ஒரு பிசாசுக் கதை


ஒரு ஊர்லே ஒரு பணக்காரர் இருந்தாராம். அவருக்கு ஒரே மகன். மகனுக்குப் பக்கத்து ஊர்லே நல்ல சம்பந்தம் கிடைச்சதாம். அங்கே போய்க் கல்யாணம் செஞ்சு மாப்பிள்ளை – பொண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்துட்டிருந்தாங்களாம்.

அப்போ மதிய நேரம். எல்லோருக்கும் நல்ல பசி. ஒரு பெரிய ஆல மரம் வழியிலே இருந்துச்சாம். அதுங் கீழே உட்கார்ந்து கட்டுச் சோத்து மூட்டையை அவுத்துச் சாப்பிட்டு வீட்டுக்குப் போய்ச் சேரலாம்னு அப்பாக்காரர் சொல்ல எல்லோரும் அப்படியே செய்யலாம்னு சாப்பிட உக்கார்ந்தாங்களாம்.

கல்யாணச் செலவுலே நூறு ரூபா கணக்குலே வரலேயே.. உதைக்குதே.. தெரிஞ்சா அப்பாரு திட்டுவாரேன்னு புது மாப்பிள்ளை மும்முரமாக் கணக்குப் பார்த்துக்கிட்டிருந்தானாம்.

கல்யாணம் ஆகி வந்துட்டிருந்த புதுப் பொண்ணு அழகுன்னா அப்படி ஒரு அழகாம். அது மாப்பிள்ளையோட பேசணும்னு துடிச்சுதாம்.

இவனா கணக்குலே இல்லே முழுகிக் கெடக்கான். அந்தப் பெண்ணு, வேறே வேலை இல்லாம, மரத்தடியிலே பராக்கு பாத்துக்கிட்டு உட்கார்ந்திருச்சாம். தலையிலே போட்ட முட்டாக்கு நழுவி விழ,அது மரத்தை அண்ணாந்து பார்த்ததாம்.

அந்த மரத்துலே ஒரு பிசாசு, ஆம்பளைப் பிசாசு இருந்துச்சாம். அது இந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்ததுமே ‘அடடா, இவ்வளவு அழகான மனுஷப் பொண்ணா இருக்காளே. அவளை நாம் இல்லே கட்டிக்கணும்’னு குருட்டுத்தனமா அந்தப் பொண்ணு மேலே ஆசைப் பட்டுடுச்சாம்.

சாப்பிட்டு முடிச்சு கல்யாண கோஷ்டி ஊரைப் பாக்கப் போறபோது அவங்க பின்னாடியே பிசாசு போச்சாம்.

வீட்டிலே போனதும், மாப்பிள்ளை பொண்ணு கிட்டே சொன்னானாம் – நான் வியாபாரம் அபிவிருத்தி பண்ணப் பயணம் வச்சிருக்கேன். நாலு வருஷம் கழிச்சித்தான் வருவேன். நெறைய பணம் சம்பாதிச்சுட்டு வரேன். இப்போ இருக்கறதை விட எம்புட்டோ அதிகமா இருக்கும். நீ வீட்டுலே இருந்துக்க. எல்லோரும் உங்கிட்டே பிரியமா இருப்பாங்க’.

மனசே இல்லாம போய்ட்டு வாங்கன்னாளாம்.

மாப்பிள்ளை பயணம் நடந்துட்டிருந்தபோது வழியிலே போற ஆளு மாதிரி பிசாசு அவனுக்கு முன்னாலே வந்து பேசிட்டே நடந்துச்சாம்.

இவன் வெளிநாடு பயணம், அதுவும் நாலு வருஷம் போறான்னு தெரிஞ்சதும், அதுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுத்தாம்.

அது அந்த மாப்பிள்ளையோட உருவத்தை எடுத்துக்கிட்டு ஊருக்குப் போச்சாம். மாப்பிள்ளையோட அப்பாவுக்கு ஏகப்பட்ட கோபம்.

அவர் கேட்டாராம் – கல்யாணம் ஆனதும் முட்டாளாயிட்டியே. ஏண்டா திரும்பி வந்தே?’

’அப்பா, போற வழியிலே ஒரு தேவதை வந்து சொல்லிச்சு. இப்போ எனக்கு யோகம் வீட்டுலே இருந்தாத்தான் அடிக்குமாம். தினமும் அது அஞ்சு தங்கக் காசை, வீட்டுலே இருந்தா கொடுக்குமாம். உனக்கு தஙக்க் காசு வேணாம்னா சொல்லு. நான் ஊருக்குப் போறேன்’னானாம் மகன்.

அதெல்லாம் வேணாம்னுட்டாராம் அப்பா. தங்கக் காசு வர்ற குஷி.

பிசாசு சந்தோஷமாப் புதுப் பொண்ணைத் தேடிக்கிட்டுப் போச்சாம். அவளுக்கும் வந்திருக்கறது பிசாசுன்னு தெரியாதே, நம்ம வீட்டுக்காரன் நம்ம பேச்சைக் கேட்டுத் திரும்பிட்டான்னு ஒரே சந்தோஷம்.

ஆனா. இந்தப் பிசாசு ரொம்ப நல்ல மாதிரியாம். இது பொண்ணு கிட்டே சொல்லிச்சாம் – இதோ பாரு, நான் உன் வீட்டுக்காரன் இல்லே. பிசாசு. இதை உங்கிட்டே மட்டும் தான் சொல்றேன். நீ யாருக்கும், முக்கியமா உங்க வீட்டுக்காரனோட அப்பன் ஆத்தா கிட்டே சொல்லக் கூடாது’

அவ பயந்துட்டாளாம். ஆனாலும், சரி, நம்ம வீட்டுக்காரன் மாதிரி தானே அச்சு அசலா இருக்கான்னு ஒரு நெனப்பு. அவ பிசாசோட சேர்ந்து இருக்க ஆரம்பிச்சுட்டா. யார் கிட்டேயும் இந்தாள் யாருன்னு சொல்லலே.

நாலு வருஷம் கழிச்சு அந்தப் பொண்ணு கர்ப்பமாயிட்டா. பிசாசோட பிள்ளை வயத்துலே இருக்கு. அவளுக்கு வலி கண்டு அம்மா வீட்டுக்குப் போகறதுக்கு இருக்கா. பிசாசு வீட்டு வாசல்லே நின்னு அப்பா கூடப் பேசிட்டு இருக்கு. அப்போ பார்த்து, வெளிநாடு போன அசல் புருஷன் திரும்பி வீட்டுக்கு வந்துட்டான்.

வாசல்லே அவனும் நிக்கறான், அவனோட உருவத்திலே பிசாசும் நிக்குது. ரெண்டு பேரும் நான் தான் உண்மையான மகன்னு அப்பா கால்லே விழறாங்க. அப்பாவுக்கு தினசரி கிடைக்கற ஐந்து பவுன் தங்கத்தை விட முடியாதில்லே. அதனாலே, பிசாசைத் தான் மகன்னு சொல்லி, சொந்த மகனை ஏமாத்துக் காரனுட்டார்.

சொந்த மகன் அழுது கூப்பாடு போட, சொந்த பந்தம் எல்லாம் வந்து அவனையும், அவனோட உருவத்திலே இருக்கற பிசாசையும் பிடிச்சு ராஜா கிட்டே கூட்டிப் போறாங்க. யாரு அசல், யாரு போலின்னு அவர் சரியாக சொல்லிடுவாரே.

போற வழியிலே ஒரு ஆட்டு இடையர் தொரட்டிக் கம்பு வச்சுக்கிட்டு ஆடு மேச்சுக்கிட்டு வராராம். ‘என்ன கூட்டமா எங்கே போறாப்பலே’ன்னாராம் அவர். இவங்க என்னன்னு தாக்கல் சொன்னாப்பலே.

அட, இதுககா ராஜா கிட்டே போகணும். நான் உடனே கண்டு பிடிக்கறேன்னுட்டாராம் இடையர். சரின்னுட்டாங்க இவங்க.

‘ரெண்டு பேரும் இங்கே வந்து நில்லுங்க. இந்த துரட்டிக் கம்பை உங்க வாயிலே விட்டு, குடல் வரைக்கும் நுழைச்சு அங்கேயிருந்து உண்மையை வெளியே கொண்டு வரப் போறேன். யாரு முதல்லே வாயைத் திறக்கறாங்களோ அவங்க தான் அசல் மாப்பிள்ளை’ன்னாராம்.

பிசாசு வெள்ளந்தியானது இல்லியா, மனுச்ப் பயக்க நியாயத்துக்குத் தான் துணை போவாங்கன்னு நம்பிக்கையோட, துரட்டிக் கம்பை விடுன்னு வாயைத் தொறந்துச்சாம். அசல் மாப்பிள்ளையோ அமுக்குப் பிள்ளையா வாயைத் தொறக்கவே மாட்டேங்கறார்.

இடையர், பிசாசைப் பார்த்து, ‘நீ தான் அசல்’னாராம். அதுக்கு ரொம்ப சந்தோஷம்.

இடையர் அடுத்தாப்பிலே சொன்னாராம் – ‘எங்கே, என் துரட்டியை எட்டு தடவை தட்டுவேன்.அதுக்குள்ளே நான் மேய்க்கக் கூட்டி வந்த ஆட்டை எல்லாம் திரும்பக் கூட்டியாந்து பட்டியிலே அடைச்சுடணும். யாரு செய்யறாங்களோ அவங்க தான் அசல்.

பிசாசு துரட்டிக் கம்பை லொட்டு லொட்டுன்னு நாலு தடவை தரையிலே தட்டறதுக்குள்ளே, ஒரு நிமிசம் கூட வராது, ஆமா, அதுக்குள்ளே எல்லா ஆட்டையும் பட்டியிலே அடச்சிடுச்சு. அசல் மாப்பிள்ளையோ ஒண்ணும் முடியாம அப்படியே நிக்கறான்.
‘திரும்ப நீ தான் அசல்லு நிரூபிச்சுட்டே’ன்னு இடையர் பிசாசைப் பார்த்து சொல்ல, அதுக்கு வகைதொகை இல்லாத மகிழ்ச்சி.

இன்னும் ஒரே ஒரு பரீட்சைன்னு சொல்லி இடையர் அவர் கொண்டு வந்த தோல்பையிலே இருந்து தண்ணியை முழுக்கக் குடிச்சாராம். காலி தோல்பையைக் காட்டிச் சொன்னாராம் – அசல் மாப்பிள்ளை இந்தத் தோல்பைக்குள்ளே புகுந்து வெளியே வரணும், யாரு செய்யறாங்கன்னு பார்க்கலாம்’

பிசாசுக்கு இதெல்லாம் அத்துப்படி, அது பைக்குள்ளே புகுந்துச்சோ இல்லியோ, இடையர் டக்குனு சுருக்கை இறுக்கி முடி போட்டுட்டாராம்.

பிசாசு அம்புட்டுக்கிட்டதுன்னு சொல்லி அதை ஆத்தங்கரைக்குப் பையோட தூக்கிப் போறபோது தான் பிசாசுக்கு மனுஷன் கிட்டே ஏமாந்துட்டோம்னு தெரிஞ்சுதாம். அழுது பொரட்டிப் பார்த்தும் அவுத்து விடாம ஆத்துலே முக்கி ஆத்துத் தண்ணியோட போச்சாம் பிசாசு.

எல்லோரும் சந்தோஷமா வீட்டுக்கு வந்தாங்களாம். அந்தப் பொண்ணுக்குப் பொம்பளைப் பிள்ளை பிற்ந்திருத்துச்சாம். பிசாசை தொலைச்சுக் கட்டின விஷயத்தை சந்தோஷமா எல்லாரும் பேசிட்டிருந்ததை அந்த்ப் பொண்ணும் கேட்டாளாம். அவ ஒண்ணுமே சொல்லலியாம்.

அம்புட்டுத்தான் கதை.

இது யார் எழுதிய க்தை? ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் தான் தேது என்ற எழுத்தாளர் எழுதியது.

மணி கௌல் இதை மெல்ல நகரும், ஆனால் அற்புதமான திரைப்படமாக எடுத்திருக்கிறார். பார்க்க வேண்டிய அந்தப் படம் –
https://www.youtube.com/watch?v=P2ugBe_6OnI

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன