பெருநாவல் மிளகு – Neminathan barred entry into the Keladi fort without the identification insignia

அவன் உள்ளே வந்தபோது இருந்த பாதுகாவலர்கள் பணி முடிந்து அடுத்த குழு காவலுக்கு வந்திருந்தார்கள். நேமிநாதனை இலச்சினை இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள் அவர்கள்.

தான் யார் என்பதை ஒரு தடவைக்கு நான்கு தடவை சொல்லிவிட்டான் நேமிநாதன். எனினும் இலச்சினை இல்லாமல் உள்ளே போக முடியாது என்று பிரவேசிக்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள்.

இரும்புக் கம்பிக் கதவுகள் ஊடே பார்க்க, நேமிநாதனின் ரதம் கதவுக்கு சற்றுத் தொலைவில் நிறுத்தியிருக்க, குதிரைகளை அகற்றி நிறுத்திவிட்டு ரதசாரதி இரவுக்கு உறங்க சித்தம் பண்ணிக்கொண்டிருந்தது தெரிந்தது.

கதவு வழியாகப் பார்த்து, ஆலாலா வா இங்கே என்று உரக்க அவனைக் கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை என்று புரிந்து இன்னும் நாலு தடவை குரல் உயர்த்த, வாசல் காவலர்கள் நேமிநாதனைப் பிடித்து இழுக்க முற்பட்டார்கள். அவர்கள் கொங்கணியோ, கன்னடம், தெலுகு, தமிழோ பேசவில்லை என்பதையும் ஒடிய பாஷை அல்லது வங்காளி போல் புரிபடாத மொழியைப் பேசுவதாகவும் நேமிநாதனுக்குப் பட்டது.

கடைசியாக ஒருதடவை காவலர்களைப் புறம்தள்ளி ரதசாரதியை அழைக்க உள்ளே அரண்மனை சாளரம் ஒன்று திறந்து வெங்கடப்ப நாயக்கரின் இளைய புதல்வன் அரண்மனை வாசலை நோக்கினான். நேமிநாதனை அவன் இனம் கண்டு கொண்டு அவசரமாக கீழே ஓடி வந்து அவனை உள்ளே அழைத்து வந்தபோது, இலச்சினை எடுத்துப் போங்கன்னு சொல்லாமல் போய்ட்டேன் மன்னிக்கணும் என்று சம்பிரதாயமாகச் சொல்லி அதோடு நிறுத்தினான்.

ஒரு இளவரசனாக முத்திரை, இலச்சினை, அனுமதி இதெல்லாம் தேவைப்படாமல் இருந்து இப்போது அதெல்லாம் கட்டாயமான வாழ்க்கை எவ்வளவு துன்பம் நிறைந்தது என்று அனுபவத்தால் தெரிய வரும்போது நேமிநாதனுக்கு மனதில் தேவையற்ற தன்னிரக்கம் வர, அதைக் களைந்தான்.

கெலடி அரண்மனையில் அவனுக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு வெங்கட லட்சுமணன், அதுதான் அந்த இளைய புதல்வனின் பெயர், நேமிநாதனை அழைத்துப் போகும்போது ஒரு பெரிய மண்டபத்தில் வீற்றிருந்து குவளையில் வைத்து ஏதோ பருகியபடி இருந்தவரைப் பார்த்தான். அப்பா என்றான் லட்சுமணன். கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர்.

அவர் மால்பெ போவதாகச் சொன்னாரே என்று நேமிநாதன் புரியாமல் கேட்டான். லட்சுமணன் புன்சிரித்தான். வெங்கடப்ப நாயக்கர் இங்கே இருந்தால் நேமிநாதனை சந்தித்திருக்கலாமே? அவன் வந்தது தெரிந்தும் அவனை நேரில் கண்டு ஒரு மணி நேரமோ அல்லது வரவேற்று ஒரு நிமிடமோ பேசிவிட்டுப் போயிருக்கலாமே.

இன்னும் எவ்வளவு அவமதிப்பை நேமிநாதன் வாங்கிச் சுமக்க வேணுமோ.

அவன் மெல்லத் தனக்கு ஒதுக்கிய அறைக்குப் போய் விரைவில் நித்திரை போனான்.

காலையில் வெங்கட லட்சுமணன் வந்து நித்திரை சுகபரமாக இருந்ததா என்று விசாரித்தான். கொசுக்கள் தொந்தரவு செய்ய மூன்றாம் ஜாமமும்,  அவற்றை விரட்ட அரண்மனை முழுவதும் சாம்பிராணிப்புகை போட்டு தூமதண்டியோடு சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்கும் நடந்து அடுத்த ஜாமமும் தூங்க முடியாமல் போன துக்கத்தைச் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்தான் நேமிநாதன்.

பசியாறிக்கொண்டே மகாராஜாவும் லட்சுமணனின் பிதாவுமான வெங்கடபதி நாயக்கர் நேமிநாதனோடு சந்திப்பு காலை ஏழரைக்கு என்று அறிவித்தான் லட்சுமணன். நேமிநாதன் கொஞ்சம் தயங்க, நேரம் சரியாக வராதென்றால் சொல்லு, மாற்றிவிடலாம் என்றான்.

அப்படித்தான், எழுபது வயதான விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயர், வேங்கடப்ப நாயக்கரை  சந்திக்க பெனுகொண்டாவில் இருந்து வந்தபோது விஜயநகரத்தார் ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாராம். ”காலையில் வெளிக்குப் போனதற்கு அப்புறம் எந்த நேரமும் சந்திக்கத் தயார். குளித்து, இரண்டு இட்டலிகளை பிட்டுப் போட்டுக்கொண்டு சந்திக்க ஓடி வந்துவிடுவேன்” என்றாராம் விஜயநகரப் பிரதிநிதி.  காலை ஆறிலிருந்து எட்டு மணிக்குள் அந்த மகத்தான சம்பவம் நிகழ வாய்ப்பு உண்டாம்.

நல்ல வேளையாக ஆறரை மணிக்கே அதெல்லாம் முடிந்து குளித்து இட்டலி உண்ண ஏழு மணிக்கு வந்துவிட்டாராம் அவர். அவருக்கே தெரியாமல் முந்தின ராத்திரி சாப்பாட்டில் ராயருக்கு மட்டும் கொஞ்சம் கடுக்காய்ப்பொடி சேர்த்து அவருக்குக் காலையில் வயிறு இளகி ஒத்துழைக்கச் செய்ததும் வெங்கடப்ப நாயக்கர் தான் என்று பெரும் சிரிப்போடு   நேமிநாதனோடு பகிர்ந்து கொள்ள, நிறுத்தாமல் சிரித்தான் நேமி.

”எனக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை, ஒரே சந்தேகம் என்ன என்றால், நீ காலையில் மகாராஜா பசியாறிக் கொண்டே என்னோடு  உரையாடுவார்னு சொன்னியே லட்சுமணா. அப்போது நானும் சாப்பிட்டுக் கொண்டிருப்பேனா அல்லது அவர் சாப்பிட, நான் வாய் பார்த்தபடி வெறும் வயிற்றோடு பேச வேணுமா?” என்று கேட்டான் நேமிநாதன்.

லட்சுமணன் உரக்க நகைத்தான். ”நேமி, உன் நகைச்சுவை அலாதியானது. நாயனாவிடம், என்றால் என் தந்தையாரிடம் இதைச் சொல்கிறேன். நீயும் பசியாறத்தான் அந்த சந்திப்பு. சந்தேகம் என்றால் நான் ஏழரை மணிக்கு போஜனசாலைக்கு வந்து எல்லாம் கிரமமாக வந்திருக்கிறதா என்று பார்த்துப் போகிறேன்” என்றபடி போனான்.

அதுபடிக்கு நேமிநாதன் காலை ஏழு மணிக்கு மெல்லிய சீனக் கத்தி கொண்டு மழமழவென்று முகச் சவரம் செய்துவிக்கப்பட்டு, வெதுவெதுப்பான வென்னீரில் குளித்து, உடுத்து, பாரீஸில் வடித்த ஸ்வப்ன புஷ்பங்கள் மணக்கும் தைலம் கம்புக்கூட்டில் பூசி, காலணியை சிப்பந்தி மூலம் பளபளவென்று துடைத்து அணிந்து கொண்டு புறப்பட்டான். முள்ளுத்தாடியும், புழுதி படிந்த காலணிகளும், அக்குளில் கற்றாழை வாடையும் வெங்கடப்ப நாயக்கருக்குக் காணவும் எதிர்கொள்ளவும் பிடிக்காத கோலம் என்று கேள்விப்பட்டிருந்ததால் ஜாக்கிரதையாகப் பார்த்துப் பார்த்து எல்லாம் சரியாக வைத்து பசியாறப் போனான் நேமிநாதன்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன