பெருநாவல் ‘மிளகு’ – “If hungry, eat grass”, they say in Mirjan

Excerpt from novel MILAGU

நாட்டில் வீதி குண்டும் குழியுமா இருக்கு. குடிதண்ணீர்லே சாக்கடை கலக்கறதாலே வயிறு உப்புசம் கண்டு சிலபேர் கைலாச யாத்திரை. ராத்திரி தெருவிலே ஏத்தி வைக்க விளக்கு கிடையாது. அதுக்கெல்லாம் யார் கவலைப் படறா? மிளகு விளைஞ்சா போதும். அரிசி இல்லேன்னா மிளகைப் பொங்கித் தின்னுன்னு விவஸ்தையில்லாமே ஆலோசனை சொல்றாளாம்.

ஆமா, போன வாரம் கோகர்ணத்துலே ஒரு தெலுங்கனும், துளுவனும் அவா அவா குடும்பத்தோட கோட்டைக்கு வந்து அங்கே வளர்ந்திருக்கற புல்லைத் தின்ன ஆரம்பிச்சு ஏக களேபரமாயிடுத்தாம்.

ராணி ஹொன்னாவர் பஸ்தி தரை எப்படி போட்டிருக்குன்னு சோதனை செய்யறதிலே மும்முரமா இருக்க, இவா சத்தம் இங்கே. யார் காதுலே அது விழணுமோ அவா காதுலே விழல்லே.

நஞ்சுண்டய்யா பிரதானி அவராத்தானோ ராணி சொல்லியோ, அப்புறம் கோட்டை போஜனசாலையிலே இருந்து ஆளுக்கு ஒரு மூட்டை அரிசியும், உப்பு, மிளகு, பருப்பும் கொடுத்து அனுப்பிச்சாராம்.

பாத்துண்டே இரும், ஒரு நாள் இல்லே ஒரு நாள் இன்னும் நூறு பேர் இப்படி குடும்பம் குடும்பமா புல்லு தின்ன வந்து கோட்டைக்குள்ளே உக்காந்துடுவா. அப்போ அரிசி கிடைக்காது அவாளுக்கு. பேஷா இந்த பிரதேசத்துலே எங்கே இருக்கோ புல்லு எல்லாத்தையும் சாப்பிட்டுக்க வேண்டியது அது தீர்ந்து மொட்டையாப் போனா, உள்ளே வந்து தோட்டத்திலே மல்லிகைக் கொடி, ரோசா பூச்செடி, அவரைக் கொடி, வேப்ப மரம்னு விதம்விதமா சாப்பிட்டு போங்கோன்னு சொன்னாலும் சொல்லிடுவா.

என்ன தான் சொல்லும் ராயரே, முப்பது வருஷம் முந்தி ஜனங்களுக்காக ராஜாங்கம்னு சொல்லி முடி சூட்டிண்டா நம்ம மகாராணி. இப்போ ராஜாங்கம் இல்லே. ஜனங்களும் இங்கே இன்னும் இருக்கறதா, வேறே எங்கேயாவது மூட்டை முடிச்சோட கிளம்பறதான்னு யோஜிக்க ஆரம்பிச்சதா தெரியறது.

அண்ணா அப்புறம் அந்த மிட்டாய்க்கடை ஆமா, அந்த நாத்தம் பிடிச்ச தேவடியா மதுரம் மதுரம் மதுராதிபதேன்னு பண்ணி விக்க புதுசு புதுசாக் கடை திறக்க, பணம் கோட்டையிலே இருந்துதான் முதல் போட்டு வர்றதாம். அந்த ரோகிணி சென்னாவோட ஸ்தூல பிரதிநிதியாம். மிளகு விற்ற காசை வச்சு தித்திப்பு பலகாரம் பண்ணி வித்து ஒரு வராகன் பத்து வராகனாக ராணியும் அந்த மேனாமினுக்கியும் கூட்டுலே பிரிச்செடுத்துப்பாளாம்.

இரு வாயைக் கழுவிட்டு வரேன். அசிங்கமானதெல்லாம் பேசியாச்சு.

பேசியாச்சு அண்ணா, எதுக்கும் குரலை கொஞ்சம் குறைச்சுக்குங்கோ. கோட்டை உத்தியோகஸ்தன் யாரு, கோட்டை மறைமுக உத்தியோகஸ்தன் யாருன்னே தெரியலே.

நான் கோட்டையிலே வேலை பார்க்கலே பட்டரே.

நானும் தான் ராயரே.

வைத்தியன் அப்படீன்னா, மூலிகை எடுத்து வஸ்திரகாயம் பண்ணிண்டு இருப்பான் மத்த பிரதேசத்துலே. ஒழிஞ்ச நேரத்திலே உடம்பு வித்தா உப்பு புளிக்கு ஆகும்கற பழஞ்சொல் இருக்கே, அப்படி இங்கே அவன் ஒழிஞ்ச நேரத்துலே துப்பு துலக்கற ஒற்றனா  இருக்கானாம். அவன் பொண்டாட்டி மிங்குவோ சங்குவோ, அவள்  மகாராணிக்கு தாதின்னு போடற ஆட்டத்துக்கு அளவே இல்லையாம்.

pic  medieval lunch

ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன