பெரு நாவல் ‘மிளகு’ – Chinna Sankaran regains his olfactory prowess

An excerpt from the novel MILAGU expected to hit the book sellers the coming week

சின்னச் சங்கரன் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தார் –

ப்ரம்மம் ஒகடெ, ப்ரம்மம் ஒகடெ.

தெலுங்குப் பாட்டு. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை. பௌளி ராகத்தில் அமைந்தது.

சங்கரனுக்கு தெலுங்கு தெரியாது. பௌளி மட்டும் இல்லை. எந்த ராகத்திலும் பாடத் தெரியாது. இந்தப் பாட்டும் முதல் வரியைத் தவிரப் பாடத் தெரியாது.

பாட்டை நிறுத்தி அப்பா அப்பா என்று கிரீச்சிடுகின்றார். மறுபடி பாடுகிறார்.

ப்ரம்மம் ஒகடெ, பரப்ரம்மம் ஒகடெ என்று திருப்பித் திருப்பி அவர் பாடிக் கொண்டிருந்ததற்கு அவர் காரணம் இல்லை. அப்பா அப்பா என்று அழைப்பதற்கும் தான்.

மறுபடி மறுபடி அவருக்கு வரும் கனவுக்கு அடுத்து மனம் இதைக் காட்சி விரிக்கின்றது. கூடவே ஒரே வாடை தட்டுப்படுகிறது. மூக்கைக் குத்தும் மிளகு வாடை அது.

அவருடைய மனதுக்குள் அல்லது புத்திக்குள், நீலச்சட்டை போட்டுக்கொண்டு, பொத்தான் இல்லாத, வயசானவர்கள் தலைவழியாகப் போட்டுக்கொள்ளும் சட்டை மாட்டிக் கொண்டு,யாரோ, ஒரு பத்து வயது அல்லது அதற்கும் கீழே வயதுள்ள பையன் அவரைப் பார்த்து சினேகிதமாகச் சிரிக்கிறான். அழுகிறான். அப்பா அப்பா என்று திரும்பத் திரும்பத் திரும்ப அழைக்கிறான். சங்கரன் அவனோடு பேச முற்படும்போது கனவு முடிந்து போகிறது.

அவனுக்குக் கட்டுப்பட்டு சங்கரனும் அதே குரலிலும் தொனியிலும் அப்பா அப்பா என்று கூவுகிறார்.

அவனோ சின்னச் சங்கரனோ எவ்வளவு  அழைத்தாலும் யாரும் வருவதில்லை. யாரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தெரியாது. படபடப்பும் மன அழுத்தமும் அதிகரிக்கும் பொழுது அது.

அது கூடப் பொறுத்துக் கொள்ளலாம் கனவு வந்து போனதும் சங்கரனால். எதையும் சாப்பிட, குடிக்க முடியாமல் எல்லா ஆகாரமும், பானமும் மிளகு வாசனை, மிளகு வாடை மட்டும் அடிப்பதாக அவர் நாசிக்குத் தெரிய வந்தது தான் நரக வாதனை.

அம்பலப்புழைக்கும் அங்கிருந்து மங்களூருக்கும் போய் வந்தபோது அந்தக் கனவு வரவில்லை. ஒன்றிரண்டு நாள் எல்லா வாடையும் சந்தோஷகரமாக நாசியில் பட்டது.

இங்கே டில்லிக்குத் திரும்பி வந்ததும்,   விநோதமான நீலச்சட்டைப் பையன் வரும் கனவும் வந்தேன் வந்தேன் என்று திரும்ப வந்து சேர, சங்கரன் என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அலோபதி மருத்துவரைச் சென்றடைந்தார்.

டாக்டர் வெகுவாக ஆச்சரியப்பட்டார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே ஓரொற்றை வாடையை மனதில் கற்பனை செய்துகொண்டு, மூக்கைத் துணியால் கட்டி ஆகாரம் கழிக்க அமர்ந்து ஒரு மனுஷர். அதுவும் ஓய்வு பெற்ற அமைச்சரகக் காரியதரிசி வாயிலும் மூக்கிலும் மறைத்த துணியோடு     இருந்தார் என்றால் அவருக்கு ஆச்சரியம் சொல்லி மாளவில்லை.

ஒரு சின்ன ப்ரொசீஜர், என்றால், அறுவை சிகிச்சை செய்து நாசியில் ஒரு எலும்பைச் சரிப்படுத்தினால், சாக்கடை முதல் பூக்கடை வரை எல்லா வாடையும் மூக்கை முட்டிக்கொண்டு வரிசையாக வந்து நிற்குமே.

இந்த யோசனையை ரெண்டாவது அபிப்ராயமாக இன்னொரு மருத்துவரிடம் பெறுவதற்காக சங்கரன் போய்ச் சந்தித்தபோது மனோதத்துவ நிபுணரான – என்றாலும் அலோபதி டாக்டரும் கூட- மருத்துவர் நிதானமாக வெற்றிலை பாக்குத் தாம்பூலம் தரித்துக்கொண்டு  சொன்னார் –

உங்க மூக்கை பழக்கப்படுத்தணும். நினைச்ச நேரத்திலே நினைச்ச வாடை இருக்கறதா அது மூளைக்குச் சொல்லணும். அவ்வளவு தான். இதுக்காக மூக்கையே கழற்றி ஆப்பரேஷன் பண்ணிட்டு தலைகீழா ஒட்டிண்டிருக்கணுமா? உங்க இஷ்டம். நான் சொல்றதை சொல்லிட்டேன்.

என்ன ஆனது அதற்கு அப்புறம் என்றால், அலோபதி வேண்டாம், ஆபரேஷன் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து திரும்ப சங்கரன் வாயைக் கட்டி, நாசியைக் கட்டி அவ்வப்போது கொஞ்சம்போல் சாப்பிட்டு வர, எடை மிக மிகக் குறைந்து போனது. வேறொரு மூக்கு, தொண்டை, காது ஸ்பெஷலிஸ்ட் அலோபதி டாக்டரைப் போய்ப் பார்த்தார். ரதி போன்று பேரழகியான சினிமா நடிகைக்கு மூக்கைச் சற்றே நீட்டி வைத்துப் பிரபஞ்சப் பேரழகி ஆக்கியவராம் அவர்.

It is a muted version of congenital anosmia. I recommend a curative surgical procedure.

டாக்டர் அந்த குறைபாட்டையே தான் தான் உலகத்திலேயே முதலாகக் கண்டுபிடித்துப் பெயரும் இட்டது போன்ற பெருமையோடு வந்து போனார்.

சங்கரன் அத்தோடு நிறுத்தாமல் யாரோ ஆலோசனை சொல்ல, மூன்றாவதாக இன்னொரு டாக்டரை, அவர் ஆர்ய வைத்தியர், அணுகி அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ளப் பணம் கொடுத்துக் காத்திருக்க மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும் என்றார் அந்த ஆர்யக்கூத்தர், என்றால், ஆர்ய வைத்தியர்.

செய்தால் எப்போதும் நல்ல வாடை எல்லாம் சுவாசிக்கலாம் என்றும் ஷரகரின் சத்ரசிகித்சைக் கோட்பாடுகள்படிச் சில ஆயிரம் வருடப் பழையகால முறையில் அந்த அறுவை சிகிச்சையை நடத்திக் கொடுக்க இருக்கும் ஆர்ய வைத்தியர்கள் ருத்ரப்ரயாகையில் ஒன்றிரண்டு பேர் தான் உண்டு என்றும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர அலோபதி சிகிச்சைச் செலவைவிட அதிகம் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அவர் சிகிச்சை செய்துகொள்ளணுமா வேண்டாமா என்று  தீர்மானமாகச் சொல்லாததால் சங்கரன் அவரிடம் மறுபடி கேட்க, முகம் சிவக்க அவர் சொன்னது –

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. சொல்ல வேண்டாதவை அப்படியே இருக்கட்டும். வேறேதும் எதிர்பார்த்தால் ருத்ரப்ரயாகையில் யோகிகள் உண்டு. நக்னரான அவர்கள் சொல்லக் கூடும் என்றார்.

சங்கரன் திரும்பிப் போகும்போது, அலோபதி வைத்தியர் உதவக்கூடும் என்றார். அலோபதி டாக்டர் அறுவை சிகிச்சைக்கு மறுபடி யோசனை சொன்னார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன