சகல இன சஞ்சீவனி கடை விரித்தோம் கொள்வார் அநேகம் கட்டற்க

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் 42-ஆவது அத்தியாயம் திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகி உள்ளது (டிசம்பர் 2023 தேதி 3). அதிலிருந்து சில பகுதிகள்.

நாவல் அச்சுவடிவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது.

சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது.

மெல்ல ஊரும் வாகனங்கள் கதவு திறந்திருக்க சுற்றிலும் ஈரவாடையோடு அரண்மனை நோக்கி வரிசையாகப் போய்க்கொண்டிருந்தன.

குடுவைகளை கிடங்குகளில் சேர்த்து வைக்க இன்னும் இடமில்லாமல் பள்ளிக்கூடங்களிலும் அரசாங்க அலுவலகங்களிலும் அவசரமாகச் செய்யப்பட்ட அலமாரிகளில் அடுக்கப்பட்டு அந்த இடமும் நிறைந்துபோக, தேளரசரின் அரண்மனை மட்டும் மிச்சமிருந்தது.

இப்போதைக்கு அரண்மனையைக் கிடங்காக்கலாம் என்று முடிவு எடுத்தது கர்ப்பூரம்தான். அதுவும் போக வர வழிகூட விடாமல் சுவரோடும் கதவோடும் அலமாரி உயர்ந்து வரக்கூடிய கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டன.

சகல சஞ்சீவினி வாடை எதிர்பார்த்தபடி தேளரசருக்குப் பிடித்துப்போனது. முந்தாநாள் தான் அரண்மனை கிடங்கு ஆனது. அந்த வாடையில் இளம்பெண் தேள்களுடன் கூட பெருந்தேளருக்குப் போதை கூடியது.

வக்காளி வைத்தியன். சகலன்னு மருந்தோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சதுமே விரைக்குது வாடையை முகர்ந்தா வேறே எண்ணம் ஏதும் வரல்லே சம்போகம் தான் இதோட சோறு கொஞ்சம் தின்னா வயிறு நிறைஞ்சு போகிற மாதிரி மருந்து பலன்லே கூட்டிச் சேர்த்தா அசல் சஞ்சீவினி என்ன அதோட பாட்டன் கூட இந்த சகல இன சஞ்சீவனிக்கு முன்னே நிக்காதே. அந்த மருந்துக்கு உள்நாட்டுக்காரர்கள் பெயர் வச்சிருக்கறதா கேள்வி. உடன் உப்பும் சகலருக்கும் சஞ்சீவனி. வக்காளி.
இதோட ரெண்டு தடவை சொல்லிட்டார் அவரை அறியாமலேயே.

பேசாமல் இருக்கப்பட்ட மருந்தை எல்லாம் எடுத்துக்கிட்டு, சாப்பாடையும் கொஞ்சம் போல எடுத்துக்கிட்டு வேறே கிரகம்,, வேறே சூரிய மண்டலம், வேறே பிரபஞ்சம் போய் அட தனியாகப் போய் என்ன பண்றது நாலைந்து தேளழகிகளோட போயிட வேண்டியதுதான். (மேலும்)

அப்பாராக இருந்தால் இளந்தாரி பையன்கள் தான் வேணும். பாவம் தெள்ளுப்பூச்சி கொட்டிக் கொட்டி முழுசா பரலோகம் போயிட்டார். அதெப்படி திடீர்னு துயிலகத்துலே தெள்ளுப்பூச்சி எப்படி வந்தது? அங்கே மட்டுமில்லே. நாட்டுலே திடீர்னு எப்படி படை பட்டாளமாக வெட்டுக்கிளிப்படை மாதிரி வந்தது? ஏன் தேளர்களை மட்டும் தேடித்தேடிக் கொலை செஞ்சுது, அழுக்கு வேட்டி மாதிரி படையாகத் திரும்பிப் போனது? (மேலும்)

மனுஷ இனத்துக்கு கிருமிக் காய்ச்சல் மாதிரி தேளை அழிக்க தெள்ளுப் பூச்சி போல் இருக்கு (மேலும்)

எல்லாம் இந்த கிருத்திருமம் பிடிச்ச கர்ப்பூரம் கைவேலையா இருக்கக் கூடும். வைத்தியனை ஏதாவது கொடுத்து சரிக்கட்டி இருப்பான் கிரகசாரம். என்ன மருந்தோ நேத்து அடுக்கின மருந்து மூத்திரவாடை. அவனவன் குடுவையிலே பெய்ந்து அனுப்பியிருக்கான்.
(மேலும்)

ஏற்றுமதிக்குன்னு சொல்லி கண்ட பயல்கல் சீசாவிலே பேஞ்சதை எல்லாம் படுக்கை அறையிலே சேர்த்து வைக்கணும்னு விதியா என்ன? இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணும். வரட்டும் கர்ப்பூரம். ஏதாவது வழி செய்வான் அந்தப் பயல்.

ஓவென்று பெருஞ்சத்தம் கதவைத் திறக்காமல் சாவித் துவாரம் வழியே பார்க்க, ஒரு பத்தாயிரம் கரப்புகள் அரண்மனையை ஆக்கிரமிக்க வேகமாகந் நகர்ந்து வந்தன. சுவரெல்லாம் கரப்பு. தரையில் கிடந்து சட்டென்று பறந்து பயமுறுத்தும் அவற்றில் சில.

தேளரசரின் வைப்பாட்டிகள் பெற்ற, அண்மையில் பிறந்த தேள்சிசுக்கள் தாய்க் கரப்புகள் பாலூட்ட கண்மூடி இருக்க, உள்ளே வந்த கரப்புப் பட்டாளம் சிசுத் தேள்கள் மேலேறி கால்களை பல்கொண்டு அறுத்து உண்டன. நெற்றியில் தேள்சிசுக்களை நோண்டி தலைச்சோறு எடுத்து சுறுசுறுப்பாக உண்டன அவை; ஜாக்கிரதையாக சின்னஞ்சிறு தேள் கொடுக்குகள் மேல் எச்சில்கொண்டு நனைத்து அவசரமாக அவற்றை விழுங்கின.

சமையலறையில் பாத்திரம் எல்லாம், எரியாத அடுப்பு எல்லாம், கழிப்பறை முழுக்க கரப்புகள் அரன்மணை முழுக்க ஊர்ந்திருக்க, படுக்கை அறைக் கதவைத் திறக்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தார் பெருந்தேளரசர். தடதடவென்று பாத்ரூம் கதவை இடிக்கற சத்தம். இனத்துக்கேயான எதிர்ச்செயல் போல சட்டுனு தரையிலே ஒரு விரிசல்லே உடனே பதுங்கிக்கிட்டார் பெருந்தேளர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன