நகர்-தல்


நகர்-தல்

வீட்டுக் குப்பை வெளியே சுமந்து
கொஞ்சம் வளைந்து சாலை திரும்பும்
மூலையில் குப்பைத் தொட்டியில் குவித்து
இங்கிருந்து அங்கு ஏதும் குறையாது
அசுத்தம் நகர்த்தி உலகம் தூய்மை
ஆக்கும் உவகை இனியது கேளீர்.

கசடு சேர்த்த கருப்பு பிளாஸ்டிக்
பையும் கையுமாய் காலை விடியுமுன்
நடக்கத் தொடங்கச் சின்னதாகக்
காக்கைக் கூட்டம் தாழப் பறந்து
கூடவே வந்தது நேற்று.

காகம் சூழ்ந்து கரையச் சற்றே
நடுங்கிக் கூர்த்த அலகுகள் பார்த்து
குப்பையைத் தொட்டியில் மெல்ல வீச
தலையில் தட்டிப் பகடியாய்க் கேவி
எவ்விப் பறந்த பெரிய காக்கையை
பார்த்து நினைவில் முழுக்கச் சுமந்தேன்.

அய்யே காக்கா தலையிலே தட்டினா
காலம் முடியலாம் உஷாரப்பா.
தெருவில் நடந்த கிழவி சொல்ல
ஆமா என்றார் சைக்கிளில் யாரோ.

காலம் முடியுமுன் பழங்குப்பை போகாதா
காலம் முடியப் புதுக் குபபை வாராதா
இன்று சேர்ந்ததை எடுத்துப் போட்டு
எனக்குத் தெரிந்த காக்கை இனியும்
தட்டிச் சிறகு தாழ்த்திப் பறக்க
வருமென நோக்கிப் பையுடன் போனால்
வடக்கில் இருந்து மந்திரி வந்து
குப்பை கூட்டிப் போவார் என்று
உலகம் சுத்தம் காக்கையும் காணோம்
குப்பைத் தொட்டி குடியெங்கு போனது?

இரா.முருகன் 26.8.2015

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன