பெரு நாவல் ‘மிளகு’ – வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்

வெளிவர இருக்கும் ‘மிளகு’ பெரு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

 

போதே கார் உள்ளே பின் சீட்டில் இருந்து பரமன் குரல் பெரியதாக்கி மஞ்சுநாத் மஞ்சுநாத் என் குழந்தே மஞ்சுநாத் என்று அங்கே இல்லாத மஞ்சுநாத்தைக் கூப்பிட்டார்.

முன்னால் இருக்கையில் இருந்த திலீப் ராவ்ஜி பின்னால் திரும்பிப் பார்த்து அப்பா என்ன பண்றது உடம்புக்கு என்று கேட்டார்.

ஒண்ணும் இல்லேடா திலீப். நான் இங்கே இருக்கேனா அங்கே இருக்கேனான்னு தெரியலே. அவர் பலமாக முணுமுணுத்தார்.

நீங்க எங்கேயும் இருக்கீங்க. எப்போதும் இருக்கீங்க.

திலீப் ராவ்ஜி ஒரு குறுமுறுவலோடு பதில் சொன்னார்.

புரியலே நீ என்ன சொல்றேன்னே.

அப்பா எழுந்து உட்கார்ந்து கொஞ்சம் தண்ணி தா என்கிறார். ஆண்கள் எல்லோரும் கொஞ்ச தூரம் மலைத் தாவரங்கள் ஊடாக நடந்து   பாதை அருகே கருங்கல் சுவர் எழுப்பியதுபோல் நின்ற இடம் காரிலிருந்தும் வானில் இருந்தும் கண்ணில் படாத ஒன்று.

ஆண்கள்  அற்பசங்கைக்கு ஒதுங்கி வர மருது கல்பாவிடம் காதில் சொன்னான் –

அம்மாவும் நீயும் பகவதியும் போறதுன்னா அங்கே போய்ட்டு வாங்க. கல் பாறைதான் மறைவு. சுத்தமான இடம். லேடீஸ் பிஸ் ஹியர்ன்னு சாக்பீஸாலே புது ஸ்பெல்லிங்லே எழுதி வச்சிருக்கு –

Ladys piss hear!!

கல்பா ஓவென்று சிரித்தாள். தெரிசா என்ன விஷயத்துக்காக சிரிக்கிறார்கள் என்று ஒருமாதிரி ஊகித்திருந்ததால், புன்சிரிப்போடு கல்பாவுடன் நடந்தாள்.

எல்லோரும் வந்து வண்டிகள் புறப்பட்டன. மாலை ஆறு மணி ஆகி வெளிச்சம் சிறு பொதியாக மலைப் பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது.

ஷராவதி நதி பாதையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அந்தப் பின்மாலை நேரத்தில் அழகாகத் தெரிந்தது. அந்திக் கருக்கலில் வேறே ஒலியின்றி, சின்னச் சின்ன அலைகளின் சத்தம் அதிகரித்துக் கேட்டது.

காரையும் வேனையும் இங்கே போட்டுட்டு போகலாமா இல்லே பெரிய படகுலே அதையும் ஏத்தி ஆறு கடக்கலாமா என்று டிரைவர் பாலன் கேட்டார்.

இங்கே போட்டா பத்திரமாக இருக்குமா கார் என்று திலீப் வினவினார்.

அதுக்கு கியாரண்டி இல்லே சார்.

எவ்வளவு அடைக்கணும்? பிஷாரடி கேட்டார்.

முதல்லே பெரிய போட் இருக்கான்னு தெரியலே. அக்கரையிலே பெரிசா லைட் எல்லாம் போட்டுத் தெரியுது பாருங்க, அதான். இங்கே வந்துட்டிருக்கு. படகுக்காரங்க ஏதாவது தடை ஆறு மணிக்கு படகு ஓஃபரேட் பண்றதுலே வச்சிருக்காங்களா தெரியலெ.

படகு வரும்வரை காத்திருந்தார்கள் எல்லோரும். படகின் ஸ்ராங்க், என்றால் கேப்டன், உரக்கச் சொன்னார் –

எல்லோரும் உள்ளே வரலாம். பத்து கார் வரைக்கும் படகுலே ஏற்றி ஜாக்கிரதையா கொண்டு போகலாம். ஒரு காருக்கு நூறு ரூபாய் கட்டணம்.

சொல்லி முடித்து விட்டு கையில் வைத்திருந்த நூறு வாட்ஸ் பல்பை படகின் ஓரம் தொங்கவிட்டு சுவிட்சை ஆன் செய்ய கரையெல்லாம் ஒளி வெள்ளம்.

இயற்கை வெளிச்சம் இன்னும் அரைமணி நேரம் இருக்கும். அது அஸ்தமித்ததும் போட்டா போதும் என்றார் திலீப் ராவ்ஜி.

ஆமா, சார், பல்ப் ஃப்யூஸ் இல்லேன்னு செக் பண்ணினேன் என்றபடி நூறு வாட்ஸ் பல்ஃபை அணைத்தான் படகு கேப்டன் ஸ்ராங்க்.

படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன