பெரு நாவல் ‘மிளகு’ – Thus Reached Ambalapuzha through Gerusoppa across time space continuum

An excerpt from my forthcoming novel MILAGU

ரயில் நின்று தாமதித்து மறுபடியும் நகரும் முன் இந்தப் பரமனும் அந்த ரயில்பெட்டியில் ஏறிக் கொள்கிறார். வந்த பரமன் கம்பார்ட்மெண்டில் கூட்டத்துக்கு நடுவே  நின்றுகொண்டு மேலே தொங்கும் வாரை இழுத்துப் பிடித்தபடி கால் மாற்றும் போது லெனின் கடிதங்கள் தரையில் விழுகின்றன.

பக்கத்தில் நின்ற வயதான மராட்டியர் குனிந்து அதை எடுத்துத் தலைப்பைப் படித்து விட்டு வந்த பரமனிடம் கொடுக்கிறார்.

லெனின் வீட்டை விட்டு வெளியே போயிருந்தாரா? கடிதங்களை யாருக்கு எழுதினார் என்று கேட்கிறார். லெனின் அமெரிக்க விண்வெளி வீரர் என்று அடுத்து நின்ற யாரிடமோ விளக்கம் சொல்கிறார்.

வந்த பரமன் பொறுமையாக லெனின் என்றால் யாரென்று விளக்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் பரமனிடம் தமிழில் சொல்கிறார் = அடிப்படைப் புரிதல் இல்லாமல் கடிதம், உரை, எழுத்து என்று லெனினை   ரஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலம் மூலமாக இந்திக்கும் மராட்டிக்கும் எப்படிக் கொண்டு போக முடியும்?

லெனின் விண்வெளி வீரராக இருந்திருந்தால் சோவியத் யூனியனை வழிநடத்திச் சென்றிருக்க முடியுமா? பரமனே பார்த்துச் சொல் என்கிறார். அவருடைய கால்கள் அடிபடாமல் மீண்டுவர காலத்தைப் பின்நோக்கி எடுத்துப் போனவர் யார் என்று கேட்க, வந்த பரமன் எனக்கும் தெரியாது என்கிறார். திரும்ப காட்சி நிலைத்து எல்லாம் பின்னால் போகிற இயக்கம்.

வந்த பரமன் முப்பது வயதில் இருக்கிறார். ஷாலினி மேத்தி கீரையும் ஜவ்வரிசியும் கோதுமை ரவையும் வாங்கி வரச் சொல்லியிருக்கிறாள். மகன் திலீப்புக்கு நூறு கிராம் சாக்லெட்டுகளாவது வாங்கிப் போக வேண்டும் சயானில் இறங்கி என்றபடி வந்த பரமன் பாதி காலியாகி விட்ட ரயிலில் இருக்கை தேடி அமர்கிறார்.

இன்னொரு ஷாலினி மோரே. இன்னொரு திலீப். இன்னொரு சர்வமங்கள் சால் வீடு உண்டா? இந்த பரமனும் தன்னுடைய முப்பதாம் வயதுக்குப் போகிறார்.

சாக்லெட்களை நானே தின்று விடுவேன் வேண்டாம் என்றபடி ரயில் நிற்கக் காத்திருக்க, காட்சி மறுபடி குழம்புகிறது. சுழலும் பசதி, முன்னால் யாருமில்லாமல் உபந்நியாசம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிர்மல முனிவர்.  பூஜ்ய சுவாமிஜி, என் வண்டி இன்னும் வரவில்லையே. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் இந்த பாவப்பட்ட மனிதன்? முனிவரின் காலில் விழுந்து கண்மூடிப் பிரார்த்தித்து விட்டு எழுந்து மறுபடியும் தொழுகிறார் பரமன்.

நீர் இன்னும் சற்று இங்கே இருக்கலாம். உமக்கு முன்னே போக நேரம் வருவதை எண்ணிக் காத்திருக்கலாம். சொல்லிவிட்டு நிர்மல முனிவர் நிஷ்டையில் அமிழ்கிறார்.

பசதி மறுபடி சுழல்கிறது.

இதென்ன, ஜெர்ஸோப்பாவின் தெருக்கள் இங்கே எப்படி வந்தன? வண்டிக்காரன் சத்திரத்தில் ஜேஜே என்று கூட்டம் நிரம்பி வழிகிறது. வீராயி இடுப்பில் கைவைத்து அணைத்து உக்கிராண அறை இருட்டில் முத்தமிடுகிறவன் பரமன் ஜாடையில். ஜாடையில் என்ன பரமனேதான்.

என்ன பார்க்கறே நான் உன் பிரபஞ்சத்திலே இருக்கப்பட்டவன் இல்லை. மற்ற எத்தனையோ பிரபஞ்சத்திலே ஒண்ணிலே, மேகவீதிங்கற பிரபஞ்சத்திலே இருக்கறவன். இந்த வீராயியும் மேகவீதியில் தான் இருக்கா.சென்னபைரதேவி இங்கே அரசியில்லே. மிட்டாய்க்கடை வச்சிருக்காங்க. ரோகிணி அரசியாக இருக்கற ஜெருஸோப்பா நாடு இந்தப் பிரபஞ்சத்திலே. எனக்கு குற்றேவல் செய்கிற வேலைக்காரன் என் பிரபஞ்சத்திலே நேமிநாதன். சென்னபைரதேவிக்கு அப்பன் நேமிநாதன் எங்க மேகவீதி பிரபஞ்சத்திலே. வீராயியை நான் கல்யாணம் செய்துக்கிட்டு ரோகிணியைப் பெண்டாளப் போறேன். மிங்குவும் கஸாண்ட்ராவும் ஜெர்ஸுப்பாவில் பிரபலமான கணிகையர். போகலாம் வர்றியா?

வேண்டாம் எனக்கு எழுபது வயதாகிறது. இதெதுவும் வேண்டாம். என் வண்டிக்காகக் காத்திருக்கிறேன்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பசதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது.

ஏறிக்கோ உன் வண்டி வந்தாச்சு என்று நிர்மல் முனிவர் சொன்னபடி நிஷ்டையில் ஆழ்கிறார்.

வாசலில் மஞ்சுவின் குரல் அப்பா அப்பா என்று தீனமாக அழைக்கிறது. பரமன் தயங்கி ஒரு வினாடி நின்றுவிட்டு ரயிலில் ஏறிக் கொள்கிறார். வண்டி நகர்கிறது. அவர் கால்கள் கணுக்காலுக்குக் கீழே இல்லை. தாங்குகட்டைகள்

ஈரமான கம்பார்ட்மெண்ட் பெஞ்சில் நீள நெடுக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வைக்கப்பட்டுள்ளன. பசதி திரும்ப மெல்லச் சுழல்கிறது.

அம்பலப்புழைக்கு  வந்திருக்கீங்க என்று யாரோ அவரை அணைத்துப் பிடித்து ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துப் போகிறார்கள். இங்கே தான் போகணும் என்று சொல்லி இறக்கி விட்டு தாங்குகட்டைகளை கையிடுக்கில் பொருதுகிறார்கள். வாசல் கதவைத் திறந்து உள்ளே நிறுத்துகிறார்கள்.

பெயர்ப்பலகை திலீப் ராவ்ஜி என்று அறிவிக்கிறது.    அழைப்பு மணியை அழுத்துகிறார். திலீப் உங்கப்பா வந்திருக்கேன். பசிக்கறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன