New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 16

பிற்பகல் ஒரு மணியில் இருந்து ரெண்டு வரை அங்கலாய்ப்புக் காலம். இப்படி படுத்தறாங்களே என்று சகல தரப்புக்களின் மேலும் ஆத்திரம் வரும் பொழுது.ஆணும் பெண்ணும் கலந்து பழகத் தடை அமுலில் இருக்கும் நேரம்.

போன மாதம் வரை இந்தத் தொந்தரவில்லை. ஆண்களும் பெண்களுமாக எல்லா மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் இருந்து கீழ்த் தளத்து வகுப்பறைகளில் பகல் உணவு கழிக்க முடிந்தது. சரியாக ரெண்டு மணி பத்து நிமிடத்துக்கு காலேஜ் எழுத்தர் பஸ்ஸர் ஒலிக்க, துப்புரவுத் தோழர்கள் சவரிராயலு தலைமையில் வந்து வகுப்புகளை சுத்தம் செய்து போவார்கள். கதம்பமாக சாப்பாட்டு வாடையும் தலையில் வைத்த மல்லிகைப் பூ வாடையும் மிச்சமிருக்கும் அந்த வகுப்புகளில் பிற்பகல் வகுப்புகள் தொடரும்போது, கண்ணைச் சுழற்றிக் கொண்டு சுகமாக ஒர் உறக்கம் வரும்.

கூட்டுப் பந்தியாக சாப்பிட உட்காருவதில் நிறைய சௌகரியம் இருந்தது. பகிர்ந்து கொள்ள இன்னும் அதிகமாக பேச்சு இருக்கும். கூடுதல் லஞ்ச் பாக்ஸ்களும் இருக்கும். நான் பார்த்த வரைக்கும் பெண்கள் பெரும்பாலும் தயிர் சாதம் நாலு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பெரிய குங்குமச் சிமிழ் போன்ற டப்பாவில் அடைத்து வருவார்கள். ஆண்கள் என்ன காரணத்தாலோ எலுமிச்சை சாதம் தான் கொண்டு வருவார்கள். மொடமொடவென்று காய்ந்து போயிருக்கும் எலுமிச்சைச் சோற்றைப் பதப்படுத்த குங்குமச் சிமிழ் தயிர் சோறு பயன்படும், சிமிழைத் திறக்க முடிந்தால்.

இத்தணூண்டு சாப்பிடுகிற பெண்கள் பிற்பகல் முதல் வகுப்பு முடிந்ததும் கேண்டீனில் தோசை, போண்டா வகையறாவை கிட்டத்தட்ட முழுக்க காலி பண்ணி விடுவார்கள். இதை என்னைத் தவிர யாரும் கவனிக்காததால், சரி வரச் சோறு சாப்பிடாத அவர்களுடைய உடம்பு பலவீனம் பற்றி பொதுவாக உருகுவது, அதுவும் அந்த தோசை ப்ராடுகள் பார்க்க அனுதாபப்படுவது வாடிக்கை.

எனக்கு தம்பீஸ் கபேயில் இருந்து எடுப்புச் சாப்பாடு வந்துவிடும். ஒரே பிரச்சனை, காலேஜ் இருக்கிற குன்றேறுவதற்குள் எடுத்து வரும் தோழரின் சைக்கிள் குலுங்கி, சகல ஐட்டமும் கலந்த கலவைச் சாப்பாடுதான் வருவது வாடிக்கை. அவ்வப்போது இந்த வழியாகப் போகிற வேனில் ஏற்றி அலுங்காமல் நலுங்காமல் அனுப்பும் போது, அதெல்லாம் அப்படி அப்படியே வந்து கண்ணுக்கு விருந்து அளிக்கும். அப்போதெல்லாம், ருழே பொண்ணும் கூடவே அழகான அமேலியும் டிபன் கேரியரைப் பிடுங்கிக் கொண்டு விடுவது வழக்கம். அவர்களோடு வந்து வரிசைக் கடைசியில் உட்கார்ந்து சாப்பிடும் கயல்விழிக்கு அதில் ஏதாவது போய்ச் சேருமானால் சந்தோஷப்படுவேன். அவளுடைய டிபன் பாக்ஸ் கைகள் மாறி வந்து புளித்த தயிர் சோறும் கடுகு இட்ட மாங்காயும் ஒரு ஸ்பூன் கிடைப்பது அபூர்வமாக நிகழும்.

ரசனை உச்சத்தில், ‘கயல் பிரமாதம்’ என்று போன மாதம் ஒரு நாள் எக்கச்சக்கமாக நான் உணர்ச்சி வசப்பட, ருழே பிரெஞ்சில் எகத்தாளம் பண்ணினாள். அமேலி உடனே சர்வலகுத்தாளமாக அதை மொழிபெயர்த்தாள் :

‘பொண்ணு பிரமாதம்னா அவகிட்டே சொல்லு. சோறு நல்லாருக்குன்னா அவ அம்மா கிட்டே சொல்லு’ .

நான் அமேலி கொண்டு வந்த ஆம்லெட்டைக் கிள்ளித் தின்று விட்டு அவளிடம் சொன்னேன் –

‘ஆம்லெட் நல்லா இருக்கு. உங்க வீட்டுக் கோழி கிட்டே சொல்லு’

‘அது நாளைக்கு டிபன் பாக்ஸ்லே வரும், நீயே சொல்லிடு’ என்றாள் அமேலி கச்சிதமாகச் சிரித்து. கயல்விழி முறைத்ததைக் கண்டு கொள்ளாது நான் அமேலியின் எச்சில் கையைப் பற்றிக் குலுக்கியது மட்டுமில்லாமல் எச்சில் கலப்போடு சாப்பாட்டை ‘சந்தோஷமாகத் தொடர்ந்ததால்’ ரெண்டு நாள் கயல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போனது எல்லாம் வேறு கதை.

‘போ போ அவ கடிச்சு ஷொகொலா தருவா. பக்கி மாதிரி வாங்கித் தின்னு’.

பழிப்புக் காட்டிய கயல் பின்னால் விசுவாசமான நாய்க் குட்டி மாதிரி போய், நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவு ஆயிரம் தடவை ‘ஷெ ஸ்யூயீ திசொலி’ என்று ‘ஐயாம் சாரி’ சொன்னேன். பட்டிஸ்ஸெரியில் இனிப்பான க்ராய்ஸான் பன்னும் டார்ட்டும் வாங்கிப் போய் கப்பம் கட்டி, கயல் தூக்கி எறியத் திரும்பப் பொறுக்கி வந்து தண்ணீர்த் தொட்டிக்குப் பின்னால் வைத்து ஊட்டி, அவள் கோபத்தைக் குறைத்தேன். அதற்கு அப்புறம் கயல் கண்ணில்படுகிற மாதிரி அமேலியோடு இழைவது இல்லை.

அமேலி இருக்கட்டும், புது வரவு. கயலோடு கூடப் பகல் உணவு நேரத்தில் அப்புறம் பேச முடியாமல் போய்விட்டது.

போன மாதம் கயல்விழியின் அப்பா பார்வேந்தனார் பெற்றோர் சங்கம் சார்பில் பிரின்சிபாலை சந்தித்துப் பெண்களுக்கு மதிய உணவு உண்ணத் தனியாக இடம் அமைத்துத் தரவேண்டும் என்று கோரியிருக்கிறார். கேண்டீனுக்கு அடுத்து, சங்கரன் நம்பூதிரி வைத்திருந்த உருளை வெங்காயச் சுரங்கத்தை ஆக்கிரமித்து ப்ளைவுட் சுவர் எழுப்பி மேலே ‘பெண்கள் உண்ணும் அறை’ என்று எழுதி, லேடீஸ் லஞ்ச் ரூம் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பின் பெண்கள் ஆண்களோடு ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிடுவது பழங்கதையாகப் போனது.

கேண்டீன் பக்கத்து லேடீஸ் லஞ்ச் ரூம் அறிவிப்பில், பெண்கள் என்பதில் வரும் ள் மேல் சாக்பீஸால் யாரோ கொம்பு போட்டு அதை ‘பெண்களை உண்ணும் அறை’ என்று பழந்தமிழ் எழுத்தில் ராட்சசத்தனமாக மாற்றியும் விமோசனமில்லை. சாப்பிட்டு விட்டு கயலோடு கதைக்க, அமேலியை கயல் பார்க்காத பொழுதில் நோட்டம் விட, விஷுவோடு சண்டை போட, ருழேயை குழலாக நீண்ட சூட மிட்டாய் வாங்கித்தரச் சொல்லி நச்சரிக்க பகல் நேர வாய்ப்பு எல்லாம் காலாவதியாகிப் போனது. கால் கடுக்க வெய்யிலில் அந்த அந்நிய நாட்டுக்கு நடந்தாலும், ரெண்டு மணி வரை நோ அட்மிஷன். வாசலிலேயே பிச்சைக்காரன் மாதிரி மனதுக்கு இனியவர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்க, பிற்பகல் முதல் வகுப்பு மணி அடித்து விடும்.

ஒரு மாதமாக அங்கலாய்ப்புகளில் காலம் நீண்டு போனது இப்படித்தான்.

இன்றைக்குச் சாப்பிட்டு விட்டு கயல் எப்படியாவது கண்ணில் பட மாட்டாளா என ஏங்கி நடைப்பயணம் தொடங்கியபோது அந்த்வான் வழி மறித்தான். கூடவே கடைசி வரிசை கோஷ்டி அங்கத்தினரான ஜெராமன், ப்ரான்ஸ்வா.

‘மச்சான் மச்சான் மச்சான்’ என்று எஸ்.ஜானகி மாதிரி அந்த்வான் கூவிக் கொண்டிருக்க, ‘மச்சான், படிச்சுட்டியா?’ என்று ஜெயராமன் முடித்து வைத்தான்.

‘தமிழ்க் கிளாஸுக்கு என்னடா படிக்கணும்? கேள்வி கேட்டு ஃபுரபசர் தமிழன்னை பெஞ்சிலே ஏத்தப் போறாங்களா என்னா? ஏத்தினா புஷ்பகலாவை சிறப்புப் பார்வை பார்க்கலாம். ஓகேடா கண்ணா?’.

நான் காலேஜ் கோவில் மாடு டயலாக் உதிர்த்தேன். பிசிக்ஸ், கணக்கு வகுப்புகளை நினைத்தாலே அடிவயிற்றில் தேர்வு பயம் உண்டாகி கப்சிப் என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய் உட்காரும் நாங்கள் வார்த்தைச் சிலம்பு சுற்றுவது கூட்டு வகுப்பான இங்கிலீஷ், தமிழ், ப்ரெஞ்ச் பற்றித்தான்.

‘இடியட். அபெசில், மாங்கா மடையா, நீ முந்தாநாள் படிக்க வாங்கிட்டுப் போனியே எஸ்.தேவி எழுதின பாடப் புத்தகம், அதை எடுத்து வந்திருக்கியா’?

ப்ரான்ஸ்வா தோளில் கை போட்டு நேசம் காட்டி, நாவில் நஞ்சு பூசி மும்மொழியில் திட்டி விட்டு விசாரித்தான்.

சத்தியமாக, சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றாக வாயில் எழும்பி வர பயம் எட்டிப் பார்த்தது.

இன்றைக்கு வகையாக மாட்டிக் கொள்ளப் போகிறேன். கட்டாயம் அப்பாவிடம். அப்புறம் யாரிடம் மானம் போகுமோ தெரியவில்லை.

முந்தாநாள் சாயந்திரம் காலேஜ் முடிந்து வந்து தியூப்ளே வீதி காஃபி ஹவுஸில் அரட்டை போட்டுக் கொண்டிருந்தபோது ருழே பொண்ணு என்னைக் கேட்டாள் –

‘பொர்க்வா லெச்சு வெர்த தெ’?

நான் ஆஸ்தான மொழிபெயர்ப்பு அழகி அமேலியைக் குளிரக் குளிரப் பார்த்தேன். பெரிய கண்களோடு அடிக்கடி உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொள்ளும் அந்த யட்சி இங்கிருந்து இறங்கிப் போனால் காப்பி ஹவுஸே ஃப்யூஸ் போன பல்பு மாதிரி ஒளி இல்லாமல் போய்விடும்.

‘ஏன் லெச்சு மண்ணுபாம்பு’ என்று குழறி அமேலி நீண்டு சிவந்த விரலை இப்படி அப்படி வனப்பாக நெளித்து விரல் நடனத்தில் முடித்தாள்.

லகரி ஏறியது போல் கிறங்கி நான் பார்வையை அவளிடமிருந்து மீட்டு, லெச்சுவை அந்தப் பெண்கள் சார்பில் கேட்டேன் –

‘மண்புழு மாதிரி ஏன் நெளியறேன்னு உன்னக் கேக்கறாங்க லெச்சு, சரிதானா’?

அமேலி உய் என்றாள். இந்த வார்த்தையைக் கிழவி சொன்னாலும் அழகாக இருக்கும். அமேலி சொல்லக் கேட்பானேன்?

எழுந்தபடி, ‘சல்தெ ரெபொ’ என்று பாத்ரூமைக் காட்டினான் லெச்சு. அவனோடு ஜெராமனும் ப்ரான்ஸுவாவும் எழுந்திருக்க, மூணு வெர் த தெ என்று விரல் மடக்கி மண்புழுக் கணக்கு சொன்னாள் அமேலி.

அவள் கேட்டாள் என்று எல்லாருக்கும் கேக் ஆர்டர் செய்திருந்தாள் எங்கள் பொம்பளைக் கர்ணன்.

‘அமேலி, கணக்குலே ஒண்ணு சேர்த்துக்கோ’.

மெத்து மெத்தென்றிருந்த அந்த நீளமான மோதிர விரலை அழுத்திப் பிடித்து மடக்க ஒரு சாக்கு. நான் மடக்கியதை பிரிக்காமல் அப்படியே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு நானும் நடந்தவர்களோடு கூடப் போனேன்.

ரெஸ்ட் ரூம் வாசலில் லெச்சு சட்டையை உயர்த்த, முதுகில் செருகி இருந்த ஒரு புத்தகம் ஈரத் தரையில் விழுந்தது. கைக்கு அடக்கமானது. மகா பழசாக, பக்கம் எல்லாம் நாய்க் காது போல மடங்கியது. பழுப்புக் காகிதக் குப்பை போல இருந்த அந்தப் புத்தகத்தை நான் குனிந்து எடுக்க, ‘வேணாம்டா, பேய் அடிச்ச மாதிரி பயந்துடுவே’ என்றான் லெச்சு.

அப்படியும் நான் ஈரத் தரையில் இருந்து புத்தகத்தை எடுத்துப் பார்க்க, ‘மறைடா மறைடா’ என்றான் லெச்சு அவசரமாக.

தாடியும் மூக்குக் கண்ணாடியும் மூலக் கச்ச வேட்டியுமாக யாரோ ரெஸ்ட் ரூம் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள். வங்காளி அறிவுஜீவி அப்படித்தான் இருப்பார் என்று இந்த ஊருக்கு வந்து கிடைத்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். மேகலாவுக்குப் பிடித்த புருஷ லட்சணம்.

‘மறைடா’. திரும்ப மெதுவான அடிக்குரலில் மிரட்டும் லெச்சு.

நான் வேறு வழியின்றி, நாய்க் காதுப் புத்தகத்தை சட்டைக்குள் போட்டுக் கொண்டேன். லெச்சு சொன்னபடி அப்படியே திரும்பி மேஜைக்கு நடந்தேன்.

ருழே உபயத்தில் இலவச சத்துணவாக வழங்கப்பட்ட ஃப்ளம் கேக் சாப்பிட உட்கார, அதன் மெல்லிய புளிப்பு கலந்த இனிப்பை ருசிக்க விடாமல், புத்தகம் சட்டைக்குள் இருந்து விழாமல் தடுப்பதிலேயே முழுக் கவனமும் போனது.

‘சீக்கிரம் போகணும். இல்லேன்னா லேடீஸ் ஹாஸ்டல்லே உள்ளே போறது சிரமமா இருக்கு’.

அமேலி எழுந்து நின்று ஒரு விரலை மட்டும் நான் பற்றிக் கைகுலுக்க நீட்டினாள். அதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மறுத்தேன். கள்ளச் சிரிப்போடு முழுக் கை முன்னால் வர நான் எழுந்து ஆர்வத்தோடு ஒன்றுக்கு ரெண்டாக அவள் கைத்தலம் பற்றினேன். சொல்லி வைத்தாற்போல், என் நெஞ்சோடு சேர்த்து வைத்த புத்தகம் கீழே விழுந்தது.

‘ஏதோ விழுந்த மாதிரி சத்தம் கேட்டுது’. அமேலி ப்ளம்கேக் இனிமை சொட்டச் சொன்னாள்

‘என் இதயம் தான்’ என்றேன் மெதுவாக.

பழிப்புக் காட்டி விட்டு அமேலி என்னவென்று பார்க்கக் குனிய வேறு வழியில்லாமல் அவளுடைய உருண்ட தோளை இறுகப் பற்றி நிறுத்தினேன்.

‘அரைஞாண் கயிறு அறுந்து விழுந்துடுத்து. அவசியம் பார்க்கணுமா?’

ஏய்ய் நீ நீ நீ என்று தீ விழித்து, சீய்ய்ய் என்று அது பூவாக மாறிச் சொரியச் சிரித்து அமேலி நடந்தாள்.

ருழே ஆண்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிள் தான் வைத்திருந்தாள். அமேலி அதில் கன கம்பீரமாகப் பின்னால் உட்கார்ந்து விரல் உயர்த்திக் காட்டிப் போக, வழியனுப்பிய பின்னர், மிச்சம் மீதி கேக்குகளைத் தின்று தீர்ப்பதில் மும்முரமானோம்.

கிளம்பும் முன்னால் லெச்சுவிடம் நான் பதுக்கி வைத்திருந்த புத்தகத்தைக் கொடுத்தேன்.

‘வைச்சுக்கோடா. சூழ்நிலை இங்கே சரியா இல்லே. தியூப்ளே சிலைக்கு வாங்க’.

சொல்லி விட்டு அவன் வைத்தேயின் அசுர வாகனமான் மோட்டார் சைக்கிளில் கொசு மாதிரி பின்னால் ஈஷிக் கொண்டு போக, நாங்கள் லொங்குலொங்கென்று சைக்கிளில் பின் தொடர்ந்தோம்.

பெரிய தாடையைத் துருத்திக் கொண்டு பிரம்மாண்டமாக நின்று தியூப்ளே எங்களை அற்பப் பதர்களா என்று கீழே பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, நான் லெச்சுவிடம் திரும்பவும் புத்தகத்தைக் கொடுத்தேன். அதிகாரத்தோடு, அக்கவுண்டண்ட் மாதிரி தியூப்ளே பிடுங்கிக் கொள்வார் என்று தேவையற்ற பயம் எழுந்தது.

அது எல்லாம் முந்தாநாள் சாயந்திர நிகழ்ச்சிகள்.

நான் அமேலியிடம் இருந்தும் தியூப்ளேயிடம் இருந்தும் முந்தாநாள் ஜாக்கிரதையாக மறைத்த புத்தகம் எங்கே? நினைவைக் குடைந்து குடைந்து எங்கே போனது என்று யோசித்தேன். ஒரு தடமும் புலப்படவில்லை.

அன்றைக்கு என்னிடம் இருந்து தியூப்ளே சிலை சாட்சியாக லெச்சு புத்தகத்தை வாங்கிக் கொண்டான். அடுத்து அவன் செய்த காரியம் மகா ஆச்சரியகரமானது.

அந்தப் பழுப்புப் புத்தகத்தை நடுவில் பிடித்துக் கிழிப்பது போல் சுழற்றினான். ரூபாய் நோட்டுக் கட்டில் அடித்திருக்கும் ஸ்டாப்ளர் பின்னை அச்சாக வைத்துத் திருகி முதல் பத்து நோட்டுகளை அநாயசமாக எடுத்துத் தரும் பேங்க் கேஷியர் பழநியப்பன் மாதிரி முகத்தில் ஒரு சாவதானம் லெச்சுவுக்கு.

இந்தா அந்துவான் இது உனக்கு, ஜெராமா உனக்கு இது, பிரான்ஸ்வா கையை நீட்டுடா.

சுண்டல் விநியோகம் செய்கிற மாதிரி லெச்சு ஆளுக்குக் கொஞ்சம் வழங்கினான் காலமான அந்தப் புத்தகத்தின் பகுதிகளை.

ப்ரான்ஸ்வா ஒரு வினாடி முழித்து இது என்னடா தெலுங்கா என்று விசாரித்தான். அவனுக்குத் தமிழ் எழுதத் தெரியாது தான்.

‘அப்புறம் ஏண்டா எனக்கு எனக்குன்னு பறந்தே’?

லெச்சு பிரான்சுவாவிடம் இருந்து காகிதங்களைக் கைப்பற்றி எனக்கு இன்னொரு ஈடு வழங்கினான்.

‘அந்த்வான் படிச்சுச் சொன்னா கேக்கலாமேன்னு தான்’ என்று ப்ரான்சுவா விளக்க உரை அளிக்க, நான் நான் நான் என்று ஆரம்பித்தான் அந்த்வான். எனக்குக் கிட்டிய கூடுதல் பக்கங்களை நான் இழக்க, அவற்றைப் பெற்ற ப்ரான்ஸ்வா முகத்தில் அலாதி மகிழ்ச்சி.

‘லெச்சு, முழுப் புத்தகம் கொடுத்தாலும் என்னன்னு பார்க்கலாம். பத்து பக்கத்தைக் கொடுத்திருக்கியே. நான் கேட்டபடி அந்த விலக்கப்பட்ட காகிதப் பாவத்தைக் கைநீட்டி வாங்கிக் கொண்டேன்.

‘பத்து இல்லேடா, பதினாறு. ஒரு ஃபாரம்’ என்று பிழை திருத்தினான் லெச்சு.

நான் அந்தப் பலதுறை அனுபவசாலியை மதிப்போடு பார்க்கத் தொடர்ந்தான்:

‘முன்னெப் பின்னே ச.தேவி படிச்சிருந்தாத் தானே தெரியும். அந்தக் கதையில் நாலு பக்கத்துக்கு ஒரு தடவை ஏற்கனவே வந்தது தான் திரும்பி வரும். ஆள் பெயர், வர்ணனை மட்டும் மாறி இருக்கும்’.

முக்கியமான விளக்கத்தைச் சொன்ன திருப்தியோடு அவன் சைக்கிளை எடுக்கும் முன் திரும்பிப் பார்த்துச் சொன்னான் –

‘அவனவன் படிச்சுட்டு அப்படி அப்படி எக்சேஞ்ச் பண்ணிக்குங்க. சனிக்கிழமை ஹாஸ்டல்லே வச்சு ஆளுக்குக் கொஞ்சமா கதை சொல்லணும். படிக்காம கதை விட்டா ச.தேவி கிட்டே பிடிச்சுக் கொடுப்பேன், புரிஞ்சுதா’.

எனக்குக் கிட்டியதில் மேலே இருந்த பக்கத்தை அவசரமாக பார்த்தேன். ‘வீட்டுக்கு வீடு சங்கமம்’ வினோதமாகத் தலைப்புப் போட்டிருந்தது.

எங்கே அந்தப் பதினாறு பக்கச் சங்கமம்? கையில் வாங்கி எங்கே வைத்தேன்?

முந்தாநாள் அதற்கு அப்புறம் என்ன செய்தேன்?

புத்தகத்தோடு சைக்கிள் மிதித்துப் போனபோது மனம் முழுக்க இனம் புரியாத படபடப்பு. முதல் தடவை சிகரெட் பிடித்தபோது இருந்ததை விட இது எவ்வளவோ அதிகம். அந்தப் புத்தகத்தில், சரியாகச் சொன்னால் என்னிடம் வந்த பதினாறு பக்கத்தில் என்ன எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள்? ஒரு தடவை புரட்ட, மூணாம் பக்கத்தில், அதாவது என் மூணாம் பக்கத்தில் ‘ரமேஷ் சரசாவின் பின்னால் மெல்ல வந்து அவளுடைய’ என்று முடிந்திருந்தது நினைவு வந்தது. அந்த ரெண்டு பேரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ. இப்போது எங்கே இருக்கிறார்களோ!

சரசு. பெயரே கிறக்கடிக்கிறது. ரமேஷ் அவளை. சே, எக்கேடும் கெட்டு ஒழிந்து போகட்டும் அந்தத் தடியன். முந்தாநாள் அப்புறம் என்ன செய்தேன்?

முந்தாநாள், இன்னும் சாயந்திர வெய்யில் தகதகவென படிந்திருக்க, புஸ்ஸே தெரு வழியாக வந்தேன். அது நினைவு இருக்கிறது. அந்தக் கடன்காரப் பாதிக் கதை ரமேஷும் சரசாவும் மனசில் மங்கலாக மறைய, ஜோசபின் நினைவு வந்ததும் நினைவில் தான் இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக யுதிகொலன் மணமாக இல்லாமல் ஆஸ்பத்திரி டெட்டால் வாடையாக மிரட்டுகிற ஜோசபின்.

அவள் இந்தப் பக்கம் வந்துவிடக் கூடாது என்று அப்போது தோன்றியது. ஏதோ செய்தே தீர வேண்டிய வேலை இருப்பதாகவும் அதைச் செய்து தீர்த்து அப்புறம் உலகில் எனக்காக ஏற்படுத்தப்பட்ட தலை போகிற காரியம் ஏதாவது இருந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வேகமாக சைக்கிள் மிதித்தேன்.

அப்போது பதினாறு பக்கம் எங்கே இருந்தது? பையிலா?

இல்லை என்று நினைக்கிறேன். கையில் வாங்கி கை மறதியாகச் சட்டைப்பையில் வைத்திருந்தால் தெரிந்திருக்குமே.

எனக்கு இல்லாவிட்டாலும் அப்பாவுக்கு அல்லது கதவு திறந்த வின்செண்ட் நடராஜனுக்கு அல்லது தம்பீஸ் கபேயில் வெங்காய ஊத்தப்பம் பரிமாறிய சர்வர் சோமுவுக்கு.

யாரும் கேட்கவில்லை என்பதால் சட்டைப் பையில் துருத்திக் கொண்டு ரமேஷ் வகையறா இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

வீட்டுக்கு வருவதற்கு முந்தி வேறு எங்கே போனேன்? அது ஞாபகம் வந்தால், எங்கே தான் வைத்தேன் என் பதினாறு பக்கத்தை என்று தெரியும். ப்ரான்ஸ்வா கேட்கிறான். அவனுக்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் தெரிந்தவர்கள் படித்துச் சொல்ல சந்தோஷமாகக் கேட்கணுமாம். போடா.

பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது. ஒரே சிந்தனை தான். முந்தாநாள் மாலை வேறு என்ன எல்லாம் செய்தேன்? ஊர் சுற்றுகிறதும் ஒழுங்காக ஒரே மாதிரி சுற்றித் தொலைக்கக் கூடாதா? தினம் ஒரு தினுசாக வலம் வந்தால் என்ன நினைவில் வரும்? பொறு, வந்து கொண்டிருக்கிறது.

அன்று புஸ்ஸே தெருவில் போனபோது ஜோசபின் குறுக்கே வரவில்லைதான். ஆனால் எதிர்ப் பக்கம் தங்கம் பூசிய வெய்யிலில் தகதகத்துக் கொண்டு சைக்கிளில் போனது அவளுடைய சக நர்ஸ் விசாலி.

பக்கம் பதினாறு பெற்ற போதையோ என்னமோ முந்தாநாள் அவள் இருந்த வசீகரமான இருப்பு அவளைப் பிடித்து நிறுத்தி அவளோடு ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்று தோன்றியது. எல்லா அழகிய பெண்களும் என் பாதையில் எதிரில் வருகிறார்கள்.

குறுக்கே போய் மோதுகிறதாகப் பாவனை செய்து மெல்ல சைக்கிள் மணி அடித்தேன். விசாலி அவசரமாகக் கால் ஊன்றி நிறுத்த அந்தச் சிவந்த பாதத்தைப் பார்த்த கண் எடுக்க முடியவில்லை.

மெல்ல நிமிர ‘எங்கே போய்ட்டிருக்கீங்க சார்’? என்றாள் விசாலி. என்னைக் கூட மரியாதையோடு கூப்பிடுகிற பெண். ஜோசபின் கூட வந்திருந்தால், இவனுக்கு எதுக்குடி சாரும் மோரும் என்று உடனடியாக ரத்து செய்திருப்பாள்.

ஜோசபின் வரலியா?

அப்பாவித்தனமாகக் கேட்டேன் விசாலியை.

அப்பாவித்தனமாவது ஒன்றாவது, விசாலியிடம் பேச்சு வளர்க்க நான் உத்தேசித்திருக்கிறேன், அவள் சிநேகிதம் எனக்கு வேண்டியிருக்கிறது என்று விசாலிக்குத் தெரிய வைக்க இந்த வெகுளியான தொடக்கம்.

‘ஜோசபின் இன்னும் டியூட்டியிலே இருக்கா.. ஆமா.’என்ன அவளுக்கு மலையாளம் சொல்லிக் கொடுக்கறீங்களாமே, எங்களுக்கெல்லாம் கிடையாதா?’

விசாலிக்கு மலையாளம் என்ன ப்ரெஞ்சு, ஜப்பானிய மொழி, ரஷ்யன் எல்லாமே சொல்லிக் கொடுக்கத் தயார்தான். ஜோசபின் என்னைக் கொன்றே போட்டுவிடுவாள். என்றாலும் அதெல்லாம் எனக்குத் தெரியாது என்றாலும், என்னமோ அந்த நிமிஷத்தில் விசாலி மேல் அப்படி ஒரு ஈர்ப்பு வந்தது.

‘உங்களுக்கும் சொல்லித் தரணும்னா சொல்லுங்க. நாளைக்கே ஆரம்பிச்சுடலாம். தட்சணை என்ன தருவீங்க’? அவள் சைக்கிள் மணியைப் பற்றி மெல்ல அடித்தபடி கேட்டேன். சத்தம் வராமல் விசாலி பொத்தியது என் கையையும் சேர்த்துத்தான்.

‘ஜோசபின் என்ன கொடுத்தாளோ அதே தருவேன். சரியா’?

ஜில்லென்று இருந்தது மனதுக்குள். வேணாம். அதை ஜோசபின் மட்டும் தான் தரணும்.

நான் பதில் சொல்வதற்குள் விசாலி கிளம்பி விட்டாள்.

அதோடு விட்டிருக்கலாம். விசாலியிடம் இன்னும் ஒரு வார்த்தையாவது பேச மனம் ஏங்கியது.

‘ஜோசபின் கிட்டே இந்த மலையாளம் ஒண்ணாம் கிளாஸ் புத்தகத்தைக் கொடுத்திடுங்களேன் விசா’. அவள் பெயரில் உரிமையோடு கடைசி எழுத்தை வெட்டி விசா ஆக்கியதைக் கேட்டிருப்பாள். முந்தாநாள் சாயந்திரம் அதுவும் பொன்னான பொழுதுகளில் சேர்ந்தது. அதற்கு அப்புறம்?

அடடா, நான் விசாலி மூலம் ஜோசபினுக்குக் கொடுத்து விட்ட அந்தப் புத்தகம் என் சைக்கிள் கூடையில் இருந்தது. நான் போன வருஷம் அம்பலப்புழை போனபோது வாங்கினது. லெச்சுவிடம் இருந்து வாங்கி, வீட்டுக்கு வீடு சங்கமத்தை அந்தப் புத்தகத்தில் அவசரமாகச் செருகி இருந்திருப்பேனோ!

ஒரு நிமிஷம் உலகமே சரிந்து காலடியில் விழுந்து என்னையும் உள்ளே இழுக்கிற மாதிரி தெரிந்தது. ஜோசபின் அந்த இடுபாடுகளுக்கு இடையே நடந்து வந்து, என் முகத்தில் மலையாளப் புத்தகத்தைத் தூக்கி வீசுகிறாள். அதற்குள் கெட்ட காரியம் செய்யத் தயாராக ஒண்டி இருந்த ரமேஷும் சரசாவும் கீழே விழுந்து பதறித் தறிகெட்டு ஓடுகிறார்கள்.

ஜோசபின் பிரஞ்சில் என்ன திட்டுவாள் என்று தெரியாது. உத்தேசமாகச் சொல்லச் சொல்லி மேகலாவிடம் கேட்டேன்.

‘வாயை கார்பாலிக் சோப் போட்டு அலம்பு. இல்லாட்ட சன்லைட் சவுக்காரம் கயல் கிட்டே கடன் வாங்கிப் போடு. என் கிட்டே இந்த ஜன்மத்திலே மட்டும் இல்லே அடுத்ததிலும் பேசாதே’.

ரிஷிபத்தினிகள் பின்னால் சாய்ந்து போஸ் கொடுத்தபடி காமுகர்களைச் சபிப்பது போல் திட்டித் தீர்த்து விட்டு மேகலா காணாமல் போக, ஜோசபின் மாட்டுக்குப் போடுகிற பெரிய ஊசியோடு வந்தாள். என் உடம்பு நடுங்கியது.

ப்ளாஷ்பேக் ஓவர் என்றான் ப்ரான்ஸ்வா.

பிற்பகல் முதல் வகுப்புக்கு மணி அடிக்க அழகிகள் அணிவகுப்பு கேண்டீனில் இருந்து புறப்பட்டு மெயின் ஹால் படி ஏறியது. வழக்கமான குதூகலத்தோடு ரசிக்காமல் நான் பேயறைந்தது போல் நின்றிருந்தேன்.

‘என்னடா டிசம்பர் குளிர்லே குளிக்காம நிக்கறவன் மாதிரி நடுங்கிக்கறே. புக் எங்கே வச்சே’?

ப்ரான்ஸுவா கெல்லித் துளைக்க, நான் ‘தெரியலேடா’ என்று தோளைக் குலுக்கினேன். இதை இதை இதை என்றான் அந்துவான். இதை மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கே என்று இடித்தது அவன் முடிக்காமலேயே புரிந்தது.

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லே. நாளைக்கு லெச்சு கேட்டா என்ன சொல்லப் போறே? ஜெராமன் எகிறினான்.

‘லெச்சு என்ன சுப்ரீம் கோர்டா? அவன் கேட்டா எனக்கென்ன பயம்’?

‘எல்லாம் படிச்சாச்சு. உங்கிட்டே மாட்டிக்கிட்ட பக்கம் தான் படிக்கலே. அதுதான் கடைசி பதினாறு பக்கம். அமர்க்களமா இருக்கும்’

ப்ரான்ஸ்வா சொன்னான். ஏதோ தமிழில் இலக்கியம், இலக்கணம் எல்லாம் கரைத்துக் குடித்து இது மட்டும் மிச்சம் இருக்கிற ஏமாற்றத்தைச் சுமந்து அலைகிறவன் போல அங்கலாய்க்கிறான் வொலா. என்றால் திருடன்.

‘அதிலே என்ன பெரிசா இருக்கப் போறது? முதல் லாட்டையும் அப்புறம் ரெண்டாம் லாட்டையும் இன்னொரு தடவை பெயரை மாத்திப் படிங்கடா’.

வழி சொன்ன பெருமையோடு தெர்மோடைனமிக்ஸ் வகுப்பில் நுழைய விட்ட இடத்தில் இருந்து நெடுமுடி ப்ரபசர் ‘யெண்ற்றபி’ என்று அழுத்தமாக உச்சரித்து வகுப்பை மேள தாளத்தோடு ஆரம்பித்தார்.

பாதி வகுப்பில் இன்னொரு சிந்தனை. ஜோசபினுக்குக் கொடுத்த மலையாளப் பாடப் புத்தகத்தில் ச.தேவி ஏன் சங்கமமாகி இருக்க வேண்டும்?

இந்த நினைப்பே இனிப்பாக இருந்தது. ஆனால் அது தொடர விடாமல், மற்றப் புத்தகத்தோடு கலந்திருந்தால் என்று அடுத்த நினைப்பு.

முந்தாநாள் காலேஜுக்கு எடுத்துப் போன புத்தகம் என்ன எல்லாம்?

பகீரென்று அடுத்த கத்தி வயிற்றில் இறங்கியது. எல்லாப் புத்தகமும் தினசரி வீட்டுக்குப் போனதும் விட்டெறிவது டிராயிங் ரூம் நீளவச குட்டை மேஜையில் தான். வாரம் ஒரு தடவை சனிக்கிழமை அவை புத்தக அலமாரிக்குப் போகும். திங்கள் அன்று திரும்ப கந்தர்கோளம் ஆரம்பமாகி விடும்.

முந்தாநாள் புத்தகம் மேஜையிலேயெ இருக்கும் பட்சத்தில் அங்கே அப்பா உட்கார்ந்து பேப்பரோ ஆபீஸ் பைலோ படிக்கும் போது கண்ணில் பட வாய்ப்ப்பு உண்டே.

நெடுமுடி பாடத்தை நிறுத்தினார்.

‘கூரை முகட்டில் வல்ல கள்ளியங்காட்டு யட்சி காவு கொள்ள நில்கிறாளா அதோ (ட்)றாகுளாவா? ஏன் இப்படி அம்பரன்னு நோக்கறே’?

தமிழோ மலையாளமோ அல்லது ரெண்டு மொழியுமோ தெரிந்த யாருக்கும் விளங்காத விதத்தில் என்னைக் கேட்டார். அசட்டுச் சிரிப்பே பதிலாகத் தலையைக் குனிந்து கொண்டேன். ‘யெண்ற்றபி’ முடிந்து தான் எல்லாம்.

ஆனால், மனம் என்னமோ வீட்டு டிராயிங் ரூம் மேஜை மேல் தான்.

போன வாரம் இப்படித்தான். ச.தேவி புத்தகம் இல்லை. இங்கிலீஷ் பத்திரிகை. பாரதி தெரு பத்திரிகைக் கடையில் பிளிட்ஸ் பத்திரிகையைப் பார்த்தேன். ஏப்ரல் ஒண்ணு முட்டாள் தினம் என்று போட்டு இந்திரா காந்தி தோற்றுப் போக, நிஜலிங்கப்பா, மொரார்ஜி போன்ற ஸ்தாபன காங்கிரஸ் பெரிசுகளின் அரசு ஏற்படுவதாக பத்திரிகை முழுக்க கிண்டல் செய்திருந்தார் பிளிட்ஸ் ஆசிரியரான கரஞ்சியா. அவர் அவ்வப்போது ஈரானுக்கு அரசர் ரேஸா ஃபலவியின் அரன்மணை விருந்தினராகப் போய் டேரா அடித்து மன்னர் வாழ்கவே மன்னி வாழ்கவே என்று புகழ்ந்து தள்ளாத நேரத்தில் இதெல்லாம்.

அந்தப் பத்திரிகையை ரோலண்ட் நூலகத்தில் பார்த்தபோது கடைசி பக்கத்தில் இங்க் அபிஷேகம் செய்து வைக்கப் பட்டிருந்த கிட்டத்தட்ட ப்ளெயின் நூ பிறந்த மேனி அழகி, பாரதி தெரு கடை டியூப் லைட் வெளிச்சத்தில் நானும் வரட்டா என்று கண் அடித்தாள். பின அப் படத்துக்காகவே பிறந்த அழகி.

அன்றைக்கு நான் வீட்டுக்குப் போனபோது அப்பா முன்னால் குறிப்பிட்ட மேஜையை ஒட்டிய சோபாவில் உட்கார்ந்து காலையில் வந்து விழுந்த இந்து பத்திரிகையில், கிழக்கு பாகிஸ்தானில் வெள்ளச் சேதம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தார்.

‘ஏற்கனவே சுதந்திரம் கேட்டு போராடற வங்காளிகளை பாகிஸ்தான் அடக்கி ஒடுக்கி சித்ரவதை பண்றது. இப்போ இயற்கையும் சேர்ந்துடுத்து. பாவம்’

அப்பா என்னைக் கண்டதும் சொன்னார். அவருக்கு வங்காளிகளை ரொம்பவும் பிடிக்கும். கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகள் தனி நாடு கேட்பதைப் பற்றி, அதற்கான அவசியத்தைப் பற்றி எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். கல்கத்தாவில் நீண்ட வாழ்க்கை அவரையும் பாதி வங்காளி ஆக்கியிருந்தது. மீன் மட்டும் சாப்பிட்டால் முழு வங்காளிதான். இனிமேல் ஆக முடியும் என்று தோன்றவில்லை.

‘என்ன பத்திரிகை அது’?

கையில் இருந்த ப்ளிட்ஸை வாங்கிப் பார்க்க, தலைகீழாக விரிந்த அந்த டேப்ளாயிட் பத்திரிகையில் கடைசிப் பக்க பின் – அப் அழகி தான் முதலில் கண்ணில் பட்டிருக்கும்.

அவர் தப்பாக நினைத்து விடப் போகிறாரே என்ற படபடப்பில் நான் மென்று முழுங்கிச் சொன்னேன் –

‘இல்லேப்பா. கிண்டல்.. பேரடின்னு போட்டிருந்தது. என்ன மாதிரி அங்கதம்னு புரிஞ்சுக்க ஒரு பக்கம் லைப்ரரியிலே படிச்சேன். நல்லா இருந்த மாதிரி பட்டது. அதான்’.

‘தாராளமா படி. நான் ஏன் இந்தப் படத்தோட வாங்கினேன்னா கேட்டேன்? அதுக்காக வாங்கினா தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா, ஒரு பொண்ணை மதிக்கத் தெரியலேன்னு தான் சொல்வேன். இந்த உறுப்பு, அந்த உறுப்புன்னு கூறு கட்டிப் பார்க்கறது சக மனுஷிக்கு நாம செய்யற அவமரியாதை’.

இவ்வளவு முற்போக்குத் தனமான அதே நேரத்தில் மது அருந்தக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று மதிப்பீடுகளை கவனமாக உயர்த்திப் பிடிக்கிற ஆசான் என் அப்பா. அவர் இருக்கும் இடத்தில் ஞானம் தான் இருக்கும். அஞ்ஞானமும் ஆபாசமும் அங்கே அண்டாது. வீட்டுக்கு வீடு சங்கமம் அங்கே இருந்தால், என் தவறு தான். தப்பை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.

அந்த வகுப்பு முடிந்து ஆப்டிக்ஸ். எழுந்திருக்கவே முடியாத இன்னொரு சப்ஜெக்ட் அது. வேவ் தியரி ஆஃப் லைட் என்று சுவாரசியமாக சங்கரநாராயணன் ஆரம்பிக்க, பதினாறு பக்க ரமேஷையும் சரசாவையும் சங்கமத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டுப் பாடத்தில் ஆழ்ந்தேன்.

நல்ல விஷயம் எதுவும் தொடராது என்பதால் நாலே முக்காலுக்கு எல்லாம் ஏறக்கட்டப்பட்டு நான் வீடு திரும்ப சைக்கிள் எடுக்க ஸ்டாண்டுக்கு ஓடினேன். கயல்விழி அவசரமாகக் கூப்பிட்டாள்.

‘சைக்கிள் ஹாண்டில் பாரை யாரோ ஸ்டாண்ட்லே நிக்கறபோது கன்னாபின்னான்னு வளைச்சு வச்சுட்டுப் போயிருக்காங்கடா. எப்படி வீட்டுக்குப் போறது’?

அவள் பரிதாபமாகச் சொல்ல, என் அவசரம் எனக்கு.

‘ஏதாவது புத்தின்னு தலைக்குள்ளே இருக்கா உனக்கு? சைக்கிள் ஹேண்டில் பார் கோட்டியானா எப்படி சரி பண்றதுன்னு தெரியாம எதுக்கு சைக்கிள் வாங்கி ஓட்டிட்டு வரே’?

‘ஐயே பெரிய இவரு. ஏரோனாடிக்கல் சீப் இஞ்சினியர். மூஞ்சைப் பாரு. நீ இல்லாட்ட எனக்கு ஆளா இல்லே’.

தடாலென்று சரணடைந்தேன். பழிகாரி. செய்வாள். நரிவெறுத்தலையான் மாதிரி ஆட்கள் சதா வலை விரித்துத் திரிகிறார்கள்.

நான் கயல்விழியின் சைக்கிள் முன் சக்கரத்தில் ஆரோகணித்து ஹாண்டில் பாரை கச்சிதமாக இயல்பு நிலைக்குத் திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, லாம்ப்ரட்டா ஸ்கூட்டரை ஒரு வினாடி நிறுத்தி வைஷு சொன்னாள் –

‘வேறே எதுவும் அமையலேன்னாலும் கையிலே தொழில் இருக்கு. பிழைச்சுக்குவே’.

இலவச கருத்துச் சொல்லி விட்டு வைஷு நகர நான் கயல்விழியைப் பார்த்தேன். சைக்கிள் பங்க்சர் ஒட்டி கோட்டி திருத்தி, லொங்கு லொங்கென்று பம்ஃப்பை நிறுத்திக் காற்றடித்துக் கொடுத்து, செயின் மாற்றி வரும் வருமானத்தில், கயல்விழியைக் கல்யாணம் செய்து கொண்டு எப்படி வாழ முடியும்? அவளுக்கு தினசரி நொறுக்குத் தீனிக்காக சொத்தையே விற்க வேண்டி வருமோ.

‘என்ன யோசிக்கிறே’ என்று பக்கத்தில் நின்று ஆதரவாகக் கேட்டாள் கயல்.

இந்தப் பொண்ணு கால் நகம் கூட அளவாகத் திருத்தி சாயம் தீட்டி நிற்கிறாள். மெத்தென்று இலவம்பஞ்சுக் கால்கள். கலிங்கத்துப் பரணியில் இப்படியான காலை வைத்துத்தான் சோழர் காலப் பெண்கள் காதலர் மார்பில் உதைப்பார்கள் என்று ஸ்டாலின் வெள்ளித்துரை வகுப்பில் சொன்னாரே.

இன்னும் உதைக்காத பாதங்களை உற்று நோக்கினேன்.

‘ஏய், உன் பார்வை சரியில்லை. நான் போறேன்’. போயே போய் விட்டாள்.

நான் தியூப்ளே தெருவில் திரும்பி காம்பவுண்டில் வந்து இறங்கிய போது மொத்த பேங்க் ஊழியர்கள் அப்பா தலைமையில் வாசலில் நின்றிருந்தார்கள்.

‘ப்யாவென்யூ ப்யாவென்யூ’

பிரம்மாண்டமாக நின்று கீசுகீசென்று முழங்கினார் விக்தோ.

என்ன துயரம் கயல்!

இனிமேல் ஆயுசுக்கும் சிருங்காரத்தை அப்பட்டமாகச் சொல்லும் கழிசடை புத்தகம் எதுவும் படிக்க மாட்டேன். முழு ஆபீசுக்கே நான் அந்தக் கண்றாவியை எல்லாம் படிப்பது தெரிந்துவிட்டது. வேறே யாருக்கெல்லாம் தெரியுமோ. இனிமேல் யார் என்னை மதிக்கப் போகிறார்கள்?

கருப்பு கோட்டு அக்கவுண்டண்ட் சார் இருக்கிறாரா? இல்லாமல் என்ன? கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு பார்க்கிறார். கேஷியர் கேசவனும் பக்கத்தில்.

ஆப்டிக்ஸ் புத்தகத்தோடோ தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தோடோ இவர்களை இனிமேல் கடந்து போனாலும் பிடுங்கி பக்கத்துக்கு நடுவே வீட்டுக்கு வீடு சங்கமம் போல ஏதாவது இருக்கா என்று தேடுவார்கள். விக்தோ அடுத்த டவுண் ஹால் நடனத்தில் போட்டு உடைக்க ஜோசபின் தவிர எல்லோரும் பரிகாசம் செய்து துரத்தி விடுவார்கள். ஜோசபின் என்னோடு வெளியே வந்து கடற்கரை சுங்கச் சாவடிப் பக்கம் நிறுத்தி ஒரு மணி நேரம் என்னை விடாமல் திட்டித் தீர்ப்பாள். அழுவாள்.

எனக்கும் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

‘நான் தப்பு பண்ணிட்டேன்னு தெரியும். அந்த அந்த’ என் குரல் தழுதழுத்ததை உணர்ந்தேன்.

‘இது எல்லோருக்கும் வர்ற மறதிதான். சின்னப் பையன் தானே. இனி வராமப் பாத்துக்கிட்டா போதும்’.

அக்கவுண்டண்ட் கோட்டுப் பையில் கை விட்டுக் கொண்டு சொன்ன வசனம் இந்தக் காட்சியோடு இணையாமல் இருந்ததைக் கவனித்தேன்.

‘அயர்ன் பாக்ஸ் எல்லாம் பயன்படுத்தினா, இஸ்திரி போட்டு முடிஞ்சதும் ஞாபகமா ப்ளக்கை பிடுங்கி மட்டுமாவது விடணும்’.

கேஷியர் சொன்ன டயலாகும் தலைக்கு மேல் எங்கோ போனது.

என்ன ஆச்சு எல்லோருக்கும்?

ஒருவேளை இவர்கள் எல்லோரும், அப்பாவையும் சேர்த்து, அந்தப் பதினாறு பக்கத்தை ஆபீஸ் ஹாலில் உரக்கப் படித்து ஒருவழி ஆகியிருப்பார்களோ.

காலையிலே என்ன அயர்ன் பண்ணினே? அப்பா விசாரித்தார்.

‘எப்பவும் போல சட்டையும் பேண்டும் தான். அதுக்கு என்ன’?

‘ஏண்டா என்னன்னு சாதாரணமா கேட்டுட்டே. அயர்ன் பாக்ஸை ஆஃப் பண்ணாமலே போயிட்டே. பகல்லே எல்லோரும் ஆபீஸ்லே எங்கிட்ட ஓடி வந்து மேலே இருந்து புகை வருதுன்னாங்க. ஓடிப் போய்ப் பார்த்தா இது.. ஜன்னல் திரையிலே உஷ்ணம் படர்ந்து தீ பிடிச்சிருக்கு. நல்ல வேளை அணைச்சாச்சு. இல்லியோ பேங்கும் சேர்ந்து எரிஞ்சு போயிருக்கும்’.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றேன்.

இப்படிப் பண்ணிட்டியே என்று மேகலா சொன்னது உள் காதில் கேட்க, வேறு எதுவும் தோன்றாமல் அப்பாவையும் அங்கே இருந்த எல்லோரையும் சட்டென்று ஒரு கணம் தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினேன்.

‘மன்னிச்சுடுங்க ப்ளீஸ் எல்லோரும். ஷெ ஸ்யுயி திஸ்ஸொலி’.

‘ஐயே என்ன தம்பி இதெல்லாம் எதுக்கு? பாவம், வீட்டுலே அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டம்னு தெரியாதா என்ன? இனிமேல் வராம பாத்துக்கிட்டா போதும். நாங்க எல்லாம் உங்க மனுஷா. விட்டுக் கொடுத்துடுவோமா என்ன?

கருப்புக் கோட்டு அக்கவுண்டண்ட் என்னை எழுப்பி அணைத்துக் கொள்ள வெட்கமே இல்லாமல் அவர் தோளில் சாய்ந்து அழுதேன். எவ்வளவு நல்ல மனிதர்கள் என்னைச் சுற்றி. இவர்களுக்காக எதுவும் செய்யலாம்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு மாடி ஏறிப் போய் ஓரம் கருகின ஜன்னல் திரையை எடுத்து வைத்து விட்டு இன்னொரு திரை கோர்த்தேன். சாவகாசமாக நினைவு வர மேஜையில் பதினாறு பக்கத்தைத் தேட அது அங்கே இல்லை.

ராத்திரி ஜோசபினுக்கு ஆபீஸில் இருந்து ஃபோன் செய்தேன். அவள் ஐ.சி.யூவில் இருப்பதாகச் சொன்னது விசாலி தான்.

‘நான் அந்த மலையாள புஸ்தகம்’. வாக்கியத்தை முடிக்காமல் தடுமாறினேன்.

என் கிட்டே தான் இருக்கு என்றாள் விசாலி. ரெண்டு நாளாக ஜோசபின் ஐ.சி.யூ டியூட்டி என்பதால் பிசியாம். புத்தகம் எல்லாம் இப்போது வேணாமாம்.

‘விசா, உங்க கிட்டே இருந்தா சரிதான். அந்த புத்தகத்துக்குள்ளே ஏதாவது பேப்பர்’.

‘ஆமா, எக்ஸாம் ஸ்கெட்யூல்னு போட்டிருந்தது. பத்திரமா எடுத்து வச்சிருக்கேன். ஜோசபின் கிட்ட காலையிலே கொடுத்துடறேன். அவ கிட்டே இருந்து வாங்கிக்குங்க. ஓகே.. டாக்டர் வர்றார். ஸ்வீட் ட்ரீம்ஸ்’.

நிம்மதியோ நிம்மதி. ஆமா, எங்கே தான் போச்சு அந்த அமர காவியம் வீட்டுக்கு வீடு சங்கமம்?

விசாலி வாழ்த்திய இனிய கனவில் அவளே வந்தாள். கயல்விழி உதைத்து விட்டுப் போன நெஞ்சில் போரிக் பவுடரைப் பொழிந்தாள். நீங்க ஐசியு போங்க, நான் கயலோடு தியூப்ளே சிலைக்குக் கீழே நின்னு வணங்கிட்டு வரேன் என்றேன் விசாலியிடம். ஜோசபின் சைக்கிளில் மணி அடித்துக் கொண்டே வந்து துயெ ஃபூ என்று என்னைப் பார்த்துச் சொல்லி விட்டு ஊசி மருந்தை எடுத்தாள். பிரம்மாண்டமான ஊசி. வந்துடு வந்துடு என்று கூப்பிட்டு ஜோசபின் அழகாகச் சிரிக்க, நான் விழித்துக் கொண்டேன்.

காலையில் விக்தோ வாசலில் நின்று கடற்கரையில் ஓடப் போக பலமாக சத்தம் எழுப்பிக் கீசினார்.

ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக கீழே வந்தபோது குக்கி காம்பவுண்ட் மூலையில் எள்ளுப் புண்ணாக்குச் சில்லுகளை ஷெகொலாவாக ருசித்து கூளத்தோடு மென்றபடி என்னையே பார்த்தது.

கான்வாஸ் ஷூ முடியக் குனிந்து தரையில் உட்கார்ந்தபோது தான் குக்கு வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் காகிதம் கண்ணில் பட்டது.

தலையில் வீட்டுக்கு வீடு சங்கமம் என்று அடித்த பேப்பர்.

அந்தக் காகிதம் அடுத்த வினாடி வைக்கோல், புண்ணாக்கு, காய்ந்த பசும்புல் இதெல்லாம் கம்பெனி கொடுக்க குக்கி வாய்க்குள் புகுந்து அரைபட்டுக் காணாமல் போனது.

பக்கத்தில் வைத்த சைக்கிள் கேரியரில் இருந்து முந்தாநாள் ராத்திரி நான் கவனிக்காமல், குக்கிக்குக் குவித்து வைத்த கூளத்தில் விழுந்திருக்க வேண்டும். பதினாறில் சில பக்கம் காற்றில் அடித்துப் போயிருக்கலாம்.

தரையில் இருந்த கூளத்தில் கலந்த மிச்சம் காகிதத்தில் ரமேஷும் சரசாவும் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சகலமும் குக்கி வாயில் போக பீச்சுக்குக் கிளம்பினேன்.

திடீரென்று குக்கி நினைவு. அது இன்றைக்கு சிறப்பு விருந்தாக வீட்டுக்கு வீடு சங்கமம் காகிதம் சாப்பிட்டு முறுக்கேறி இருக்குமோ.

டியூட்டி முடிந்து வின்செண்ட் நடராஜன் ஓட்டிப் போகிறபோது, குக்கி வழியில் ஏதாவது பசுவைப் பார்த்து விட்டால்?

எத்தனை விஷயத்துக்குத்தான் கவலைப்படுவது?

கடல் அலைகள் சேர்ந்து சிரிக்க, ஓடலானேன்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன