ஒரு மடக்கு பால் பாயசம்

பெருநாவல் மிளகு-வில் இருந்து சொல்வனம் வழியாக ஒரு மடக்கு அம்பலப்புழை பால் பாயசம்

அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான்.

ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன்.

இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர் பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர் சந்தன சோப் தேய்த்து நீராடுவார்கள்.

சில சமயம் நன்றாக மழை பெய்யும்போது அல்லது கோடை காலத்தில் குளம் வற்றி பாசி மிதக்கத் தண்ணீர் கொஞ்சம் போல சிறுக்கும்போது, இன்னும் நுண்ணிய சம்பிரதாயபூர்வம் குளத்து நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வந்து அதைச் சிரசில் ஊற்றிக்கொண்டு அடுத்து இவர்கள் குளிமுறி ஸ்நானம் செய்வது வழக்கம்.

இவனுக்கு திருக்குளத்து நீரைக் குடங்களில் துணி சுற்றி வடிகட்டி வைத்து நாள் முழுவதும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாகப் போனது. இவனுக்கு கோல்கேட் பற்பசையும், ஷவரில் வெந்நீரும் விலக்கி வைக்கப்பட்டவை.

குளித்து முடித்ததும் காலை மூன்றரை மணிக்கு சூடும் சுவையுமான காப்பி பானம் செய்ய இவனுக்குக் கிட்டாது. காலை ஐந்து மணிக்கு துளசி இலையும், கற்பூரமும், ஏலக்காயும் ஊறிய குளிர்ந்த நீரில் ஸ்நானம் முடித்து பாலும் சோறும் நெய்யும் ஆராதனையாக இவனுக்கு அளிக்கிறார்கள்.

நடுப்பகல் வரை இவனுக்கு அவ்வப்போது சிறு கிண்டியில் பால் தரப்படுகிறது. குடிக்க இல்லை, குளிக்க.

அப்புறம் சற்று நேரம் ஸ்ரீகிருஷ்ணன் அதிகாரம்தான். தினசரி நடுப்பகலுக்கு அம்பலப்புழை பால்பாயசம் இவனுக்கு நைவேத்தியம் ஆகிறது. பொன் நிறத்தில் பாலும் நெய்யும் சர்க்கரையும் தேங்காயும் கலந்து மர அடுப்பில் காய்ச்சப்படும் பாயசம் நாள் தவறாமல் இவனுக்கு உணவு.

”பகல் வரைக்கும் இங்கே இருந்தால் தான் பால் பாயசம் கிடைக்குமா?” வசந்தி தெரிசாவைக் கேட்டாள்.

“இதுக்காகன்னு கோவில் வாசல்லே காத்துண்டிருக்க முடியுமா?”

திலீப் ராவ்ஜி சிரித்தார். ”என் அத்யந்த சிநேகிதன் கஜானன் மோதக்குன்னு ஒரு மராட்டிக்காரர் இந்த அம்பலப்புழை பால் பாயசத்துக்கு சொத்தையே எழுதி வைப்பார், இருந்தால். ஆனாலும் என்ன, வருஷம் ஒரு தடவை பம்பாய்லே இருந்து வந்து என்னையும் ஸ்ரீகிருஷ்ணனையும் பார்த்து குசலம் விசாரிச்சு ரெண்டு நாள் என்னோடு தங்கி இருப்பார். லிட்டர் கணக்கா அம்பலப்புழை பால் பாயசம் வாங்கி இந்த ரெண்டு நாளில் அவரும் குடிச்சுண்டே இருக்கறதோடு எனக்கும் அகல்யா இருந்தபோது அவளுக்கும் வாய் நிறைய வயறு நிறையச் சாப்பிடக் கொடுப்பார். இப்போ கூட போன மாசம் வந்திருந்தார். நானும் அவரும் தான்”. திலீப் ராவ்ஜி மௌனமானார்.

கோவில் கிழக்கு வாசல் கடைகள் ஐந்து மணிக்கே திறந்து சுறுசுறுப்பாக ஆராதனைப் பொருட்களை பிரம்புத் தட்டுகளில் வைத்து விற்றுக் கொண்டிருந்தன. திலீப் ஹோட்டல் பணியாளர்கள் நான்கு பேரை அந்த நேரத்திலேயே குளித்து மடி வஸ்திரம் அணிந்து சந்தனக் கீற்று நெற்றியில் துலங்க நிறுத்தி வைத்திருந்தார். அர்ச்சனைப் பொருள், பால், பழம், புஷ்பாஞ்சலிக்கு பூக்கள், என்று எல்லாம் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்ய அவர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள்.

அம்பலப்புழை வந்துட்டு பாயசம் சாப்பிடாமலா என்று தில்லியில் அக்கம் பக்கத்து மலையாளிகள் கேட்டுப் புச்சமாகப் பார்ப்பதைத் தவிர்க்க அந்த அமிர்தத்தை ஒரு மடக்காவது எப்பாடு பட்டாவது வாங்கி அருந்திப் போக வசந்தி தீர்மானித்திருந்தாள் போல திலீப்புக்குத் தோன்றியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன