கணபதி ஹோமம் செய்ய போர்ட்டபிள் ஹோம குண்டத்தோடு வந்த சாஸ்திரிகள்

வாழ்ந்து போதீரே, அரசூர் புதின வரிசையில் நான்காவது. மற்றவை – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், இந்தத் தொகுதி மற்ற என் நாவல்கள் போல் ஸீரோ பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது. நூலில் இருந்து-

என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா?

பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள்.

சங்கரா, எங்கே போனே?

பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான்.

கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி மாதிரியா இருக்கே நீ?

ஜெயம்மா சிரித்தாள்.

‘ஆபீஸ்லே பாத்ரூம் அடைச்சாலும் முதல் குச்சி நான் தான்’ என்றான் சங்கரன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அவன் லீவு போட்டு விடுவான். இல்லாவிட்டால் வேறே ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு டூர் கிளம்பி விடுவான்.

கித்தான் பையில் இருந்து சின்ன சைஸ் ஹோம குண்டத்தை எடுத்த சாஸ்திரிகள் மற்ற சாமக்கிரியைகள் வேணுமே என்று மகா பொதுவாகச் சொல்ல, ஜெயம்மா கேட்டாள் –

சாஸ்திரியவரே, அரணி கடைஞ்சு அக்னி கொண்டு வரப் போறேளா?

வயதான சாஸ்திரிகள். காப்பியை எதிர்நோக்கி இருமி விட்டு ஜெயம்மாவைப் பார்த்தார். எல்லோரும் எல்லாருக்கும் தெரிந்த தில்லி தென்னிந்தியச் சூழலில் புரோகிதர்கள் வெகு பிரபலம். அதுவும் ஜெயம்மா வீட்டுக்கு வந்து போகும் அதே சீனியர் வைதீகர் தான் இவர்.

இல்லேம்மா கொழந்தே, அரணியெல்லாம் எதுக்கு? ஒரு தீப்பெட்டியும் காக்கடாவும் எதேஷ்டம் என்றார்.

அப்படியே அண்டர் செக்ரட்டரி சார் கிட்டே சாக்கடை குத்தறதெல்லாம் சாவகாசமா வச்சுக்கலாம், ஸ்நானம் பண்ணிட்டு மனையிலே உக்காரும்ன்னு சொல்லும்மா.

உள்ளே இருந்து டபரா செட்டில் வழிய வழியக் காப்பி கொண்டு வந்து கொடுத்த சமையல் மாமியையும் தெரிந்தவர் என்பதால் தில்லியில் பீப்ரி காப்பிக் கொட்டை வரத்து இல்லாமல், ரோபஸ்டா மட்டும் வறுத்து அரைத்த காப்பி தொண்டையில் இறங்க மறுப்பது பற்றி அவர் மாமியிடம் புகார் செய்ய, பாத்ரூம் பிரச்சனை தீர்த்து வந்த சங்கரன் தனக்கும் ஒரு காப்பி என்று அடி போட்டான்.

நான் காப்பி குடிக்கறதில்லே என்று ஜூனியர் சாஸ்திரிகள் டபராவைத் தியாக உணர்வோடு சங்கரனுக்கு நீட்ட, ஜெயம்மா உள்ளே திரும்பி குட்டி சாஸ்திரிக்கு நாலு ஸ்பூன் அஸ்காவும் நாலு கட்டெறும்பும் போட்டு பால் கொண்டாங்கோ என்று சத்தமிட்டாள். வெட்கத்தோடு தாங்க்ஸ் மாமி சொன்ன ஜூனியர், சீனியரிடம் இருந்து வாங்கிக் கொண்ட ஹோம குண்டத்தை மேல் வேஷ்டியால் பிரியமாகத் துடைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன