பெரு நாவல் ‘மிளகு’ – உத்தேசமான முன்னுரை – A probable foreword

the first draft of the foreword of my forthcoming novel MILAGU

கொங்கணக் கடற்கரைப் பயணம் போய் வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம் என்று மணக்கும், மழை ஓய்ந்த ஈரமண் அந்தக் கடலும் கடல் சார்ந்த நெய்தலும், பசுமை கொஞ்சும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும். மிளகு, அதுவும் மிகத் தரமான மிளகு விளைவித்து, ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்திழுத்துக் கூட்டிவந்து, என்ன விலையும் கொடுத்து வாங்க வைத்த நிலப் பிரதேசம் இது. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மிளகு உற்பத்தி, ஏற்றுமதி சாதனை செய்த பூமி.

மிளகின் அடிச்சுவட்டில் பயணப்பட்டால், கேரளத்தில் கோழிக்கோட்டில் தொடங்கி, கர்னாடகம், கோவா வழியே மகாராஷ்டிரம் வரை நீளும் அது என்று என் நண்பர் திரு கமல் ஹாசன் ஒரு சாயந்திர நேர உரையாடலைத் துவக்கி வைத்தார்.  தொடர்ந்து கொங்கண் கடற்கரை, குஞ்ஞாலி மரைக்காயர், சாமுத்ரி என்ற சாமுரின், எரிவு மிகுந்த தலைச்சேரி மிளகு என அந்த அறிவார்ந்த பேச்சு நீண்டது. அடுத்து எழுதும் நாவலைக் கொங்கணக் கடற்கரையில் தொடங்கி மிளகின் அடிச்சுவட்டில் விரிவதாக எழுதிப் பார்த்தால் என்ன என்று அப்போது என் மனதில் ஒரு பொறி தட்டியது.

கொங்கணப் பிரதேசத்தின் வரலாறு விஜயநகர சாம்ராஜ்ய வரலாற்றோடு இணந்து நடப்பது. 15650-இல் அகமத்நகர், பிடார், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய தக்காண சுல்தானிய அரசுகள் ஒன்றுசேர்ந்து  விஜயநகரத் தலைநகர் ஹம்பியைச் சின்னாபின்னம் செய்து பேரரசர் அலிய ராமராயரைச் சிரச்சேதம் செய்ததோடு அந்த மாபெரும் சாம்ராஜ்யம் வீழ்ச்சி கண்டது. கொங்கணக் கரைப் பிரதேசக் குறுநில அரசுகள் தவறாமல் தத்தம் பாதுகாப்புக்காகத் திறை செலுத்தியவை. பெரும்பாலும் விஜயநகரம் சார்ந்தவை. தமிழகத்தில் பாளையங்கள் போல் நூறு  இருநூறு கிராமம், சிறு நகரம் என்று சிறு நாடுகள் அவை. மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து  என்ற டச்சுநாடும்   மிகப் பெரிய அளவில்  வர்த்தகம் செய்தன. முக்கியமாக மிளகு உற்பத்தியில் உலக அளவில் தரமும், சுவையும், மணமும் செரிந்த மிளகை அவர்களுக்கு அளித்த கெருஸொப்பா தேசத்தோடு மிகச் சிறந்த நட்பும் இணக்கமும் காட்டிய போர்ச்சுகல், கெருஸொப்பாவை ஐம்பத்துநான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த சென்னபைராதேவிக்கு   கௌரவமான பட்டப்பெயராக மிளகுராணி என்ற பெயரைச்சூட்டி உரக்கச்  சொல்லிக் கவுரவித்தது. சென்னபைராதேவியின் இந்தச் சாதனைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் புறக்கணிக்கப் பட்டவை. ஏனோ தெரியாது. சரித்திரத்தின் அடிக்குறிப்பாகக் கூட இவை இடம்பெறவில்லை.

மிளகின் அடிச்சுவட்டில் பயணப்படும் எந்த வரலாற்று ஆசிரியனும் தவிர்க்க முடியாத பதினாறாம் நூற்றாண்டு அரசி சென்னபைராதேவி. என் ’மிளகு’ நாவலிலும் சென்னா மகத்தான ஓர் ஆளுமையாகக் கடந்து வர ஆசைப்பட்டேன். கொங்கணப் பிரதேச மிளகு வர்த்தகம் பற்றி யாரிடம்  கேட்டால் தகவல் கிடைக்கும்?  அருமை நண்பரும்,  தமிழிலும் கன்னடத்திலும் அற்புதமான நடிப்பைக் காட்சிப்படுத்தும் புகழ்பெற்ற திரைப்பட நடிகரும்,  இலக்கிய ஆர்வலருமான ரமேஷ் அரவிந்த் உதவிக்கு வந்தார். ரமேஷ் மூலம் எனக்குக் கன்னட எழுத்தாளர் டாக்டர் கஜானன ஷர்மா அறிமுகம் கிடைத்தது. இப்போது என் சிறந்த நண்பரான அவருடைய கைகாட்டுதலும் புரிய வைத்தலும் இல்லாவிட்டால் ’மிளகு’ எழுதப்பட்டிருக்காது. டாக்டர் ஷர்மாவுக்கு என் பிரியம் கூடிய நன்றி. அவர் கெருஸொப்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அண்மையில் சென்னபைராதேவி வரலாற்று நாவலைக் கன்னடத்தில் எழுதி கன்னட இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவரும் கூட அவர். நாவல் பதிப்பில் சாதனை செய்து வரும் கன்னட நாவல் அது.

வரலாறோடு விண் அறிவியல் புனைகதையாகவும் இன்னொரு தளத்தில் இயங்குகிறது ’மிளகு’. இருபதாம் நூற்றாண்டிலிருந்து நானூறு ஆண்டுகள் பின்னே, சென்னபைராதேவி காலத்துக்கு நாவல் கதாபாத்திரம் ஒன்று காலப் பயணம் மேற்கொள்வதைப் புனைகதை  உத்தியாக மற்ற சில புதினங்களில் பார்த்திருக்கலாம். எனில், அந்தப் பாத்திரத்தின் பிரதிகள் வேறு பிரபஞ்சங்களில் இருந்து வந்து, ஒன்றை மற்றொன்று பதிலிப்படுத்தித் தொடர்ந்து இயங்குவது சற்றுப் புதியது. மரபார்ந்த கதையாடலாக இன்றி சிதறிய கதையாடலாக (fragmented narrative) இந்நாவல் சொல்லப்படுவதால், மிளகு கருப்பொருளாகவும் கருத்தாக்கமாகவும் பல பரிமாணங்களிலும் வந்து சூழ்ந்து நிறைகிறது.

’மிளகு’ உங்கள் மனதுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இச்சிறு முன்னுரையை நிறைவு செய்து நாவலுக்குள் உங்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்

இரா.முருகன்

ஜனவரி 2022

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன