புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்

குறுநாவல்    ராத்திரி வண்டி   2 ஆ

 

சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.

 

ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால் பாவாமல் மிதந்து கொண்டிருக்கிறாள். கையில் கோல் விளக்கோடு அந்தரத்தில் அலைகிற யட்சி.

 

சுட்டெரிக்க ஆரம்பிக்கிற வெய்யில். ஸ்டேஷனுக்கு வெளியே சரளைக்கல் பரப்பில் பையன்கள் சைக்கிள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஸ்கூல் லீவ் விட்டா வீட்டுலே உக்காந்து புத்தகம் படிக்கறது.. படம் போடறது.. புறா.. பானை மூடியிலே மலை.. படகு..

 

சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஒரு ரயில், காலம்பற ஏழுக்கு ஒண்ணு.. இதுக்காக கோட்டை மாட்டிக்கிட்டு கொட்டக் கொட்ட உட்காந்திருக்கணும்.. இந்தப் படம்.. இத்தனையுமா இங்கே உக்காந்து வரைஞ்சிருப்பான்? பாதி வரஞ்சு எடுத்திட்டு வந்திருப்பானா இருக்கும்.. இதெல்லாம் வெலை போகுமா? எம்புட்டு பெறும்?

 

டிராயிங் மாஸ்டர் பானை மூடியில் ஓட்டை போட்டு … எப்படித் தான் போடுவாரோ … இயற்கைக் காட்சி வரஞ்சு தருவார்….மஞ்சப் பிள்ளையார் புடிச்சு வச்ச மாதிரி ரெண்டு மலை, தண்ணி, தலப்பா கட்டிக்கிட்டு ஓடத்திலே போறவன்.. எல்லாம் ஒரு ரூபாய்க்கு.

 

ஆனா.. ஸ்கூல்லே டிராயிங் கிளாஸ்லே புறா மட்டும் தான் வரைவார். அது என்னமோ, வருஷம் பூரா புறா வரஞ்சே ஒப்பேத்திட்டு, தினசரி சாயந்திரம் ஆனந்தா டாக்கீஸிலே டிக்கட் கிழிக்கப் போயிடுவார்.

 

சீவகன் மணலில் வலது கால் பெருவிரலால் புறா வரைய முயற்சி செய்தான். சரளைக்கல் பரவிய மண் உம்மென்று கிடந்தது.

 

இந்த மண்ணுலே காலைத் தேச்சா தோல் உரிஞ்சு ரத்தம் தான் வரும். நாகநாதர் கோயில் சுவரா என்ன, எம்மேலே எழுது எழுதுன்னு கூப்பிட? இந்தி ஒழிகன்னு எழுதி, புறா மண்டை வரைஞ்சு, அதிலேயிருந்து குல்லா வச்ச தலை வரஞ்சு… அந்த மாதிரி ஆசாமிங்கதான் திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு இந்தி வளர்க்க காரியக் கமிட்டி அது இதுன்னு கூட்டுவாங்க.. தமிழ்ப் பத்திரிகையிலே பாதி கருப்பா போட்டோ எல்லாம் வரும்… குல்லா வச்சுக்கிட்டு.. திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு… கீழே இந்தி ஒழிக எழுதி…பக்கத்திலே ஒத்தை மயிர்க் குடுமியோட இந்திப் பண்டிட்டும் வரஞ்சு..  அதுங்கீழே இந்திப் பண்டிட்டும் ஒழிக…

 

டிராயிங் மாஸ்டர் பார்த்தா சிரிச்சிருப்பார்.. போர்டைப் பார்த்து ரெட்டைப் புறா வரைங்கடா… கதையா? என்ன கதை? பூசணிக்காய் கதையா? போன வாரம் தானேடா சொன்னேன்.. சரி சொல்றேன்… ஆனந்தா தியேட்டர்லே இண்டர்வெல்லுலே ஊர்ப்பய எல்லாம் குத்த வச்சு மூத்தரம் போற மண்ணுலே பூசணிக்கா கொடி போட்டாங்க… என்னமா காச்சது தெரியுமா? இந்த மாதிரி..இப்படி.. இப்படி…அவன் அவன் எனக்கு உனக்குன்னு தூக்கிட்டுப் போனான்…இவன் பாரு தலையிலே தூக்கிட்டு ஓடுறான்.. இவன்.. சைக்கிள் காரியர்லே..கவுறு போட்டுக் கட்டி.. இவன் அறுத்து கோணிச் சாக்கிலே அடைச்சுக்கிட்டு… எல்லாப் பயபுள்ளையும் வீட்டுலே பூசணிக்கா சாம்பார் வச்சுச் சாப்பிட்டானுங்க.. சாப்பிடறான் பாரு.. மொழங்கையிலேருந்து நக்கிக்கிட்டு.. அப்பறம் என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னா.. இதான் ஆச்சு.. சொரி.. உலக மகா சொரி.. எத்தனை கிலோ யூரியா.. சொரியறான் பாரு.. முதுகிலே இழுத்து இழுத்து.. குடுமியா.. போட்டுட்டாப் போச்சு..

 

குடுமி வைத்தவர்களையும் குல்லா போட்டவர்களையும் தாராளமாகக் கிண்டல் செய்யலாம். இந்தி பண்டிட்களையும். அப்புறம் பெண்டாட்டியைத் தொலைத்த டீக்கடைக்காரர்கள்…\

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன