எலிசபெத் டெய்லர் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 2

 

அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறான். எழுதுகிறான்.

 

பக்கத்தில் போனோம்.

 

‘தம்பிகளா.. நீங்க இந்தத் தெருவா?’

 

‘ஆமா’

 

‘இங்கே…டாக்டர் சச்சிதானந்தம் வீடு இருக்குன்னு சொன்னாங்க.. உங்களுக்கு..’

 

‘சதானந்தம்னு ஒரு டாக்டர் இருக்கார் இந்தத் தெருவிலே..’

 

‘அவரே தான்.. மாத்திச் சொல்றேன்..அவரே தான்.. எந்த வீடு தம்பி?’

 

காட்டினோம்.

 

‘நீங்க எங்கே இருந்து வரீங்க?’

 

‘இலங்கை தெரியுமா?’

 

தெரியாமல் என்ன? அங்கே நாள் முழுக்க சினிமா பாட்டு வைத்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணியானதும், ‘வணக்கம் கூறி விடை பெறுவது மயில்வாகனம்’ என்று முடிப்பார்கள். ‘சொக்கா.. ஆயிரமும் பொன்னாச்சே..’ என்று ரெண்டு வரி டயலாக் ஒலிபரப்பி, யாருடைய குரல் என்று அடையாளம் கண்டு பிடித்த அதிர்ஷ்டசாலிக்கு ப்ரவுன்சன் அண்ட் போல்ஸன் கஸ்டர்டும் – இது என்னமோ தெரியாது- கோபால் பல்பொடியும் மற்றதும் காலக்கிரமத்தில் அனுப்பி வைப்பார்கள். ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’ என்று பாடத்தை ஒழுங்கா படியுங்கடா சத்தம் போடும் சயின்ஸ் வாத்தியார் போல் மணிக்கொரு தடவை அறிவிப்பார்கள். அதை மட்டும் தவிர்த்து விட்டால், ஏறக்குறைய சந்தோஷமான ஊராக இருக்கும்.

 

’நான் இலங்கையிலிருந்து வரேன்..’

 

‘இங்கே என்ன பண்றீங்க?’

 

‘கோயில்கள் பற்றி, சைவ சமயம் பற்றி ஆராய்ச்சி பண்றேன்..’

 

‘அப்படீன்னா?’

 

‘அதாண்டா.. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி..’

 

சீதரன் முந்திரிக்கொட்டை மாதிரி நடுவிலே வெட்டினான்.

 

‘சபாஷ்.. திருவாசகம் எல்லாம் தெரிஞ்சிருக்கே..’

 

எப்படித் தெரியாமல் போகும்? நாலு வருஷமாகத் தமிழ்ப் புத்தகத்தைத் திறந்தால் அதுதான் முதல் பாட்டு.

 

‘தம்பி..’

 

அவன் குரலை ரகசியம் பேசுகிறதுபோல தாழ்த்தினான்/

 

‘என்ன அண்ணே?’

 

நாங்களும் அதே அளவுக்குத் தாழ்த்தி கோஷ்டியாகக் கேட்டோம்.

 

‘டாக்டர் வீட்டுலே புவனலோசனின்னு ஒரு அம்மா இருக்குதா?’

 

‘புவனலோசனி வேலுப்பிள்ளைன்னா.. உங்க ஊர் ரேடியோவிலே தானே..’

 

சதானந்தம் பெயரைத் தப்பாகச் சொன்ன மாதிரி இதுவும் ஆகியிருக்கும் என்ற நம்பிக்கையோடு கிரி கேட்டான். அதானே..

 

‘இல்லே தம்பி.. அவங்க இல்லே..இது குமரு..’

 

என்ன குமாரோ.. குமார் இல்லையாம்.. குமரு என்றால் சின்ன வயசுப் பெண்ணாம்.

 

டாக்டர் சதானந்தம் வீட்டில் குமரு உண்டுதான். புவனா இருக்கிறாள். எங்களுக்கு அக்கா வயசு. டாக்டர் வீட்டு மாமிக்குத் தங்கை. மாமி வயசான குமரு.

 

இரண்டு வருஷம் முன்னால் புவனாவும், அவள் அப்பாவும் இலங்கையிலிருந்து வந்தார்கள். அப்பா இப்போது உயிரோடு இல்லை.

 

புவனா காலேஜில் படிக்கிறாள். சாயந்திரம் கிருஷ்ணசாமி வாத்தியாரிடம் பாட்டு சொல்லிக் கொள்கிறாள்.

 

‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா…’

 

’உட்காருகிற இடத்தில் சிரங்கு வந்தால் குப்பை மேனி இலையை விழுதாக அரைத்துப் பத்துப் போடணும்’  என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிவிட்டு, அதே குரலில் வாத்தியார் பாட்டு சொல்லித் தருகிறார்,

 

‘அந்தக் குமருவுக்கு லெட்டர் கொடுக்கணுமா?’

 

சீதரன் கேட்டான்.

 

இந்த லெட்டர் கொடுப்பது விவகாரமான சங்கதி.

 

தெருவில் எங்களுக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் மூத்த செட் ஒன்று உண்டு. கிருபாகரனின் அண்ணன், சீதரனின் மாமா, கிரியுடைய சித்தப்பா என்று .. கஷ்டப்பட்டு மீசை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும்.. பக்கத்துத் தெருவிலிருந்து எல்லாம் இவர்களைப் பார்க்க சைக்கிளில் இவர்கள் வயது சிநேகிதர்கள் யாராவது எப்பவும் வருவது வழக்கம்.

 

இரண்டு மாதம் முன்பு வரை தினசரி சாயந்திரம் கோயில் பக்கத்தில் சைக்கிள் சகிதம் எல்லோரும் ஆஜர்.

 

புவனா கோயிலுக்குப் போவாள். அப்புறம் அக்பரின் அக்கா மெஹருன்னிசா மஜீத் தெருவில் அத்தை வீட்டுக்குப் போவாள்.

 

இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த பிறகு தான் சபை கலையும்.

 

புவனா தாட்தாட்டென்று தனியாகப் போகும்போது பின்னால் இருந்து சிரிப்பு கேட்கும். மெஹர் கூட அக்பரோ, நானோ போவோம்.

 

‘அந்தப் பக்கம் பாக்காம வாடா..’

 

அவள் முக்காட்டைக் கடித்துக் கொண்டு வேகமாக நடப்பாள்.

 

இரண்டு மாதம் முன்னால், பக்கத்துத் தெருவில் இருந்து வந்த சபையின் கவுரவ உறுப்பினன் எவனோ புவனாவுக்கு ‘லெட்டர்’ கொடுத்தானாம்.  போஸ்ட்மேன் வேல்சாமி தான் வழக்கமாக எல்லோருக்கும் லெட்டர் தருவார். இது என்ன ஸ்பெஷலோ?

 

போலீஸ்.. சத்தம்.. சமாதானம்.. தெருவே ஒரு வாரம் லோல்பட்டது.

 

கிருபாகரன் அணன் மெட்ராஸில் அவன் சின்னாயினா வீட்டுக்குப் போனான். மற்றவர்களும் உறவுக்காரர்களின் அட்ரஸைத் தேடி எடுத்துப் போனார்கள். சாயந்திர சபையின் கௌரவ உறுப்பினர்கள் தலை மட்டும் அவ்வப்போது தட்டுப்படுகிறது.

 

இந்த ஆள் லெட்டர் கொடுக்க வந்தவன் என்றான் உஷாராக இருக்க வேண்டும்.

 

இல்லையாம்.. சும்மா தான் கேட்டானாம்.

 

‘ஆராய்ச்சி பண்ணி என்ன செய்வீங்க?’

 

பழைய வம்புக்குத் தாவினோம்.

 

‘புத்தகம் போடுவேன்..’

 

’போஸ்ட் கார்ட் போட்டா அனுப்புவீங்களா?’

 

’பார்க்கலாம்..’

 

அவன் நடந்தான்.

 

காலக்கிரமத்தில் அனுப்புவான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன