தில் பயின்ற நாட்டியக் கலைஞர். காதல் திருமணமாம்.

இந்த சீசனில் ரொம்ப பிசி என்றார் ஸ்ரீகாந்த். அடுத்த வார நிகழ்ச்சிக்கு அன்போடு அழைத்ததை ஏற்றுக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து பீடிப் புகை காற்றில் மிதந்து வந்தது. திரை விலக, எம்.டி மெல்ல நடந்து வந்தார்.

ஒரு கட்டு கரீம் பீடியை வரவேற்பறை மேஜையில் வைத்து விட்டு ‘லெட் அஸ் ஸ்டார்ட்’ என்றார்.

அவருடைய இலக்கியம், சினிமா திரைக்கதை, எM.T, M.D ராமநாதன் விவாதம், ஓவியர் எம்.வி தேவன் மேல் தொடுத்த மானநஷ்ட வழக்கு, இளையராஜா பழசிராஜா படப் பாடல்கள் பற்றி கவிஞர் ஒ.என்.வி மேல் வைத்த விமர்சனம், எம்.டி பிறந்த கூடலூர், குளித்து விளையாடிய நிளாநதி (பாரதப்புழை), குமாரநல்லூர் பள்ளி, அவர் ஊர் வெளிச்சப்பாடு (சாமியாடி)கள், தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரீரமணா கதையை ஒரு செறு புஞ்சிரியாகப் படம் ஆக்கியது, எந்து கொண்டு சார் கவிதாரசனயிலேக்கு திரியாத்தது, நாலுகெட்டு கதாநாயகி யசோதரா இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றி சுவாரசியமாகப் பேசிக் கொண்டே போனோம்.

பேட்டி பிரசுரமானதும் முழு வடிவத்தை இங்கே தருகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன