அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து –

அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து-

கணபத் மோதக் வாசல் கதவைப் பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டான்.

விராரில் உள்ளொடுங்கி இருக்கப்பட்ட கட்டடத்தின் வெகு பின்னால் கதவு வைத்து இணைத்த மற்றொரு தொடுப்புக் கட்டடத்தில் நீள வாக்கில் பம்மிப் பதுங்கிய இடத்தில் பிளைவுட் சுவர் வைத்துத் தடுத்த பாதி அறை அது. வாசகசாலை. ரெண்டு பெஞ்ச், தலைவர் படம். பெரியதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் படம். கட்சி அலுவலகத்தில் திலீப்பும் கண்பத்தும் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்தது. நாலு தெரு தள்ளி பிரிஜ்வாசி மிட்டாய்க்கடை நடத்தும் பால்கிருஷ்ண கதம் வெள்ளைக் குல்லாய், பைஜாமாவில் வந்து திறந்து வைத்து, எல்லோருக்கும் எதிரி மதராஸி என்று முழங்கிப் போனது போன மாதம் தான்.

போன மாதக் கடைசியில் கண்பத் மோதக் கல்யாணம் ஆனது. திலீப் அழைக்கப் பட்டிருந்தான். பத்திரிகை வைக்கும்போதே பால் காச்சற குக்கர் வேணாம் அண்ணா என்று கோடி காட்டி விட்டான் கண்பத். வீட்டில் தினசரி புழங்க வேறு எது கொடுத்தாலும் அவனுக்கு இஷ்டமே என்று தெரிந்தது.

கண்பத் மோதக்கோடு தலைமை அலுவலகத்துக்குப் பத்திரிகை வைக்கத் துணைக்குப் போனபோது வாசல் முன்னறையில் மதராஸி சோக்ரி நீள விரல்களை நீட்டி நீட்டி எதோ டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தேவ் ஆனந்த் இங்கே விசிட்? ஷூட்டிங் இல்லியா?

அவள் திலீபைப் பார்த்துச் சிரித்தபடி இந்தியில் கேட்டபோது டைப்ரைட்டரோடு அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள வேணும் போலிருந்தது அவனுக்கு. சனியன், ரெமிங்டன் டைப்ரைட்டர் எதுக்கு உல்லாச வேளையில் என்று புரியவில்லை.

அன்றைக்குத் தப்பித்தவறி அவள் தமிழில் பேசி விடுவாள் என்று ஒரு வினாடி பயந்தது தேவையில்லாதது என்று புரிந்தது திலீபுக்கு. இடம் பொருள் புரிந்து அவனோடு மராத்தியில் பேசினாள். தெய்வங்கள் கூட்டமாக நாகபுரி போயிருப்பதாகவும், அங்கே கல்யாணம், ஆபீஸ் திறப்பு, வாசகசாலை திறப்பு என்று மும்முரமாக இருப்பதாகவும் சொன்னாள்.

யாருமே என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்களா என்று கண்பத் சோகமாகக் கேட்டபோது, நான் வரேன் அண்ணா என்றாள் அவள்.

எத்தனையோ இந்தி, மராத்தி சினிமா பார்த்து உருகிக் கண்ணீர் விடும் பதத்தில் இருந்த கண்பத் உடனே நெகிழ்ந்து போய், ரெண்டு கையையும் நான் சொல்ல என்ன இருக்கு என்பது போல் விரித்தது திலீபுக்கு ஞாபகம் வந்தது.

உன்னை மாதிரி ஒரு தங்கை இருக்க எனக்குக் கொடுத்து வைக்கணுமே. பெயர் என்னம்மா?

கண்பத் கல்யாணப் பத்திரிகையைச் சணல் பையிலிருந்து எடுத்தபடி குரல் கமறக் கேட்டான்.

அகல்யா என்று பெயர் சொன்னாள் அவள்.

திலீப் மனதில் இந்தி நடிகை சைராபானு சிரிப்பதும் சாய்வதும் நிமிர்வதும் அகல்யா மாதிரித் தெரிய ஆரம்பித்தது அப்புறம் தான்.

சாய்ராபானு பூஞ்சை உடம்பு. அந்த உடம்புக்கு டைப்ரைட்டரோடு என்ன, மேஜை நாற்காலியோடு கூடவும் மடியில் இருத்திக் கொள்ளலாம் தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன