பெருநாவல் மிளகு – கருத்தரங்கில் திரு ஸ்ரீநிவாசராகவன் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்

வாழ்த்துரை

ஸ்ரீநிவாச ராகவன் S

 

வணக்கம்.

வாழ்த்துகள் முருகன்ஜி.

 

முருகன்ஜி-யை நான் சிறுவனாக இருக்கும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறேன். இப்போது நான் உருவத்தில்  உயரமாக வளர்ந்த பிறகும் இலக்கிய உலகில் நான் அண்ணாந்து பார்க்கும் அண்ணா அவர் தான்.

 

நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக மிளகு பெரும்புதினத்துக்கு வருகிறேன்.

 

இந்தப் புதினத்தை நான் இரண்டு வகைகளில் அணுக விழைகிறேன்.

 

ஒன்று அதன் கட்டமைப்பு(structure). இரண்டாவது அவரது எழுத்து நடை

(language). இரண்டுமே எனக்கு மிக்க வியப்பைத் தரக்கூடியவையாக உள்ளன.

 

மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒரு ஆளுமையின் கதை இது. மிளகு ராணி நமது அரசியலிலும், சமூகத்திலும் சரித்திரத்திலும் எப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சரிதததை வெளிக்கொண்டு வந்ததற்காக நாம் இரா முருகனுக்கு மிகப் பெரிய வந்தனத்தை தெரிவித்தாக வேண்டும். சென்ன பைரவ தேவி ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல. அவர் முழுக்க முழுக்க உண்மையாக வாழ்ந்து மறைந்த பாத்திரம். கிட்டத்தட்ட மிக விரிந்த ஆராய்ச்சியின் விளைவாக

 

இந்தப் புத்தகத்தை முருகன் அவர்கள் படைத்திருக்கிறார்.

 

மிளகு பெரு நாவலை முதல் பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் படித்த வரை நான் அது ஒரு மாய யதார்த்தமாக அமைந்திருக்கிறது என்று நினைத்தேன். தொடர்ந்து வாசித்த பிறகு அப் புதினம் ஒரு மிகுபுனைவு என்ற ஜானர் வகையில் அமைந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் மிளகு பெருங்கதையை முழுவதுமாகப் படித்த பின்னர் தான் அது முருகன்ஜி அவர்களால் ஒரு polymorphic historical fantasy என்ற கட்டமைப்பில் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

 

மிளகு ஒரு அசர வைக்கும் படைப்பு. அதில் வரும் பரமன் கதாபாத்திரத்தை நாம்

 

உன்னிப்பாகப் பின் தொடர்ந்தால் ஏற்படக்கூடிய ஒரு பரவசம் அல்லது ஓர் ஆச்சரியம் என்பது எல்லைகளைத் தாண்டியது. அறிவியல் புனைவை சமூகவியலோடும் அரசியலோடும் கலந்து எழுதுவது என்பது எளிதில் சாத்தியமாகக் கூடியதல்ல. அசாத்தியமான கற்பனையும், அசாத்தியமான எழுத்து வன்மையும், அசாத்தியமான ஆளுமையும் கொண்டவரால்தான் அப்படி எழுத முடியும். இதை முருகன்ஜி-யைத் தவிர வேறு யாரும் எழுத முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்பேன் நான்.

 

மீர்ஜான் கோட்டையில் துவங்கும் கதை நானூறு வருடங்கள் முன்னும் பின்னும் போய் வரும் வகையில் நான் லினியர் முறையில்

 

சொல்லப்படும் இக்கதை கெருஸப்பா செல்கிறது. ஹொன்னாவர் செல்கிறது. அம்பழப்புழைக்குச் செல்கிறது. லண்டனுக்குச் செல்கிறது. திரும்பவும் 1999 காந்தஹார் விமானக் கடத்தலுக்குச் சென்று நாக்பூர் விமான நிலையத்தில் பரமன் காணாமற் போவதில் நிற்கிறது. பிறகு உள்ளால் செல்கிறது. அங்கிருந்து கோழிக்கோடு செல்கிறது. அங்கே குஞ்ஞாலி மரைக்காயரை ஞாபகப்படுத்துகிறது. (மரக்காயர் திரைப்படம் பார்க்கும்போதும் எனக்கு முருகன் தான் நினைவுக்கு வந்தார்.) பின்பு மதுரைக்கு வருகிறது. ஒரு முழு அத்தியாயம் முழுவதும் வரும் மதுரையைப் பற்றி பத்து நாட்கள் மதுரையில் தங்கித்தான் எழுதியிருக்க முடியும்.

 

பிறகு லண்டன் சென்று கெலடி-க்கு வந்து மிர்ஜான் கோட்டையில் முடிகிறது. இதில் உள்ள நிகழ்வுகளின் தொடர்ச்சி என்பது அற்புதமானது. இந்த சாதனை எப்படிச் சாத்தியம் என்றால் அதற்குப் பின் முருகன்ஜி-யின் அசுர உழைப்பு இருக்கிறது. நேரடியாக கூர்க் மாவட்டத்திற்குச் சென்று தங்கியிருந்து எழுத வேண்டிய கதையை பெருந்தொற்று காரணமாக சென்னையிலேயே இருந்து எழுதியதாக ஒரு முறை என்னிடம் அவர் சொன்னார். அந்தச் சூழலை மனதுக்குள் வரித்துக் கொள்ளாமல் இப்படி அற்புதமாக எழுதியிருக்க முடியாது. அவ்வகையில் அவரது உழைப்பு என்பது அசாதாரணமானது. ராட்சத்தனமானதும் கூட.

 

சதுர்முகப்பஸதி இந்த நாவலை நகர்த்திச் செல்கிறது. இப்புதினத்திற்கு அது ஒரு டூல் கிட் போல அமைந்திருக்கிறது.

 

வரலாற்றுடன் இதில் அறிவியலும் கலந்திருப்பதை கொஞ்சம் இயற்பியலும் க்வாண்டம் மெகானிக்ஸ்-ம் தெரிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதோடு இழைந்து வணிகவியலும் வருகிறது. Commodity trading என்பதை  லிஸ்பனில் வைத்து கையாளுகிறார். கலாச்சாரம் என்ற சாரத்தை கதை முழுவதும் இழையோடச் செய்திருப்பதில் அவரது புத்திசாலித்தனம் இருக்கிறது.

 

மற்றொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு

 

கதாபாத்திரமும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து ஒன்றை நிகழ்த்திவிட்டு மற்றொரு காலகட்டத்தில் தன்னைப் பிரதி எடுத்துக்கொள்கிறது. Point and Counter Point போல. உதாரணமா பெட்ரோ கதாபாத்திரம் Point என்றால் நேமிநாதன் கதாபாத்திரம் Counter Point.

 

முழுக் கதையும் time lineல் non linear ஆக நானூறு வருடங்களுக்குள் மாறி மாறிப் பயணிக்கிறது. அதில் editing குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தவிர்த்து இந்தியாவில் படைப்பிலக்கியத்துறையில் Editing என்னும் திறன் தனித்துறையாக இன்னும் வளரவில்லை. மேற்கத்திய நாடுகளில் editing houses உண்டு. ஒருவர் எழுதுவது அப்படியே அச்சு

ஏறாது. பதிப்பாளர் சார்பில் ஒரு எடிட்டர் எடிட் செய்த பிறகே அது

 

புத்தகமாக வெளிவரும்.

இந்தியாவில் எழுத்துலகில் professionsl editors குறைவு.

 

ஆனால் மிக அற்புதமாக மிளகு பெரும்புதினத்தை எழுத்தாக்கம் செய்திருக்கும் முருகன்ஜி மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அதை எடிட் செய்திருக்கிறார். அதனால் கொஞ்சமும் பிசிறடிக்காமல் எகிறிச் சென்றுவிடாமல் தெளிவாகப் பயணிக்கிறது மிளகு.

 

எழுத்து நடை என்று பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஒன்று ஹாஸ்யம். அதுவும் பகடி கலந்த ஹாஸ்யம். அங்கங்கே அதைத் தூவிச் செல்கிறார். அந்த ஹாஸ்யம் இல்லாத அத்தியாயமே இல்லை எனலாம்.

 

இரண்டாவது சிருங்காரம். கொஞ்சம் வார்த்தைகள் மாறிப்போனால் எல்லை தாண்டிவிடக்கூடிய கட்டங்களில் கூட வரம்பு மீறாத சிருங்காரம் கதை முழுவதும் ரசிக்கக் கிடைக்கிறது. அந்தக் கட்டங்களை முருகன்ஜி விரசம் கலவாது அழகாகக் கையாண்டிருக்கிறார். அது எவ்வளவு கடினம் என்பது எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

 

தான் எழுதியது பிரசிவித்த குழந்தைக்குச் சமம். அதை எடிட் செய்வது மிகக் கடினமானது. 2000 பக்கங்களுக்கு அதிகமாக எழுதப்பட்டால் தான் இறுதியாக அது எடிட் செய்யப்பட் 1380 பக்கங்களாக ஆகியிருக்க முடியும். அவ்வகையில் எடிட்டிங் என்பது இந்தக் கதையின் ஆகச்சிறந்த ஓர் அம்சம் என்று நான்

 

சொல்வேன்.

 

இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். காந்தஹார் விமான நிலையத்தில் இந்திய விமானம் கடத்தப்பட்ட நிகழ்வு சொல்லப்பட்டுள்ள விதம்.

ஒரு கதையை வாசிக்கும் போது அதில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரமாக நம்மை நாமே உணர்வது என்பது சாதாரணமாக நிகழ்வதே. ஆனால் இந்தக் கதையில் முருகன்ஜி படைக்காத ஒரு கதாபாத்திரமாகவே நாம் மாறி அவர் படைத்த அனைத்துக் கதாபாத்திரங்களுடனும் கதை முழுவதும் தொடர்ந்து நாமும் நடமாடிப் பயணிக்கும் புதிய அனுபவம் நேர்கிறது. விமானக் கடத்தலின் போது நாமும் ஒரு பணயக் கைதியாக உணர்கிறோம்.

 

மிர்ஜான் கோட்டையின் பாதுகாப்பை மிளகு ராணி மேற்பார்வையிடும் போது நாமும் அங்கே ஒரு காவலாளி போல நிற்கிறோம். திலிப் ராவ்ஜி-யும் அவரது தந்தையும் பேசும்போது நாம் அங்கே ஒரு சமையல்காரனாக நிற்போம். இப்படி எல்லாக் கட்டங்களிலும் நாமும் கதைக்குள் மூழ்கி இடம் பெறுவது என்பது முருகன்ஜ-யின் எழுத்து வன்மையின் வெற்றி.

 

கதையில் இடம் பெற்றிருக்கும் எலும்பும் எறும்பும் கவிதையும் குறிப்பிடத்தக்கது. மதுபானத்தில் ஊமத்தைச் சாற்றைக் கலந்து தரும் திட்டம் ஒரு conspirators போலவே. எழுதப்பட்டுள்ளது. என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் ஆவிகளோடு பேசக்கூடிய மீடியம் நபர்களைப் பற்றிய கட்டம். ஊஜா

 

போர்ட் என்பது அதன் கருவி என்பர். அதன் அமைப்பு முதல் எழுத்துக்கள் நகர்த்தப்படும் விதம் வரை அத்தனை விவரங்களையும் எழுதி அதை இந்தக் கதையில் ஒரு கேரக்டராகவே முருகன் படைத்திருக்கிறார். தீவிர ஆராய்ச்சி இன்றி அந்த எழுத்து சாத்தியமல்ல.

 

மதுரையைப் பற்றி எழுதும் போது உயிர் உள்ள நகரம் என்று எழுதியிருப்பார். ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறான் என்பதற்கு இது ஓர் உதாரணம். அதுதான் நம்மை அந்த எழுத்தை வாசிக்க வைக்கும்.

 

தன் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு வாசகத்திலும் முருகன்ஜி ஒரு

 

செய்தியைப் பகிர்கிறார். அவரது எழுத்தால் அச் செய்திகள் இலக்கியத்தன்மை அடைகின்றன. எல்லா செய்திகளையும் எழுதிவிட முடியாது. செய்திகளைச் சம்பவங்களோடு கலந்து எழுதும்போதுதான் சுவாரஸ்யம் பெறுகின்றன. அந்த லாவகம் இந்தக் கதையின் சிறப்பம்சமாகும். தன்னுடைய அரசூர் வம்சம் மன்றும் ராமோஜியம் நூல்களைத் தாண்டி புதிய உயரத்தை முருகன்ஜி இப்புதினத்தால் தொட்டிருக்கிறார்.

 

என்னுடைய காலத்திலிருந்து தினமும் சில மணி நேரங்களைக் களவாடி நான் மிளகு பெரும்புதினத்தைப் படித்தேன். காலை உணவாகப் பொங்கலில் வரும் மிளகு போல, கடையில் நாம் வாங்கும் மிளகைப் போல நம்

 

உடலைப் பாதுகாக்கும் மருந்தாகும் மிளகைப் போல இந்த மிளகும் திகழ்கிறது. ஓர் அடுக்கு ரோஜாவின் இதழ்களைப்போல பல அடுக்குகளாக உருவகங்களோடு தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரங்களோடு படைக்கப்பட்ட ஓர் அபுனைவாக பிரம்மாண்டமாக அழுத்தமாக மிக அழகாக மிளகு வந்திருக்கிறது என்ற வகையில் தமிழ்ப்புதின வரலாற்றில் மிளகு ஒரு சகாப்தம் ஆகத் திகழ்கிறது. It is his magnum opus as of now. தமிழின் ஆகச் சிறந்த 25 புதினங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் நிச்சயம் மிளகு இடம்பெறும்.

 

முருகன்ஜி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன