புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 46 இரா.முருகன்


ஆவக்கா ஊறுகா இருந்தாப் போடேன் பாட்டி. மொட்டை ரசஞ்சாதமா எப்படி சாப்பிடறது?

திலீப் தட்டில் பரப்பி வைத்த தணுத்த சாதமும் மேலே மிதக்கும் ரச வண்டலுமாகத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி, வாசலைப் பார்த்துச் சத்தம் போட்டான்.

வச்சுண்டா வஞ்சகம் பண்றேன், ஏண்டா? ஊர்லே இருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தது முழுக்க நீதான் தின்னு தீர்த்தே. ஜனனிக்கு ஒரு எவர்சில்வர் டப்பாலே போட்டுக் கொண்டு போய்க் கொடுடான்னு தாவாக்கட்டையைப் பிடிச்சுக் கெஞ்சினேன். போடி கெழவின்னு குண்டியைத் தட்டிண்டு கிளம்பிட்டே. உன் தங்கை தானே அந்தக் கொழந்தையும்? கொடுக்கணும்னு தோணாதோ?

பாட்டி பதிலுக்கு இரைந்து வழக்கமான குற்றப் பட்டியலைப் படித்தாள். மதராசில் இருந்த கற்பகம் பாட்டி இல்லை இவள். மதராசுக்கு இவளை கூட்டி வரப் போன திலீப்பும் இல்லை ஊறுகாய்க்காகக் காத்திருக்கிறவன்.

எல்லாம், எல்லோரும் மாறிக் கொண்டிருக்கும் போது, இல்லை என்று நம்பி அழுத்தமாக மனதில் பழசைப் பிடித்து வைத்து ஆற்றிக் கொள்ளப் பார்க்கிற சிரமம் தெரியத்தான் செய்கிறது.

திலீப்புக்கு அதெல்லாம் வேண்டாம். ஒரு துண்டு ஆவக்காய் இருந்தால் போதும். இந்த ரசஞ் சாதத்தையும், தொடர்ந்து கொஞ்சம் போல் நீர்க்கக் கரைத்த மோர் ஊற்றிப் பிசைந்து மோருஞ்சாதத்தையும் விழுங்கி விட்டுப் பாயை விரித்து விடலாம்.

மோருஞ்சாதம் சாப்பிடுகிற கலகக் காரன். காசு கொடுத்தால் என்ன அவதாரம் வேண்டுமானாலும் எடுக்க திலீப் தயார் தான். உடுப்பி ஓட்டல் வாசலில் சோடா பாட்டில் எறிகிறவன், ஜீப்பில் தலைவர் ஊர்வலம் வரும்போது ஆம்புலன்ஸ் வருவதற்காகச் சத்தம் போடுவது போல் படபடப்போடு விலகச் சொல்லிக் கூவி, தலை தெறிக்கும் வேகத்தில் ஜீப்போடு ஒடி வருகிறவன், கூட்டம் முடிந்து தலைவர் கிளம்பும்போது நிதானமான வேகத்தில் ஆதரித்துக் கோஷம் போட்டபடி திரும்ப லொங்கு லொங்கென்று ஜீப்போடு கூட ஓடுகிறவன், மைக்கைப் பிடித்து ஆவேசமாக சி.சுப்பிரமணியத்துக்கும், க்ருஷேவுக்கும், ஜான் கென்னடிக்கும் சவால் விட்டுச் சாதிக்கச் சொல்லி மராத்தியில் இரைகிறவன். சித்திவினாயகர் கோவில் வாசலில் செருப்புப் பார்த்துக் கொள்ள டோக்கன் தருகிறவன். மெரின் ட்ரைவ் கக்கூசில் பத்து பைசா கட்டணம் வாங்கி பாத்ரூம் உபயோகிக்க விடுகிறவன், ராஜ்புத் ரெஸ்டாரண்டில் வடா பாவும் சாபுதானா வடையும் கொண்டு வந்து விநியோகித்து பில் கொடுத்து டிப்ஸ் வாங்குகிறவன், சர்ச் கேட்டில் பஞ்சும் குச்சியுமாகக் காது குடைந்து விடுகிறவன். காசு கிடைக்குமானால் எதுவும், நல்லது என்று இல்லாவிட்டாலும் கெடுதல் அல்லாத காரியம் எதுவும் செய்ய திலீப் தயார் தான்.

இந்தாடா கொட்டிக்கோ.

கற்பகம் பாட்டி கண்ணைக் கவிந்து கொண்டு குழந்தைக்குப் புகட்டுகிற சங்கு மாதிரி இத்தணூண்டு கிண்ணம் வழிய ஊறுகாய் கொண்டு வந்து நீட்டினாள். திலீப் முகத்தில் சிரிப்பு திரும்பி வந்திருந்தது. பாட்டியும் சிரித்து விட்டாள்.

ஏண்டி கெழவி, வச்சுண்டே வஞ்சகம் பண்றியே. நீலகண்டன் தாத்தாவுக்கு எடுத்து வச்சியோ?

ஆமாடா, அவர் ஆயுசோட இருந்தா நான் உங்களோட எல்லாம் லோல்படாம கவுரதயோட பட்டணத்திலேயே நாலு பேர் கால் பிடிச்சு விட, நாலு பேர் வெந்நீர் கொடுக்க, நாலு பேர் எண்ணெய் தேச்சுக் குளிச்சு விட சுகம் கொண்டாடிண்டு, சௌக்கியம் பாராட்டிண்டு இருந்திருப்பேன். என் தலைவிதி.

பாட்டி கிண்டலாகச் சொன்னாலும் அதில் ஒரு பகுதியாவது அவள் மனம் நம்புகிறது. திலீப்புக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது. தஞ்சாவூர் மிராசுதாரின் ஒரே பெண். அதிகாரம் தூள் பறக்கும் இமிக்ரேஷன் ஆபீஸ் சூப்பரிண்டெண்ட் பெண்டாட்டி. இங்கே பம்பாய் சாலில் சகலருக்கும் சிசுருஷை பண்ணிக் கொண்டு இருக்கப் பட்ட இறுதி நாளெல்லாம் வாதனைப் படவேணும் என்று தலையெழுத்தா என்ன அவளுக்கு?

மாங்காயைத் தான் காணோம். மத்தபடி ஊறுகாயே தான்.

விழுதாகச் சாதத்தில் விரகிப் பிசைந்து அவசரமாக அள்ளி விழுங்கினான் திலீப். இதுவும் சந்தோஷம் தான்.

மாங்காய் ஒரு கஷணமும் பரணியிலே பாக்கி இல்லே கேட்டுக்கோ. விழுது இருக்கு. அதுவும் இன்னும் ரெண்டு நாள் வரும். அப்புறம் சுகுதான்.

பாட்டி இடக்கரடக்கலாக ஊறுகாயோ விழுதோ இல்லாத, இன்னும் இரண்டு நாள் கடந்த பின் வரும் தினங்களைக் கோடிட்டுக் காட்ட, திலீப் சிரித்தான்.

கவலையே படாதே. நாளைக்கு சாயந்திரம் மடுங்காவிலே மாங்கா வாங்கி அரிஞ்சு எடுத்துண்டு வந்துடறேன். உப்பு, மொளகா, எண்ணெய் எல்லாம் கூடவே வந்துடும். யூ ஸ்டார்ட் தி மியூசிக் யங் லேடி.

திலீப் அபயம் அளித்தான். இன்றைக்கு இந்த விஷயம் நினைவு வராமல் போய்விட்டது. வந்திருந்தால், அகல்யாவை வைத்து இந்த ஊறுகாய்க் கொள்முதலை முடித்திருக்கலாம்.

அட சே, நேசம் வைத்த பெண்ணை கையைப் பிடித்து வெளியே கூட்டிப் போய் ஆவக்காய் ஊறுகாய்க்கான சாமக்கிரியைகள் வாங்கச் சொல்வது என்ன மாதிரி காதலில் சேர்த்தி?

திலீப் திலீப்பு

அம்மா சுவரைப் பிடித்தபடி நடந்து உள்ளே வந்தாள். கை நீட்டி திலீப்பைப் பார்த்துக் கெஞ்சலாகவும் பிடிவாதமாகவும் சொன்னாள்.

திலீப் கண்ணு, சீக்கிரம் சாப்பிட்டு வா. நான் ஆடப் போகணும். காத்துட்டிருக்காங்க. நேரு வந்திருக்காராம்.

நேரு போய்ச் சேர்ந்தாச்சு ஆயி.

திலீப் சொல்ல சோறு மென்றபடி இருந்த அவன் வாயை அவசரமாகப் பொத்தினாள் அம்மா. புரையேறியது திலீப்புக்கு. நேரு இருந்து விட்டுப் போகட்டும். அவர் கொஞ்ச நேரம் பக்கத்தில் திரும்பி யஷ்வந்த்ராவ் சவாணோடும் கிருஷ்ண மேனனோடும் அரட்டை அடிக்கட்டும்.

நான் மோருஞ் சாதம் சாப்பிட்டு முடித்து எச்சில் தாம்பாளம் அலம்பி வைத்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க முடியும். அதுவரை நீ உறங்கிக்கோ அம்மா. வந்து எழுப்பறேன்.

திலீப் சொல்லிக் கொண்டிருக்க, ஒரமாகப் பத்தமடைப் பாயை விரித்து மெழுகு சீலைத் தலையணையைப் போட்டாள் கற்பகம்.

படுடீ. படுத்தாமப் படு. தாலாட்டு வேணும்னா பாடறேன். மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே. மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவளே.

ராமாயணத்தில் கோசலைக்கு ஒரு பெண் குழந்தையையும் சிரமமில்லாமல் உண்டாக்கிக் கொடுத்து கற்பகம் பாட்டி தாலாட்டு பாட, திலீப் கை அலம்பி வரும்போது அம்மா தூங்கி இருந்தாள்.

பாட்டி புடவை முந்தானையில் கை துடைத்துக் கொள்ளும்போது அவள் பேரனின் தலை தடவி கொழந்தே என்று கரைந்தாள்.

மதராசில் இருந்த கற்பகம் பாட்டி தான் இவள். இவளைக் கூட்டி வர மதராசுக்குப் போன திலீப் தான் சாப்பிட்டு முடித்துக் கை துடைத்தவன்.

கற்பகம் பாட்டி பேரனிடம் சொன்னாள் –

உன் பெரியம்மா அவசரமாப் பாக்கணும்னாளாம். ஜனனி வந்திருந்தாடா கூட்டிப் போறதுக்கு. உன்னைத் தான் பகல் பூரா காணோமே.

பெரியம்மா கூப்பிட்டு விட்டால் வேலை ஏதாவது இருக்கும். மொழி பெயர்க்க, நாலு கார்பன் காப்பி வைத்து அழுத்தி எழுதி நகல் எடுக்க, டைப் அடிக்க, ஒன்றும் இல்லாவிட்டால் பைண்ட் பண்ணித் தர என்று வேலை. காசும் வாங்கிக் கொடுத்து விடுவாள். சாப்பாடு, காப்பி எல்லாம் மினிஸ்டர் பெரியப்பா செலவு. ஏர்கண்டிஷன் அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கக் கொடுத்து வைத்திருந்தால் சாயந்திரம் எலக்ட்ரிக் ரெயிலில் வீட்டுக்குத் திரும்பின பிறகு கூட உடம்பில் சில்லென்று உஷ்ணம் கம்மியாக இருக்கும்.

ஜனனி ஞாயித்துக்கிழமை அன்னிக்கு லண்டன் போறாளாம். உங்கிட்டே அதையும் சொல்ல வந்திருந்தா. போனா திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்.

தெரியும் என்றான் திலீப். தங்கை. ஒன்று விட்ட சகோதரியோ ரெண்டு விட்ட சகோதரியோ. மனசுக்கு இதமான, கூடப் பிறந்தவள் போல பிரியமும் கரிசனமும் உள்ள சின்னப் பெண். மேல் படிப்புக்குப் போகிறாள். அண்ணாவாக மனசார வாழ்த்த மட்டும் தான் முடியும் திலீப்புக்கு இப்போதைக்கு. நேசம் காட்டும் உறவு எல்லாம் உதிர, மனுஷ சிநேகிதம் மேலும் குறைந்த முழு யந்திரத்தனமான வாழ்க்கைக்கு திலீப் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயந்திரமாகத் தூங்கினான். இயந்திரமாகவே கண் விழித்தான். ஒரு பக்கம் விடிகிற போதே சப் அர்பன் எலக்ட்ரிக் பிடித்துக் கிளம்பினான்.

இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா.

மினிஸ்டர் பெரியப்பாவின் மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் வழக்கம் போல் தடுத்தான். தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளுவான் என்று எதிர்பார்த்தான் திலீப்.

அதற்குத் தயாராக நின்று, உள்ளே இருக்கப்பட்டவர்களோடான உறவு முறையைச் சொல்ல ஆரம்பிக்க, உள்ளே இருந்து பெரியம்மாவே வந்தாள்.

கோசாயிகள் மாதிரி, சுவேதாம்பர ஜெயின் சாமியாரிணிகள் போல நீள அங்கி உடுத்தி இருந்த பெரியம்மா இரைந்து உள்ளே வாடா என்று திலீப்பைக் கூப்பிட்டாள். சேவகன் நடுநடுங்கி அவனை உள்ளே தள்ளாத குறையாக அனுப்பி வைக்க திலீப் பெரியம்மாவைத் தொடர்ந்து டிராயிங் ரூமில் நுழைந்தான்.

பெரியப்பா எங்கே, டூர்லேயா?

மரியாதைக்கு விசாரித்தான். அவர் எங்கே இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரியம்மா கரிசனத்திலாவது நாலு காசு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது.

பெரியப்பா ராத்திரி முழுக்க அவர் புத்தகத்துக்கு ப்ரூஃப் பாத்துட்டு இப்போ தூங்கிண்டிருக்கார்.

என்ன புத்தகம் பெரியம்மா?

ஆர்வத்தோடு கேட்டான். குடும்பத்திலேயே ஒரே ஒரு எழுத்தாளர் காணாமல் போய் அவர் புத்தகங்களும் எடைக்குப் போட்டு இருநூறு ரூபாய் வாங்கிக் கதையை முடித்தாயிற்று. இன்னொரு எழுத்தாளரை எப்படி எதிர்க் கொள்வது என்று திலீப்புக்குப் புரியவில்லை.

நேரு பிறந்தநாளை ஒட்டி பெரியப்பாவோட ஜன்ம தினமும் வருது. அறுபது வயசு ஆரம்பிக்கறதே.

கன்கிராட்ஸ் என்று வாழ்த்துச் சொன்னதை மினிஸ்டர் தூக்கத்தில் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.

பிறந்தநாள் அன்னிக்கு உங்க பெரியப்பா புத்தகம் ரிலீஸ். நேருவும் நானும்.

திலீப்புக்கு டிராயிங் ரூமில் பெரிய புகைப்படமாக நேரு சுவரில் இருப்பது நினைவு வந்தது. போன வருஷம் காலமான அவரை வருஷத் திவசம் வரைக்குமாவது மினிஸ்டர் வகையறாக்கள் நினைவு வைத்திருப்பதோடு புத்தகமும் எழுதி அதை ரூபாய் பைசாவாக மாற்றி விடுவார்கள் என்று தோன்றியது.

மிச்ச சொச்ச நேரு நினைவு எல்லாம் எழுதித் தர, கோஸ்ட் ரைட்டராகத் திலீப்பைக் கூட்டி வரச் சொல்லியிருப்பாரோ பெரியப்பா?

அதெல்லாம் இல்லை என்றாள் பெரியம்மா. அவரே வாரம் ஒரு தடவை கொங்கணிப் பெண் ஒருத்தியைக் கூப்பிட்டு டிக்டேட் செய்து ஐந்து ஐந்து அத்தியாயமாக முடித்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிவித்தாள் அவள்.

அந்த லேடி லட்சணமா வேறே இருக்காளா. நேரு நினைவு இப்போதைக்கு முடியும்னு தோணலை. பாகம் பாகமா இன்னும் பத்து வருஷம் வரலாம்.

பெரியம்மாவோடு சேர்ந்து திலீப்பும் சிரித்தான். காப்பி உபசாரத்துக்கு இடையில், ஜனனி விடிகாலையிலேயே லண்டன் பயணத்துக்காக ஏற்பாடு ஏதோ செய்யப் புறப்பட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மா,

ஏதாவது டைப் செய்யணுமா பெரியம்மா? திலீப் காப்பி தம்ளரை மோரியில் போட்டு விட்டுக் கேட்டான்.

இல்லேடா. உனக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்காவது நீட்டிச்சுப் போகக் கூடிய ஒரு வேலை திகைஞ்சிருக்கு. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

தாங்க்ஸ் பெரியம்மா. அவன் பெரியம்மாவின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னான். பெரியம்மாவை ப்ரீதிப் படுத்தும் விஷயங்களில் இது முக்கியமானது. இப்படியான சந்தோஷ சமாசாரம் சொல்லும் தருணத்தில் அவளை விழுந்து கும்பிடவும் அவனுக்கு இஷ்டமே.

கல்கத்தாவிலே தானே? அந்த பிஸ்கட் கம்பெனி டைரக்டர் ராமேந்திர சர்மாவோ யாரோ அன்னிக்கு இண்ட்ரட்யூஸ் செஞ்சீங்களே.

ராம சாஸ்திரிகள் சொல்லி வச்சுக் கிடைச்சது இல்லேடா. நான் சொல்லி வாங்கினது. சுபஸ்ய சீக்ரம்னு உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.

பெரியம்மா சொல்லச் சொல்ல உற்சாகமானான் திலீப்.

இப்போதைக்கு ஒரு வாரம் பிரயாணம். கேரளா போய்ட்டு வரணும். சாயந்திரம் கிளம்பறோம்.

பாட்டியையும் ஓரகத்தியான திலீப்பின் அம்மாவையும் தினம் ஒரு தடவை போய்ப் பார்த்துக் கொள்ள மினிஸ்டர் பங்களா சேவகத்தில் இருக்கும் நாலு பேரைக் கை காட்டி வைத்திருக்கிறாராம் மினிஸ்டர். திலீப் விடிகாலையிலேயே வராமல் சாவகாசமாக வந்து சேர்ந்திருந்தால் பெரியப்பா வாய் வார்த்தையாகவே இந்த நல்ல நியூஸ் எல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்குமாம்.

ஆனாலும் அவர் சதா சூழ்ந்து இருக்கும் நேரு நினைவில், இன்னொரு முக்கியமான காரியத்தை அனேகமாக மறந்திருப்பார். உடனடி செலவுக்காக திலீப்பிடம் இருநூறோ முன்னூறோ கொடுத்து அனுப்புவது அது.

பெரியம்மா வள்ளிசாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்க திலீப் கண் கலங்கி விட்டது. எல்லாம் நல்ல படியாகத் தொடங்கி நல்ல விதமாகவே முடிந்தால் அகல்யாவை செம்பூர்க் கோவிலில் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து ஜோடியாக பெரியம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விடலாம்.

சாயந்திரம் விக்டோரியா டெர்மினஸில் ரயிலேற வந்தபோது முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் பெரியம்மாவும், பிஸ்கட் ராமா சாஸ்திரிகளும், அவர் வீட்டுக்காரியும் இருப்பதைப் பார்த்தான் திலீப். அவனும் அந்தப் பெட்டியில் ஏற, சாஸ்திரிகள் அவனிடம் கோழிக் கிறுக்கலாக செண்ட்ரல் ரயில்வே காகிதத்தில் எழுதிய அனுமதி பாஸை எடுத்து நீட்டினார்.

அம்பி, உனக்கு அம்சமா ரிசர்வ்ட் சீட். ஜனதா க்ளாஸ்லே இஞ்சின்லே இருந்து ரெண்டாம் கம்பார்ட்மெண்ட். வழியிலே சாப்பாட்டுக்கு நீ எதுவும் வாங்கிடாதே. இங்கே இருந்து ரயில் ஊழியக்காரா மூலமா அனுப்பி வச்சுடறோம். இதை பத்திரமா பாஸோடு வச்சுக்கோ. உன் நியமன உத்தரவு.

திலீப் காகிதத்தை வாங்கிப் பார்த்தான். ஏதோ பவுண்டேஷன் ட்ரஸ்ட் என்று போட்டு அவன் பெயருக்கு எழுதிய வேலை நியமனக் கடிதம்.

அர்ஜுன நிருத்தம் ஆராய்ச்சி செய்யும் குழுவினருக்கு சோறு, தண்ணீர், பானம் விளம்பி கொடுத்து ஊழியம் செய்யும் கடைநிலைச் சிப்பந்தியாக அவன் தாற்காலிக நியமனம் ஆகி இருந்தான்.

வண்டி கிளம்பப் போறது. உன் கம்பார்ட்மெண்டிலே போய் ஏறிக்கோ.

பெரியம்மா சொல்ல, திலீப் ட்ரங்க் பெட்டியோடு மூணாம் கிளாஸில் ஓடிப் போய் ஏறினான்.

அகல்யாவிடம் அடுத்த வாரம் திரும்பி வந்ததும் இங்கே வேலை கிடைத்திருப்பதைப் பகிர்ந்து கொண்டு கசோடியும், குலோப்ஜாமுனும், பிளாட்பாரத்தில் வாங்கிய ஸ்டிக்கர் கோலமுமாக அவளை சந்தோஷப் படுத்த வேண்டும். கல்யாணம் பற்றி வீட்டில் மெல்லப் பேச்சை நகர்த்தச் சொல்லவும் வேண்டும். தேவைப் பட்டால் ஒரு நடை அகல்ய வீட்டுக்குப் போய்.

என்ன வேலையில் இருக்கே?

அகல்யாவோ அவள் வீட்டிலோ கேட்டால்”

மினிஸ்டரின் பெண்டாட்டியான சொந்தம் பெரியம்மாவுக்கும் மித்ரர்களான பிஸ்கட் தம்பதிகளுக்கும் அனுசரணையான வேலைக்காரன். நேரத்துக்கு சாப்பாடு விளம்பி, எச்சில் தட்டு அலம்பி, வென்னீர் வைத்துக் கொடுத்து, வெற்றிலை பாக்கு வாங்கி வந்து சிற்றூழியம் செய்கிறவன்.

சிரித்துக் கொண்டான் திலீப்.

சல்தா ஹை.

கரி தின்னும் ரயில் எஞ்சின் ஆமோதித்துக் கூவிச் சத்தம் உயர்த்த, மெயில் நகர்ந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன