பெரு நாவல் ‘மிளகு’ – The old order changeth

An excerpt from my forthcoming novel MILAGU

சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும்.

சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும்.

நானும் பில்கி அரசர் திம்மராஜுவும் அந்த சீரமைப்பை எடுத்துக்கொண்டு நிறைவேற்ற சோமேஷ்வர் கோணேஸ்வர் மகாவீரர் என எல்லா தெய்வமும் அருளட்டும். உங்கள் வாழ்த்துகளும் சேரட்டும்.

இடைக்கால நிர்வாகியாக இங்கே பணியாற்ற, புது அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயல்பட, வகுளாபரணர் நியமிக்கப்படுகிறார்.

இங்கே கூடி இருக்கும் பிரதானி, உபபிரதானி, தளவாய் ஆகிய யாருக்கும் உயிர்ப் பயம் இருக்க வேண்டாம். மிகப் பெரும் குற்றம் புரிந்திருப்பதாகத் தெரிந்தாலே அன்றி நீங்கள் இப்போது இருக்கும் வீடு நிலம் அனுபவித்து இருக்கலாம். பதவி தொடர்வது பற்றி அப்படி உத்தரவாதம் தர முடியாது.

வயது காரணம் ஓய்வு பெற்று சென்னா மகாராணியோடு வயதானவர் கூட்டம் நடத்தி காலம் போக்க சில மூத்த பிரதானிகளை செயல்படுத்த இருக்கிறோம். அவர்கள் இப்போது இங்கே இல்லாவிட்டால் சந்திக்கும்போது அவர்களிடம் சொல்லுங்கள்.

இந்த இடத்தில்  சென்னபைராதேவி குரல் கீச்சிடச் சத்தம் போடத் தொடங்கினாள்.

‘துரோகிகளா, நம்பிக்கை துரோகிகளா, சகோதரன் சகோதரி, அம்மா என்றெல்லாம் உருகி உருகி என் மேல் பொய்யான அன்பை பூசிய திருடர்களே, உங்களுக்கு தொழுநோயும் பெண்சீக்கும் பீடிக்கட்டும். உங்கள் உடலைப் புழுத்துப் போக வைக்கட்டும், நாவு அழுகட்டும் என்று கூச்சலிட்டாள்.

வகுளன் தயாராக வைத்திருந்த ஒரு வர்ணத் துணியை எடுத்து சென்னாவின் வாயைச் சுற்றிக்கட்டுவதை அவையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

மகாராணிக்கு சித்த சுவாதீனம் இருக்கிறதா என்று இன்னும் அரைமணி நேரத்தில் பைத்யநாத் வைத்தியர் சோதித்துச் சொல்வார். இப்போது இந்த அவை கலைகிறது

சொல்லியபடி வெங்கடப்ப நாயக்கர் எழுந்து நிற்க வாயில் கட்டிய துணியோடு  சென்னபைராதேவியை நெருங்கிய நாலு மெய்க்காவலர்கள் மரியாதையோடு வணங்கி நின்றார்கள்.

விருந்தாளி அறைக்கு அழைத்துப் போங்கள் என்றார் கெலடி வெங்கடப்ப நாயக்கர்.

அவரும் வகுளனும் நிற்கக் கடந்துபோகும் போது சென்னா வகுளனைப் பார்த்து நீயுமா வகுளா நன்றாக இரு நன்றாக இரு என்று அவன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து நடந்தாள்.

நடத்திப் போய்  சென்னபைராதேவி அறையில் அமர்ந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் மெல்லிய குரலில் சொன்னார் –

சென்னா, நேமிநாதன் போனாலும் உமக்கு இன்னும் உயிர் அபாயம் இருக்கு. போர்த்துகீசிய கார்டெல் இவ்வளவு நேமிநாதன் மூலம் செலவழித்தும் கெருஸொப்பாவும் குறைந்த விலையில் மிளகும் அவர்கள் கையை விட்டு நழுவிப் போவதால் ஆத்திரத்தில் இருக்காங்க. அவங்க கிட்டே இருந்து உம்மை பாதுகாக்க இந்த அறைக்கு வெளியே ரோந்து போனபடி என் அரசாங்கப் படை இருக்கும். பசிக்கு அன்னமும் பலகாரமும் நீரும் உமக்குத் தர தாதி கூடவே இருக்கலாம். நாளை மிர்ஜானில் இருந்து பாதுகாப்பு கருதி உம்மை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன்.

நாயக்கர் நகர்ந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன