புது bio-fiction novel : தியூப்ளே வீதி – அத்தியாயம் 13 இரா.முருகன்

ரத்னா தியேட்டரில் மேட்னி ஷோ. உத்தரவின்றி உள்ளே வா என்று வேண்டி விரும்பிக் கூப்பிட்டதால் என்ன விஷயம் என்று டிக்கெட் எடுத்துப் போய்ப் போய்ப் பார்த்து விட்டு சக்கரம் போகிற போக்கில் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தேன்.

ரூ ல போர் என்ற கதவுத் தெரு நான் வந்தது. தெற்கு வசத்தில் அதன் வலது கைப்பக்கம் முண்டாசு தெரு என்று சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் சகோதரர்கள் சொல்லும் மாண்டார்சியர் தெரு. இதுவரை இந்த ஊரில் புகுந்து புறப்பட்டுப் பார்க்காத மிகச் சில வீதிகளில் அதுவும் ஒன்று. இப்போது போகலாமா என்று யோசனை.

வேண்டாம். இன்னும் நான் புகுந்து பார்க்காத அந்த ஒன்றிரண்டு தெருக்கள் வசீகரமானவை. அங்கே அழகான பெண்கள் நடு வீதியில் வலை கட்டி இறகுப் பந்து வீசி பேட்மிண்டன் ஆடிக் கொண்டிருப்பார்கள். நான் அங்கே மெல்ல நடக்கும்போது கண்கள் சந்திக்கக் கையில் பந்து மட்டையோடு நின்று வழிவிடுவார்கள். மனசே இல்லாமல் கடந்து போவேன். திரும்பிப் பார்த்தால் பந்து தரையில் விழ, அவர்களின் பார்வை என்னையே தொடரும்.

என்ன கண்றாவிடா இது. சினிமா பார்த்துப் படிந்த கனவும் கற்பனையும் எப்போது இறங்கிப் போகுமோ, தெரியலை.

இன்றைக்கு ரத்னா டாக்கீஸில் பகல் காட்சி பார்க்கும் தினம் இல்லை. வெள்ளிக்கிழமை முழுக்க முழுக்க இயற்பியல் தினம். பிசிக்ஸ் லேபில் நியூட்டன் வளையங்களை ஆடிகளைக் கொண்டு உருவாக்கி, நகரும் மைக்ராஸ்கோப் மூலம் ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்வதற்கான நாள் இது.

மற்ற எல்லா விஷயத்திலுமான ஈடுபாட்டை ஒதுக்கிப் புறம் தள்ளி நேரம் முழுக்க ஆராய்ச்சி செய்து, படித்து முன்னுக்கு வந்தால், பெரிய அறிவியல் அறிஞனாக ஆகலாம்.

ஆக வேண்டும் என்று லேப் உள்ளே போகும் ஒவ்வொரு தடவையும் மனது அவசரத் தீர்மானம் எடுக்கும். வேலை முடிந்து லாப்ரட்டரி வாசல்படி கடந்து வெளியே வந்ததும் மனம் வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விடும்.

நியூட்டன் வளையங்களைத் தான் ஏற்கனவே கண்டுபிடித்து புரட்டிப் போட்டு அளந்து தள்ளி விட்டார்களே, நாம் என்ன கூடுதலாகச் செய்து கிழிக்கப் போகிறோம் என்று தோன்றும்.

பேங்க் வேலைக்கோ, மாநில அரசு ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கோ போகத் தேவையான படிப்பு போதும் என்று திடமாக நம்பி, அறிவுத் தேடல் ஏறக் கட்டப்படும். அதோடு, அறிவியல் அறிஞர் பிம்பம் காற்றில் கலைந்து உதிரும்.

தாற்காலிகமான அறிஞர் ஒப்பனைக்கு வழி இல்லாமல், இன்றைக்கு மதியம் எல்லா வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

அது மட்டுமில்லை. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் யாரும் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு பிரின்சிபாலின் அறிவிப்பு வந்த நாள்

இது. எல்லாம் ஒரு சின்னஞ்சிறு தகராறில் தொடங்கியது.

ல பொம்னாட் என்ற அழகான கடற்கரைப் பாதையில் சைக்கிள் விட்டுப் போவதில் எழுந்த பூசல் அது. உள்ளூர் வெளியூர் சச்சரவாக போன வாரம் தான் இது வெடித்தது. ஊதிப் பெரிதாக்கியதில் எங்கள் கல்லூரிச் சகாக்களுக்கும் பங்கு உண்டு.

சைக்கிளில் போனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். சமிதி, ஆசிரமம், பர்ணசாலை என்று இங்கே வந்து ஏற்படுத்திக் கொண்டு பல்கிப் பெருகியவர்கள்.

சமிதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணுமாக அரை நிஜாரை மாட்டிக் கொண்டு நாலைந்து பேர் சேர்ந்து பாதையை அடைத்துக் கொண்டு சைக்கிள் மிதித்துப் போவதால் மற்றவர்கள் பயன்படுத்த சிரமமாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு.

சமாதி வைத்து சம்பாதிக்கிறார்கள் அவர்கள் என்று உள்ளூர்க் காரர்கள் பொருமுவது இப்போது பாதைத் தகராறாக வெடித்திருக்கிறது.

மடை மாற்றி வாய்க்கால் தகராறைத் தீர்க்கிறது போல இங்கே பிரச்சனை ஓய்வது எப்போது என்று தெரியாது.

லச்சு, நாகநாதன், வைத்திலிங்கம் போன்ற கல்லூரி சீனியர்கள் தெருமுனைகளில், பூங்காவில் கூட்டம் கூட்டி பிரஞ்சிலும் தமிழிலும் வந்தேறிகளைக் கடுமையாகச் சாடுகிறார்கள். குஜராத்துக்குத் திரும்பிப் போ, வங்காளத்துக்குப் போ, அந்தமானுக்குப் போ, நேபாளத்துக்குப் போ என்று அவ்வப்போது மனதில் வரும் பிரதேசங்களை எல்லாம் உரக்கச் சொல்லி எதிர்த் தரப்பை ஒட்டுமொத்தமாக அங்கே போகச் சொல்கிறார்கள். லச்சு என்னிடம் இந்திய மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளின் பட்டியலை கலந்து கட்டியாக ஒரு துண்டு சீட்டில் எழுதித் தரச் சொன்னது இப்படிச் சொற்பொழிய உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

குஜராத்தில் இருந்து பத்து பேர் பணமூட்டையோடு வந்தாங்க. கல்கத்தாவிலே இருந்து தாடியோடு இன்னொரு பத்து பேர் வந்து சேர்ந்தாங்க. பணம் கொண்டு வந்தவங்க கிட்டே தாடி இல்லே, புத்தி இல்லே. புத்தி இருக்கற தாடிவாலா கிட்டே டப்பு லேது. சரி வா, கூட்டணி அமைக்கலாம்னு இந்த. அவலும் உமியும் சேர்ந்தானுங்க. யார் அவல், யார் உமியா? ரெண்டுமே உமிதான். இவங்க சேர்ந்து, யோகம், தியானம்னு பொரிவிளங்கா உருண்டை பிடிச்சு ஊரை எல்லாம் உலகத்தை எல்லாம் ஏமாத்தினானுங்க. ஏமாத்தறானுங்க. இன்னும் எத்தனையோ வருஷம் கியாரண்டியா ஏமாத்தப் போறாங்க. இவங்க போட்ட ஆட்டத்திலே மதி மயங்கி, யார் யாரோ நிதி அனுப்ப, அங்கே வெளிநாட்டுப் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. காசை வச்சுட்டு என்ன பண்ண? பொரிச்சு திங்கவா முடியும்? மண்ணுலே போடலாம்னு முடிவு பண்ணினானுங்க. என்ன ஆச்சு? இப்போ ஊரிலே ஒரு கட்டடம் விலைக்கு வந்தாப் போதும். நாம கனவிலும் நினைக்காத விலை கொடுத்து வாங்கி, அவனுகளுக்குன்னு இருக்கப்பட்ட அழுக்கு நீல பெயிண்டை குழைச்சுப் பூசறான். உடனே அது சமிதி கட்டிடம் ஆகுது. நிஜார் போட்டுக்கிட்டு இன்னும் பத்து பேர் மூட்டை முடிச்சோட உள்ளாற புகுந்துடறாங்க. ஊரையே வளச்சுப் போட்டு அவனுங்க வளர்ந்துக்கிட்டிருக்காங்க. இப்படியே விட்டா, ஊர் முச்சூடும் அழுக்கு நீலமாக்கி நம்மை எல்லாம் போங்கடா பக்கிகளான்னு வெளியே விரட்டிடுவாங்க.

போகிறவர், வருகிறவர் எல்லாம் நின்று கேட்டு, உரக்கக் கைதட்டி, அதானே என்று ஆமோதிக்க இப்படி அந்தத் தெருமுனைத் தாக்குதல் நீண்டு போகும்.

நேற்று அதுதான் நடந்தது. அதற்கு முன்பாக, கல்லூரி வளாகத்திலேயே, நேற்று சாயந்திரம் நாலு மணிக்கு எல்லோரும் ஒற்றுமையாகக் கடைசி வகுப்பைத் துறந்து, வெளியே கூடி கோஷம் போட்டோம். நான் போகாத எலக்ட்ரானிக்ஸ் வகுப்புக்கான பேராசிரியர் ராபர்ட் சமயவேலு முதல் மாடியில் வாசலை ஒட்டிய ஜன்னல் வழியாக எக்கிப் பார்த்தபோது நான் முஷ்டி மடக்கிக் கத்திக் கொண்டிருந்தேன். கட்டாயம் கண்ணில் பட்டிருக்கும்.

அவரிடமிருந்து பிரின்சிபாலுக்கும், பிரின்சியிடம் இருந்து அப்பாவுக்கும் தகவல் போகும். போகட்டும். அது இப்போதைக்கு நடக்கப் போவது இல்லை.

அப்பா பேங்க் மேனேஜர் மாநாடு என்று நேற்று டில்லி போயிருக்கிறார். அவர் வர அடுத்த சனிக்கிழமை ஆகும். அதற்குள் உலகமே மாறி விடும். காலேஜை கடல் கொண்டு போகும். நான் இனிப்பான கனவுகளோடு மேகலாவைத் தேடி உத்தரவின்றி உள்ளே வா ரவிச்சந்திரன் மாதிரி பாடிக் கொண்டே போய் விடுவேன்.

காலேஜ் கடல்கோளில் போய்த்தான் நீயும் நானும் ஜோடி சேரணும்னா வேணாம் என்று பெருந்தன்மையோடு மேகலா மறுத்துவிட்டு மனதுக்குள் திரும்பப் போனாள். அதெல்லாம் நேற்றோடு, காற்றோடு போனது.

இன்றைக்கு மதியத்துக்கு மேல் ஜீவகனின் அண்ணன் நச்சி என்ற நச்சினார்க்கினியன் கல்லூரி வளாகத்தில் தீ குளிக்கப் போவதாக வதந்தி. அது அதிவேகமாகப் பரவ, உடனடி நடவடிக்கையாக இன்று மதியம் எல்லா வகுப்புகளையும் ரத்து செய்து வளாகத்துக்குள்ளே ஈ காக்காய் கூட இல்லாமல் செய்து விட்டார்கள்.

நான் பிற்பகலில் காலேஜில் இருந்து நேரே தியூப்ளே வீதி கஃபே ஹவுஸுக்கு வந்தபோது நச்சி தீக்குளிக்கப் போகிற பரபரப்பு இல்லாமல் காப்பி குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

’நானா, தீ குளிக்கறதா? ப தெ சான்ஷ் .. நம்பாதே .. சான்ஸே இல்லை. யாரோ கிளப்பி விட்டுட்டாங்க’, என்றான் நச்சி அலட்சியமாக.

நச்சி வெளியே போய் தன் ஸ்போர்ட்ஸ் சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்தபோது அவன் அப்பா சைக்கிள் ரிக்ஷாவில் வந்து இறங்கி, அவன் சட்டை காலரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது.

ஜீவகனை சினிமா தியேட்டரில் துக்கம் விசாரித்தபோது, நச்சியைக் கையோடு அப்பா சிதம்பரத்துக்குக் கூட்டிப் போய் விட்டதாகச் சொன்னான். அங்கே நிலபுலன்களில் ரெண்டு நாள் அலைந்து திரிந்து வருவதற்குள் ஊர் அமைதியாகி இருக்கும் என்பது அவர் கணக்காம்.

எது எப்படியோ, நானும் நச்சி தம்பி ஜீவகனும் எந்த இடையூறும் இல்லாமல் ‘உத்தரவின்றி உள்ளே வா’ கலர்ப் படத்தில் காஞ்சனாவை ரசிக்க ஓய்வாக இப்படி இன்று ஒரு பிற்பகல் அமைந்து போனது.

’மாதமோ ஆவணி’ போல பாட்டும் இல்லே. காஞ்சனா மாதிரி உலகம் முழுக்க வேறே அழகியும் இல்லே’ என்றான் ஜீவகன் படம் முடிந்து எழுந்தபோது. நான் ஆமோதிப்பதை ஜாக்கிரதையாகத் தவிர்த்தேன்.

’சரி வா, ராம் தியேட்டர்லே ஈவினிங் ஷோவுக்கு டயம் ஆயிடுத்து’.

அங்கே ’ரத்தக் காட்டேரியின் விழுப்புண்கள்’ என்று நோட்டீஸ் ஒட்டி இருந்தது நினைவில் வந்தது. என்ன படம் என்று விசாரித்தேன்.

‘ஸ்கார்ஸ் ஆஃப் டிராகுலா, கிஸ்தோபர் லீ படம. ஆரம்பிச்சுடும், சீக்கிரம் வா’.

அவசரம் காட்டினான் ஜீவகன்.

என்ன ரசனையோ. காஞ்சனாவைப் பருகிய கண்களால், பிசாசுப் பல்லோடு கிறிஸ்டோபர் லீயை எப்படிப் பார்க்க முடியும்?

’அப்பா ஊருக்குப் போய்ட்டார்னு ஒரேயடியா ஆட்டம் போடாதேடா. பாத்து ஆடு’.

என் பங்குக்கு புத்திமதி சொல்லி விட்டு, சொன்னேனே. கதவுத் தெரு வழியாக சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தேன்.

எதிரில் இருந்து ஒன்வே ஆக இருந்தாலும் கவலைப் படாமல் வேகமாக வந்து கொண்டிருந்தது இன்னொரு சைக்கிள்,

என் வண்டியில் இடித்து அது நின்றது. ’து யே ஃபு’ என்று ஆரம்பித்து தெரிந்த வரையில் மும்மொழியில் திட்டத் தயாரானேன்.

யார் அது?

எதிரி பார்ட்டியை ஒரு வினாடி பார்த்தேனா, பனிக்கட்டியாக உருக ஆரம்பித்தேன்.

ஜோசபின்.

மலையாள புளியிலைக்கரை முண்டு போல கரை போட்ட வெள்ளைப் புடவையும், முழங்கை வரை நீண்டு கவிந்த கருப்பு ரவிக்கையுமாக முதல் தடவையாக, கொள்ளை அழகாக அவளைப் பார்க்கிறேன். காஞ்சனா என்ன காஞ்சனா. நூறு காஞ்சனா ஒரு ஜோசபினுக்கு ஈடாகுமா?

’கோன்ஷெ ப்ரான்ஸெ’?

கொஞ்சுகிறது போல் அவள் விசாரித்தது புரியாமல் ஒன்ஸ் மோர் கோரினேன்.

’காலேஜுக்கு மட்டம் போட்டுட்டு பிரஞ்ச் லீவான்னு கேட்டேன்’..

அடிக்க ஆரம்பித்த கடற்கரைக் காற்றில் கலைந்து வழியும் தலைமுடியை புறங்கையால் ஒதுக்கியபடி என்னைப் பார்த்தாள் ஜோசபின். கட்டி அணைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அவளோடு காபி ஹவுஸ் அரையிருட்டிலாவது இப்போது இருந்திருக்கணும்.

’லீவெல்லாம் போடலே. லீவு விட்டுட்டாங்க. அது சரி, நீ எதுக்கு ஒன் வே தெருவிலே தப்பான திசையிலே வந்துட்டு இருக்கே? என் மேல் மோத வேறே மோதிட்டே. ஓரமா ஸ்டாண்ட் போட்டு நிறுத்து. தீர விசாரிக்கணும்.’

’என்னது’?

நான் தெரு ஓரமாக சாயந்திர வெய்யிலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க, சிரித்தபடி அவளும் வந்தாள். தீ குளிப்பதில் தொடங்கி சுருக்கமாகச் சொல்லி விரிவாகக் காஞ்சனாவை வர்ணித்தேன்.

கண்ணைக் குத்திவிடுவதாக விரலை நீட்டி மிரட்டினாள்.

மூக்கில் விரல் விட்டுக் குடைந்தபடி எதிரே வீட்டு வாசலில் நின்றிருந்த நீள மூக்கர் உள்ளே போய்த் தொலைந்தால் உடனே விரலைக் கடித்து விடுவேன் என்று ஜோசபினிடம் தெரிவித்தேன்.

சீ, அந்த ஆள் விரல் அசுத்தம் என்று அபிப்பிராயப் பட்டாள் ராட்சசி.

நீ எங்கே போய்ட்டிருக்கே? ஒபிதால் டியூட்டி இல்லையா?’

’திவ அலூப்.. விடிகாலையிலேயே டியூட்டி ஆரம்பிச்சு மூணு மணிக்கு ஃபினி. இப்போ ழாக் அங்கிளைப் பார்க்கப் போயிட்டு இருக்கேன்’.

’என்ன பேரு சொன்னே’?

’ழாக்’

மறுபடி மிழற்றினாள் ஜோசபின்.

’உரிச்ச வாழைப்பழத்தை நய்யக் குழச்சு ஊட்டின மாதிரி இருக்கு’ என்றேன்.

உரிச்சு உன் தலையிலே தான் தடவணும்’.

சொன்னபடி அவள் சைக்கிளை நகர்த்தி, ஒரு வினாடி பின்னால் திரும்பி என்னைப் பார்த்தாள். ரதி. காமிரா இருந்தால் அந்த வினாடியைச் சிறைப் பிடித்திருக்கலாம் என்று மனம் கிடந்து பதைபதைத்தது. காஞ்சனாவை விட, ஷர்மிளா தாகூரை விட, தீபாவளி மலரில் கோபுலு வண்ணப் படத்தில் வரைந்ததை விடப் பேரழகி, உத்தரவின்றி உள்ளே வந்து நாலு மாதமாகிறது.

’வெட்டியாத்தானே காஞ்சனாவை நெனச்சுக்கிட்டு சுத்திட்டிருக்கே. ழாக் அங்கிளைப் பார்க்க என் கூட வா. புதுசா ஒருத்தரை சந்திச்ச மாதிரியும் இருக்கும். பொழுதும் போகும். காஞ்சனா பயித்தியமும் தெளியும்’.

எனக்கு ஜோசபின் கிறுக்கு. அதை பிரஞ்சில் மொழிபெயர்த்து சொல்லுங்க காஞ்சனா என்று கேட்டேன். அவர் ரவிச்சந்திரனுடன் ஈவினிங் ஷோவில் ஆடத் திரைக்குத் திரும்பி விட்டிருந்தார்..

’இது ஒன் வே’.

ஜோசபினுக்கு திடீர் ஞாநோதயம் ஏற்பட்டதால், வலது பக்கத் தெருவான சின்னச் சுப்புராயப் பிள்ளை தெருவில் புகுந்து அங்கிருந்து மாண்டார்சியர் தெருவுக்கு வந்தோம். ஒரு பழைய கட்டடத்தின் முன் ஜோசபின் சைக்கிளை நிறுத்தினாள். நின்றேன்.

ஹாஸ்டல் மாதிரி இருக்கு என்றேன்.

’ஆமா, ஹோஸ்பிஸ் த பூன் .. புரியலையா. நீயே பாக்கப் போறே இப்போ’.

அந்தக் கட்டடத்தில் ரெண்டே ரெண்டு பேர் தவிர மீதி எல்லாருமே எழுபது வயசுக்கு மேற்பட்டவர்கள். நிறைய ஆண்கள். கொஞ்சம் போல் பாட்டிகளும் உண்டு. வித்தியாசமான ரெண்டு பேரும் கணவன், மனைவி. அசல் பிரஞ்சுக் காரர்கள். இந்த விடுதியை ஏற்படுத்தி நிர்வகிக்கிறவர்கள் என்று ஜோசபின் காதில் சொன்னாள். அவர்கள் அறுபது வயதைத் தொட்டவர்கள்.

ஜோசபினை ஆர்வமாக வரவேற்றார்கள் அந்தத் தம்பதிகள். உள்ளே சற்றே இருண்டிருந்த கூடத்தைக் காட்டி நீளமாக ஏதோ பேசினார் பிரஞ்சு அங்கிள். ஜோசபின் புன்சிரிப்போடு எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று அபயமளித்தாள். அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்.

’லெ பெதித் அமி’?

அந்த பிரஞ்சு அம்மணி என்னைக் காட்டிக் கேட்க, சற்றே வெட்கத்துடன் உய் என்றாள் ஜோசபின்.

’பாய் ப்ரண்டான்னு கேக்கறாங்க’.

என்னிடம் ஜோசபின் கிசுகிசுத்த போது அவள் முகத்தில் அலாதியான நாணம் பூத்திருந்தது. புடவை கட்டினால் வரும் போல, அதெல்லாம்.

அம்பலப்புழை அத்தை ஜாடையில் இருந்த பிரஞ்சு முது பெண்ணின் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருந்தது.

’பார்த்து வா. இங்கே படி இருக்கு’.

அரையே அரைக்கால் இருளில் நுழையும் முன் ஜோசபின் சொல்ல, அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

’லெ ப்யூட்டி அமி’?

என்னது?

’நீ தான்…அழகான கேர்ள் ப்ரண்ட்’.

’அய்யே’.

நாக்கைத் துருத்தாதே பெண்ணே. சொன்னால் கேள்..

‘கேர்ள் பிரண்ட்க்கு பிரஞ்ச் பெத்தி அமி’ என்றபடி அவள் என் கையை ஒரு வினாடி நெருக்கினாள்.

வரிசையான அறைகள் அரையிருட்டில் தெரிந்தன. நடுவில் இருந்த அறைக்கு முன் நின்று கதவை மெல்லத் தட்டினாள் என் பெத்தி அமி. ழாக் அங்கிள் என்று மெதுவாகக் கூப்பிட்டபடி என் கையை விடுவித்துக் கொண்டாள்.

’ஆந்த்ரே ஆந்த்ரே’.

உள்ளே வரச் சொல்லிக் கூப்பிடுகிற குரல் வரவேற்றது. கூடவே ஒரு மக்கிய வாடையும் மூக்கில் படத் தவறவில்லை.

திறந்திருந்த ஜன்னல் வழியே கடல் காற்று சில்லென்று அறைக்குள் சீராகப் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தது. நிலக் கடலைத் தோல் இடம் முழுக்கச் சிதறிக் கிடந்தது.

ஜன்னலைப் பக்கத்தில் ஈசி சேரில் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். வயதான அழுக்குக் குழந்தை போல கரடி படம் போட்ட கசங்கிய பச்சை பனியனும், அரை நிஜாருமாக இருந்தவர். மக்கிய வாடை அவரிடம் இருந்து தான் வந்தது என்று திடமாக நம்பினேன்.

அங்கிள் உட்கார்ந்தபடிக்கே ஜோசபினுக்கு முகத்தைத் திருப்பிக் காட்டினார். அவர் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள் ஜோசபின்.

என்னைக் காட்டி யார் என்று விசாரித்தார். பெத்தி அமி என்றேன் ஜோசபினைக் காட்டி. அவர் தொடர்ந்து ஆச்சரியத்தைப் பிரஞ்சில் வெளியிட்டார். ஒன்றும் புரியாமல் தோற்றேன் என்று ரெண்டு கையையும் மேலே தூக்கிக் கும்பிட்டேன்.

ழாக் அங்கிள் குழந்தை போல கலகலவென்று சிரித்தார்.

அவனுக்கு பிரஞ்சு தெரியாது என்று ஜோசபின் சொல்ல இங்கிலீஷுக்கு மாறினார். அழகான உச்சரிப்பும் வேகமுமாக இருந்த அந்த மொழியும் புரியவில்லை என்று சொல்ல வெட்கம். சும்மா இருந்தேன். கவனித்துக் கேட்க அர்த்தமாகியதின் சாரம் இது –

ழாக் அங்கிள் என்ற ஜாக் தானியல் இருதயநாதன் இங்கே பிறந்து வீட்டிலும் வெளியிலும் பிரஞ்சும் சுமாராகத் தமிழும் பேசுகிறவர். நாலு தலைமுறை முன் பிரஞ்சுக்காரத் தொடர்பு இருந்த குடும்பம் அவருடையது. அவர் ஆனால் மெட்றாஸில் தான் முழுக்க முழுக்க வேலை பார்த்தது. இருபது வருடம் நியூரோ சர்ஜன் டாக்டர் ஸ்டோன்ஸ் துரையிடமும், அதன் பின் இன்னொரு பதினைந்து வருடம் துரைக்கு சீடராகிய டாக்டர் ராமபத்திரனிடமும் மெடிக்கல் ஆர்டர்லியாக இருந்தவர். மாம்பலம், மைலாப்பூர், மந்தவெளி, கீழ்ப்பாக்கம், சால்ட் கொட்டார்ஸ் என்று சென்னை முழுக்க நண்பர்கள் உண்டு. வயது இந்த டிசம்பர் வந்தால் எழுபத்தேழு. தனிக்கட்டை. மனைவி ரீட்டா தானியல் இறந்து இருபது வருடமாகிறது. ஒரே மகன் ஆல்பர்ட் ஐந்து வயதில் டிப்தீரியாவில் போய் விட்டான். அது நாற்பத்தைந்து வருடம் முந்தி. வேறே சந்ததி கிடையாது.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஜோசபின் ஓரமாகப் போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்து அங்கே வைத்திருந்த ஏர்மெயில் கடிதத்தை சீராக எழுதி முடித்திருந்தாள்.

யாருக்கு எழுதறே என்று கேட்டேன்.

ழாக் அங்கிளோட தங்கச்சி மகன் பிரான்ஸிலே இருக்கார். கசாப்புக்கடை வச்சிருக்கார் பரீ-லே. அவருக்கு மாசம் ஒரு லெட்டர் எழுதுவார் அங்கிள்.

சொல்லிவிட்டு கடகடவென்று தான் எழுதிய கடிதத்தைப் படித்தாள் அவள். முழுக்க பிரஞ்சில் இருந்ததால் அட்சரம் புரியாவிட்டாலும், ரொட்டீன் நான் சவுகரியம், நீ சௌக்கியமா, ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி, ராத்திரி நேரத்துக்கு உறங்கு லீவுக்கு வந்து போ ரக விஷயங்களாக இருக்கும் என்று ஊகித்தேன்.

கைப்பையைத் திறந்து பவுண்டன் பேனா எடுத்து கடிதத்தில் ழாக் அங்கிளின் கிறுக்கலான கையெழுத்தை வாங்கினாள் ஜோசபின். கையொப்பம் இட்ட அசதியில் அங்கிள் சற்றே கண்ணயர, அவள் பேனாவை மேலுடுப்பில் குத்திக் கொண்டாள்.

‘அங்கே வேணாம். எடுத்து கைப்பையில் வை’ என்றேன்.

‘ஏய், எதுக்கு அங்கே எல்லாம் பார்க்கறே?’

அவள் பொய்க் கோபம் காட்ட, நான் பதில் சொல்வதற்குள் ழாக் அங்கிள் கண் திறந்தார்.

’மாத்திரை கொண்டு வந்திருக்கியா குழந்தே’?

குத்தி எழும் இருமலுக்கு நடுவே விசாரித்தார்.

உய் என்றபடி ழாக் அங்கிளின் மேஜையைத் திறந்தாள் ஜோசபின். அங்கே இருந்த மருந்து மாத்திரைகளைக் கவனமாகப் பார்த்து, சிலவற்றைக் குப்பைக் கூடையில் போட்டாள். அதெல்லாம் காலாவதியாகிப் போனவையாம்.

’அங்கிள் ரொம்ப தூக்க மாத்திரை சாப்பிடறதா தெரியுது. அதையும் பாதி தூக்கிப் போட்டுட்டு அதே மாதிரி சிவப்பு கலர் வைடமின் மாத்திரை வச்சுட்டேன்’.

அவள் என் தோளைப் பற்றி காதில் கிசுகிசுக்க, ழாக் அங்கிளின் தூக்க மாத்திரைக்கு நன்றி சொல்லத் தோன்றியது. வேறு எந்த மருந்தை மாற்றி என்னிடம் சேதி சொல்லப் போகிறாள் என்று காத்திருக்க ஒன்றும் இல்லை.

கைப்பையில் இருந்து ரெண்டு அட்டை வேறு ஏதோ மாத்திரையை எடுத்து, இதெல்லாம் ரத்த அழுத்தம் கம்மி பண்ண, பகல் சாப்பாட்டுக்கு பிறகு தினம் ஒண்ணு போட்டுக்குங்க என்றாள். அந்த மாத்திரைகளை மேஜை டிராயரில் வைத்தபடி, மேலே இருக்கு மஞ்சள் கலர் என்று அவள் தொடர, நல்ல பிள்ளையாக ழாக் அங்கிள் தலையாட்டினார்.

’குளிக்கறதையே விட்டாச்சு போல அங்கிள். இருங்க. ஸ்பாஞ்ச் பாத் கொடுத்திடறேன். ரெண்டே நிமிஷம்’.

அவள் அறை ஓரமாக இருந்த இரும்பு வாளியோடு வெளியெ போகும் முன் புடவையை அள்ளிச் செருகிக் கொண்டு இடுப்பைப் பார்த்துக் கொண்டாள்.

பாக்காதேடா என்று தணிந்த சத்தத்தில் சொல்ல நான் அதையே செய்தேன். என்னை முறைத்தபடி புடவையை இடுப்பைக் கூடியவரை மறைக்க இழுத்துவிட்டுக் கொண்டு அவள் நகர, ழாக் அங்கிள் இருமல் சத்தம் தொடர்ந்தது. .

’என்னை மெட்றாஸ் கூட்டிப் போறியா’?

ழாக் அங்கிள் கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜோசபின் தண்ணீர் கொண்டு வரப் போயிருப்பதை அவரிடம் சொன்னேன்.

‘ஜோசபினை இல்லே, உன்னைத் தான் கேட்டேன் மேட். என்னை மெட்றாஸ் கூட்டிப் போறியா’?

சட்டென்று ழாக் அங்கிள் என் கையை பற்றிக் கொண்டார். கெஞ்சுகிற தோரணையில், அவருடைய வாழ்வே நான் சொல்லப் போகிற பதிலில் இருக்கிறது என்று எதிர்பார்த்தது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் கலங்கி, கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

’கீழ்ப்பாக்கம் சிமெட்ரியிலே ரீட்டா தூங்கிட்டு இருக்கா. அவளைப் போய்ப் பார்த்து இருபது வருஷம் ஆச்சு. ஒரு பூங்கொத்து போதும். ரொம்ப எதிர்பார்க்க மாட்டா. கல்லறையை சுத்தம் பண்ணி பூ வச்சுட்டு அவளும் நானுமா ஆல்பர்ட்டைப் பாக்கணும். பக்கத்திலே தான் உறங்கிட்டு இருக்கான். ரொம்ப விஷமக்காரன். அவனுக்கு எடுத்துப் போக கீ கொடுத்தா ஓடற நாய் வாங்கிட்டு போயிடலாம். கமர்கட்டும் மறக்காம வாங்கிக்கணும்’.

நாற்பத்தைந்து வருடம் முன்னால் இறந்து போன ஆல்பர்ட் இன்று இருந்தால் அவனுக்கு அவருக்கு ஐம்பது வயதாகி இருக்கும். என்றாலும் ழாக் அங்கிள் நினைப்பில் ஆல்பர்ட் இன்னும் கமர்கட்டுக்காகக் காத்திருக்கும் ஐந்து வயதுப் பையன் தான் என்று பட, மனம் கனத்தது.

ஜோசபினோடு இங்கே வந்திருக்கக் கூடாதோ.

ஜோசபின் வாளியில் பாதி நிறைத்த தண்ணீரோடு உள்ளே வந்தாள். என்ன என்று என்னைப் பார்வையால் விசாரித்தாள். ஒன்றுமில்லை என்று தோளைக் குலுக்கித் தெரிவித்தேன்.

’ஜோசபின், நீயாவது என்னை மெட்றாஸ் கூட்டிப் போயேன். மயிலாப்பூர் கோவில் பக்கம் மாடவீதியிலே ஆசை தீர நடக்கணும். கற்பகாம்பாள் மெஸ்ஸிலே இட்லி, காப்பி சாப்பிடணும். காளத்தி கடையிலே ரோஸ்மில்க் குடிக்கணும். அம்மிணி அம்மாள் தெருவிலே என் சிநேகிதர் ரிடையர்டு பேங்க் ஜெனரல் மேனேஜர் ரங்காச்சாரியோட உட்கார்ந்து முப்பது வருடப் பழங்கதை பேசணும். பார்டர் தோட்டத்திலே இன்னொரு சிநேகிதன் நாயுடு இருக்கான். வா வான்னு அவனும் கூப்பிடறான். போய்த் தலையைக் காட்டணும். அப்புறம் கீழ்ப்பாக்கம் சிமெட்ரியிலே.

அவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

’ழாக் அங்கிள், நிச்சயமா நாம போவோம். அடுத்த வாரமே போகப் போறோம்’.

என் குரலில் தெரிந்த உறுதி எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ழாக் அங்கிள் கைதட்டி நான் சொன்னதை வரவேற்றார். கைப்பையில் இருந்து ஒரு ஸ்டெயின்லெஸ் டப்பாவை எடுத்தாள் ஜோசபின். அதன் வட்டமான மூடியைத் திறக்க முடியாமல் என்னிடம் நீட்டினாள், திறந்ததும் உள்ளே நீளநீளமாக வாழைக்காய் பஜ்ஜி கண்ணில் பட்டது. நான் ஒன்றைக் கையில் எடுத்துக் கொள்ள, அவள் அவசரமாகப் பிடுங்கினாள்.

‘வேணாம்டா. ஃபிஷ் கபாப்.’

நான் விரலை எங்கே துடைக்க என்று பார்க்க, கையை இழுத்துப் புடவைத் தலைப்பால் அழுத்தித் துடைத்து விட்டாள்.

ழாக் அங்கிள் மெட்றாஸ் போகும்போது என்ன எல்லாம் செய்யப் போகிறார் என்று விரிவாக எடுத்துரைத்தபடி உற்சாகமாக ஜோசபின் ஊட்டிய மீன் பஜ்ஜியை ரசித்துத் தின்று கொண்டிருந்தார்.

நாங்கள் வெளியே வரும்போது, பின்னால் இருந்து கூப்பிட்டார் அவர்.

’எனக்கு ஒரு நிக்கரும் சட்டையும் வாங்கிட்டு வந்துடு மேட். பழைய உடுப்போட போனா, ரீட்டா திட்டுவா’.

திரும்பிப் பார்த்து சரி வாங்கிடலாம் என்றேன்.

’அடுத்த வாரம் போறோம். மறந்துட மாட்டியே’?

அவர் கேட்க, மாட்டேன் என்று சிரித்தபடி சொன்னேன். ஜோசபின் வாசலுக்குப் போயிருந்தாள். அவள் நடையில் வேகம் தெரிந்தது. கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு அவளோடு சேர்ந்து கொண்டேன்.

’எதுக்கு அங்கிள் கிட்டே நடக்க முடியாத காரியத்துக்கெல்லாம் பிராமிஸ் பண்றே? உன்னை கூட்டியே வந்திருக்கக் கூடாது’.

என்னைத் தவிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு ஜோசபின் விலகி நடக்க, நான் வலிந்து கூட நடந்தேன். ஆளாரவம் இல்லாத ஹால் வாசலில் சற்றே நின்றாள். நின்றேன்.

’நடக்கற காரியம் தான் சொல்றேன். நடத்திக் காட்டலாம்’ என்று நம்பிக்கையாகச் சொன்னேன்.

’எப்படிச் செய்யறது? யாரு கூட்டிப் போறது? அவரால போகத்தான் முடியுமா? அஞ்சு பத்தில்லை வயசு. எழுபத்தாறு. ஞாபகம் வச்சுக்க. எதோ ஜேசு புண்ணியத்திலே இன்னும் மெல்ல மெல்லவாவது நடமாடிட்டிருக்கார்’.

’சரி, உனக்கு திங்கள்கிழமை டியூட்டி ஆஃப் தானே’?

ஆமா அதுக்கென்ன இப்போ? லீவுன்னு பேரு.. யூனிபாரம் துவைச்சுக் காயப் போட்டு, வீடு சுத்தம் பண்ணி, சமையல் செஞ்சு வைக்கவே அது முழுக்க ஓடிடும்.. அப்புறம் ..மாசாந்திர தொந்தரவு நேரம் வேறே’.

அவள் சங்கடத்துடன் சொன்னது புரிந்தது.

’எனக்காக திங்கள்கிழமை கொஞ்சம் சிரமத்தைப் பொறுத்துக்க சில் வொ ப்லெ’ என்றேன். ஜோசபின் பதில் எதுவும் சொல்லவில்லை.

’எனக்கு வரும் திங்கள்கிழமை ஜெனரல் ஸ்ட்ரைக். காலேஜ் கிடையாது. அப்பாவும் ஊருக்குப் போயிருக்கார். நாம ரெண்டு பேரும்’.

’வேணாம். அது வேறே எங்கேயாவது இட்டுப் போயிடும்’ என்றாள் அவசரமாக. ஊசுட்டு ஏரிக்குப் போன மாதிரியா என்று அப்பாவியாக விசாரித்தேன்.

’அங்கே நீ தண்ணிக்குள்ளே விழுந்தியோ நான் பிழச்சேனோ. இது தண்ணி இல்லே. கட்டாந்தரை’.

அவள் கண்களில் குறும்பு மின்னியது. கட்டாந்தரையில் என்ன செய்யணும் என்று எதிர்பார்க்கிறாய் பெண்ணே?

’நாம ரெண்டு பேரும் விடிகாலை அஞ்சு மணிக்கு மெட்றாஸ் பஸ் பிடிக்கலாம். அதுக்கு முந்தி, நீ விடுதியிலே சொல்லி அங்கிளை ரெடி பண்ணிடு. ஒரு முழு நாள் மெட்றாஸ்லே. ராத்திரி ஏழுக்கு பஸ் பிடிச்சா பதினோரு மணிக்கு இங்கே. அவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டா எக்ஸ்பிரஸ் பஸ்ஸிலே..’

’பஸ் எல்லாம் வேணாம்’ என்று ஜோசபின் முதல் தடவையாக என் திட்டத்தை ஆமோதித்தாள்.

’எங்க ஆஸ்பத்திரிக்கு மெட்றாஸ்லே இருந்து பிரட், மெடிசின், பஞ்சு, இப்படிப் பலதும் டெலிவரி பண்ண பெரிய வேன் சென்னையிலே இருந்து ராத்திரி எட்டுக்குக் கிளம்பும். இங்கே டெலிவரி பண்ணிட்டு காலையிலே ஆறு மணிக்கு மெட்றாஸ் திரும்பும். சீஃப் கிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டா அதிலேயே சௌகரியமாப் போய்ட்டு வந்துடலாம். அங்கிளும் சமத்தா வருவர். ஆமா, மெட்றாஸ் போய் என்ன செய்ய’?

நான் பூடகமாகச் சிரித்தேன். காம்பவுண்ட் பக்கம் நடந்தோம். கவனமாக் கேளு என்று ஆரம்பித்தேன்.

’ஏய், நீ நம்பியார் மாதிரி பேசறே, மத்த வில்லன்களைக் கூட்டி வச்சு திட்டம் தீட்டற நம்பியார் மாதிரி முழி வேறே. நான் கேட்க மாட்டேன், பார்க்க மாட்டேன்’.

கேக்காட்ட, இடுப்பை வளைச்சுப் பிடிச்சு குண்டுக் கட்டா தூக்கிட்டுப் போயிடுவேன்’.

எங்கே தூக்குடா பார்க்கலாம் என்று காம்பவுண்ட் சுவர் அருகே உறுதியாக பின்னால் கை கட்டி நிற்க, நான் முயன்றேன். வேண்டுமென்றே தோற்ற சந்தோஷம். அவசரமாக முத்தமிட்ட சந்தோஷம்.

’அங்கிள் மயிலாப்பூர்லே யாரோ சிநேகிதர் இருக்கார்னு சொன்னாரே அங்கே யோ மந்தவெளியிலே இன்னொருத்தர் பேர் சொன்னாரோ அங்கேயோ கொண்டு போய் விட்டுட்டு, சாயந்திரம் கூட்டிப் போறதாச் சொல்லிடுவோம். சாயந்திரம் நேரே சிமெட்ரி. அப்புறம் திரும்ப வேண்டியதுதான்’.

அங்கிளுக்கு பொழுது போகும், சரி. நீயும் நானும் என்ன பண்ணறதாம்? லோ லோன்னு வெய்யில் பாழாகாமே, செண்ட்ரல், எக்மோர், மூர் மார்க்கெட், மிருகக் காட்சி சாலை, பீச்சுன்னு அலையப் போறோமா?

’உனக்கு இஷ்டம்னா கையைக் கோர்த்துக்கிட்டு அலையலாம்’.

’கையை எல்லாம் கோர்த்துக்க வேறே பொண்ணைப் பாரு’.

இவ்வளவு ஷார்ட் நோட்டீஸ்லே கிடைக்குமான்னு தெரியலே. ட்ரை பண்றேன் என்று சொன்னேன். கைப்பையால் தலையில் மொத்தினாள். எச்சில் பாத்திரத்தால் அடித்தது வலித்தது. கடங்காரி என்றேன் ஆசையாக. போடா என்றாள்.

’அலைய இஷ்டமில்லைன்னா நாம சினிமா தியேட்டர்லே’ என்று ஆரம்பித்தேன்.

’இருட்டிலே உன் கூட உக்கார முடியாது’. ரொம்பவே உஷாராக இருந்தாள்.

’சரி, வேறே வேறே வரிசையிலே உக்காந்துப்போம். நாள் முழுக்க முடியாத சினிமா’.

அது என்ன சமாசாரம் என்று விசாரித்தபடி பக்கத்தில் சைக்கிள் ஓட்டி வந்தாள் ஜோசபின்.

’மவுண்ட் ரோட் சபையர் தியேட்டர் தெரியுமா’?

கேட்டிருக்கேன் என்றாள்.

’அங்கே மூணு தியேட்டர் இருக்கு. அதுலே நடுவாந்தரமா ப்ளூ டைமண்ட்’.

’டியமொ ப்லூ’?

’நான் உன்னை பிரஞ்சுலே சொல்லச் சொன்னேனா’?

’இல்லே’.

’அப்ப கம்முனு கேளு. கேட்காட்ட’.

’விட்டுட்டுப் போயிடுவியா’?

’மாட்டேன். ஆனா, தெரு ஓரமாக் கூட்டிப் போய் இடுப்பிலே’.

ஏய் சும்மா இருடா என்று அவசரமாகப் புடவைத் தலைப்பை ஒரு கையால் இழுத்து விட்டுக் கொண்டாள். ப்ளூ டயமண்டிலே என்ன விசேஷம் என்று கேட்டாள்.

’காலையிலே பத்து மணி தொடங்கி, ராத்திரி ஒரு மணி வரை சினிமா ஷோ. ஒரே படம். முடிச்சு முடிச்சு திரும்ப ஆரம்பிக்கும். எப்போ வேணும்னாலும் உள்ளே போகலாம். எப்போ வேணும்னாலும் வெளியே வரலாம்’.

நானே தியேட்டர் உரிமையாளர் மாதிரி சினிமா தியேட்டரின் பெருமைகளை அளந்து கொண்டே போக, நிறுத்தினாள்.

’ப்ளூ டயமண்ட்லே நாலைஞ்சு மணி நேரம் ஏசியில் உட்கார்ந்து படம் பார்த்துட்டு திரும்ப போறோம்.. அதானே’.

திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திருப்தியில் குஷியாக தியூப்ளே வீதியில் வண்டியைத் திருப்ப, ஜோசபின் சரிடா பார்த்துப் போ என்று கரிசனம் காட்டியபடி புல்வார்டில் போய் விட்டாள்.

ராத்திரி இன்ப அதிர்ச்சியாக வீட்டு டெலிபோனுக்கு பேசி, அங்கிளிடம் சொல்லி விட்டதாகச் சொன்னாள்.

‘அவர் ரொம்ப எக்சைட் ஆகிட்டார். பயங்கர சந்தோஷம்’ என்றாள்.

’நீ சந்தோஷமா’?

’ஆமா’.

’அப்போ எனக்கு ஒரு கிஸ் கொடு’.

’ஏய் போன்லே எப்படி.. அதுவும் ஒபிதால்லே இருந்து?’

’உன் டெலிபோன் ரிசீவருக்குக் கொடு. இங்கே எடுத்துக்கறேன்’.

அன்றைக்கு ராத்திரி தூங்கவில்லை. ஜோசபின் கொடுத்த முதல் முத்தம் அது. டெலிபோன் வழியாக இருந்தால் என்ன? எ கிஸ் இஸ் எ கிஸ் இஸ் எ.

சாரி மேட். எல்லாக் கதையும் சுபமாக முடியணும் என்று கட்டாயமா என்ன?

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊர்ப் பெரியவர்கள் கூடி வெளியே இருந்து வந்தவர்களோடு தகராறு இருந்தால் அவர்களே கூடி உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார்கள். படிக்கிற பசங்களை இதில் இழுத்து விட்டுப் படிப்பு பாழாக வேணாம். இவங்க கோடு போட்டா ரோடு போடற புள்ளைங்க. மீட்டிங் பேசு, கோஷம் போடு. சரி. அது எதுக்கு தீக்குளிக்கறது? மகா அல்பமான நடைபாதை தாவா, வாய்க்கால் வரப்பு தகராறு எல்லாம் தீர்த்துக்க உசிரு என்ன மனுஷனுக்கு ஏழெட்டு இருக்கா என்ன? போங்கடா, நாளைக்கு மரியாதையா ஸ்கூலுக்கு காலேஜுக்குப் போங்க. அப்பன் ஆயி கஷ்டப்பட்டு காசு சேர்த்து படிக்க வச்சது நீயும் முன்னுக்கு வரணும் அவங்களுக்கும் பிற்காலத்திலே ஆதரவா இருக்கணுமுன்னு தானே.

ஞாயிற்றுக்கிழமை ஜோசபினுக்கு ராத்திரி ஷிப்ட் என்பதால், ராத்திரியில் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி ஆஸ்பத்திரி வாசலில் அவளை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தேன். ஜோசபின் தோழி எமிலி கண்ணில் பட்டாள், அவளிடம் சேதி சொல்லி விட்டேன்.

அவசரமாக வந்த ஜோசபின் என்னடா என்றபோது அவளுடைய ஒரு கால் திரும்பிப் போகப் பின்னால் போயிருந்தது. நோயாளிக்கு டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருக்கிறாளாம்.

’நாளைக்கு நான் காலேஜ் போக வேண்டியிருக்கு. ஸ்ட்ரைக் ரத்தாம்’.

’போ’.

’இல்லே நீ ஏற்பாடு எல்லாம் செஞ்சிருப்பே. நான் காலேஜ் கட் பண்ணட்டா’?

’உனக்கு அறிவில்லையா? அப்படி படிப்பைக் கெடுத்துக்கிட்டு போகாட்ட மெட்றாஸ் ஒண்ணும் ஓடிப் போகாது. பின்னாலே எப்போவாவது போகலாம்’.

’ழாக் அங்கிள்’?

’அவரை விடு. நான் பாத்துக்கறேன்’.

அவள் திரும்பி விட்டிருந்தாள்.

நான் திங்கள் காலை காலேஜ் போக பாரதி தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து நிறுத்தாமல் மணிச் சத்தம்.

ஜோசபின்.

காலை ஊன்றி சாரி ஜோசபின் என்று மிச்ச சொச்சம் வருத்தத்தைப் பிரகடனப்படுத்தினேன்.

’இட்ஸ் ஆல்ரைட் டா’.

’ழாக் அங்கிள் ஏமாந்துட்டார் பாவம்’.

அவள் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்தபடி நின்றாள்.

வீக்லி லீவு நாள். நீ ஏன் இங்கே சுத்திட்டிருக்கே என்று கேட்டேன்.

ஒரு வினாடி தயங்கினாள்..

’ழாக் அங்கிள் நேத்து ராத்திரி காலமாயிட்டார்டா’.

என்னது?

’ஆமா, ஹோஸ்பிஸ் அட்மின் சொன்னாங்க, ரெண்டு நாளா மெட்றாஸ் போறேன் மெட்றாஸ் போறேன்னு ஒருத்தர் விடாமச் சொல்லி எக்சைட்டட் ஆக இருந்தாராம். திருவிழாவுக்குக் கூட்டிட்டுப் போறதா சொல்லியிருந்த குழந்தை மாதிரி எதிர்பார்த்து அதையே நினைச்சு அதையே பேசி ரத்த அழுத்தம் அதிகமாகிடுத்தாம். நேத்து ராத்திரி நெஞ்சடைப்பு. இல் லெ மோர். அவர் இனி இல்லை’.

நான் மவுனமாக நின்றேன். என் தப்பு தான். நான் ஆசை காட்டாவிட்டால் ழாக் அங்கிள் மெட்றாஸ் கனவுகளில் உசிரைத் தொலைத்திருக்க மாட்டார்.

’அப்படி இல்லேடா. அவருக்கு போகிற வயசு தான். நேத்து இல்லாட்ட அடுத்த மாசம் இல்லே அதுக்கு ஒரு பத்து நாள் கழிச்சு கர்த்தர்லே உறங்கியிருப்பார்’.

இரண்டு பேரும் எதுவும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சரி, நான் போய்ட்டு வரேன் என்று ஜோசபின் கிளம்ப எங்கே என்று கேட்டேன்.

’ழாக் அங்கிளுக்கு சம்பா கோவில்லே ப்யூனரல் செர்வீஸ். முடிச்சு சிம்தியெ கல்லறையிலே நல்லடக்கம்’.

’போகலாம் வா’ என்று சைக்கிளைத் திருப்பினேன்.

அவள் எதிர்த் திசையில் கைகாட்டினாள். கண்டிப்பு பார்வையில் நிறைந்து இருந்தது. குரல் கணீரென்று வந்தது.

’காலேஜுக்கு போற ரோடு அது’.

ஜோசபின் போயிருந்தாள்.

உலகத் தனிமை எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே கவிய நான் அவள் காட்டிய பாதையில் பயணப் பட்டேன்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன