புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 45 இரா.முருகன்


அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம்.

திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும்.

ஹை டைட் ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும்.

எழுந்த அலையில் ரெண்டு பேரும் அடித்துக் கொண்டு போய் மஹாலட்சுமி கோவில் பின்னால் பாறை அடுக்கில் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அங்கே அவளை இடுப்பில் கை சேர்த்து வளைத்து அணைத்துக் கொண்டு பின்னால் வந்து போகும் அலைகளைப் பார்த்தபடி பிதற்ற வேண்டும்.

இதுக்காக அலை அடிச்சுப் போகணுமா என்ன?

அகல்யா சிரித்தபடி அவன் உள்ளங்கையில் கிள்ளினாள்.

அவளுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் மட்டுமே போதும். மகாலட்சுமி ஏரியாவோ, தாதரில் ரானடே ரோடு பாதையோரக் கடையோ, ஒரு பிளேட் சமோசா, இஞ்சி தட்டிப் போட்ட சாயா. பிளாட்பாரக் கடையில் நீலப் பூ போட்ட கர்ச்சீப்,. எப்போதாவது திலீப்பை தனியாக நிற்கச் சொல்லி விட்டு ஸ்தூல சரீர மராத்திப் பெண்ணை ஷாந்தி-தாய் என்று விளித்து காதில் ரகசியமாக அளவு சொல்லி வாங்கும் மார்க்கச்சை. வீட்டு முகப்பில் கட்டி, ஒரு வருடம் கழித்து எடுத்துப் போடும் ஜரிகைத் தோரணத்தில், ஜெய் மாதா தி என்று சுபமாக எழுதியது.

இது எல்லாத்துக்கும் மேல் இதில் கொஞ்சமாவது நிறைவேறிய சந்தோஷத்தோடு திலீப்போடு கை கோர்த்து நடப்பது.

பாந்த்ரா பேண்ட் ஸ்டாண்டில் சுற்றும் போது ஏதோ கட்டடத்தின் பின் பகுதிக்கு அவசரமாக இட்டுப் போய் இங்கிலீஷ் சினிமாவில் வருகிறது போல முத்தம் கொடுத்தான் திலீப். அதுவும் அகல்யாவுக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் சொல்ல மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம். திலீபுக்கு அது தெரியும். பாந்த்ரா போகலாமா என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு பார்த்துக் கேட்கிற சந்தோஷம் அவனுக்கும் வேண்டியிருக்கிற ஒன்று.

சரி, டாட்டா சொல்லிக்கலாமா?

அகல்யா கைக்கடியாரத்தைப் பார்த்தாள். யாதொரு சந்தேகமும் வரவழைக்காமல் வீட்டில் போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மாசம் பிறந்து ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விட்டு ஐம்பது ரூபாயை மட்டும் மாசாந்திரக் கைச்செலவுக்காக வாங்கிக் கொள்ளும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். வீடு திரும்பத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அவர்கள் பீதி அடைகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த நல்ல பெண்ணாக, அதற்கு வழி வகுக்காமல் அவள் இருப்பாள்.

ரயில்வே ஸ்டேஷன் வரைக்குமாவது கூட வரேனே?

அகல்யாவை, மகாலட்சுமி – போரிவாலி ஸ்லோ லோக்கலில் ஏற்றி விட்டு பஸ் பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்தான் திலீப். இனி ஒரு மாதமாவது அவளோடு இன்னொரு சந்திப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

அகல்யாவும், சிரிப்பும், பேல்பூரியும், உயர்ந்து பொங்கும் கடல் அலைகளும் இல்லாத உலகம் அவன் போக வேண்டியது. அதுவும் இந்த ஆறு மாதத்தில் அவனுக்கு ஏற்கனவே அனுபவமான கொஞ்சம் போல் நிம்மதி சூழல் கூட இல்லை. அப்பா காணாமல் போனதில் தொடங்கியது இது.

பரமேஸ்வரன் நீலகண்டன். அறுபத்து ஆறு வயது. தாடையில் மிகச் சரியாக நடுவில் நீளமாகக் கீழே இறங்கும் ஒரு வெட்டுத் தழும்பும், இடது புறங்கையில் பாம்பு கொத்தினது போல் பக்கத்தில் பக்கத்தில் இரண்டு மச்சங்களும் கொண்ட சதைப் பிடிப்பு இல்லாத, வெளுத்த மனுஷர். இடது முட்டிக்குக் கீழே கால் இல்லாதவர். ஆங்கிலம், மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம் மொழிகளில் புலமை கொண்டவர். டில்லியில் இருந்து பம்பாய்க்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது நாக்பூரில் காணாமல் போய்விட்டார். ஒரே மகன் திலீப் பரமேஸ்வரன். மனைவி பழைய லாவணிக் கலைஞர் ஷாலினி-தாய். வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் இந்த முதியவரைப் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்..

காவல்துறையை, மாநிலம் சார்ந்த ஒன்று என்றாலும், திலீப்பின் மினிஸ்டர் சித்தப்பா முன்கை எடுத்ததால், ராஜ்ஜியம் முழுவதும் சுவரொட்டி அடித்து, சிறுநீர்க் கழிக்காதே என்று டிரான்ஸ்பார்மர்களின் மேல் ஒட்டி வைத்த சின்னஞ் சிறு நோட்டீஸ்க்க்குக் கீழே ஒட்டிச் சகலமானவர்களுக்கும் சேதி சொல்லப் பட்டது.

பதினைந்து நாள். ஒரு மாதம். ஆறு மாதம். பரமேஸ்வரன் நீலகண்டன் என்ற இடதுசாரி சிந்தனையுள்ள ஒரு காலை இழந்த அறுபத்தாறு வயதான மனிதர், மிச்சமிருக்கும் காலோடு எந்தக் கண்டத்திலும் ஏது நாட்டிலும் எந்த வேலையும் செய்து வருமானம் ஈட்ட ஆர்வம் காட்டியவர், இன்னும் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை.

ஆனாலும் அவர் காணாமல் போவதற்கு முன்பு தில்லியில் போய் உண்ணாவிரதம் இருந்தது, அமைச்சரின் சகோதரர் நீதிக்குப் போராட்டம் என்ற சிறிய செய்தியாக பம்பாய் நகரின் மத்தியானப் பத்திரிகை ஒன்றில் அச்சுப் போட்டு வந்து ஆயிரம் பேராவது படிக்கக் கிடைத்தது.

எப்படியோ யார் மூலமோ அந்தச் செய்தி அதிகார யந்திரத்தை அசைத்து பரமேஸ்வரனின் மனைவி ஷாலினி-தாய்க்கு அவளுடைய நாட்டுப்புறக் கலைஞர் பென்ஷனை மீட்டுக் கொடுத்தது. அந்த முன்னூறு ரூபாயில் தான் ஒற்றை அறைக் குடியிருப்பில் திலீபும் அம்மாவும் தங்க வேண்டியிருக்கிறது.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்தி கவனித்துக் கொண்டதற்கே அப்பாவுக்கு அவ்வப்போது வந்த வருமானம் தான் காரணம். அவர் உறுப்பினராக இருந்த இடதுசாரிக் கட்சிக்காக அவர்களுடைய வருடாந்திர மாநாட்டு வெளியீடுகளைத் தமிழிலும் மராத்தியிலும் மொழி பெயர்ப்பதை சிரத்தையாகச் செய்து வந்தார் திலீப்பின் அப்பா. அந்தக் கட்சியில் எத்தனை பேர் இருந்தாலும் போனாலும் திரும்பி வந்தாலும், வருடம் ஒரு மாநாடும் உள்கட்சி மோதலும், தேர்தலும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டுமில்லை, அங்கே பதவிக்கு வருகிறவர்கள் எல்லோரும் இங்கிலீஷில் மட்டும் தான் யோசித்து எழுதக் கூடியவர்கள். மற்ற மொழிகளில் அவர்களுடைய கருத்துகள் கடந்து போக வேண்டியுள்ளது.

திலீப்புக்கும் நல்ல இங்கிலீஷ் வசப்பட அப்பா வழி காட்டியிருந்தால் திலீப் அவர் செய்த சாஸ்வதமான மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து அவனுக்கும் அவ்வப்போது காசு வந்திருக்கும். அந்தக் கட்சி இன்னும் நூறு வருடம் இப்படியே தள்ளாடியபடி இருக்கும் என்பதிலும் ஆங்கிலத்தில் சிந்திப்பதையும் விவாதிப்பதையும் நிறுத்த மாட்டார்கள் என்பதிலும் மற்ற மொழிக்காரர்கள் அந்தச் செய்திகளை ஆர்வத்தோடு என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதிலும் திலீப்புக்குச் சந்தேகமில்லை.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வரவும் அப்பா தான் உதவினார். அப்போது அவர் காணாமல் போய் நாலு மாதம் ஆகியிருந்தது. அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்திப் பராமரிக்கக் காசு இல்லாதது வீட்டுக்குக் கூட்டி வர ஒரு காரணம். காசு தராததால் அவளைப் பட்டினி போட்டிருந்தார்கள் என்று அண்டை அருகில் மற்ற நோயாளிகளைக் கவனிக்க இருந்தவர்கள் சொன்னார்கள்.

நம்மாத்து பொண்ணை பட்டினி போடறதாவது. மினிஸ்டர் கிருஷ்ணனோட மன்னியாக்கும் இந்தக் கிறுக்கச்சி. போய்ச் சொல்லி உடனே கூட்டிண்டு வாங்கோடா.

பேரன் திலீப்பையும் பேத்தி ஜனனியையும் விரட்டியவள் அவள் தான்.

அவளை வீட்டில் வைத்து யார் வைத்துக் கவனிப்பது என்று மூத்த மருமகள் கேட்டபோது, பாட்டி மினிஸ்டர் மகனின் பங்களாவில் இருந்து கிளம்பி விட்டாள்.

நீங்க யாரும் என் மாட்டுப்பொண்ணைக் கவனிக்க வேண்டாம். நான் கவனிச்சுக்கறேன். அந்தக் கிழவருக்கு ஆயுசு முடியறவரை பீத்துணி தோச்சுப் போட்டு, மூத்தரம் தொடச்சு விட்டு, கொழந்தை மாதிரி தாடையைத் தாங்கிப் பருப்புஞ் சாதம் ஊட்டியே என் ஜீவன் முடியும்னு எதிர்பார்த்தேன். அது இன்னமும் இருக்கு. இங்கே இவளுக்கு ஊழியம் பார்க்கத்தான் மிச்ச பிராணன்.

கற்பகம் பாட்டி வற்புறுத்திக் கூட்டி வரச் சொன்னபோது திலீப்பிடம் ஆஸ்பத்திருக்கு அடைக்க வேண்டிய பணம் இல்லை. வருமானம் இருந்தால் இல்லையா காசும் பணமும் புழங்கும். மிட்டாய்க் கடை வைத்திருக்கும் மதராஸி விரோதக் கட்சிக் காரர் பாலகிருஷ்ண கதம் கூட மதராஸி ஓட்டலை உடைத்து நொறுக்க திலீப்பை இப்போதெல்லாம் அழைப்பதில்லை. அவன் பாதி மதராஸி என்பது அப்பா தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தது தொடங்கி, காணாமல் போனதுவரை செய்தியானதில் நிறைய வெளிச்சம் போடப்பட்டு விட்டது. அதை விட முக்கிய காரணம், பாலகிருஷ்ண கதம் மகள் மதராஸி சோக்ராவைக் கல்யாணம் செய்து கொண்டாள் என்பதும் அந்தப் பையனின் குடும்பம் மதராஸிலும் மைசூரிலும் நாலைந்து பெரிய மதராஸ் ஓட்டல்களை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்பதும் கூடக் காரணம் தான்.

எல்லாம் சேர்ந்து ஷாலினி-தாய் ஆஸ்பத்திரியில் பிணைகைதியாக இன்னும் ஒரு வாரம், கேவலம் இருநூறு ரூபாய் ஃபீஸ் அடைக்க முடியாததினால் கழிக்க வேண்டி வந்தபோது தான் திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த சதுர்த்தியே வரப் போறது, இன்னுமா என்னை அனுப்பி வைக்கலே என்று திலீப்பைக் கேட்டார் அவர். அவன் பதில் சொல்லாமல் அவரைப் படியிறக்க, நீ மட்டும் அந்த ஒல்லிப் பிச்சுப் பொண்ணோட மகாலட்சுமி, பேண்ட் ஸ்டாண்டுன்னு சமுத்திரக் கரையிலே திரியறே, என்னை அந்த சமுத்திரத்திலே வழியனுப்பிட்டு அடுத்த வருஷம் வான்னு சொல்லத் தெரியலே என்று கமுக்கமாகத் தலையில் குட்டினார்.

மேலே லாஃப்ட்டில் தலை இடிக்க ஒரு பக்கம் மண்டையே பள்ளமாகிற அளவு இடது கையால் பரபரவென்று தேய்த்துக் கொண்டு லாப்டில் சிரமப்பட்டு கால் மடித்து அமர்ந்தான் அப்போது திலீப். மனசு அகல்யா என்றது. அவளை அங்கே ஏற்றி விட்டு கூடவே தானும் உட்கார்ந்து கொண்டால் எப்படி சுகமாக இருக்கும் என்று கற்பனை தறிகெட்டுப் பறந்தது. இங்கே லேடீஸ் டாய்லெட் எங்கே இருக்குன்னு பாருங்கோ என்றாள் அகில்.

சிரித்துக் கொண்டே புரட்டக் கூடிய புத்தகம் இல்லை சேர்மன் மா ஸ்ட்ஸே துங்கின் சிவப்புப் புத்தகம் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு. அப்பாவை கட்சித் தலைமை கேட்க மொழிபெயர்த்துக் கொடுத்து கையில் காசு வராமல் அலைய வைத்த புத்தகம் அது. நூறு காப்பி தருகிறேன், விற்றுக் காசு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடைசியாக வந்தார்கள். அப்பா ரொம்ப யோசித்து ஒரு வழியாகத் தாதர் பிளாட்பாரத்தில் வைத்துக் கூவி விற்கத் தீர்மானித்தபோது கட்சியில் இருந்து ஸ்டாண்டர்ட் காரில் வந்து ஒரு கவரில், என்ன கணக்கோ, முன்னூற்றுப் பதினேழு ரூபாய் கொடுத்து விட்டு சமாதானமாக இருக்கச் சொல்லிப் போனார்கள். அம்மாவுக்கு மருந்து வாங்கியது போக வீட்டுக்கு ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்க சமஸ்கிருதம் பேசிய மா ஸ்ட்ஸே துங் வழி வகுத்தார் அப்போது.

லெனின் என்ன பேசினார் என்று ஒரு பெரிய புத்தகம். அவர் பேச நினைத்ததாக மற்ற ஆட்கள் நினைத்ததும் கூட்டிச் சேர்த்தோ என்னமோ ஆயிரம் பக்கம் இருக்கும் அது. மராத்தியில் மொழி மாறிய லெனின் பேச்சு இருபது காப்பி லாஃப்டில் இருந்தது. காகிதம் மக்கிப் போய் ஆனால் ஒரு தடவை கூட யாரும் கையாளாமல் புழுதியில் புதுக்கருக்கு அழிந்தும் அழியாமலும் கிடந்தது. அந்தக் காகிதப் பொதியில் சொல்லத் தகும் நிலையில் இருந்த கடைசி ஆறு காப்பிகளைப் பக்கத்தில் தனியாக எடுத்து வைத்தான் திலீப். மார்க்ஸ், எங்கேல்ஸ், ஹோ சி மின் என்று மற்றத் தலைவர்களும், சோவியத் படைப்பாளிகளும் இப்படிக் காகித நிலையைத் தேர்வு செய்து எந்தப் பட்டியலில் போக வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டார்கள். கரையானுக்கு ஆட்பட்டவர்கள் தெருக்கோடி குப்பைத் தொட்டிக்கு ஒரு சல்யூட் அடித்து திலீப்பால் அனுப்பப் பட்டார்கள். மற்றவர்கள் இரண்டு பெரிய மூட்டையாக மெரின் லைன்ஸ் புத்தகக் கடை இருக்கும் பிளாட்பாரத்தில் குடியேறி அவர்களின் ஆசிர்வாதப் பணமாக இருநூற்றுப் பதினைந்து ரூபாய் திலீபுக்குச் சம்பாதித்துக் கொடுத்தார்கள். அம்மா ஆஸ்பத்திரி விட்டு டாக்ஸியில் சாலுக்கு வந்து இறங்க அவர்கள் அளித்த ஆதரவு மகத்தானது.

நிறுத்து நிறுத்து நிறுத்து.

நடுரோட்டில் தூறல் வலுத்த ஈரத்துக்கு இடையே போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸின் உள்ளே இருந்து எட்டிப் பார்த்துக் கூச்சல் போட்டான் திலீப். எதேதோ யோசித்தபடி வழக்கம் போல் ஸ்டாப்பைத் தவற விட்டாச்சு.

மதராஸிகள் அதிகம் குடியிருக்கும் பிரதேசங்களில் மராத்தி இளைஞர்கள் ஊரே எனக்கு சொந்தம் என்ற மமதையோடு போகிற மாதிரிப் பார்த்துக் கொண்டு திலீப் நிதானமாக நடந்து முன்னால் போனான். அவனுக்கு முன்பாகக் கூட்டமாக நிற்கும் எல்லோரையும் விலகும்படி அசல் விதர்பா மராத்தியில் கேட்டுக் கொண்டு அவன் முன்னேற, கண்டக்டர் அவசரமாக விசில் ஒலித்து வண்டியை நடுத் தெருவில் உடனடியாக நிறுத்தச் செய்தான். சேனைக் காரன். நாளைக்கே மளமளவென்று விரார் கி சோக்ராக்களும் பாந்த்ரா கா லட்காக்களும் மேலே வந்து எலக்ஷனில் ஜெயித்து மந்திராலயத்தில் மினிஸ்டராக உட்காரலாம். யாரென்று பார்க்காமல் மரியாதை தருவது நல்லது என்ற முன்னேற்பாடு கண்டக்டரின் கண்களில் மின்னியதைக் கண்டு திலீப் திருப்திப் பட்டான்.

வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது.

சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி நடந்தானோ ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாச்சு. உனக்கு ஒண்ணாவது தெரியறதா? பரப்பிரம்மம்டீ நீ. எங்க அவர் மாதிரி, அதன உன் மாமனார். ஆக்காட்டுடி லண்டி முண்டை. சோறாவது ஒழுங்காத் தின்னத் தெரியறதா?

கற்பகம் பாட்டி தன் மருமகளைக் கொஞ்சுகிற நேர்த்தி அந்த லண்டி முண்டையில் நிரம்பி வழியும் வாத்சல்யத்தில் தெரியும்.

இருட்டிலேயே நின்று கொண்டிருந்தான் திலீப். அம்மா மராத்தியில், சோறு வேணாம், பரமா எஜ்மானைக் கூட்டி வா கிழவி என்று யார் என்ன என்ற போதமின்றி கற்பகம் பாட்டியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவை அதிக மரியாதையோடு அப்படித்தான் கூப்பிடுவாள் அவள்.

குளிக்க மாட்டேன்னு அப்படி என்ன அடம்? தலை மயிர் சிக்கு நாத்தம் எட்டு ஊருக்கு நாறறது. இங்கே என்ன பட்டணம் மாதிரியா, தண்ணிக் கஷ்டமா ஒண்ணா? குழாயைத் தெறந்தா கங்கா ஸ்நானம். உங்க மாமனாருக்கு குளிக்கறதுன்னா அப்படி ஒரு இஷ்டம். செயலா இருந்தப்போ ரொம்பவே செயலா இருப்பார். நீயும் வாடி கல்ப்பு சேர்ந்தே இதை எல்லாம் முடிச்சுடுவோம்பார். என்னோட கூட ஜலக்ரீடை பண்ணனுமாம் கிழத்துக்கு. எப்போ? ரிடையர் ஆனதுக்கு முந்தின வருஷம். தீபாவளியன்னிக்கு. கருமம் கருமம்.

பாட்டி சிரிப்பில் நாணம் கலந்து இருந்ததை திலீப் உணர்ந்தான். நீலகண்டன் தாத்தா நாய் மாதிரி லோல்பட்ட கடைசி ஐந்து வருஷத்தைக் கழித்துப் பார்த்தால் ராஜபோகமாகத் தான் மூச்சு விட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கோடி தங்கமே. முருங்கைக்காய் சாம்பார் பிடிச்சிருக்கா? ஊற ஊறத்தான் ருஜி. காலம்பற வைக்கற முருங்கை சாம்பாரை ராத்திரி தான் இவர் ஒரு பிடி பிடிப்பார். அன்னிக்கு நாலு தடவை.

பாட்டி, ஏன் இருட்டிலே உக்காந்திருக்கீங்க ரெண்டு பேரும்

திலீப் உள்ளே நுழையும்போது உற்சாகமாக உணர்ந்தான்.

(தொடரும்) .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன