மிளகு பெருநாவலில் இருந்து – The retired Science Teacher and the confectioner from the future

”இன்னும் கூடுதல் குருதிப் பசியோடு இந்தக் கொடியை முன்னேற்றினால் அது கொடுக்கும் மிளகு அளவு மிகும். எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வளர்ந்து செழிக்க, கோழி, ஆட்டின் குட்டி, கன்றுக்குட்டி, எருமை என்று புலிக்கு இரை போடுகிறதுபோல் ஈய முற்பட்டால் மிளகிலேயே சிறந்ததாகி விடும் நம் பேய் மிளகு”. உபாத்தியாயர் பெருமையோடு சொன்னார்.

”விக்ஞான உபாத்தியாயரே, கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த மிளகுக்கொடியை இன்னும் உக்ரமாக்குவோம் வாரீர்” என்று காலையில் தொடங்கி மயில் துத்தம் சேர்த்து காய்ச்சியது பாதியில் கவனிக்கப்படாமல் போக, கஸாண்ட்ரா என்ற பேரழகி வந்தபின்னர்  கவுட்டின்ஹோ வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் அவளது உடல் வாடை நுகர்ந்துகொண்டே பின்னால் போய்விட்டார்.

கஸாண்ட்ரா வந்தால் என்ன, எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா வந்தால் என்ன, கைவேலையை முடிக்காமல் பசு தர்மம் தலைதூக்க விட்டிருப்பது தவறன்றோ.

இப்போது இந்த கவுண்டின்ஹோ கஞ்சி குடிக்க ஆரம்பித்து விட்டார். தலையை கிழவியின் மாரிடத்தில் சாய்த்து வைத்து அவர் கொண்டாடும் சுகம் கொஞ்சநஞ்சம் இல்லை. கண்  திறக்கவில்லை. உடல் இயங்கவில்லை. மற்றபடி அவர் கேட்கிறார், தொட்டால் உணர்கிறார், பசியும் தாகமும் தெரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

விக்ஞான உபாத்தியாயர் வெளியே தப்பி ஓடுவதை ஏனோ அவர் விரும்பவில்லை போல. வீடு முழுக்க அங்கும் இங்கும் மறுபடி பேய் மிளகு மண்ட  ஆரம்பித்து விட்டது.

உபாத்தியாயர் மறுபடி உள்ளே போய் வரவேற்பறை நாற்காலியில் வேண்டா வெறுப்பாக அமர்ந்தார். ஐயா என்று சத்தம் கேட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தார். இனிப்பு அங்காடியில் அவற்றைக் கிண்டிக் கிளறி உருவாக்கும் கிழட்டு மடையன் உள்ளே படியேறி வந்து கொண்டிருந்தான்.

இவன் என்ன இழவுக்கு இங்கே வருகிறான்?

அவன் மேல்படியில் நின்று விக்ஞான உபாத்தியாயரை நோக்கி இருகரம் குவித்து வணங்கினான்.

“ஐயா நீங்கள் அறிவியல் மேதையான ஒரு கேரளபூமித் தமிழர் என்று சற்று நேரம் முன்னால் தான் இங்கே குசினிப் பணி நோக்கும் மனுஷன் சொல்ல அறிந்தேன். ரொம்ப சந்தோஷம். அவன் தான் சொன்னான் நீங்கள் இங்கே இருப்பதாக.”.

விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டியோடு சண்டை போட்டு வாசலுக்குத் துரத்தப்பட்டவர் போல் கடுகடுவென்ற முகத்தோடு உட்கார்ந்திருந்தார். என்ன விஷயமாக வந்திருக்கீர் என்று வந்தவனை விசாரித்தார்.

”அது வேறொண்ணுமில்லை, நீங்களும் இவ்விடத்து பிரபுவும் உன்னதமான விக்ஞான மேம்பாட்டுக்காக தாவரவியலில் முக்கியமான முன்னெடுப்பை எடுத்து வைக்கும் விதத்தில் மிளகுக் கொடியை அதிவினோத, அதிநவீனத் தாவரமாக்கியுள்ளீர்களெனக் கேள்விப்பட்டேன். சந்தோஷம். நிரம்ப சந்தோஷம்”.

”நிறைய சந்தோஷப்பட்டு விட்டீர் போய் வரலாமே” என்று விக்ஞானி அவரைப் பார்த்துக் கைகூப்ப, மடையர் சொன்னது இந்த மாதிரி இருந்தது – ”தாவரவியல், வேதியியலில் எனக்கும் அக்கறை உண்டு. நானும் இங்கே ஆய்வுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? அதுவும் காலம் என்ற இன்னொரு பரிமாணம் பற்றி ஆய்வு செய்ய எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு”.

உம் பெயர் என்ன? விக்ஞானி அமைதியாகக் கேட்டார் வந்தவனை.

”பரமன் என்பார்கள். பரமேஸ்வர அய்யன் என்பது முழுப்பெயர். அப்புறம் ஒன்று. நான் உங்கள் காலத்து மனுஷன் இல்லை. இது பதினேழாம் நூற்றாண்டு தானே, நான் வந்தது இருபதாம் நூற்றாண்டில் இருந்து”.

”அய்யா, பெரியவர் மூர்ச்சித்துக் கிடக்கிறார். நீர் ஏதோ கெக்கெபிக்கெ என்று காலம், இருபதாம் நூற்றாண்டு என்பதுபோல உளறிக் கொண்டிருக்கிறீர். எழுந்து போம்” என்றார் விக்ஞானி கோபத்தோடு.

“நம்புங்கள், நான் விமானத்தில் தில்லியில் இருந்து பம்பாய் பறந்தபோது நாக்பூரில் விமானத்தைத் தவறவிட்டு இந்த இடத்துக்கும் காலத்துக்கும் வந்துவிட்டேன். உம் போன்ற அறிவியல் மூப்பர் வழிகாட்டினால் என் காலத்துக்குத் திரும்பி விட முடியும். தயவு செய்து உதவுங்கள்” என்றார் நெஞ்சுருக.

விக்ஞானியோ அவசரமாக வீட்டுக்கு உள்ளே வந்து கதவடைக்கும்போது அந்த மடையரின் கண்களைப் பார்த்தார். அவை பொய் சொல்வதாகத் தெரியவில்லை. மடையர் நின்று பார்த்துவிட்டுத் திரும்பப் போகும்போது அவர் குப்பாயத்தில் ஒரு சிறு கொழுந்தும் நான்கைந்து இலைகளுமாக பேய் மிளகு படர்ந்தேறி இருப்பதைக் கண்டார் விக்ஞான உபாத்தியாயர்.

ஓய் ஓய் ஓய்

வந்தவரைப் பின்னால் இருந்து கூப்பிட்டது கனவில் நடப்பது போல் மிகுந்த  பிரயத்தனத்தின்பேரில், சத்தமே கூட்டாமல் வந்தது. அவர் கூப்பிடுவதற்குள் பரமன் படியிறங்கியாகி விட்டது.

”ஓய் மடையரே, குப்பாயத்தில் நுழைந்த மிளகுவள்ளியை எடுத்துத் தூர எரியும்”.

“நான் எடுத்துப் போகவில்லை. அதுவாகவே உள்ளே நுழைந்துவிட்டது. மன்னிக்கவும். அடுத்தவர் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன்”.

பரமன் தன் குப்பாயத்தில் இருந்து கல், மண், செடி, கொடி என்று தானாகவே வந்தது, அவர் எடுத்து உள்ளே போட்டது, எல்லாம் அகற்றிவிட்டு நடந்தார்.

A Middle Ages get together

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன