snippet of the translation #Lanthan_Bathery of Mr N.S.Madhavan
காந்திஜியோட பிரசங்கத்தை கேட்க, அரை மைல் நீளமும், கால் மைல் அகலமுமா பெருங்கூட்டம் கூடும். கொச்சியிலே இருந்த இங்கிலீஷ்காரங்களுக்கு அது பிடிக்கலே. இடுப்புக்கு மேலே துணி உடுத்தாதவர், நம்ம பங்களாவிலே வேலைக்காரனாக் கூட இருக்க தகுதியில்லாதவர் இந்த காந்தி. இப்படியே போனா, இந்தியாவைக் கைகழுவ வேண்டியதுதான். சின்ன வயசு இங்கிலீஷ்காரன், அவன் ஒரு ஏரோப்ளேன் பைலட், அவன் சொன்னான் : நல்லா பார்த்துக்குங்க. இந்த காந்திங்கற ஆளோட பேச்சையும் இருப்பையும் நான் நிறுத்திப் போடறேன். என் கையிலே அதுக்கான சூட்சுமம் இருக்கு. ஆகாயத்திலே ஏரோப்ளேன் பறந்தா, அதை வாயைப் பிளந்துக்கிட்டு பார்க்காத இந்தியன் இருக்கானா என்ன?
காந்திஜி பாதி சொற்பொழிவிலே இருந்தார். சட்டுனு வடக்கே, பழைய கலங்கரை விளக்கத்துப் பக்கம் இருந்து ஒரு பெரிய சத்தம். சிறிசா ஒரு விமானம் கூட்டத்துக்கே மேலே பறந்து போச்சு. கூடவே தூசியும் எழுந்தது. காந்திஜி சொற்பொழிவை நிறுத்தினார். அவர் உரக்க மைக்கிலே பிரார்த்தனை செய்தார்: “சப்கோ சன்மதி தே பகவான்”. அப்புறம் யாரும் தலையை உயர்த்திப் பார்க்கவே இல்லை. காந்திஜியோட பிரசங்கம் தொடர்ந்தது. பைலட் விமானத்தை இன்னும் உயரக் கொண்டு போனான். குட்டிக்கரணம் அடித்தான். தலைகீழாகப் பறந்தான். கூட்டத்துக்கு மேலே பறந்து இன்னும் உயரப் போனான். யாருமே நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்கலே.
#Lanthan_Bathery #பீரங்கிப்_பாடல்கள்