அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் சித்தரிக்கும் பீபஸ்தம்

அழகியல் (aesthetics) வகைப்படுத்தும் சிருங்காரம், கருணை, நகைச்சுவை போன்ற நவரசங்களில் பீபஸ்தம் (வெறுப்பு – அருவருப்பு) இலக்கிய ஆக்கத்தில் குறைவாகவே கையாளப் படுகிறது.

நான் அரசூர் நான்கு நாவல் தொகுதியின் இரண்டாம் நாவலான விஸ்வரூபம் நூலில் சித்தரிக்கும் பீபஸ்தம் இது.

———————————–

1927 மார்ச் 13  அக்ஷய  மாசி 29  ஞாயிற்றுக்கிழமை

 

சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் மூட்டை முடிச்செல்லாம் வச்சது.

 

அந்தத் திட்டி வாசல் வழியாக தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டமாக ஓடின போது காலில் இடறிய மூட்டைகளைக் கையில் தூக்கிக் கொண்டேன். ஆயுசு முழுக்க சம்பாதிச்சதும், விற்று வரச் சொல்லி துரை கொடுத்ததும், உடுதுணியும் எல்லாம் எதில் எது இருக்கு என்பது நினைவுக்கு வரலல. எதுக்கு? எல்லாம் மொத்தமா இருந்தாலே போறாதா என்ன?

 

அறுபது வயசில் சுவரேறிக் குதித்து அனுபவிக்கிற நேரத்தில் பிடிபட்டு ஓடின மாதிரி ஓட உடம்பு இடம் கொடுக்க மாட்டேன் என்றது. மூச்சு முட்டி வாய் திறந்தது திறந்தபடி இருக்க ஓடினேன்.

 

உடம்பில் உசிர் இருக்கப்பட்ட வரை ஓடியே சாக துர்தேவதைகளும் சத் புருஷர்களும் கூடிப் பேசி சாபம் கொடுத்தவனாக ஓடினேன்.

 

பகல் போஜனமாக ருஜிச்சுச் சாப்பிட்டதெல்லாம் கலந்து குடலேறித் திரும்பி வந்து வாயை சாக்கடை போல நிறைத்து குமட்டிக் குமட்டி கன்னமெல்லாம் கசிந்து வழிய ஓடினேன்.

 

சுற்றி வளைந்து திரும்பி எங்கேயோ நெளிந்து போகிற சந்துக்குள் மனுஷ நரகலும், கோழிக் கழிச்சலும், நேற்றைக்கோ போன வாரமோ கொட்டித் தீர்த்த மழைச் சகதியும், எச்சில் இலையும், ஸ்திரிகளின் சிக்கெடுத்துப் போட்ட தலை மயிரும், தூரத் துணியும், இருமித் துப்பின வியாதிஸ்தனின் கோழையுமாக வழியெல்லாம் நிறைந்து கிடந்ததில்  கால் அமிழ்ந்து, வாடை மூக்கில் குத்த ஓடினேன்.

 

எதிர்ப்பட்டவன் மேல் மோதி என் அம்மாளையும் அக்காளையும் அவன் செய்ய நினைக்கிற காரியத்தைப் பற்றிய வசவைக் கேட்டபடி, பதில் சொல்ல நேரமில்லாமல், மனசுக்குள் அவனை வையக்கூட நேரமில்லாமல் ஓடினேன்.

 

ஓட வேணும். ஓடியே ஆகணும். ஓடினேன்.

 

முடுக்குச் சந்து திடுதிப்பென்று ஒரு பெரிய செங்கல் சுவரில் முடிந்து போனது.  நீள, அகலமாக விரிந்த அந்தச் சுவரைத் தாண்டி கறுப்பாக தண்ணீர் தேங்கிய பெரிய குட்டை. குட்டையா இல்லை ஊர்க் கழிவு எல்லாம் கலந்து சமுத்திரத்திலோ வாய்க்காலிலோ கலக்கப் போய்க் கொண்டிருக்கிற திரவமா?

 

யோசிக்க நேரமில்லை. சுவரில் கால் வைத்துப் பல்லி போல தொற்றிக் கொண்டு ஏறினேன். கையில் வைத்திருந்த மூட்டை முடிச்சை சுவருக்கு மேலே வச்சு ரெண்டு கையையும் மேலே ஊன்றி ஏறி அந்தப் பக்கம் சாடி ஜலத்துக்குள் விழுந்தேன். நான் நினைச்சதை விட ஆழம். கிட்டத்தட்ட அக்குள் வரை சாக்கடை சாகரம்.

 

தோளில் இருந்து முதுகு வழியாக ஏதோ நழுவுகிறது போல் இருந்தது.

 

அய்யய்யோ, தோள் பை என்னாச்சு?

 

அவசரமாகத் தொட்டுப் பார்க்க, அது பொதபொதவென்று நழுவி ஆழத்தில் விழுந்து ஒரு நொடியில் கண்ணுக்கு மறைவாக ஒழிந்து போனது. காலால் துழாவி அது எங்கே போனதென்று தேடினேன். காலெல்லாம் சாக்கடைக் கசடு தட்டுப்பட்டது தான் மிச்சம்.

 

பகவானே, மற்ற கப்பல் பை ரெண்டும்?

 

எடுக்கக் கை நீட்டினேன். ரெண்டில் ஒண்ணே ஒண்ணு தான் சுவர் மேலே இருந்தது. என்ன கஷ்டம்டா ஈசுவரா.

 

கழுத்தளவு துர்ஜலத்தில் நின்றபடி கையில் கிட்டிய கப்பல் பையைப் பார்த்தேன். என்னத்தைச் சொல்ல? பழந்துணி. சின்ன சஞ்சியில் கப்பல் துரை கொடுத்த  ரூபாயில் மத்தியானம் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டதுக்குக் கொடுத்தது போக மிச்சப் பணம். எப்போ எல்லாமோ கையில் கிடைக்கிற எந்தக் காகிதத்தில் எல்லாமோ எழுதி வச்சு யாருக்கும் அனுப்பாமல் போன கடுதாசுகள். அப்புறம் அந்த மதிமோச விளக்கம் புஸ்தகம். அவ்வளவு தான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன