புது bio-fiction novel தியூப்ளே வீதி – அத்தியாயம் 15 இரா.முருகன்


ஒரு வெப்பமான நடுப்பகலின் தொடர்ச்சியாக மழைக் காலம் ஆரம்பித்தது.

தெர்மோடைனமிக்ஸ் வகுப்பில் எண்ட்ரபி என்ற அதி உன்னதமான சமாச்சாரத்தை விவாதித்துக் கொண்டிருந்தபோது, மூடி வைத்த ஜன்னல்கள் காற்றில் திறக்க, சாரலாக வகுப்புக்குள் சீறி அடித்தது இந்த ஆண்டின் முதல் மழை. அது எல்லோரையும் குழந்தையாக்கி கூகூவென்று கூவ வைத்தது. முதல் கூவல், புரபசர் நெடுமுடி வெர்கீஸ் சாண்டி சார் இட்டது.

வலுத்துப் பெய்த மழையில் தெர்மோடைனமிக்ஸ் விடைபெற்றுப் போய்விட்டது. ரொம்பவே அதிசயமான கூட்டு மௌனம். நின்று பெய்யும் மழையை எல்லோரும் பார்த்தபடி இருக்க கிளாஸ் முடிந்து மணி அடித்தது.

கடைசி வகுப்பு என்பதால் காம்பவுண்டுக்கு வெளியே காத்திருந்த பஸ்கள் கீழே தாழ்வான சமதளத்தில் இருந்து மெல்ல மேடு ஏறி வந்து பிரதானக் கட்டிட வாசலில் நின்றன. யாரும் குடை தேடாத நாள். பொழுது கருத்து வர, நான் கேண்டீன் நோக்கி வேகமாகப் போனேன். கையில் பிடித்திருந்த ஆப்டிக்ஸ் புத்தகமும் நீள நோட்புக்கும் நனைந்ததைத் தடுக்க முடியவில்லை.

முழுக்கப் பெண்ணாட்சிப் பிரதேசமாக மாறி இருந்த கேண்டீனின் அந்தக் கோடியில் இருந்து மிரண்டபடி பார்த்த இரண்டு கண்களைத் தேடித் தான் நான் அங்கே போனது.

கயல்விழி.

கூட இருந்த சிட்டுகள் சூரிதாரிலும், கார்டுராயிலும், டெனிம் ஸ்கர்ட் ப்ளவுஸிலும் கலகலத்துக் கொண்டிருக்க, என் தேவதை கருப்பு தாவணியும், மஞ்சள் பட்டுப் பாவாடையும் உடுத்தி நனைந்த குருவியாக நிற்கிறாள். ஈரமான தலைமுடி நெற்றியை மறைத்து வழிந்து ஒன்றிரண்டாக நீர்த்துளிகள் அவள் முகவாயில் ஒரு விநாடி நிற்கின்றன. உதிரும் முன் ஓடிப் போய் அவளைத் தழுவி அந்தத் துளிகளுக்கு நோகாமல் உள்ளங்கையில் வாங்கிப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்று மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

‘இங்கே என்னடா உனக்கு வேலை?’

வைஷு நான் உள்ளே வரமுடியாத படி கையை அகலமாக விரித்துக் கத்துகிறாள். அவளுக்குப் பின்னால் ஒருத்தி முதுகு திருப்பி நின்று ஈரமான மேல்சட்டையை எடுத்துப் பிழிகிற மும்முரத்தில் இருப்பது புரிய தலையைக் குனிந்து கொண்டேன்.

வைஷு எல்லா மொழிகளிலும் கெட் அவுட் சொல்வதை லட்சியம் செய்யாமல் பதுங்கிப் பாய்ந்து இடைவெளிகளில் புகுந்து கயலை அடைந்தேன். கிராதகி அப்போதுதான் திரும்பி என்னைப் பார்த்தாள். சிரிக்கிறாள். என்ன தீனி போட்டு அரைத்தாலும் சோழிப் பல் ஈடு கொடுத்து வனப்பாக பளிச்சிட, எப்போதும் முத்துச்சரம் போல் வெண்மைதான்.

தோழியர், நான் ஏதோ கெட்ட காரியம் செய்ய உத்தேசித்து உள்ளே வந்தது போல் வெறுப்போடு பார்த்தபடி முன்னால் நகர்ந்தார்கள். மழை நின்ற சில நிமிஷங்களில் நனையாமல் பஸ் ஏறப் புறப்பட்டுப் போனவர்கள் அவர்கள்.

கயல் தனியாக நிற்கிறாள். இருண்டு வரும் கேண்டீனில் நாங்கள் இருவரும் மட்டும் அந்த மூலையில் .

போகலாமா என்று கிசுகிசுப்பாகக் கேட்டேன். அவள் சிரித்து விட்டாள்.

‘தலைமுடி சொய்யினு நனைஞ்சு, சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி இருக்கே’ என்று என் கோலத்தை வார்த்தையால் வேறு சித்தரித்தாள்.

பகடி எல்லாம் இருக்கட்டும் பகடே என்றேன். பகடு என்றால் மாடு என்று அவள்தான் சொல்லியிருக்கிறாள். இப்படி நல்ல தமிழ் கயல் புண்ணியத்திலும், நல்ல ப்ரெஞ்சு ஜோசபின் கருணையிலும் தான் எனக்குப் புகட்டப்பட வேண்டியிருக்கிறது என்று விதித்த தெய்வம் வாழ்த்தப்படட்டும்.

மாட்டுக்கு ரூட் போடற நீ இன்னொரு மாடு என்றாள். மறுபடி சிரித்தாள். ‘இன்னும் சரியா வர்ணிக்கணும்னா, ஈரத் துணி போட்டு அமுக்கின கோழி நீ’.

நான் சிரித்தேன் இப்போது.

‘கோழின்னு பிரெஞ்சில் சொல்லாம விட்டியே அந்த அளவுக்கு வந்தனம்’.

சீய்ய்ய்ய் என்று பழிப்புச் சொன்ன இதழ்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். இவளை மில்லிமீட்டர் மில்லிமீட்டராக ரசித்துச் செதுக்கியவன், உதடு வைக்க அதிகமாக ஒரு மாதம் செலவழித்திருப்பான். பார்த்துப் பார்த்துப் பிடித்து நிறுத்திய செப்புச் சிமிழ். கருப்புத் தங்க விக்கிரகம் கயல். வில்லிப்புத்தூர் கோபுரம் போல ஒயிலாக நிற்கிற இந்த அழகுக்கு ஐந்தரை அடி கச்சிதம்.

கயல் இருக்கட்டும். கோழிக்கு ப்ரெஞ்சு என்ன? அது எதுக்கு? எனக்கு எப்படி தெரியும்னு சொல்லணுமா? சரி அதை மட்டும் சொல்றேன்.

ஜோசபின் சமையலுக்குக் கோழி மாமிசம் வாங்க தியூப்ளே வீதி மணிக்கூண்டு மார்க்கெட் வந்திருந்தாள். வீட்டுக்கு வெகு அருகில்தான். ஆனால் கத்தரிக்காயும் புடலங்காயும் வாங்கக் கூட நான் இதுவரை அங்கே போனதில்லை. ஜோசபினோடு நடக்கிற சந்தோஷத்துக்காகக் கூடப் போனேன். அது போன மாசம் ஒரு சனிக்கிழமை காலை நேரம்.

ஜோசபினோடு வந்த பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காரக் கிழவிக்கு காது மந்தம் என்பதால் தன் குரல் ஓங்கி ஒலிப்பது புரியவில்லை. ஜோசபின் மீன் வாங்கிக் கொண்டிருக்க நாலு கடை தள்ளி நானும் பாட்டியும் அவளுக்காகக் காத்திருந்தோம். அந்தக் கிழவி நாட்டுக் கோழிக் கடையைச் சுட்டிக் காட்டி, என்னிடம் பிரெஞ்சில் ஏதோ கேட்டாள். பக்கத்தில் கூடை சுமந்து வந்த யாரோ சிரித்தபடி உடனே விலகிப் போக, எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

என்னடா இந்த வயசில் கெட்ட வார்த்தை பேசுகிறாளே என்று அதிர்ந்துதான் போனேன். மீனோடு ஜோசபின் வர, நமட்டுச் சிரிப்போடு அதை அவள் காதில் ஓதினேன். அவள் கூடுதல் அழகாக முகத்தைச் சுழித்து, கோழி வேணுமாம் என்றாள். தொடர்ந்து என்னைத் தூசியாகப் பார்த்து கேஸன் சாலே என்றபடி மாமிசம் வாங்க உற்சாகமாக நடந்தாள். ஜோசபின் சொன்னதற்கு டர்ட்டி ஃபெலோ என்று அர்த்தமாம். கிழவி சொன்னது? அது வேணாம்.

இதுதான் பிரச்சனை. இப்படி குறுக்கே ஜோசபினைக் கூட்டி வந்து விபத்து உண்டாக்காமல் இருந்தால் நான் பாட்டுக்கு நூல் பிடித்த மாதிரி கயல்விழிக்கு நூல் விட்டுப் பார்த்ததைச் சொல்லிக் கொண்டிருப்பேன்… குறுக்குச் சால் போடாமல் இருக்க வேணும். சரியா? கயலுக்குத் திரும்பலாம்.

காலேஜ் காம்பவுண்டை இடவலமாகச் சுற்றியபடி விரைவாக மலையிறங்கும் பஸ்களைப் பார்த்தபடி கயல்விழி நின்றிருந்தாள். மழை இன்னொரு தடவை வலுக்க ஆரம்பித்திருந்தது. அவள் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

காலேஜையும் லாஸ்பேட்டையையும் தொட்டும் கடந்து போகும் எந்த பஸ்ஸும் கயல் வீடு இருக்கும் ஊருக்கு ஒதுக்கமான பேட்டைக்குள் நுழைவதில்லை. ஆனால் நகரத்தில் இருந்து அந்த வழியாக பஸ் போக்குவரத்து தெற்கில் பல சின்ன ஊர்களை இணைக்கிறது. கயல் தன் வீடு போக ஒரே வழி சைக்கிள்தான்.

‘சாவியைக் கொடு. வண்டியை எடுத்து வரேன்’.

நான் சாவிக்காகக் கைநீட்ட அவள் ஏக்கமாகப் பார்த்தபடி சொன்னாள், ‘வண்டி எடுத்து வரலேடா’.

‘புத்தி இருக்க வேணாம்? வண்டி இல்லாட்டா எப்படி வீட்டுக்குப் போவே? கவுந்தி அடிகள் போல பையைத் தோள்லே மாட்டிட்டு நடந்திடுவியா?’

‘ஏசாதே. பிரெஞ்சு மேடம் கூட கார்லே வந்தேன். அவங்க சாயந்திரம் பிக் அப் பண்ணிக்கிறேன்னாங்க’ என்றாள் பரிதாபமாக.

‘பிரெஞ்சு மிஸ்? அவங்க காரை நான் பார்க்கிங் லாட்லே பாக்கவே இல்லியே’.

அழகான ப்யூக் கார் அது. பிரான்சில் இருந்து போன வருஷம் வந்தபோது கொண்டு வந்தார்கள் என்று கேள்விப் பட்டிருந்தேன்.

‘விட்டுட்டுப் போயிட்டாங்கடா’.

உதடு நடுங்கச் சொல்லி, அவள் விசித்து அழ ஆரம்பித்தாள்.

தான் எதற்கும் காரணமில்லை என்று புகார் சொல்லி அழும் குழந்தையின் முகம் அது. அழாதேடா கண்ணு என்று கண்ணைத் துடைத்து, நெஞ்சோடு அணைத்துத் தேற்ற வேண்டிய குழந்தை. அப்படித்தான் செய்தேன். மழை அனுதாபத்தோடு கனத்துப் பெய்து கொண்டிருந்தது.

கேண்டீன் இன்சார்ஜ் சங்கரன் நம்பூதிரி உள்ளே இருந்து எண்ணெய்ச் சட்டியும் நாலைந்து பொட்டலம் டீத்தூளும் வைத்த மூடியில்லாத மரப்பெட்டியை இழுத்தபடி வந்தார்.

பார்த்திருப்பாரோ! பார்க்கட்டுமே. மலையாளத்தில் சங்கம்புழயின் ரமணனும் பஷீரின் பால்ய கால சகியும் படிக்கச் சொல்லி எனக்குப் புத்தகம் கொடுத்தவர் அவர்தானே. தமிழ்க் காதலும் கொஞ்சம் பார்க்கட்டும்.

‘குட்டி இன்னும் வீடு போயிட்டில்ல’?

மழைச் சத்தத்துக்கு இடையே கயலை விசாரிக்க அவள் வெறுமனே தலையை ஆட்டினாள். நான் மலையாளத்தில் கதைச் சுருக்கம் சொன்னேன்.

‘அப்போ நீ உன் சைக்கிள்லே கூட்டிப் போய் விடு’ என்று யோசனை கொடுத்தார் நம்பூதிரி. பதிலை எதிர்பார்க்காமல் திரும்ப உள்ளே போனார்.

கயலைப் பார்த்தேன். அவள் கூட வரச் சம்மதிப்பாள் என்று தான் தோன்றியது. ஆனால் அடித்துப் பெய்யும் பெருமழையில் ரெண்டு பேர் எப்படிப் பாதையே இல்லாத பாதையில், வயல் வரப்பும், சதுப்பு நிலமும் கடந்து சைக்கிளில் போவது?

‘பின்னால் உட்கார்ந்து வர்றியா’?

கயலைக் கேட்டேன்.

‘நீ கீழே தள்ளாம கூட்டிப் போக ரெடியா’?

கட்டை விரல் உயர்த்திக் காட்டினேன். உர்ரென்று பார்த்தாள். உதட்டைச் குவித்தேன். அதுக்கு வேறே யாரையாவது பாரு என்றாள்.

மழையை எப்படி முத்தமிடணும்? தெரியாது. மழைக்கு நன்றியாவது சொல்வேன்.

‘லூஸ்டா நீ. இன்னொரு தடவை சொல்லட்டா? முழுக்க நனைஞ்சு, உரிச்சு மெளகா விழுது தடவின கோழி மாதிரி இருக்கே’.

அடக்க மாட்டாமல் சிரித்தாள் கயல். கூடவே நானும் என் ஈரத் தலைமுடியை முன்னால் இழுத்து விட்டபடி சிரித்தேன்.

‘சொல்லிக்கோ. என்ன போச்சு. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’?

பாட்டு நிற்க, உள்ளே இருந்து திருச்சூர் பூரத்தில் யானை மேல் வைத்த திடம்பு என்ற விக்கிரகச் சின்னங்களுக்குப் பாதுகாப்பாகப் பிடிக்கிற வண்ணக்குடை போல பெரிய ஒரு கருப்புக் குடையோடு நம்பூதிரி வந்தார்.

‘தா.. குடை சூடிப் போ குட்டி’.

கயல் இன்னொரு தடவை வாய்விட்டுச் சிரித்தாள்.

‘மல்லிப்பூ சூடுவாங்க. முல்லைப் பூ சூடுவாங்க. குடையை எப்படி சூடறது’?

என்னைக் கேட்டாள்.

‘அது மலையாளம் வா, கொஞ்சம் மழை விட்டிருக்கு.. கிளம்பலாம்’.

என் ராலே சைக்கிள் காலேஜ் காம்பவுண்டில் இறங்கிக் கொண்டிருந்தபோது, கயல் என் தோளைப் பற்றிக் கொண்டாள்.

‘சிரமமா இருக்காடா’?

‘ஒரு சிரமமும் இல்லை. நீ பூச்சுமைடா கண்ணம்மா’.

மழைக்கு நடுவே குரல் உயர்த்திப் பேச சந்தோஷமாக இருந்தது.

கலங்கிய நீரும், தேங்கிய நீரும், நகர்ந்து விரையும் நீரே உருவான நீண்டு பரந்த பரப்புகளும், சிவந்து கரைத்த மண் ஓடி அடைத்த சால்களும், மழையில் குளிக்கும் மரங்களின் அணிவகுப்பும் ஆள் அரவம் அற்ற கள்ளுக்கடை வாசல்களில் கூடை போட்டு மூடி வைத்த வியஞ்சனங்களும், குளிருக்கு அடக்கமாக, கவிழ்த்துப் போட்ட கூடைக்குள் முடங்கிய கோழிச் சத்தமும், பட்டியடைத்த புறாக்களின் ஹுக்கும் ஹுக்கும் கனைப்பும் கடந்து கயல் வீட்டை அடைந்தோம். தெருக்கோடியில் இறக்கி விடட்டா என்று ஒரு பேச்சுக்காகக் கேட்டேன். கனவான் தோரணை அது. ஒட்டாமல் உதிர்ந்தது.

‘வீட்டுக்கு வா. தேத்தண்ணி எடுக்கறேன்’

சைக்கிளை உருட்டிக் கொண்டு, சிணுங்கும் மழையில் நனைந்தபடி கயல் வீட்டு வாசலில் நின்றோம். சைக்கிளை ஓரமாக நிறுத்தினேன்.

நிம்மதியா கோபமா வருத்தமா என்று தெளிவாகத் தெரியாத முகபாவத்தோடு கயல் அப்பா பார்வேந்தனார் வரவேற்றார். கயல் அம்மா முகத்தில் அழுத்தமான மகிழ்ச்சியும் உற்சாகமும் கண்டேன். கயலை ஆரத் தழுவிய அவள், நல்லா இருப்பா என்று என்னையும் தலையில் அன்பாகத் தடவினாள். பார்வேந்தனார் ‘விளக்கு கூட்டல் எள் கூட்டல் நெய்’ ஒன்றாக்கி விழுங்கிய மாதிரி சங்கடத்தோடு மறுபடி ஈசி சேரில் உட்கார்ந்து, காலையில் வந்து விழுந்து ஆறிப்போன இந்து பத்திரிகையில் நிஜலிங்கப்பா பேட்டியைப் படிக்க ஆரம்பித்தார். அதை எல்லாம் படிக்கிற ஒருத்தர் வாழ்க்கையின் ஓரத்துக்குப் போனவராகத்தான் இருக்க முடியும்.

கயல் அம்மா அவரைப் பார்த்துக் கொண்டே சமையல் அறையில் புகுந்து அங்கிருந்து முழங்கினாள் –

‘ஏங்க, கருப்பட்டி காப்பி போடு போடுன்னு உயிரை வாங்கினீங்க. கலந்து வச்சு பத்து நிமிஷம் ஆச்சு. வந்து குடிச்சுட்டுப் போங்க’.

பார்வேந்தனார் கையில் பிடித்த இந்துவோடு சமையலறை ஏகினார். என்னைக் கடக்கும்போது காலேஜில் பிசிக்ஸ் லேபில் வெர்னியர் காலிப்பர் வைத்து அளந்த மாதிரி காலே அரைக்கால் மில்லிமீட்டர் புன்னகையோடு உள்ளே போனவர் ஐந்து நிமிஷம் கழித்து வெளியே வந்தபோது முகமலர்ச்சியோடு வந்தார். சமையலறையில் பக்குவமானார் போல.

என் கை இரண்டையும் அன்போடு பற்றிக் கொண்டார். ‘தம்பி, எவ்வளவு .. எவ்வளவு துன்பப்பட்டு இந்த மழையிலே கயலை நலமாக நம் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்க, ஈரூளி மிதித்து வந்திருக்கீங்க. வாழ்த்தச் சொற்களே இல்லை. மிக்க நன்றி’.

சந்தேகமே இல்லை. கயல் அம்மா இவருக்குக் கையில் கொடுத்த அல்லது வலுக்கட்டாயமாகச் சங்கில் வைத்துப் புகட்டிய கருப்பட்டி காப்பியில், கொஞ்சம் மிரட்டல், கொஞ்சம் வசவு, கொஞ்சம் கோரிக்கை, கொஞ்சம் புத்திமதி என்று கலந்து குடிக்க வைத்து வெளியே அனுப்பியிருக்கிறாள்.

சமையல் கட்டில் சொல்லிக் கொடுத்து அனுப்பிய கடமையை மனதுக்கு நிறைவாக ஆற்றிய நிம்மதியோடு ஈசி சேரில் இருந்து நிஜலிங்கப்பாவைத் தொடர்ந்தார் பார்வேந்தனார். கயல் அம்மா குரல் சமையல் அறையில் இருந்து சென்னை வானொலி செய்தியாளர் பத்மநாபன் செய்தி படிப்பது போல அழுத்தந் திருத்தமாக ஒலிபரப்பானது.

‘ராத்திரி எண்பது கிலோமீட்டர் வேகத்தில் புயல் வருமாம். நம்ம ஊர் பக்கம் தான் விடிகாலை மூணு மணிக்குள் கரையைக் கடக்குமாம். உஷாரா இருக்கணுமாம். ரேடியோவிலே வாய் ஓயாமச் சொல்லிட்டே இருக்காங்க’.

அதற்குள் நான் வீட்டுக்குப் போகணும் என்று கோடி காட்டுகிறதாக நினைத்தேன். அதுக்கு ஏற்ற மாதிரி ஒலிபரப்பு தொடர்ந்தது –

‘பாவம் தம்பி, தலையை துவட்டச் சொல்லு கயலு. பரிதாபமா நிக்குது.. நீ பாட்டுக்கு தலையை ஆத்தக் கிளம்பிட்டே’

கயல் ஈர உடுப்பில் இருந்து மாறி, சிக்கட சிக் என்று இடுப்பைக் கௌவிப் பிடித்த கத்தரிப்பூ நிற ஸ்கர்ட்டும், காலர் வைத்த பொம்மைச் சட்டையும் உடுத்து, டோண்ட் கேர் மாஸ்டராக தலையை விரித்து விட்டு ஆற்றியபடி உள்ளே இருந்து வந்தாள். என்னைக் கவனிக்காதது போல் முன்வாசல் கொடியில் எவ்வி எடுத்த டர்க்கி டவலோடு அவசரமாக நடந்து பின்னறைக்குப் போனாள்.

‘ஏம்மா, நானா நனையச் சொன்னேன். இவன்தான் கொண்டு விடறேன் கொண்டு விடறேன்னான். மெத்தப் படிச்ச மூஞ்சூறு.. முழுக்க நனைஞ்சா நான் என்ன பண்றதாம். ஏற்கனவே நரிவெறூத் தலையார் மாதிரி மண்டை. ஈரம் வேறே இப்போ’.

என்னை வெறுப்பும் கோபமுமாகப் பார்த்து பின் அறை வாசலில் நின்று, தோளில் போட்ட டவலோடு அரசியல்வாதி போல் முழங்கினாள் கயல். அது யார் நரிவெறூத் தலையான் என்று அவள் சாந்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் விசாரிக்க வேண்டும். அவளுக்கு ரூட் விடுகிற கும்பல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு போகிறது.

‘இந்தா, துவாலை. இதை வச்சு நல்லா கரகரன்னு தொடச்சுக்கிட்டு போ’.

அலட்சியமாகக் கை அசைத்து வேண்டா வெறுப்பாக என்னை கயல் அழைக்க, நான் அந்தப் பின்னறைக்கு நடந்தேன்.. அதற்குள், ‘சீக்கிரம் வா, ஆயிரம் வேலை கிடக்கு’ என்று எரிந்து விழுந்தாள். என்ன ஆச்சு இவளுக்கு?

‘தோ அந்த ஓரமா நின்னு துவட்டு’

சிடுசிடுத்தபடி என் பின்னால் வந்தாள் அவள்.

ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தேன். கயல் என்னை ஆவி சேரத் தழுவினாள். ஈரம் இன்னும் மணக்கும் விழிகளை நிமிர்த்தி என் உதடுகளைத் தேடிய அவளுடைய இதழ்களுக்கு ஏமாற்றம் எதுவும் இருக்கவில்லை.

‘எனக்காக எவ்வளவு கஷ்டப்படறே. சாரிடா. ரொம்ப சாரி. நான் சைக்கிள் எடுத்துப் போயிருந்திருக்கணும். உன்னை வெகுவா படுத்தி வச்சுட்டேன்’.

கண்ணை ஒரு கணம் மூடி அவள் என் மார்பில் சாய, சுட்டு விரலால் இமைகளை நீவித் திறந்தேன்.

‘சைக்கிள் எடுத்துப் போயிருந்தா இப்படி இருப்போமா’?

மறு முத்தமிட்டுக் கேட்டேன்.

தெரியலை என்றவளைத் திரும்ப வளைக்க வாசல் பார்த்து விலகினாள்.

இந்தத் தினத்துக்கு இப்படி ஒரு சிறப்பு வரும் என்று தெரிந்திருந்தால் இன்னும் துடிப்பாக இருந்திருப்பேன். கயலுக்காக அவளுக்குப் பிடித்த தேங்காய்ப்பூ ஷொகொலாவும் மில்ஸ் அண்ட் பூன் அடுத்த நாவலும் வாங்கி வைத்திருந்து மழைக்கு நடுவே ஊட்டியிருப்பேன். முத்தம் எதிர்பார்த்து மீசை திருத்திக் கன்னம் மழித்திருப்பேன். வடிவேலன் முடியழகு நிலையத்தில் காலையில் புகுந்து தலைமுடி சீராக்கி இருப்பேன்.

இனி அடுத்த மழைக்குத் தான் அதெல்லாம் வாய்க்கக் கூடும்.

வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அப்பா சாப்பிடாமல் காத்திருந்தார்.

‘பார்வேந்தனார் வீட்டுக்குப் போயிருந்தியோ’?

சமாளிக்க எல்லாம் முடியாது. நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டார்.

‘ஆமாப்பா. அவர் பொண்ணும்…’

‘பிரின்சிபால் சொன்னார். இன்னும் வரலியே, ஜீப் எடுத்துப் போய்க் கூட்டி வரட்டுமான்னு போன் பண்ணினேன். நீ அந்தப் பொண்ணை பின்னாடி கேரியர்லே வச்சுக்கிட்டு சைக்கிள்லே போனதா சொன்னார்’.

பிரின்சிபால் பார்க்கவா மழையோடு காதல் பயணம் போயிருக்கிறேன்! வேறே யாரெல்லாம் கண்டு களித்தார்களோ.

‘இனிமே இப்படி எல்லாம் செய்யாதே. உனக்கு சிரமம் மட்டுமில்லே அந்தப் பொண்ணுக்கு உன்னை விட கஷ்டம், ரிஸ்க்’.

நான் என்ன ரிஸ்க் என்று பார்க்க, அவசரமாகச் சொன்னார் அப்பா –

‘ஆளில்லாத பாதையிலே அதுவும் ஊருக்கு வெளியே, சின்ன வயசுப் பொண்ணு இப்படி சைக்கிள்லே போறது சரியில்லே. ஏண்டா காலேஜ்லே இருந்து எனக்கு ஒரு டெலிபோன் பண்ணியிருந்தா அந்தப் பொண்ணை அவங்க வீட்டிலே விட்டுட்டு உன்னையும் நனையாம, சொதசொதன்னு வந்து நிக்காம, சுக்கா உலர்த்திக் கூட்டி வந்திருப்பேனேடா. ஒரே ஒரு டெலிபோன்’.

‘தோணலை அப்பா’ என்றேன். உண்மையும் அதுதான். கொஞ்சம் போல்.

ஜீப் முன் சீட்டில் அப்பாவும் டிரைவர் வேல்சாமியும் இருக்க, பின்சீட்டில் கயலோடு என்ன கடலை போட முடியும்!

‘சாப்பிட்டியோ’?

‘இல்லேப்பா, கயல்விழி வீட்டுலே வற்புறுத்தினாங்க. அடுத்த மழைக்கு முந்தி இங்கே வந்து சேரணுமே. அதான், வேணாம்னு கெளம்பி வந்துட்டேன்’.

‘சரி, சாப்பாட்டுக் கடையை முடிச்சுடலாம், வா’ என்று எழுந்தார் அப்பா.

‘அப்பா, தம்பீஸ் கஃபேயிலே இட்லி பொட்டலம் கட்டி வாங்கிட்டு வரட்டா’?

தம்பீஸா? அப்பா சிரித்தார்.

‘தம்பீஸ், நேரு கஃபே, காந்தி வீதியை ஒட்டி மாருதி எல்லாம் அடைச்சுப் பூட்டிப் போயாச்சு. புயல் வந்துட்டிருக்கு. தெரியுமில்லையா’?

அப்பா கேட்டார்.

கயல்விழி அம்மா சொன்னதுதான். கயல்விழியோடு சேர்ந்து நினைவில் வருவதாலோ, இதுவரை புயலைப் பார்க்காமல் வளர்ந்து இப்போது சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாலோ, நிலைமைக்குப் பொருந்தாத சந்தோஷம் எட்டிப் பார்த்தது. மானசீகமாக மேகலாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். மழை என்றாலும் மனதில் உட்கார்ந்த அந்தக் கலாசாரக் காவலாளி மன்னித்து, ‘ஒழிஞ்சு போ, கயல்கிட்டே முத்தம் கம்மி பண்ணு’ என்றாள்.

‘கோதுமை ரவை உப்புமா பண்ணி வச்சிருக்கேன். எனக்கு ஒரு ஸ்கூப் அள்ளி சக்கரை போட்டு கொடு. நீயும் எடுத்துக்கோ. என்னமோ ஞாபகத்துலே நாலு ஆழாக்கு போட்டுட்டேன். ஏகப்பட்ட உப்புமா இருக்கு. முடிஞ்ச வரைக்கும் சாப்பிடு. பொழச்சுக் கிடந்தா வேறே நல்லதா சமைச்சு சாப்பிடலாம்’.

அப்பா ஓங்கார ஒலி என்ற உள்ளூர்ப் பத்திரிகையில் இருந்து பார்வையை நகர்த்திச் சிரித்தார். ஆபீஸ் நிர்வாகத்தில் முழு நேரமும் செலவிட்டு அடுத்து வீட்டுக் காரியத்திலும் ஈடுபடும் அவருக்கு எந்த உதவியும் செய்யாமல், கோவில் காளை மாதிரி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். காலேஜ் என்ற சௌகரியமான சாக்கைத் தவிர்த்தால் ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் கூட, விழித்திருக்கும் நேரத்தில் அவரோடு உட்கார்ந்து பேசியதில்லை.

‘மழை அடுத்த பாட்டம் ஆரம்பம்’.

அறைக்குள் கடந்து வந்த மழை வாசனையை தீர்க்கமாக முகர்ந்தபடி அப்பா சொன்னார்.

தெருவை முழுக்க ஒளிரச் செய்து இதுவரை காணாத வெளிச்சத்தோடு நீண்டு படரும் கொடியாக மின்னல் ஊர்ந்தது. இடைவெளி விட்டு, மிகப் பெரும் சத்தத்தோடு இடிகள் சூழ்ந்து ஒலிகள் பெருக்கி நடுங்க வைத்தன.

கொட்டு கொட்டென்று அடுத்த மழை இறுக நெய்த மழைத் தாரைகளை வானத்துக்கும் பூமிக்குமாக நெய்து நிறுத்திப் பொழிய ஆரம்பித்தது. பிரெஞ்சு ஜன்னலும் மேற்கூரையும் பதித்த மாடி முகப்பில் விசிறி விழுந்த மழை தொம்தொம் என்று இரும்புக் கூரையில் நடனமிட்டு சத்தத்தோடு கூரை விட்டு எல்லாத் திசையிலும் விழுந்து, வழிந்து பெருகியது.

சட்டென்று எல்லா விளக்கும் அணைய வீட்டில் மின்சாரம் போனது. அடுத்த வினாடி தெருவிலும் விளக்குகள் அணைய முழு இருள்.

மழைச் சத்தம் வேறு எதையும் நினைக்க முடியாதபடி அழுத்தமாக நினைவில் உட்கார்ந்தது. இடிகள், நாகரிகம் இன்னும் வந்து சேராத ஏதோ இனமாக எல்லோரையும் மாற்றிப் பயமுறுத்திப் பேச்சின்று அமர வைத்தன.

‘சட்டச்சட சட்டச்சட என்று தாளங்கள் கொட்ட மழை எங்கனம் வந்ததடா தம்பி வீரா’

அப்பா நடு ஹாலில் இருட்டில் கைகட்டி நின்று உரக்க பாரதியார் கவிதை சொன்னார். புது மின்னல் வெளிச்சம் போட்டு ரசிக்க, தொடர்ந்த இடிகள் கைதட்டி ஆரவாரம் செய்தன. இந்த இரவுக்கும் மழைக்கும் நன்றி சொல்ல இன்னும் கூடக் காரணங்கள் இருக்கக் கூடும்.

கீழே இருந்து மழை இரைச்சலை மீறிக் கொண்டு வாட்ச்மேன் வின்சண்ட் நடராஜன் குரல்.

‘தம்பி, உனக்கு அப்பெல்’.

அப்பா உப்புமா எடுத்து வைக்க சமையலறைக்குப் போயிருந்ததால் அவர் காதில் விழுந்திருக்காது.

ஆபீஸ்லே மெழுகுவர்த்தி இருக்கான்னு பார்த்துட்டு வரேன்

என் மன சமாதானத்துக்காக உரக்கச் சொல்லி மாடிப்படி இறங்கினேன். ‘பார்த்து பார்த்து இருட்டுலே படி இருக்கறது தெரியாது’ என்று வின்செண்ட் முணுக் முணுக் என்று எரிந்த டார்ச் விளக்கை அடித்து வழி காட்டினார்.

இன்னும் சிணுங்கிக் கொண்டிருந்த ஃபோனை எடுத்தேன்.

‘என்ன செய்யறேடா?’

ஜோசபின்.

இந்தப் பெருமழை, புயல் நேரத்தில் அவளை எப்படி மறந்தேன்? கயல் வீட்டில் இருந்தாவது ஒரு தடவை போனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறாள் என்று விசாரித்திருக்கலாம். என் மேல் எனக்கே வெறுப்பாக வந்தது. என்னிடம் எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் நேசம் வைத்தவளை நான் நடத்தும் விதத்துக்காக வெட்கப்பட்டேன்.

‘இன்னிக்கும் நைட் டியூட்டியா? பார்த்து இரு. புயல் வருதுன்னு’.

நான் முடிக்கும் முன் அவள் அவசரமாகச் சொன்னாள் –

‘ஒபிதால் வேலையா நானும் ஏஞ்சலினும் விசாலியும் அரியாங்குப்பத்துக்குப் போக வேண்டி வந்ததுடா. பகல்லே கிளம்பி வரும்போது மழையும் காற்றும் வலுத்துது. சூறைக் காற்றிலே மரம் விழுந்து மேலே போக முடியாதபடி ரோடு அடைப்பு’.

‘அடடா, எப்படி திரும்பினே’? படபடப்போடு கேட்டேன்.

‘எங்கே திரும்ப? ஒபிதால் வேன் எஞ்சின் ப்ராப்ளம். ஓரமா நிறுத்தி டிரைவர் பாக்கற முன்னே அங்கே இருந்த மரக்கிளை விழுந்து கூரை நசுங்கிடுத்து’.

‘இப்ப என்ன பண்றே’?

என் படபடப்பு அதிகமானது. டார்ச்சோடு என்ன என்று பார்க்க வந்த வின்செண்ட் நடராஜன் பக்கத்தில் நின்றபோது சத்தத்தைக் குறைத்தேன். ‘ஒண்ணுமிலே ஃப்ரண்ட்’ என்று ரிசீவரைப் பொத்திக் கொண்டு சொல்லி அவரை அனுப்பி விட்டுத் தொடர்ந்தேன்.

‘நேஷனல் ஹைவே அறுபத்தாறு இருக்கு இல்லே’.

ஜோசபின் பிரெஞ்சில் சொல்லாவிட்டாலும், எனக்கு தெரியாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று. கூடுதல் தகவல் வேண்டியிருக்கிறது.

‘அதாண்டா, கிருஷ்ணகிரிலேருந்து நம்ம ஊருக்கு வர்ற ரோடு. அங்கே முசாபரி பங்களாவிலே தங்கி இருக்கோம். நாங்க மட்டும் தான் இருக்கோம். வாட்ச்மேன் சாப்பாடு கிடைக்குமான்னு பார்த்து வரேன்னு மதியம் போனவர் போனவர் தான். குடிதண்ணீர் கூட இல்லே இங்கே. ஏன் கேக்கறே’.

ஜோசபின் மதியத்தில் இருந்து சோறு தண்ணீர் இல்லாமல் எங்கேயோ ஒரு பேய் பங்களாவில் மழைக்கு ஒண்டியிருக்க, நான் கயலுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு, கோதுமை ரவை உப்புமா சாப்பிட்டுக் கொண்டு…

‘எனக்கு ஃபோன் பண்ணியிருக்கலாமே”

எங்கே போன் செய்ய? யாருக்கு? தெரியவில்லை. ஆனாலும் சும்மா சொன்னேன்.

ஜோசபின் இருந்த இடத்துக்குப் பக்கம் எங்கோ இடி இறங்கி இருக்க வேண்டும். சத்தம் வலுத்துக் குறைய அவள் குரல் மெல்லக் கேட்டது.

‘செஞ்சேனே. இங்கே ஒரு டெலிபோன் டைரக்டரி பழசா கிடந்தது. அதைப் பார்த்து உங்க காலேஜுக்கு போன் செஞ்சு உன் பேர், அடையாளம் எல்லாம் சொன்னேன்’.

‘என்னன்னு?

‘ஸ்மார்ட்டா துருதுருன்னு இருப்பான். கெச்சலான பையன் அப்படீன்னு. அது இப்போ ரொம்ப அவசியமா?

இல்லைதான். நேரம் காலம் தெரியாமல் வந்த சந்தோஷத்தை முனை முறித்து வீசி எறிந்தேன்.

பேங்க் ஹால் சுவரில் மேல் வரிசை ஜன்னல் வழியே ஒரு வினாடி விளக்குப் போட்டுப் போனது கொடி மின்னல். பேங்குக் கணக்கு லெட்ஜர் அடுக்கிய மேஜைகள் உடனே ஆபீஸை உருவாக்க முயன்று, இடி அதிகாரமாக ஒலிக்க, ஓய்ந்தன.

‘காலேஜில் யாருமே இல்லை. எல்லோரும் புயலுக்கு பயந்து வீட்டுக்குப் போயாச்சு’ என்று பயப்படாமல் அங்கேயே இருந்த யாரோ சொல்லி போனை வைத்து விட்டார்களாம்.

‘நீ வந்து கூட்டிப் போகணும்னு இல்லடா. பதற்றமா இருக்கற நேரத்திலே உன் குரலையாவது கேட்டிட்டிருக்கலாம்னு தான் கூப்பிட்டேன்’.

கரைந்து போனேன். எவ்வளவு அற்புதமான சிநேகிதி. இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்பட்டு, ஒரு நிமிடம் அணைத்து, ஒரு நிமிடம் முத்தமிட்டு, ஒரு நிமிடம் சிரிக்க வைத்து சைக்கிள் மிதித்து அகன்று போகிற வெறும் சிநேகிதன் நான்.

‘தண்ணி மட்டும் கிடைச்சா போதும் இல்லேன்னாலும் இதுவும் கடந்து தான் போகும். கர்த்தருக்கு ஸ்தோத்ரம்’.

முணுமுணுப்பாக ஜோசபின் சொன்னாள். நானும் ஸ்தோத்ரம் சொன்னேன்.

‘தண்ணி இல்லாததும் ஒரு விதத்துலே நல்லதுடா. பாத்ரூம் எங்கேயோ இருட்டிலே ரொம்ப தொலைவில் இருக்கு போல. அடக்கற நேரம்’.

அவள் சிரிக்க என்னால் ஜோசபின் ஜோசபின் என்பது தவிர வேறு ஏதும் சொல்ல முடியவில்லை.

‘சரி வச்சுடறேண்டா, விசாலி வந்துட்டிருக்கா’

‘அங்கே என்ன போன் நம்பர் எழுதியிருக்கு’? அவசரமாகக் கேட்டேன். சொன்னால் இருட்டில் எங்கே பேப்பரும் பேனாவும் தேடி எழுதுவது?

‘இங்கேயா? இரு டார்ச் லைட் அடிச்சுப் பார்க்கறேன்.. அதுவும் பேட்டரி டவுன்.. நம்பர் 3942’ என்றபடி அவள் குரல் தேய்ந்து மறைந்தது.

த்ரீ த்ரீ ஸ்கொயர்ட் ஃபோர் ரூட் ஃபோர் என்று சூத்திரம் போன்று நிமோனிக் ஆக உருமாற்றி மனதில் அந்தத் தொலைபேசி எண்ணைப் பிடித்து வைத்தேன். இனி இது ஆயுசுக்கும் மறக்கப் போவதில்லை.

படுக்கையில் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். ஜோசபின் என்ன சாப்பிட்டாளோ, தண்ணீர் கூட இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ. பாத்ரூம் போக முடியாத கொடுமை வேறு.

அழகுப் பெண் என்றால் பளிங்குப் பதுமையா என்ன? உடல் குறையும், அசுத்தமும், உபாதையுமாக வருகிற சக உயிரல்லவா அவள். அந்த அன்புதான் பரிசுத்தம். மனசுதான் மறுவில்லாத பளிங்கு. அது போதும் என் ஜோசபினை எப்போதும் போற்றிக் கொண்டாடி மகிழ்ந்திருக்க.

ஆமா என்றது அடுத்து முழங்கிய இடி.

நடு ராத்திரிக்கு ஊ ஊ ஊ என்று காற்று தீனமாக ஊளையிட்டு ஆவேசம் கொண்டது. அது அடுத்து மிகப்பெரிய இரைச்சலாக ஹம்ம்ம்ம்ம் என்று நீண்டு, உச்ச ஸ்தாயியில் அதட்டியது. அலைகளின் சத்தம் தியூப்ளே வீதி வரை கேட்ட வண்ணம் பொங்கிய கடலை உதாசீனத்தோடு ஒதுக்கி நகரம் புகுந்தது காற்று.

புயல் கரை கடக்குது என்றார் அப்பா.

சார்த்தி வைத்த ஜன்னல்கள் திறந்து அடித்துக் கொண்டு, காற்றுக்கட்டை தெறித்து சடசடவென்று தரையில் சரிந்தன. எட்டு பேர் தூக்கி நிறுத்தி ஆணிகள் கொண்டு அரைந்து கட்டிட முகப்பில் நிறுத்திய பேங்கின் பெயர்ப் பலகை பிய்த்துக் கொண்டு தரைக்கு வேகத்தோடு வந்து விழுந்ததை நானும் அப்பாவும் மாடி முன்னறையில் நின்று பார்த்தோம். தகரக் கூரைகளும், நீண்ட பனை ஓலை வேய்ந்த குடிசைகளின் மேற்பகுதியும், தெருவெங்கும் தூக்கி நிறுத்தியிருந்த விளம்பர பலகைகளும் பெயர்ப் பலகைகளும் புயல் காற்று அளித்த அபூர்வமான இறக்கைகள் கொண்டு பறந்து, காற்று செலுத்திய திசையில் ஒதுங்கி விழுந்தன. குழல் விளக்குகள் ஒலி எழுப்பிச் சிதற எங்கோ கட்டிடச் சுவர் சரியும் ஓசை காற்றை மீறிக் காதில் கேட்டது. மணிக் கூண்டு மார்க்கெட் வெளிச்சுவர் என்றார் அப்பா. நான் ஆச்சரியம் தீராமல் காற்றின் தாண்டவம் கேட்டபடி இருட்டில் உட்கார்ந்திருந்தேன்.

ஜோசபின். ஜோசபின் என்ன செய்கிறாள்?

மெல்ல கீழே இறங்கினேன். வின்செண்ட் நடராஜனைக் காணோம். பேங்க் உள்ளே போய் டெலிபோனில் எண்களைச் சுழற்றினேன். 3942.

ஜோசபின்

‘ஜோசபின் தான் பேசறேன். நீ பத்திரமா இருடா. புயல் அடிக்கற’.

ஜோசபின் குரல் உயர்த்திய பாதிப் பேச்சில் நின்று போக அப்புறம் தொலைபேசிக்குள் தீர்க்கமான மௌனம் வளைந்து கவிந்து நிரம்பியது.

விடிகாலை ஐந்து மணிக்கு நான் கீழே வந்தேன். அப்பா சற்றே கண் அயர்ந்திருந்த நேரம். வின்செண்ட் நடராஜன் வங்கி வாடிக்கையாளர் காத்திருக்கும் பகுதியில் தரையில் விழுந்து உடைந்த சுவர்க் கடியாரத்துக்குப் பக்கம் தரையில் பழைய லெட்ஜர்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். வாசல் முன் ஹால் ஓரமாக அவருடைய வண்டியை இழுத்துப் போகும் குக்கி படுத்து கூளம் மென்று கொண்டிருந்தது.

சைக்கிளை எடுக்க வேண்டாம். ஓட்டிப் போவதை விட, உருட்டிப் போகத்தான் வாய்ப்பு இருக்கும்.

கையில் பற்றியிருந்த துணிப் பைக்குள் தூக்குப் பாத்திரத்தில் அடைத்த கோதுமை உப்புமா. முகர்ந்து பார்க்க, கெட்ட வாடை எதுவும் இல்லை.

போக வேண்டும். உடனே போயாக வேண்டும்.

சைக்கிளோ நடையோ பஸ்ஸோ. அரியாங்குப்பம் பக்கம் தேசிய நெடுஞ்சாலை அறுபத்தாறில் ஒரு பயணியர் மாளிகை. ஜோசபின்.

தெருவெல்லாம் கண்ணாடித் துண்டும், காகிதமும், பாதி மடங்கிய தகரப் பலகைகளுமாகப் பரவிக் கிடந்தது. மணிக்கூண்டு மார்க்கெட் சுவர் தவிர அருகிலேயே இன்னும் நாலு இதர சுவர்கள் அனுதாபம் தெரிவித்து தரையில் சிதறிப் படர்ந்திருந்தன. வேரோடு சாய்ந்த மரங்களின் உள்ளே சிக்கிய பறவைகள் தீனமாகக் குரல் கொடுத்தன. நின்று ஏதாவது செய்யலாமா?

ஒரு மனசு கேட்க, இன்னொன்று அரியாங்குப்பம் என்றது. அந்தக் குரல் வலுக்க நான் கடற்கரைக்கு வந்திருந்தேன்.

கருப்பு நீர்த் தோல் போர்த்தி எந்த சத்தமும் இல்லாமல் சின்ன அலைகளை விட்டெறிந்து அமைதியாக இருந்தது கடல். காற்றின் நேற்றைய பேயாட்டத்தை அலைகள் பேசிப் பேசி ஆச்சரியப்பட்டுத் தரையில் அறைந்து திரும்பின.

கடகடவென்று நாலைந்து ஜீப்கள் வந்து நிற்பதைப் பார்த்தேன். ரோட்டரி, லயன், இன்னர்வீல் என்று அப்பா இடம் பெறும் சகல க்ளப்களின் உறுப்பினர்கள் அங்கே.

குரல்கள் பரபரப்பாக எழுந்தன.

‘அரியாங்குப்பத்திலே தான் புயல் சேதம் அதிகமாம். முதல்லே சோறும் தண்ணியும். அப்புறம் மருந்து மாத்திரை. பிறகு உடுப்பு’.

‘உழைக்க விருப்பமிருந்தா வாங்க. வழியிலே பாதை இருக்காது. பொறுமையா மரத்தை அப்புறப்படுத்திட்டுப் போகணும். கஷ்டம் தான். ஆனா அங்கே ஜனங்கள் படற கஷ்டத்தோட கம்பேர் செஞ்சா ஒண்ணுமில்லே’.

நான் எதுவும் பேசாமல் மடியில் துணிப் பையோடு ஒரு ஜீப்பில் உட்கார்ந்தேன். அப்பா என்ன செய்யறார், ஆபீஸ் ஜீப் என்ன ஆச்சு, பேங்க் பெயர்ப் பலகை விழுந்ததா, வேறே என்ன சேதம் என்று என்னை இன்னார் என்று தெரிந்த யார் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

பத்தே நிமிடத்தில் போக வேண்டிய அரியாங்குப்பம் போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆனது. வழியில் குறைந்தது பத்து மரமாவது நகர்த்தி அப்பால் வைத்திருப்போம். கை காய்த்துப் போக அரியாங்குப்பம் நுழைந்தபோது காலை ஏழு மணி. மழை விட்ட வானம் சுத்தமாக, மேகம் இன்றி மெல்லிய வெயில் பூசி இருந்தது. புயல் கடந்து போன பூமி வெய்யிலில் எல்லோரும் பார்க்க சேதம் மிகுந்து கிடந்தது.

சிட்டாகச் சுழன்று குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த மூன்று செவிலியரில் ஜோசபின் இருந்தாள்.

வரிசையில் நிற்கிறவர்களுக்கு கொண்டு போன உப்புமா, பிஸ்கட், பிரட் என்று பார்த்துப் பார்த்து வழங்குகிற அந்த தேவதையின் அருகே போய் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஜோசபின் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். கை கூப்பினேன். அதுதான் செய்ய முடியும் என்னால்.

‘என்னடா கும்பிடு எல்லாம் போடறே?’

சிரித்தபடி ஜோசபின் பிஸ்கட்கள் பரத்திய தட்டை என்னிடம் நீட்டினாள்.

‘நீ சாப்பிட்டியா?’

அவள் சிரித்தாள். சாப்பிட்டிருக்க மாட்டாள். எனக்கு மட்டும் எதற்கு? அப்புறம் எடுத்துக்கறேன் வேலை இருந்தா கொடு என்றேன்.

என் கையில் பிரட் அடுக்கிய தட்டைக் கொடுத்தாள் ஏஞ்சலின்.

‘இந்தப் பொண்ணு பின்னாடி போ’.

அவள் நமட்டுச் சிரிப்போடு ஜோசபினைக் காட்ட, நான் மந்த புத்திக்காரனாக விழித்து விட்டு ஜோசபினை ஒட்டி ரொட்டித் தட்டோடு நடந்தேன்.

‘ரொட்டி ரொட்டின்னு உரக்கச் சொல்லு. அப்பத்தான் வேணும்னு கேட்பாங்க’.

ரொட்டிக்காரன் மாதிரி கூவினேன். தலையில் கம்பு விழுந்து சற்றே அடிபட்ட முதியவருக்கு ஜோசபின் கட்டுப் போட, நான் வலைத் துணி நறுக்கி கொடுத்தேன். காய்ச்சல் மாத்திரை அவள் கொடுக்க, டம்ளரில் தண்ணீரை நீட்டினேன்.

அவள் இன்னும் கொஞ்சம் ரொட்டி எடுக்க சுகாதார நிலையத்துக்குள் நுழைந்தபோதும் பின்னால் போனேன்.

‘என்னடா? கையிலே வச்சிருந்தியே ஏதோ பை. அது வேணுமா. ஏஞ்சலின் இங்கே வச்சிருக்கா பாரு’

‘பக்கத்துலே வா’ என்றேன். ‘இப்பவா’ என்று கண் விரிய ஆச்சரியப்பட்டாள். களைத்த கண்கள் சிரித்தபடி இருந்தன. வாயைக் கையால் மறைத்தாள்.

‘ஏய் அது இல்லே. வாயைத் திற’.

அவசரமாக பாத்திரத்தில் இருந்து எடுத்த கோதுமை உப்புமாவை ஒரு கவளமாக உருட்டி அவளுக்கு ஊட்டினேன். பாதி சாப்பிட்டுப் போதும் என்று நகர, மிச்சத்தை நான் உண்டேன். இன்றைய நாள் இனிதாக விடிந்திருக்கிறது.

ஜீப் வந்து நிற்கும் சத்தம். தலையைத் தூக்கிப் பார்த்தேன். அப்பாவும், பார்வேந்தனாரும். இன்னும் வின்செண்ட் நடராஜனும், விக்தோ சாரும்.

கீக்கீ என்று இரைந்தபடி விக்தோ ஒரு பெரிய ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தை அலட்சியமாகக் காதைப் பிடித்து ஜீப்பில் இருந்து இறக்கினார். பார்வேந்தனார் கொண்டு வந்த தேனீர். எப்படியோ பால் சேகரித்து டீ போட்டு வந்திருக்கிறார். கயல் கைவண்ணம் என்று தெரிந்தது. அந்தச் சின்னப் பெண்ணை மறந்தே போயிருந்தேன். மெல்ல சாவகாசமாக போய்ப் பார்க்கலாம்.

ஜோசபின் ஒரு கோப்பை டீயை நிறைத்து எடுத்து வந்தாள். வாங்கக் கை நீட்டினேன்.

அவள் என்னைத் தவிர்த்து விட்டு அப்பாவிடம் குவளையை நீட்டினாள்.

‘போன் ஷூர் மிஸ்யெ. ஸில்வொ ப்ளே பொந்த்ர லு தெ’.

அப்பா நன்றி சொல்லி வாங்கிக் கொள்ள ஓரக் கண்ணால் என்னைப் பார்த்து சிரித்தபடி போனவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன