புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 20 இரா.முருகன்

தழுவிப் பிணைந்து சிக்கலாகச் சுருண்டிருந்த பழைய தில்லித் தெருக்களின் பின்னலில் வைத்தாஸ் சிக்கிக் கொண்டான்.

இந்தக் குறுகலான தெரு தான். நாலு நாள் முன்னால் இங்கே தான் வந்திருந்தான். வரிசையான இந்தச் சாப்பாட்டுக் கடைகள் தான். கோதுமை மாவை வெண்ணெயும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து கொண்டிருக்கும் திடகாத்திரமான மீசைக்காரன் அவனை இதே போல் தான் சாப்பிட வரச்சொல்லித் தலையை அசைத்துக் கூப்பிட்டான்.

திரும்பும்போது வரேன்.

வைத்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னபடி அந்தக் கடையின் இடது புறமாக நெளிகிற சந்துக்குள் அரை இருட்டில் நடந்தான். மேலே நடந்து வலது பக்கம் திரும்பினால், இந்தத் தெரு தான். இப்படியே நேராகப் போனால் அந்தப் பெரிய வீடு. அங்கே தான் போக வேண்டும் அவன்.

வீராவாலி.

முணுமுணுத்தான். பக்கத்தில் கடகடத்து ஒரு சைக்கிள் ரிக்‌ஷா கயிறு கட்டிய மணி அடித்தபடி நகர, சத்தமாகச் சொன்னான்.

வீராவாலி.

குளிர் இதமாகக் கவிந்த சனிக்கிழமை மாலைப் பொழுதில் வைத்தாஸை அலைய வைத்தவள் அவள்.

இரண்டு நாளாக அலுவலகம் அவனை முடக்கிப் போட்டது. புதிய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்பியிருக்கும் தூதுவர் மூலம் இந்திய சர்க்கார் நிறையச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தது. இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு தான். என்றாலும் ரயில் பாதைகள் அமைத்தல், பாலம் கட்டுதல், அணை கட்டுதல் போன்ற பிரம்மாண்டமான பணிகளில் நல்ல அனுபவம் வாய்த்ததாக இருக்கிறது. இந்தத் திறமையும், அனுபவமும் தங்களோடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறது வைத்தாஸின் நாடு.

முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் வைத்தாஸ்.

மேலும், இங்கிருந்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் அங்கே வர வேண்டும். நர்ஸ்கள், தச்சர்கள், டிரைவர்கள் மற்றும் இரும்படிக்கிறவர்கள். எல்லோரும் வேண்டி இருக்கிறது வைத்தாஸின் நாட்டில். இந்தியாவில் அவர்களுக்குக் கிடைப்பதை விடக் கூடுதலாக வருமானம் கிடைக்கும். ரொம்ப அதிகமாக இல்லாவிட்டாலும், அங்கே விலைவாசி தணிந்தே இருப்பதால், சேமிக்க முடியும். பத்து வருடம் வேலை செய்து விட்டுக் கணிசமான தொகையோடு ஊருக்குத் திரும்பலாம். இப்படியான திறமைகளைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவுக்கு சிரமம் எதுவும் இருக்காது தான். விரைவில் இது நிகழ வைத்தாஸ் வெளியுறவு அமைச்சரகத்திடம் பேச வேண்டும். அதற்கு முன்னேற்பாடாக இலாகா இல்லாத அமைச்சரிடம் நட்பை மேம்படுத்தி நிர்வாக யந்திரம் சுழலும் போது தேவையான ஃபைல்கள் சீராக முன்னேற வழி செய்ய வேண்டும். அவருடைய தேவைகள் வேறே உண்டு. குளிருக்கு இதமாகக் கூட இருக்கத் துணை வேண்டும், முக்கியமாக அவருக்கு.

இரண்டு நாளாக அலைந்து கொண்டிருக்கிறான் வைத்தாஸ்.

இனித் தொடர்வதற்கு முன் அவனுக்கு ஓய்வு தேவை. வார இறுதியில் எந்த தெய்வமும் வரம் தர வந்து நிற்கப் போவதில்லை.

அவன் இயல்பாக இருக்கலாம். உறங்கலாம். எழுதலாம்.

அப்புறம் எழுதலாம்.

வீராவாலி.

அப்புறம் உறங்கலாம்.

வீராவாலி.

அவளைத் திரும்பப் பார்க்க வேண்டும். அவள் அருகில் இருக்க வேண்டும். எச்சில் நனைந்து மினுமினுக்கும் கருத்த உதடுகளும் மூக்கில் குத்தும் வாடையுமாக அவள் வைத்தாஸோடு மெய் கலக்க வேண்டும்.

வீராவாலி.

இந்தத் தெருதானே. தெருத் திருப்பத்தில் அந்தப் பெரிய வீடு.

இதென்ன? தெருக்கோடியில் ரொட்டி விற்கிற கடையும், இனிப்புகள் விற்கிற கடையும் இல்லையா பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன.

இங்கே ஒரு பெரிய வீடு. மிகப் பெரிய வீடு.

வைத்தாஸ் ரொட்டிக் கடைக்காரனை ஆங்கிலத்தில் விசாரிக்க அவன் சிநேகமாகச் சிரித்து நோ இங்கிலீஷ் என்றான்.

வைத்தாஸ் முன்னால் கடந்து போக, சாப் என்று பெருஞ் சத்தம். திரும்பிப் பார்க்க, இனிப்புக் கடைக்காரன் சிரித்தபடி நிற்கிறான்.

ஹம் பி நோ இங்க்லீஷ்.

இருக்கட்டும். கையசைத்தபடி வைத்தாஸ் வந்த வழியே திரும்பினான். இந்த ரெண்டு மனுஷர்களும் அவனுடைய தேசத்துக்குத் தேவைப் படுவார்களா?

பழைய இசைத்தட்டு ஒலிக்கும் இந்தக் கடை. போன முறை வந்தபோது இதைக் கடந்து தான் போனான் வைத்தாஸ். பெரிய வீடு. அதற்கு இந்தியில் ஏதோ பெயர் சொன்னார்கள். அங்கே தான்.

வீராவாலி.

பழைய தில்லியில் மொகலாய வாடை இன்னும் நீங்காத இருட்டுத் தெருக்களில் ஓர் ஆப்பிரிக்க இந்திய எழுத்தாளன் தன் ஒற்றை இரவுத் துணையைத் தேடினான். ஏன் என்ற கேள்வியும், இதற்காகத்தான் என்ற பதிலும் அவனிடம் இல்லை. அறைக்குள் மர அலமாரியில் தன் கைக்கடியாரத்தைப் பாதுகாப்பாகப் பூட்டிய பின்னரே அவன் படி இறங்கிப் போனான். இணை விழைச்சலும் இந்திய நாவலும் என்ற தலைப்பில் அடுத்த சர்வதேச இலக்கிய அரங்கில் பேசத் தயாரான தீவிரம் அவனுடைய இயக்கத்தில் தெரிந்தது.

நந்தினி சொல்வதாக இது வைத்தாஸ் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும். நந்தினி வேண்டாம். வைத்தாஸ் காமம் மிகுந்து இப்படிப் பழைய தில்லித் தெருக்களில் அலைந்து திரிவதை அவள் ஊகித்திருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், அவள் இப்படிச் சொல்ல வேண்டாம். நாவலில் எத்தனையோ கதாபாத்திரங்கள். வேறு யாராவது சொல்லி விட்டுப் போகட்டும்.

கையில் குடையோடு சாமு சொல்லட்டும். அம்பலப்புழையில் மழை நிற்கட்டும். படகு வரக் காத்திருக்கும்போது சாமு சொல்லட்டும்.

இந்தத் தெரு தானே? இதேதான். மயில்களின் வாடை.

செத்த மயில்கள் தெரு ஓரம் கிடத்தப் பட்டிருந்தன. நீலமும் கருப்புமாக எண்ணெய் நிறைத்த போத்தல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. குளிரில் அந்த எண்ணெய் வாடை பிடிவாதமாகச் சூழ்ந்து நின்றிருந்தது.

இந்தப் பெரிய வீடு தான். மயில்களின் இறகுகள் பரத்திய வாடை கிளர்ச்சியூட்டுகிறது. எல்லா அறைகளிலும் மயில்கள் கிடத்தப்பட்டிருக்கின்றன. வாடை எல்லாம் திரண்டு ஓர் உருவம் கொண்டது போல் அறைக்கு நடுவே நிற்கிறாள்.

வீராவாலி.

வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து –
——————————–

இந்தச் சோழிகள் உன் வாழ்ந்த காலத்தைச் சொல்லாது. எதிர்கொள்ள வேண்டிய தினங்களைப் பற்றியும் இவை எதுவும் தெரிவிக்காது. சோழிகள் உயிர் நீத்த சங்குப் பூச்சிகளின் மேல் ஓடு. தாளி ஓலைகளோ, பனை மரத்தில் இருந்து உதிர்ந்த உலர்ந்த சருகுகளின் தொகுப்பு. கணக்கும் இலக்கியமும் வான இயலும், மருத்துவமும் கீறி வைக்கப் பயன்பட்ட, காலத்தால் வாடாத கீற்றுச் சருகுகள். சோழிகளும் தாளி ஓலைகளும் வருங்காலம் உரைக்குமென்று மூடர்களே நம்பினார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். பயமுறுத்தினார்கள்.

மேல்சாந்தி வெளியே கிளம்பும் முன், முகப்பில் இருந்து சொன்னார். வைத்தாஸும் சாமுவும் கேட்டபடி இருந்தார்கள். முதுபெண் அவர்கள் முன்னால் நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

மழையோடு மேல்சாந்தி அம்பலத்தில் விளக்கிட்டு சந்தியாகால பூஜை முடித்து வரக் கிளம்பிப் போன பிறகு அவருடைய மனைவியான நாராயணி அந்தர்ஜனம் என்ற அந்த முதுபெண், உள்ளங்கையில் பிடித்திருந்த சோழிகளை முன்னால் இருந்த சிறு தந்த மேஜையில் வீசினாள்.

மழை வலுக்க, அவள் குரலைச் சற்றே உயர்த்திச் சொன்னாள் –

என்றாலும், இந்த ஓலை நறுக்கும், சோழிகளும் என்னோடு இருக்கும்போது நான் எனக்குள் பேசிக் கொள்கிறேன். யுகங்களையும் காதங்களையும் கடந்து காலத்தில் முன்னும் பின்னும் லகுவாக நகர்ந்து என் வார்த்தைகள் மூலம் என்னைப் பிணைத்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் அதைப் பகிர்வேன். கிறுக்கச்சியான கிழட்டுப் பெண்பிள்ளையின் உளறல்கள் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி தான். வார்த்தைகளுக்குக் கேட்பவர்கள் அன்றோ சகல அர்த்தங்களையும் கொடுக்கிறார்கள்?

சாமு கை கூப்பினான்.

தயவு செய்து சொல்ல உத்தரவாகணும். வெள்ளைக்காரத் திருமேனி, கரிய திருமேனி சீமையில் இருந்து வந்தது உங்களைப் பார்க்க அனுப்பி வச்சுத்தான்.

அவள் வைத்தாஸைப் பார்த்தாள்.

வைத்தாஸ் சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தான்.

குஞ்ஞம்மிணி என்றாள் முதுபெண்.

வைத்தாஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

குஞ்ஞம்மிணியிடம் நீங்கள் மெல்லச் சொல்லிப் பாருங்கள். அவள் இந்த நாவலில் இருக்க வேண்டியவள் இல்லை. வேறு யாரோ எழுதிய புனைகதையில் மூன்று வயதுச் சிறுமியாக வந்தவள். அவளுடைய பெற்றோரோடு கொல்லூர் ஷேத்ரத்துக்கு காசர்கோட்டில் இருந்து போகும்போது கால வெளியில் காணாமல் போனாள். அறிவியல் முன்னேறி காலத்தில் பயணம் போவது வசப்படும்போது அவளுக்கும் மோசனம் கிடைக்கும் என்று அந்த நாவல் முடிக்கப் பட்டிருந்தது. அவள் அப்போது ஏதும் சொல்லாததால் அதை ஏற்றுக் கொண்டதாகத் தானே பொருள்?

வைத்தாஸ் தலையைக் குலுக்கிக் கொண்டான். குஞ்ஞம்மிணியை இதைச் சொல்லி விலக்கி விட முடியாது. அவள் பழைய சிநேகிதி. மகாலிங்கய்யனால் முடியாததை அவன் பிள்ளை வைத்தாஸ் செய்து தரட்டும் என்று வந்திருக்கிறாள். வைத்தாஸ் அறிவிலும், பிரபலத்திலும், வகிக்கிற பதவியிலும் ஆயிரம் மடங்கு அவன் அப்பனை விட மேலே நிற்கிறவன். அவனால் முடியாவிட்டால் வேறு யாரும் எந்தக் காலத்திலும் செய்து விட முடியாது.

முதுபெண் அவனைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தாள்.

அப்போ ஒண்ணு செய்யுங்கள். இங்கே அவர்கள் குடும்பம் வசித்த பூர்விக வீடு இருந்த இடம் உண்டு. அதை அரசாங்கம் ஆக்கிரமித்து, இப்போது பராமரிப்பு இல்லாமக் கிடக்கிறது.

அவள் சொல்வது புரிந்தது என்பதாக சாமு வைத்தாஸின் தோளைத் தட்டி உற்சாகமாகச் சிரித்தான். சிறிய மேஜையில் கால் இடிக்க சோழிகள் சிதறின.

இந்த மலையாளிகள் வார்த்தைப் பரிமாற்றத்தைக் கடந்து அவற்றைச் சார்ந்தோ சாராமலேயோ கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்தக் கூடியவர்கள். ஊம், ஹம், ங்ஙோ, ஆஆ போன்ற ஒலிக்குறிப்பு மூலமே பேசி முடித்து எழுந்து போகக் கூடியவர்கள்.

முதுபெண் சிறிய மேசையில் இருந்து தரையில் விழுந்த சோழிகளைக் குனிந்து எடுக்க முற்பட, சாமு கீழே அமர்ந்து அவற்றை வாரியெடுத்தான்.

மெல்ல, மெல்ல என்றபடி அவற்றைப் பரிவோடு கையில் திரும்ப ஏந்திய முதுபெண் தொடர்ந்தாள் –

குஞ்ஞம்மிணியின் தகப்பன் குப்புசாமி அய்யன் மலியக்கல் தோமைக்கு விற்றார். தோமை புது வீடு கட்டினான் அந்த மனையில். மலியக்கல் தோமையின் காலத்துக்குப் பிறகு அவன் மகன் செபஸ்தியானானவன் திருமாந்தாங்குன்னு சேகரன் தம்பிக்கு வீட்டை விற்றான். அங்கே தான் படகுத்துறை நிர்வகிக்கும் கவர்மெண்ட் ஆபீஸ் வந்தது. முப்பது வருடம் மூன்று குமாஸ்தாக்கள், ஒரு சேவகன் என்று தடையில்லாமல் நடந்த ஆபீஸ் ஓய்ந்து போனது அவர்கள் எல்லோருமே பென்ஷன் வாங்கி ஓய்வு பெற்ற அப்புறம் தான். ஆபீஸ் இன்னும் இருக்கிறது. பைல்களும் இருக்கின்றன. நாற்காலி, மேசைகளும் அப்படியே. யாராவது உரிமை நிலைநாட்டி அங்கே போவதாக இருந்தால் அரசாங்கம் கொடுத்து விடும் தான். வாடகை பாக்கி மட்டும் வராது. சேகரன் தம்பியின் பேரனிடம் இருந்து வைத்தாஸ் அந்த இடத்தைக் கிரையம் செய்தால் குஞ்ஞம்மிணி அங்கே யாருக்கும் உபத்திரவம் தராது இருந்து கொள்ளலாம்.

முதுபெண் சற்று நிறுத்தி மூச்சு வாங்கினாள். அவளை இதற்கு மேல் பேச வைத்துத் தொந்தரவு கொடுக்க வைத்தாஸ் விரும்பவில்லை.

பெரிய விலை எல்லாம் இல்லை. அதுவும் உங்களுக்கு. உங்கள் ஊர்க் கணக்கில் பத்து நாள் மூணு வேளையும் சகல விபவங்களோடும் விருந்து சாப்பிடுகிற அளவு அல்லது அதற்கும் குறைவாகவே பணம் செலவாகும்.

முதுபெண் விடாமல் சொல்ல சாமுவும் ஆமோதித்தான். வைத்தாஸ் சம்மதித்தால் இன்னும் பத்து நிமிஷத்தில் முப்பது வருட தூசி படிந்த பைல்களோடு சர்க்கார் அலுவலகம் வைத்தாஸ் கையில் வரலாம் என்று தோன்றியது.

இங்கே வீடு வாங்கி என்ன செய்ய? அதுவும் வேறு நாட்டு அரசாங்க அதிகாரியான வைத்தாஸ் இங்கே சொத்து வாங்க ஏகப்பட்ட அனுமதிகளும், அரசு அறிவிப்புகளும் கலந்தாலோசித்துச் செயலாற்றுவதும் தேவைப்படலாம்.

நீங்கள் தில்லி போகிறீர்கள் தானே?

முதுபெண் விசாரித்தாள்.

ஆமா. அங்கே உங்களுக்கு ஏதாவது தேவைப்படுகிறதா? வாங்கி அனுப்பறேன்.

நன்றி. எதுவும் வேண்டாம். அங்கே வாங்கும் எதுவும் சரியாக இருப்பதில்லை. நூதன் ஸ்டவ் ஒருமுறை என் மகன் வாங்கி வந்து கொடுத்தான். சமைக்க எடுத்த நேரத்தை விட, குறி சொல்லத்தான் பிரயோஜனமானது. கேள்வி கேட்டு, மேல் தட்டில் பிடித்துக் கொண்டால் காலை உயர்த்தித் தரையில் அடித்துக் குறி சொல்கிறதாக அந்த அடுப்பு அண்டை அயலில் பிரபலம். கடைசியில் அம்பலத்தில் விட்டுவிட்டு வந்தோம்.

சாமு நினைவுபடுத்தினான் –

அந்த டில்லி டிரான்சிஸ்டர் கதையைச் சொல்லவில்லையே? எந்த ஸ்டேஷனைத் திருப்பினாலும் டமடம என்று கழைக்கூத்தாடி ஆட்டம் போல முழங்கிக் கொண்டிருந்தது. மயில் அகவுகிற சத்தம் வேறே. நடு நடுவே திரும்பத் திரும்ப ஒரு பெண் ஏதோ மொணமொணவென்று சொன்னாளே.

முதுபெண் வைத்தாஸை கூர்ந்து பார்த்துச் சொன்னாள்.

வீராவாலி.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன