அரசூர் நான்கு நாவல்களில் புனித கங்கை – 1. அச்சுதம் கேசவம்

என் அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- ஹரித்வாரில் கங்கை

டோங்கா ஏற்படுத்திக் கொண்டு ஹர் கி பவ்ரி என்ற கங்கைப் படித்துறைக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தபோது சாயந்திரம் ஐந்து மணி ஆகி இருந்தது. ஒருத்தர் இருவராகக் கூட்டம் வர ஆரம்பிக்கும் முன்னாலேயே அரசூர் கோஷ்டி படித்துறைக்குப் போய்ச் சேர்ந்து, தரிசிக்க வாகான படிகளில் இடம் பிடித்தது.

 

கங்கா மாதாவுக்கு புஷ்பமும் நெய் தீபமும் ஏற்றி, எல்லா சாஸ்திரத்தில் இருந்தும் நாலு வேதத்தில் இருந்தும், ஆமா நாலும் உண்டு, அதர்வம் உள்பட, நாலு வேதத்திலே இருந்தும் மந்திரங்கள் சொல்லி செய்யற வழிபாடு.  இதைப் பார்க்கப் பூர்வ ஜென்ம பலன் இல்லாமல் வாய்க்காது. உங்களுக்கெல்லாம் வாய்ச்சிருக்கு. அம்மா, நீங்க எங்க தாத்தா காலத்திலே வந்தபோது பார்த்திருப்பீங்களே?

 

ஜெயராமப் பண்டிதரின் பேரரான ராதாகிருஷ்ண திராவிடர் லோகசுந்தரிப் பாட்டியை விசாரித்தார். அவள் அவசரமாகத் தலையாட்டினாள்.

 

அறுபது வருஷம் முன் வந்திருக்கிறாள். அப்போது அவளுக்கு இருபது சொச்சம் வயது. கல்யாணம் செய்து ஐந்து வருஷம் கழித்து அவளும் வீட்டுக்காரர் கிராமக் கணக்கர் கங்காதர ஐயரும் தனியாக இருக்க அப்போது தான் நேரம் வாய்த்தது. கணக்கரின் அம்மா காலமாகி, அஸ்தியை ஹரித்துவாரிலும் வாரணாசியிலும் கங்கையில் கரைக்க ஏற்பாடாக வந்தார்கள்.

 

தொண்ணூறு வயசில் காலமானாள் கணக்கரின் அம்மா. உயிர் பிரியும் தறுவாயில் நினைவு தடுமாறாமல் பேசினாள் –

 

நானும் உங்க அப்பாவும் சுப்பிரமணிய அய்யரோடவும், பாகீரதி அம்மாளோடும், நித்ய சுமங்கலி சுப்பம்மா கிழவியோடயும் வட தேச  யாத்திரை வந்தபோது மனசுலே சங்கல்பமாச்சு. நான் போனா, என் பிள்ளை அஸ்தியை கங்கையிலே கரைக்கணும்னு. போய்த் தவறாம செஞ்சுடு.

 

அந்தப் பயணத்தை நினைக்கும்போதெல்லாம் புதுசாகக் கல்யாணம் ஆன சின்னப் பெண் மாதிரி லோகசுந்தரிப் பாட்டி நாணப்படுவாள். இங்கே இந்தக் கங்கை ஆரத்திக்கு வந்திருக்கிறாள் தான். கூட்டம் அதிகமாவதற்குள் கணக்கர் கண்காட்ட இருவரும் தங்கியிருந்த சத்திரத்துக்கே அவசரமாகத் திரும்பி விட்டார்கள். அவளுக்கு சோபான சாயங்காலமாக அமைந்து போன அந்த மாலைப் பொழுதை நினைவு படுத்திக் கொள்ள கிழவிக்கு இப்போது ஏக வெட்கம்.

 

பார்த்தாலே தூய்மையாக்கும் ஸ்படிகம் போன்ற நீர்ப் பெருக்கில் கங்கை இருந்தது. அந்தப் பரிசுத்ததை கையளைந்து கூட, விரல் நனைத்துக் கூட களங்கப்படுத்த சகிக்காதவர்களாக கங்கைக் கரையில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது.

 

தினசரி கூடுகிற கூட்டம் தான். தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள். கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள். ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தக் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீர் மல்கப் பார்க்கிறார்கள்.  அம்மாவை ஷண நேரம் பிரிந்து திரும்ப வந்த குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். எதுவுமே எனக்கு வேண்டாம். உன் காலடியிலேயே சேவை செய்து இந்த வாழ்க்கையைக் கழிக்கிறேன் என்று படிகளில் முட்டி முட்டி அழுகிறார்கள். மனசே இல்லாமல் திரும்பப் போகிறார்கள். இந்த அனுபவம் மறக்கப்பட்டு வாழ்க்கையில் சந்தோஷமாகவும் துக்கமாகவும் எத்தனையோ நிகழ்வுகள். மழை ஓய்ந்த ராத்திரிகளில் தூக்கம் கலைந்து கிடக்கும்போது கங்கைப் பிரவாகமும் ஆரத்தியும் அழுகையும் அம்மாவும் நினைவு வர மீண்டும் உறக்கம் கவிகிறது.

 

சூரியன் மங்கி நீளமான நிழல்கள் கங்கைக் கரையில் படிந்து பரவி அதிர்ந்து கொண்டிருக்க, கனமான இருள் தொலைவில் இருந்து இறங்கி வர ஆரம்பித்தது. நீர்ப் பெருக்கு கருநீலத் தாரையாக வேகம் கூட்டாது, சட்டம் கூட்டாது பிரவகித்துக் கொண்டிருந்தது.

 

எத்தனையோ தலைமுறையாகக் கங்கையின் குழந்தைகள் வருகிறார்கள். இன்னும் எத்தனையோ தலைமுறை அவர்கள் வருவார்கள். கங்கை வற்றாமல் கங்கோத்ரியின் பனிச் சிகரங்களில் உருக்கொண்டு ஓடி வந்து, ஹரித்துவாரில் சமவெளியில் நடந்து கொண்டே தான் இருப்பாள்.

 

சங்குகள் ஒரு சேர முழங்க, லோகசுந்தரி முதுகைச் சிலிர்த்துக் கொண்டாள். தூரத்திலும் பக்கத்திலும் கோவில் மணிகள் சேர்ந்து ஒலித்தன.  வேதமோ உபநிஷதமோ, கனமான குரல்கள் ஒன்றிரண்டாக உயர்ந்தன. இன்னும் நூறு குரல்கள் அவற்றோடு சேர்ந்தன. ஆயிரம் குரல்கள் அதற்கு மேலும் ஒன்று கலந்தன. அம்மா அம்மா என்று எல்லா மொழியிலும் அரற்றும் குழந்தைகளாகப் பக்தர்கள்.

 

இருட்டில் நடக்கும் கங்கைக்கு வழி சொல்ல சின்னச் சின்னதாக தீபங்கள் கரையெங்கும் ஒளி விடத் தொடங்கின. அவை சற்றுப் பொறுத்து, கங்கைப் பிரவாகத்தில் மெல்ல வைக்கப்பட்டன. ஆடி அசைந்து மெல்ல நதியோடு போகிற தீபங்களின் ஒளி தவிர வேறேதும் வெளிச்சம் இல்லாத காற்று ஓய்ந்த அமைதியான முன்னிரவு.

 

சங்குகள் ஒலி மிகுந்து சேர்ந்து ஒலித்தன. கரையில் கொளுத்திப் பிடித்த தீவட்டிகள் போல, பிரம்மாண்டமான அர்ச்சனை தீபங்கள் ஏற்றப்பட்டன.

 

கங்கா மாதா கி ஜெய்.

 

திரும்பத் திரும்ப ஒலிக்கும் குரல்கள் சூழலை முழுக்க ஆக்கிரமித்துப் படர்ந்தன,. லோகசுந்தரி கூடச் சேர்ந்து உச்சரிக்க, கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது.

 

முப்பது வருஷம் முன் இறந்து போன அவளுடைய வீட்டுக்காரக் கணக்கர் பொடி மட்டை வாடையோடு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவருடைய பொடி மட்டையைப் பறித்து வீசி விட்டு லோகசுந்தரி கும்பிடச் சொன்னாள். அந்த மனுஷனும் கண்மூடி வணங்கியபடி கலைந்து போனான்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன