பெருந்தேளரசரின் ஹோலோகிராமும் காலப் படகும்

என் 14-வது நாவல் தினை அல்லது சஞ்சீவனி வெளிவர இருக்கிறது. நாவல் பகுதி ஒன்று – திண்ணை காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து-

ஊ ஊ என்று சன்னமாகக் காற்று போல் சீழ்க்கை ஒலி தொடர்ந்து வர ஒரு அணு கூட நகராமல் காலப் படகு பின்னோக்கிக் காலத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. ஜம்புத் தீவு பிரகடனமும் துரைசாமியும் கால வெள்ளத்தில் குறுந் திவலையாகி மறைந்து போகப் பயணம் நீள்கிறது;

காற்றைப் போன்ற ஒலி நின்றது. குயிலி நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பித்தல்ல. தன் போக்கில் நிலைத்த இயக்கம். உள்ளே கவிந்த சுவர்த் திரையில் ஆறு வளைந்து திரும்பும் நீர்நிறை வாய்க்கால் ஓரம் ஆள் வராத முடுக்கில் காலப்படகு கண் மறைவாக நிற்பது தெரிகிறது.

குயிலியும் வானியும் வெட்டவெளியில் கால் வைக்காமல் காலப் படகில் இருந்தபடிக்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலப் படகு, பால் வீதி பிரபஞ்சத்தில், சூரிய மண்டல கிரகத் தொகுதியில், பூமி கிரகத்தில் மட்டும் சஞ்சரிக்கும் ஊர்தி. பூமியில் நிகழும் காலத்தின் பின்னும் முன்னுமாக முப்பது நூற்றாண்டுகள் பயணம் செய்யும் ஊர்தி. சக்கரங்களோ இறக்கைகளோ இல்லாதது. அதன் இயக்கமும் எரிபொருள், அ-எரிபொருள் தேவையும் பற்றிப் பின்னொருநாள் விரிவாகப் பேசலாம். இப்போது குயிலி காத்திருக்கிறாள். வானம்பாடியும் நீலரும் கூட.

புதியதாகத் தொடங்கிய எதற்கான துறை என்று யாருக்கும் சரியான புரிதல் இல்லாத அலுவலகத்தில் யாரோ பணிக்குச் சேர்வதை எதிர்பார்த்துக் கட்டி வைத்த அமைப்பாக காலப் படகு தட்டுப்படும்.

ஏமப் பெருந்துயில் கட்டிடத்தின் ஈசான மூலையில் இரும்பு மற்றும் மின்காந்தத் தடுப்புக் கதவுகள் தடுத்து இளம் நீலம் மற்றும் இளம் பச்சையில் விளக்கு எரிய திரைகளுக்குப் பின்னே காலப் படகு இருக்கும். அது பயணம் போகும்போது விளக்குகள் எரியாது.

அரசுத் தலைவர் பெருந்தேளர் தவிர யாரும் ஹோலோகிராமாகவோ சக்தித் துணுக்குத் தொகுதிகளாகவோ ஊர்தியில் பிரவேசிக்க முடியாது. பெருந்தேளருக்கான சம்பிரதாயபூர்வமான மரியாதையை மேம்போக்காக மட்டும் கடைப்பிடித்து ஊர்திப் பயணிகள் காலப் படகின் நகர்விலும் நிலைத்தலிலும் கவனம் செலுத்த அனுமதி உண்டு.

எந்த நூற்றாண்டில் எந்த இடத்தில் ஊர்தி சென்றடைந்து கதவு திறக்க வேண்டும் என்றாலும் பெருந்தேளர் அல்லது இனி வருமாயிருக்கும் அவருக்கடுத்தவர் ஊர்திக்கு உள்ளே இருக்கும்போது பயணிகள் வெளியேற முடியாது. இப்போது 1565-ஆம் ஆண்டில் நிற்கும் முன் பெருந்தேளரின் ஹோலோகிராம் மறைந்தது .

வானி இருக்கையில் இருந்து எழுந்து வந்து குயிலியை அணைத்துக் கொண்டாள். நல்ல உணவு கிடைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்றாள் குயிலி. விஜய நகரத்தில் வழக்கம் போல் விழாக் கொண்டாட்டம் என்று கூவியபடி வானி என்ற வானம்பாடி, ஊர்திக் கதவுகள் திறந்து வழிவிட வெளியே வந்தாள். அடுத்து குயிலி.

திண்ணையில் தினை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன